கூலிக்கு ஆள் பிடித்து கொச்சைப்படுத்தும் கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

கூலிக்கு ஆள் பிடித்து கொச்சைப்படுத்தும் கூட்டம்!

தூத்துக்குடியில் தந்தைபெரியார் குறித்து சமூக வலைத் தளத்தில் தவறான தகவல் பரப்பிய பா.ஜ.க. பிரமுகரை மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாநகரில் உள்ள புதுகிராமம் பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவரது மகன் ஜான் ரவி (52) - தொழிலதிபர். இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் திமுகவினர் மற்றும் முதலமைச்சரை மோசமான வகையில் விமர்சனம் செய்து வருவார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் இவரின் சமூகவலைத்தள பக்கத்தில் திமுக ஆட்சியை  எவ்வித ஆதாரமுமின்றி குறை கூறியும், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தந்தை பெரியார் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். இதில் தந்தை பெரியார் குறித்து மிகவும் மோசமாகத் தகாதவாறு பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், மதுரை சைபர் கிரைம் காவல் துறையினர் இவரது சொந்த ஊரான தூத்துக்குடி புது கிராமத்தில் உள்ள இவரது இல்லத்தில் வைத்து இவரைக் கைது செய்தனர்.  (153A) - மதம், இனம், ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்;  (504) - சமூகத்தில் பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்; (505 1b) - வதந்தியைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளில் இவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், இவர் தனது தந்தை இறந்து சில நாள்களே ஆன நிலையில், 16-ஆம் நாள் காரியம் செய்வதற்கு தூத்துக்குடி வந்துள்ளார். அப்போது தான் காவல்துறை யினர் இவரைக் கைது செய்தனர். மேலும் இவர், மதுரை மாஜிஸ் ரேட் முன் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார்.

 கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இதே போன்று சமூக வலைதளத்தில் முதலமைச்சர் குறித்து தவறான தகவல்களைப் பதிவிட்டதால் தமிழ்நாடு காவல்துறை யினர் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் இவர் விசார ணைக்கு அஞ்சி  குஜராத்திற்குச் சென்று பதுங்கிக் கொண்டார். இந்த நிலையில் அங்குள்ள காவல்துறைக்கு இவர் குறித்த தகவல்களை அனுப்ப, அவர்கள் பிடித்து தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் தான் 'இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன்' என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியேவந்த இவர் தொடர்ந்து மக்களிடம் மதிப்பு பெற்ற தலைவர்களை மோசமாக சித்தரித்து எழுதவே, மீண்டும் தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கள் கொள்கைக்கு எதிரானவர்களைக் கேவல மாகப் பேசி அவதூறு பரப்புவதற்கென்றே கூலிக்கு ஆள் பிடித்து, அந்தக் கேவலமான  வேலையைச் செய்வதற்கென்றே பெரும் எண்ணிக்கையில் சங்பரிவார், பா.ஜ.க.வால் அமர்த் தப்பட்டுள்ளனர்.

இதுதான் இந்தக் கூட்டம் வாய்க்கிழியப் பேசும் தார்மீக ஒழுக்கம் என்பது!

இந்தக் கூட்டம்தான் நடக்க இருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க எத்தனிக்கிறது - இதற்காக கோடிக்கணக்கில் பணம் கொட்டப்படுகிறது. பத்திரிகை சுதந்திரத்தைப் பறித்து வருகிறது.

வாக்காளப் பெருமக்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!


No comments:

Post a Comment