திருச்சி: பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

திருச்சி: பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி

 ஆசிரியருக்கும் ஓர் ஆசை இருக்கிறது; எனக்கும் ஓர் ஆசை இருக்கிறது!

காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களை, பெரியார் திடலுக்கு அழைத்து வந்து உரையாற்ற வைக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை

ராகுல் காந்தி பெரியார் திடலுக்கு வந்து உரையாற்றுவார்; புதிய செய்திகளை நமக்கு வழங்குவார்!

ஆசிரியர் அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும்; இன்னும் வலிமையாகவும், இன்னும் எழுச்சியாகவும் அவர் நீண்ட நாள் வாழ வேண்டும்  

திருச்சி, அக்.25 ஆசிரியருக்கும் ஓர் ஆசை இருக்கிறது; எனக்கும் ஓர் ஆசை இருக்கிறது. காங்கிரஸ் இளந் தலைவர் ராகுல் காந்தி அவர்களை, பெரியார் திடலுக்கு அழைத்து வந்து உரையாற்ற வைக்கவேண்டும் என்பது தான் அந்த ஆசை. நிச்சயமாக அந்த ஆசை நிறை வேறும். தலைவர் ராகுல் காந்தி பெரியார் திடலுக்கு வந்து உரையாற்றுவார்; புதிய செய்திகளை நமக்கு வழங்குவார் என்பதனை நான் இந்த இடத்தில் சொல்லி, ஆசிரியர் அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும்; இன்னும் வலிமையாகவும், இன்னும் எழுச்சியாகவும் அவர் நீண்ட நாள் வாழவேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள்.

ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழா

கடந்த 21.10.2023 அன்று மாலை திருச்சியில் நடைபெற்ற ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம் - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட் டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

அன்பார்ந்த பெரியோர்களே, தோழர்களே!

‘‘ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்'' என்கிற தலைப்பில் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழா! இவ்விழாவில் நம்முடைய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஆசிரியர் அவர்கள் நடுநாயகமாக அமர்ந்து இந்த விழாவை சிறப்பித்து வருகிறார்கள்.

இந்த ஊர்தியினை வழங்குகின்ற பொறுப்பை திருச் சியினுடைய அமைச்சர் மாண்புமிகு நேரு அவர்கள் ஏற்றுக்கொண்டு, சிறப்பாக வழங்கியது மட்டுமல்ல, அன்பான, உணர்ச்சிப்பூர்வமான ஓர் உரையையும் ஆற்றி அவர் சென்றிருக்கின்றார்.

இவ்விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய அன்பை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கும் வாழக்கூடிய பெரியாராக, 

பெருந்தலைவர் காமராஜராக நம்முன் காட்சியளிப்பவர்!

ஆசிரியர் அவர்களுக்கு ஒரு விழா என்றால், அந்த இடத்திற்கு வரவேண்டும் என்ற உள்ளத் துடிப்பு எனக்கு உண்டு. ஏனென்று சொன்னால், இன்றைக்கும் வாழக்கூடிய பெரியாராக, பெருந் தலைவர் காமராஜராக நம்முன் காட்சியளிப்பவர் நம்முடைய அன்பிற்குரிய ஆசிரியர் அவர்கள் தான்.

90 வயதிலும் அறிவுக்கூர்மையோடு, தெளி வான சிந்தனையோடு, எல்லாவற்றிற்கும் மேலாக இளமையோடு காட்சியளிக்கின்றார் என்று சொன்னால், அதற்குக் காரணம் அவர் வாழ்வியல் முறை மட்டுமல்ல, அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்ற தத்துவமும் ஒரு காரணம்.

சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல, அரசியலிலும் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்!

ஒரு சிறந்த தத்துவத்தை அவர்கள் ஏற்றுக்கொண் டிருக்கின்ற காரணத்தினால், அவர்களால் தெளிவாக இருக்க முடிகிறது என்பதை என்னால் உணர முடிகிறது. சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல, அரசியலிலும் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். 

எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்கிறார்கள்; யாரைக் காப்பாற்றவேண்டுமோ அவர்களைக் காப் பாற்றுகிறார்கள்.

இன்றைக்கு இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. அவற்றிற்கெல்லாம் உடனடியாகப் பதில் சொல்லக்கூடிய ஒரு செய்தித்தாள் இருக்கிறது என்று சொன்னால், அந்தச் செய்தித்தாள் ‘விடுதலை'தான்.

மற்ற அரசியல் கட்சிகள் முடிவு செய்வதற்கு முன்பே, விவாதிப்பதற்கு முன்பே...

ஏனென்று சொன்னால், மற்ற அரசியல் கட்சிகள் முடிவு செய்வதற்கு முன்பே, விவாதிப்பதற்கு முன்பே, வேறு பல ஏற்ற இறக்கங்களைப்பற்றி யோசிப்பதற்கு முன்பே, ஆசிரியர் அவர்கள் அதைப்பற்றிய கருத்தை சொல்லிவிடுகிறார்கள்.

அது ஜாதிவாரிக் கணக்கெடுப்பாக இருந்தாலும் சரிதான், விஸ்வகர்மா யோஜனா திட்டமாக இருந்தாலும் சரிதான், ஸநாதனமாக இருந்தாலும் சரிதான், அரசமைப் புச் சட்டத்திற்கு எதிராக நடக்கின்ற எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் சரிதான் - முதன்முதலில் அதற்கான கருத்தை வெளியிடுவது ஆசிரியர்தான்; தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அவர்கள்தான் வெளி யிடுகிறார்கள் என்பதனை நான் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைக்குப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த ஒன்றிய அரசினர்,  அரசமைப்புச் சட்டத்தினை வெளிப்படையாக மீறுகிறார்கள்; வெளிப்படையாக அவர்கள் அதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். புதிய அரசமைப்புச் சட்டத்தை அவர்கள் காசியிலே எழுது கிறார்கள். அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்தத் தேசத்தில் மீண்டும் பழைமைவாதம் தலைதூக்கவேண்டும் என்று கருதுகிறார்கள்!

ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் நீக்கவேண் டும் என்று கருதுகிறார்கள். இந்தத் தேசத்தில் மீண்டும் பழைமைவாதம் தலைதூக்கவேண்டும் என்று கருது கிறார்கள். அதற்காக அவர்கள் உழைக்கிறார்கள், செயல்படுகிறார்கள், பரப்புரை செய்கிறார்கள்.

ஆனால், அவற்றையெல்லாம் இன்றைக்குக் கடுமை யாக அரசியல் கட்சிகள் எதிர்ப்பதற்கு முன்பாக, திரா விடர் கழகம் எதிர்க்கிறது, ஆசிரியர் எதிர்க்கிறார் என்று சொன்னால், அதுதான் அவருடைய சிறப்பான பணி. அந்தப் பணியைப் பாராட்டுவதற்காகத்தான், வாழ்த்து வதற்காகத்தான் இந்த மேடைக்கு நாங்கள் எல்லாம் வந்திருக்கின்றோம்.

பெருந்தலைவர் காமராஜரை தமிழ்நாட்டில் தூக்கிப் பிடித்தவர் தந்தை பெரியார்

ஆசிரியர் அவர்கள் தன்னுடைய 10 வயதிலே இந்தப் பணியை மேற்கொண்டார். எனக்கு ஓரளவிற்கு நினை விருக்கிறது. பெருந்தலைவர் காமராஜரை தமிழ்நாட்டில் தூக்கிப் பிடித்தவர் தந்தை பெரியார் அவர்கள். 

காமராஜர் அவர்கள் முதன்முறையாக முதலமைச் சராக ஆனபொழுது, தந்தை பெரியார் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

‘‘முதன்முதலாக தமிழ்நாட்டிற்கு ஒரு தமிழர் முதல மைச்சராக ஆகியிருக்கிறார்; அவரை நாம் ஆதரிக்க வேண்டும்; கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். சிறந்த கொள்கைவாதி, எனவே அவருக்கு நாம் ஆதரவு தெரிவிக்கவேண்டும்'' என்று அன்றைக்கு ஆதரவுக் கரம் நீட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.

அந்த ஆதரவுக்குப் பின்னால், அமைச்சர் பதவிகள் கிடையாது; அந்த ஆதரவுக்குப் பின்னால், தொழில் சார்ந்த ஒப்பந்தங்கள் கிடையாது. அந்த ஆதரவுக்குப் பின்னால், சுயநலம் கிடையாது. அந்த ஆதரவு என்பது கொள்கை ரீதியாகக் கொடுக்கப்பட்ட ஒரே விஷயம் என்பதுதான், இந்தியாவினுடைய தமிழ்நாட்டினுடைய மிகப்பெரிய சிறப்பு என்பதை நான் தெரிவித்துக் கொள் கிறேன்.

‘‘காமராஜர் ஆட்சியின் சாதனைகள்!’’ 

அப்பொழுது ஆசிரியர் அவர்கள் ஒரு சிறிய நூல் ஒன்றினை வெளியிட்டார்.

‘‘காமராஜர் ஆட்சியின் சாதனைகள்!'' என்பதாகும்.

காமராஜர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அற்புத மான மக்கள் திட்டங்களைப்பற்றியெல்லாம் அவர்கள் வெளியிட்ட அந்த நூல் அந்தக் காலத்திலேயே ஒரு புகழ் வாய்ந்ததாக இருந்தது.

எனவே, அந்த அளவிற்கு சமூகத்தில் கீழ் இருக் கிறவர்களை மேலே கொண்டுவரக்கூடிய தலைவர்கள் யாராக இருந்தாலும், அது காமராஜராக இருந்தாலும், அண்ணாவாக இருந்தாலும், கலைஞராக இருந்தாலும், ஸ்டாலினாக இருந்தாலும் - அவர்கள் வகிக்கின்ற பதவிக்காக அல்லாமல், அவர்கள் சொல்லுகின்ற கொள் கைக்காக, அவர்கள் நடக்கின்ற அந்த நேர்மையான பாதைக்காக - எப்பொழுதெல்லாம் வரவேற்புக் கொடுத் திருக்கின்றார்கள் என்று சொன்னால், எல்லா காலங் களிலும் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அதுதான் பெரியாருடைய சிறப்பு - அதுதான் ஆசிரியர் அவர்களுடைய சிறப்பு.

இன்றைக்கு நாம் பார்க்கிறோம் - ஏன் மோடி இவ் வளவு வெளிப்படையாக ஒரு போரைத் தொடுத் திருக்கிறார்?

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பில்லை!

இந்த நாட்டில் ஒரு புதிய நாடாளுமன்றம் திறக்கப்படு கிறது. அந்தத் திறப்பு விழாவிற்கு இந்தியாவினுடைய முதல் குடிமகளுக்கு அழைப்பில்லை. அவர் அந்த நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு வரவில்லை - அவர் திறந்து வைக்கவில்லை என்றாலும்கூட, ஒரு பார்வை யாளராகக் கூட அவர் அங்கே வந்து அமர முடிய வில்லை.

அதற்கான காரணம் என்ன?அவர் விதவை என்பது ஒரு காரணம்.

புதிய இல்லத் திறப்பு விழா நடைபெறுகின்ற பொழுது, ஒரு பெரிய நிகழ்வு நடைபெறுகின்றபொழுது, அவர்கள் சொல்லுகின்ற மொழியில் சொல்லவேண்டும் என்றால், ‘சுமங்கலமாக' நிகழ்வுகள் நடைபெறுகின்றபொழுது, ‘விதவை' எனப்படுவோர் வரக்கூடாது என்பதற்காக, இந்த நாட்டினுடைய குடியரசுத் தலைவரை அழைக் காமல், புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவினை நடத்தினார்கள்.

இந்திய மக்களுக்கு இதனுடைய உள்ளர்த்தம் எவ்வளவு புரிந்தது? 

எந்த அளவிற்கு இந்தச் செய்தி நாட்டு மக்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது?

ஏன் இந்த நாட்டினுடைய குடியரசுத் தலைவர் அந்தத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை?

மற்ற நிகழ்வுகள் என்றாலும்கூட பரவாயில்லை; இந்தியாவிற்கே முக்கியமான நிகழ்வு  - அந்த நிகழ்விற்கு இந்தியாவினுடைய குடியரசுத் தலைவர் அழைக்கப்பட வில்லை என்று சொன்னால், உங்களுடைய வாழ்க்கை முறை, உங்களுடைய ஸநாதன தத்துவம் -  ‘விதவை'கள் நல்ல நிகழ்விற்கு வரக்கூடாது என்ற அந்த ஓர் அடிப் படையில்தான் நீங்கள் அவரை அழைக்க வில்லையேயொழிய, வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

நாம் இவற்றையெல்லாம் உணர்ந்து பார்க்கவேண்டும். இந்த நிகழ்வை அவர்கள் செய்துவிட்டு, தொடர்ந்து இந்தியாவில் அவர்கள், ‘‘நாங்கள்தான் இந்தியாவை வளர்க்கிறோம்; நாங்கள்தான் இந்தியாவை மேம்படுத் துகிறோம்'' என்றெல்லாம் சொல்கிறார்கள் என்று சொன் னால், அதற்கு என்ன காரணம்? எப்படி அது முடியும்?

ஏனென்று சொன்னால், ஆசிரியர் அவர்களைப் போல, ஒவ்வொருவரும் நம்முடைய கருத்தைச் சொல்லாத காரணத்தினால்தான், இன்றைக்கு அவர்கள் தொடர்ந்து அந்தப் பரப்புரையை செய்கிறார்கள்.

ஓர் அரசியல் கட்சி அல்லது ஒரு தத்துவம் செய்கின்ற தவறுகளை நாம் எடுத்துச் சொல்லவேண்டும்!

எனவே, அவற்றிற்கு எதிரான நம்முடைய கருத்து களைச் சொல்லவேண்டும்.

எதிர்ப்பு என்பது ஒழிக அல்லது வாழ்க என்பதல்ல. மாறாக, ஓர் அரசியல் கட்சி அல்லது ஒரு தத்துவம் செய்கின்ற தவறுகளை நாம் எடுத்துச் சொல்லவேண்டும் என்பதுதான் - பரப்புரையை தெளிவாகச் சொல்லவேண் டும் என்பதுதான் அதற்கான மிக முக்கிய காரணம்.

செய்தல் வேண்டும். பரப்புரை இல்லாத எந்த ஓர் அரசியல் இயக்கமும் வெற்றி பெற முடியாது. லட்சியம் இல்லாத எந்த ஒரு தத்துவமும் வெற்றி பெற முடியாது.

இன்றைக்கு இந்த ஊர்தியைத் தருகிறோம் என்று சொன்னால், அவர் உலகப் பயணம் செல்வதற்காக இந்த 40 தோழர்களும் அதைத் தரவில்லை. 

மாறாக அவர்கள் கொடுத்திருப்பது, ஆசிரியர் அவர்கள் தன்னுடைய பரப்புரையைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்பதற்காக இதனை அவர்கள் செய்திருக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய ஒன்று என்பதனை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ப் பெருமக்களே, இன்றைக்குப் பாரதீய ஜனதா கட்சி ஓர் எல்லை கடந்து நடந்துகொண்டிருக்கின்றது. இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் அவர்கள் அதைச் செய்கிறார்கள்.

என்ன செய்கிறார்கள்?

ஒருவருக்கு ஜாமீன் வழங்குவதை 

யார் முடிவு செய்வது?

நேற்று பாரதீய ஜனதாவினுடைய மாநில தலைவர் பேசியிருக்கிறார் - ‘‘செந்தில்பாலாஜி அவர்களுக்கு அவ்வளவு விரைவில் ஜாமீன் வழங்கமாட்டார்கள். அவர் அமைச்சராக இருக்கின்ற வரையில், ஜாமீன் வழங்க முடியாது'' என்று சொல்லியிருக்கிறார்.

‘‘வழங்க மாட்டார்கள்'' என்றுகூட சொல்லவில்லை; ‘‘வழங்க முடியாது'' என்று சொல்லியிருக்கிறார்.

நான் அவரைப் பார்த்துக் கேட்கிறேன், ஒருவருக்கு ஜாமீன் வழங்குவது என்பதனை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டுமா? அல்லது பாரதீய ஜனதா கட்சியி னுடைய மாநில தலைவர் முடிவு செய்யவேண்டுமா? என்பது நமக்குத் தெரியவேண்டும்.

நாங்கள் இன்னும் சட்டத்தை நம்புகின்றோம்!

நாங்கள் இன்னும் நீதிமன்றங்களை நம்புகிறோம்!

நீதிமன்றங்கள் இந்தியாவிற்கு வழிகாட்ட முடியும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை அடிப்படையாக வைத்து நீதி வழங்குகிறார்கள். தங்களுடைய அன்றாட சிந்தனையை அடிப்படையாக வைத்து அவர்கள் நீதி வழங்கவில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறதோ, அதை வைத்து அவர்கள் நீதி வழங்கு கிறார்கள்.

பா.ஜ.க. மாநில தலைவர்கள்தான் உயர்நீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதியா?

ஆனால், அவர்கள் என்ன நீதி வழங்கவேண்டும் என்பதனை இந்த ஊரில் அண்ணாமலை சொல்லுகிறார் என்றால், அதற்கு என்ன பொருள்?

பாரதீய ஜனதாவினுடைய மாநில தலைவர்கள்தான் உயர்நீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதியா?

எந்த அடிப்படையில் அவர்கள் இதைச் சொல்ல முடியும்?

நீதியின்பால் அவர்கள் எப்படி தங்களுடைய கருத்துகளை உட்புகுத்த முடியும்?

எந்தத் தைரியத்தில் அவர்கள் செய்கிறார்கள்?

இதுவரையில், தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் தலைவரும், ‘‘இப்படித்தான் நீதிமன்றம் நடக்கவேண்டும்'' என்று சொன்னது கிடையாது.

ஆனால், அவர்கள் இன்றைக்கு அவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இது ஒரு சிறிய விஷயம்தான்.

செந்தில்பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு?

செந்தில்பாலாஜி அண்ணா தி.மு.க. அமைச்சரவையில் இருந்தபொழுது, பேருந்து ஓட்டுநர் பேருந்து நடத்துநர் வேலை தருகிறேன் என்று சொல்லி, ஒரு சிலரிடம் அவர் பணம் வாங்கியிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.

அந்தக் குற்றச்சாட்டின்மீது நீங்கள் எப்பொழுது நடவடிக்கை எடுக்கிறீர்கள்? அவர் அ.தி.மு.க.வில் இருந்தபொழுது நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அல்லது இன்றுவரை அ.தி.மு.க.வில் இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கின்ற மற்ற அமைச் சர்கள்மீதும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால், இவர்மீது மட்டும் நடவடிக்கை எடுக் கிறீர்கள் என்று சொன்னால், கொங்கு மண்டலத்தில் அண்ணாமலையை வளர விடாமல், எடப்பாடியை வளரவிடாமல் அவர் செயல்படுகிறார் என்கின்ற காரணத்திற்காக அவர் இன்றைக்கு குறிவைக்கப்பட்டு இருக்கிறார்.

நான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது; இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா?

கொங்குமண்டலத்தில் - தேர்தலில் செந்தில்பாலாஜி உங்களை வீழ்த்தியிருக்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான்!

இதே போன்ற குற்றச்சாட்டிற்கு ஆளானவர்கள், இன்றைக்கும் எடப்பாடிக்குப் பக்கத்தில் அமர்ந்திருக் கின்றார்கள். இன்றைக்கும் அவர்கள் சுதந்திரமாக உலா வருகிறார்கள்.

அவர்கள்மீது பாயாத மோடியினுடைய சட்டம் - இன்றைக்கு செந்தில்பாலாஜிமீது பாய்கிறது என்று சொன்னால், கொங்குமண்டலத்தில் - தேர்தலில் அவர் உங்களை வீழ்த்தியிருக்கிறார் என்கிற ஒரே காரணத் திற்காக நீங்கள் அதைச் செய்கிறீர்கள் என்கிற குற்றச் சாட்டை நாங்கள் சொல்கிறோம்; குற்றச்சாட்டுகூட அல்ல ஓர் உண்மையை நாங்கள் சொல்கிறோம். இது தான் உண்மை!

நண்பர்களே, நீதிமன்றத்தை நம்பித்தான் நாம் இருக்கிறோம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறோம்.

யார்மீது வேண்டுமானாலும் குற்றம் சொல்லலாம். யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். ஆனால், அவையெல்லாம் நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்பதை பாரதீய ஜனதா கட்சி உணரவேண்டும்.

உலக வரலாற்றில்...

உலக வரலாற்றில் ஹிட்லருக்கு என்ன நேர்ந்ததோ? முசோலினிக்கு என்ன நேர்ந்ததோ? அந்த நேர்வு உங்களுக்கு நிகழாது என்று மட்டும் நீங்கள் கருதாதீர்கள்; நிச்சயமாக நிகழும்.

ராகுல் காந்தியின் ‘‘இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற்றிருக்கிறது!

இன்றைக்குத் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், ‘‘இந்திய ஒற்றுமைப் பயணத்தை'' நடத்திய பிறகு, கருநாடகத்தில் நம்முடைய அணி வெற்றி பெற்றிருக் கிறது; லடாக்கிலே நம்முடைய அணி வெற்றி பெற்றிருக் கிறது. இன்னும் ஹிந்தி பேசக்கூடிய பல மாநிலங்களில் நாம் வெற்றிகரமாக வந்துகொண்டிருக்கின்றோம்.

இவையெல்லாம் ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை உடைய முற்போக்குச் சக்திகளுக்குக் கிடைத்திருக்கின்ற வெற்றிகள்.

ஏனென்றால், தலைவர் ராகுல் காந்தி தன்னை முன்னிறுத்தவில்லை; தன்னுடைய கட்சியை முன் னிறுத்தவில்லை; மாறாக, இந்தியாவினுடைய அர சமைப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இருக்கிறார்; இந்தி யாவினுடைய ஜனநாயகத்தை முன்னிறுத்தி இருக்கிறார். இந்தியாவில் சமதர்மம் வேண்டும் என்பதை முன் னிறுத்தி இருக்கிறார். அதுதான் அவருடைய பரப்புரை யாக இருந்தது. அதனால்தான் அவருடைய இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற்றது என்பதை நான் அனைவருடைய கவனத்திற்கும் கொண்டு வருகிறேன்.

ஆசிரியருக்கும் ஓர் ஆசை - எனக்கும் ஓர் ஆசை!

மற்றவர்கள் சொன்னதைப்போலவே, அதை விடவும் ஒரு படி மேலாகச் சென்று, ஆசிரியர் அவர் களுடைய ஆற்றல் - அவருடைய வலிமை - அவரு டைய நேர்மை - அவருடைய பரப்புரையினுடைய வேகம் - இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்தவர்கள் நாங்கள்.

அவர் தொடர்ந்து பணியாற்றவேண்டும்; அவருக்கும் ஓர் ஆசை இருக்கிறது; எனக்கும் ஓர் ஆசை இருக்கிறது.

தலைவர் ராகுல் காந்தி அவர்களை, பெரியார் திடலுக்கு அழைத்து வந்து உரையாற்ற வைக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

ராகுல் காந்தி பெரியார் திடலுக்கு வந்து உரையாற்றுவார்

நிச்சயமாக அந்த ஆசை நிறைவேறும். தலைவர் ராகுல் காந்தி பெரியார் திடலுக்கு வந்து உரையாற்றுவார்; புதிய செய்திகளை நமக்கு வழங்குவார் என்பதனை நான் இந்த இடத்தில் சொல்லி, ஆசிரியர் அவர்கள் பல் லாண்டு காலம் வாழவேண்டும்; இன்னும் வலிமை யாகவும், இன்னும் எழுச்சியாகவும் அவர் உருமாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment