மோடி ஆட்சி மாற்றப்பட்டு-‘‘இந்தியா'' கூட்டணி வெற்றி பெற்றால்தான் தீர்வு கிடைக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 19, 2023

மோடி ஆட்சி மாற்றப்பட்டு-‘‘இந்தியா'' கூட்டணி வெற்றி பெற்றால்தான் தீர்வு கிடைக்கும்!

ஊழல் ஒழிப்புப்பற்றிப் பேசும் பிரதமர் மோடி, அதானியின் ஊழல்பற்றி வாய்த் திறக்காதது ஏன்?

மக்களின் வறுமை - வேலையில்லாத் திண்டாட்டம்- விலைவாசி ஏற்றம்பற்றி எல்லாம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று?

ஊழலைப்பற்றிப் பேசும் பிரதமர் மோடி, அதானியின் ஊழல்பற்றி வாய்த் திறப்பதில்லை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு 2024 இல் நடைபெறவிருக்கும் நாடாளு மன்றப் பொதுத் தேர்தலில் மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி மாற்றப்பட்டு, ‘இந்தியா' கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

‘‘ஊழலை ஒழிக்கிறோம்'' என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் மோடி அரசு, அண்மைக்காலமாக நாட்டின் நம்பர் ஒன் பெருமுதலாளியாக வெகுக் குறுகிய காலத்தில் ‘பெருஉரு' (விஸ்வரூபம்) எடுத்துள்ளது எப்படி சாத்தியமாயிற்று?

நாடு முழுவதிலும் உள்ள உண்மையான எதிர்க்கட்சி களே இந்தக் கேள்வியை எங்கும் பரவலாக - நாள்தவறாமல் கேட்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி அவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டிப் பேசினார்!

உடனடியாக எழுந்து பிரதமர் மோடி, ராகுல் குற்றச்சாட்டினை மறுத்தாரா?

மக்களுக்கு,  அக்குற்றச்சாட்டு உண்மையில்லை என்று மறுத்து தெளிவான விளக்கம் அளித்தாரா?

எரியும் மணிப்பூரைப்பற்றியோ, அதானி ஊழல் பற்றியோ பிரதமர் மோடி வாய்த் திறக்காதது ஏன்?

பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்திற்கே போகாமல் இன்றுவரை எப்படித் தவிர்த்து வருகிறாரோ, அதே போல, அதானி நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள், சட்டத் திருத்தங்கள், அவர் நடத்தியதாகச் சொல்லப்படும் அண்மை ஊழல் குற்றச்சாட்டுகள், இந்தோனேசியா நிலக்கரி இறக்குமதியில் பனிரெண் டாயிரம் (ரூ.12,000) கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு கள்பற்றியெல்லாம் உரிய விளக்கத்தை அளித்து, ‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்' என்று மக்களுக்குக் காட்டியுள்ளாரா?

கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் அதானியின் தொழில், முதலீடு முதலியன என்ன?

மோடியின் பா.ஜ.க. ஆட்சி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தபின் அதானி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட ‘இமாலய வளர்ச்சி'க்கு உதவியவர்கள் யார், எந்தக் கட்சி, என்பது மக்களுக்குத் தெரியாதா?

இங்குள்ள ஊடகங்கள், அதானியின் நிலக்கரி ஊழல் பற்றி முழுமையான தகவல்களை மறைத்தும், ஒதுக்கியும், கண்டும் காணாதவைபோல் நடந்துகொண்டுள்ள நிலை யில், வெளிநாட்டு (லண்டன்) ஏடான ‘‘பைனான்சியல் டைம்ஸ்'' (‘Financial Times') ஏடு சில நாள்களுக்குமுன் அம்பலப்படுத்தியுள்ளது!

2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடையேயான 32 மாதங்களுக்குள் அதானி நிறுவனம் இந்தோனே சியாவிலிருந்து இந்தியாவிற்கு மேற்கொண்ட 30 முறை நிலக்கரி ஏற்றுமதி வர்த்தகத்தை மட்டும் ‘‘பைனான்சியல் டைம்ஸ்'' ஆய்வு செய்துள்ள நிலையில், கீழ்க்கண்ட கருத்துகள் - தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதானியின் நிலக்கரி கொள்ளை

1. கடந்த இந்த 2 ஆண்டுகளில், அதானி குழுமமானது, தைவான், துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள கடல் கடந்த போலி இடைத்தரகர்களைப் பயன்படுத்தி, 5 பில்லியன் டாலர் (சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்புள்ள நிலக்கரியை, சந்தை விலையைவிட இரு மடங்கு விலையில் இறக்குமதி செய்துள்ளதாகவும், அனைத்து ஏற்றுமதி வர்த்தக சந்தர்ப்பங்களிலும், இறக்குமதி நிலக்கரியின் விலையை அதிகமாகக் காட்டி,  அதானி நிறுவனம் ஆதாயம் அடைந்துள்ளதாகவும் ‘‘பைனான்சியல் டைம்ஸ்'' ஏடு சுட்டிக்காட்டியுள்ளது!

‘பைனான்சியல் டைம்ஸ்' அம்பலப்படுத்தியுள்ளதே!

2. நிலக்கரி இறக்குமதியை இந்தோனேசியாவிலிருந்து நேரிடையாக செய்யாமல், சீனா, தைவான், துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள கடல் பாதை, இடைத்தரகர்கள் நிறுவனங்களைப் பயன்படுத்தி, அதானி குழுமம் மேற்கொண்டதிலும் ஊழல் புரிந் துள்ளது என்று கூறப்பட்டுள்ளது!

3. இப்படி நிலக்கரி கொள்முதலிலேயே தனது மறைமுக இடைத்தரகர் (offshore middlemen) நிறுவனங்களைப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடி ரூபாய்களை லாபமாக ஈட்டும் அதானி நிறுவனம் பின்னர் மக்களிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை விற்று, அதன்மூலமும் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார் என்ற  மற்றொரு குற்றச்சாட்டையும் ‘‘பைனான்சியல் டைம்ஸ்'' முன் வைக்கிறது.

4. கடந்த ஆகஸ்டிலேயே மோடியின் குஜராத் மாநிலத்திலேயே எதிர்க்கட்சிகளால் இது எழுப்பப் பட்டது!

இவற்றைப்பற்றியோ,  சட்டத்தை வளைத்து நாள் தோறும் மோடி அரசு - அதானிக்கு பல துறைமுகங்கள் முதலியவற்றை குத்தகைக்கு விட்டு, நாட்டையே அத்தகைய பெருமுதலாளிகளிடம் ஒப்படைத்து, சீரழிவைச் செய்வதன்றி, மக்களின் வறுமை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றத்தைத் தடுத்தல் போன்றவைகளில் - தேர்தலின்போது உறுதி யளித்ததுபோல் எந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்கள்?

தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று?

தேர்தலில் உறுதி கூறியவை என்னாயிற்று? ‘சப்கா விகாஸ்' லட்சணம் கார்ப்பரேட்டுகளின் கனமான இணை ஆட்சிதானா? என்ற கேள்வி ஏழை, எளிய, நாட்டு மக்களால் எங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது!

இனி வரும் தேர்தலில் வெற்றி பெற்று ‘இந்தியா' கூட்டணிதான், இவற்றிற்குத் தக்க வகையில் பரிகாரம் காணும் என்று மக்கள் ஆயத்தமாகி வருவது நம்பிக்கை ஊட்டுகிறது!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.10.2023


No comments:

Post a Comment