கலைஞர் நூற்றாண்டு விழா பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 6, 2023

கலைஞர் நூற்றாண்டு விழா பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 ‘‘அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர்தான் பொறுப்பேற்கவேண்டும்'' என்றார் தந்தை பெரியார் - நெருக்கடி காலம் அதனை நிரூபித்தது!

நெருக்கடி காலத்தில் தன்னந்தனியராக அமர்ந்து மறியல் நடத்திய பெருமை கலைஞருக்குத்தான் உண்டு!

தஞ்சை, அக்.6  அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர் தான் பொறுப்பேற்கவேண்டும் என்று தந்தை பெரியார் உத்தரவுப் போட்டது  போன்று சொன்னார்; நெருக்கடி காலம் அதனை நிரூபித்தது. நெருக்கடி காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு யார் தலைவராக இருந்திருந்தாலும் தடுமாறிப் போயிருப்பார்கள்; அந்த இயக்கம் இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்திருக்கும். ஆனால், நெருக்கடி காலத்தைப்பற்றி கவலைப்படாமல், தன்னந்தனியராகவே ஒரு நோட்டீசு அடித்துவிட்டு, அண்ணா சிலைக்குப் பக்கத்தில், அமர்ந்து மறியல் நடத்திய பெருமை முதலமைச்சராக இருந்த பெருமை கலைஞருக்கு உண்டு என்றால், இந்த வரலாறு வேறு யாருக்காவது உண்டா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

கலைஞர் நூற்றாண்டு விழா - பன்னாட்டு கருத்தரங்கில் தமிழர் தலைவர் நிறைவுரை

இன்று (6.10.2023) காலை தஞ்சையில்லைஞர் நூற் றாண்டு விழாவின் முதல் அமர்வாக நடைபெற்ற ‘‘இவர்தான் கலைஞர்'' என்ற பன்னாட்டுக் கருத்தரங் கத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது நிறைவுரைவருமாறு:

கலைஞர் அவர்களின் பிறந்த நாளினையொட்டி, செய்தியாளர்கள் கலைஞரிடம் கேள்வி கேட்டனர்.

‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்!’’

‘‘உங்களை ஒரு வரியில் சுயவிமர்சனம் செய்துகொள் ளுங்கள்'' என்று கலைஞரிடம், செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

மற்றவர்களாக இருந்தால் நீண்ட நேரம் யோசித் திருப்பார்கள். ஒரு வரிக்காக, பல நாள், பல மணிநேரம் செலவழித்திருப்பார்கள்.

கணினியிலிருந்து அழுத்தினால், உடனே பதில் வருவதுபோன்று கலைஞர் அவர்கள் சொன்னார், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்'' என்றார்.

தன்னை ஒரு வரியில் விமர்சித்துக் கொண்டவர் என்ற பெருமைக்குரியவர் அவர். இதுதான் என்றைக்கும் நிலையானது. எத்தனையோ மற்ற அம்சங்கள் இருந் தாலும், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்'' என்று தன்னை வர்ணித்துக் கொண்ட கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை - மற்ற இடங்களில் எல்லாம் நடத்துவதை விட, இந்தப் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில், இத்தகைய அறிஞர் பெருமக் களையெல்லாம் அழைத்து நடத்தக்கூடிய இந்த சிறப்பு மிகுந்த பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய பல்கலைக் கழகத் துணைவேந்தர்  முனைவர் வேலுசாமி அவர்களே,

வரவேற்புரையாற்றிய பதிவாளர் பேராசிரியர் சிறீ வித்யா அவர்களே,

‘‘எதிர்நீச்சல் வீரர்’’  என்ற தலைப்பில் 

மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா

இங்கே சிறப்பாக பல தலைப்புகளில் உரையாற்றிய அருமைப் பேராசிரியர் அ.கருணானந்தம் அவர்களே, வழக்குரைஞர் மதிவதனி அவர்களே, பேராசிரியர் சுப.வீ. அவர்களே, ‘‘எதிர்நீச்சல் வீரர்'' என்ற தலைப்பில் உரையாற்றிய மேனாள் ஒன்றிய அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.இராசா அவர்களே,

நன்றியுரை கூறவிருக்கக்கூடிய இளநிலை முதலா மாண்டு மாணவி யாழினி அவர்களே,

இங்கே சிறப்பாகக் குழுமியுள்ள சான்றோர் பெருமக் களே, இயக்கப் பெரியோர்களே, மாணவச் செல்வங்களே, ஆசிரியப் பெருமக்களே, ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரங்கத்தில் நடைபெறுவது நூற்றாண்டு விழா மட்டுமல்ல - அவருக்கு ஒரு நன்றி விழாக் கூட்டம் என்று சொல்லவேண்டும்.

நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக ஆவதற்கு கலைஞருடைய 

பங்கு, பணி, உதவி!

ஏனென்றால், இது நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக ஆவதற்கு அவருடைய பங்கும், பணியும், உதவியும்தான் மிகப்பெரிய அளவில் இருந்தது என்பதை இங்கே படித்துப் பயன் பெறக்கூடிய, பட்டம் பெறக்கூடிய மாணவத் தோழர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இன்றைய இளைய தலைமுறைக்கு இந்தத் தகவல் தெரியாது.

சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய கிராமத்துப் பிள்ளைகள் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஏராளமானோர் படிப்பதோடு மட்டுமல்ல, இது கல்லூரியாக இருந்த நிலையிலிருந்து, நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக ஆகவேண்டும் என்பதற்காக அவர் பெரிய அளவிற்குப் பங்காற்றினார், உதவி செய்தார். அதோடு, அவர்கள்தான், கடைசியாக இந்த ஆணையைப் பெற்று என் கைகளில் கொடுத்தார் என்பதை இங்கே இந்த நேரத்தில் பதிவு செய்கிறேன்.

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தை 

தொடங்கி வைத்தவர் கலைஞர்!

எனவேதான், இந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தை அவரை வைத்தே தொடங்கினோம், பல ஆண்டுகளுக்கு முன். இந்தப் பல்கலைக் கழகத்தில், அவருக்கு சிறப்பு செய்வதற்காக மட்டுமல்ல - அவரால், இந்தத் தமிழ்நாடு, தமிழ் மொழி எவ்வளவு சிறப்பான நிலையை அடைந்திருக்கிறது என்பதற்கு எத்தனையோ நிகழ்வுகளைச் சொல்லலாம்.

‘‘பல்கலைக் கொள்கலன்'' கலைஞர்!

அவர் ஒரு பல்கலைக் கொள்கலன். அவர் பல்கலைக் கழகத்திற்குப் போகவில்லை. ஆனால், பல பல்கலைக் கழகங்கள், இன்றைக்கு அவரை தலைப்பாக வைத்துத் தான் ஆய்வுகள் செய்துகொண்டிருக்கின்றன. 

இதுதான் பெரியாருடைய தனிச் சிறப்பு - பெரியாரு டைய பாரம்பரியம் என்பதை இங்கே எனக்கு முன் உரையாற்றிய சான்றோர் பெருமக்கள் சொன்னார்கள்.

பதவியினுடைய தொடர்ச்சியல்ல - நீண்ட தத்துவத்தினுடைய செயலாக்கத்தினுடைய தொடர்ச்சி!

பெரியார் - அண்ணா - கலைஞர் - இன்றைய முதல மைச்சர் என்று வரிசையாக வரக்கூடிய பாரம்பரியத் தொடர்ச்சி - அது ஒரு நீண்ட தத்துவத்தினுடைய, செயலாக்கத்தினுடைய தொடர்ச்சி. அது ஏதோ ஒரு பதவியினுடைய தொடர்ச்சி என்று கருதவேண்டாம்.

அது நீண்ட லட்சியத்தினுடைய, செயல்பாட்டுக்குரிய ஒரு தனித்த வளர்ச்சி. அந்த வளர்ச்சியை எடுத்துச் சொல்வதற்காகத்தான் இதுபோன்ற கருத்தரங்கம். அவருக்குப் பெருமை சேர்ப்பதற்காக அல்ல இந்தக் கருத்தரங்கம். அவர் ஏற்கெனவே நல்ல பெருமையோடு இருப்பவர்தான்.

இங்கே ‘‘எதிர்நீச்சல்'' தலைப்பில், அருமை நண்பர் இராசா அவர்கள் மிக அருமையாக பல கருத்துகளைச் சொன்னார். நேரத்தின் நெருக்கடியால், எல்லோருமே சுருக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

ஒரு மலையை வர்ணிப்பது, ஒரு கடலை வர்ணிப்பது, மிகப்பெரிய வனத்தை வர்ணிப்பது என்றால், முழுவது மாக வர்ணித்துச் சொல்லிவிட முடியாது. ஒரு பகுதியைத் தான் சொல்ல முடியும். அதுவும் விமானத்தில் ஏறி எப்படி ஊரைச் சுற்றிக்காட்ட முடியுமோ, அதுபோன்றது தான்.

கலைஞருடைய படிப்புத் தொடக்கமே எதிர்நீச்சல்தான்!

அந்த வகையில் பார்க்கும்பொழுது, ‘‘எதிர்நீச்சல்'' என்ற தலைப்பில் அழகாகச் சொன்னார். அவருடைய படிப்புத் தொடக்கமே எதிர்நீச்சல்தான். பள்ளிக்கூடத்தில் கலைஞருக்கு இடம் இல்லை என்று சொன்னார்கள்.

‘‘எனக்கு இடம் கொடுக்கவில்லை என்றால், இந்த கமலாலயத்திலேயே இருப்பேன்'' என்று ஆசிரியரிடம் பிடிவாதம் செய்து சேர்ந்தார். கடைசிவரையில் எதிர் நீச்சல் போட்டவர் அவர்.

தந்தை பெரியாருக்கும், கலைஞர் அவர்களுக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், மற்ற தலைவர்கள் எல்லாம் உடலால் வாழ்ந்து, உணர்வால் நிறைந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால், அவர் களுக்கெல்லாம் இல்லாத ஒரு தனிச் சிறப்பு நம்முடைய தலைவர்களுக்கு உண்டு.

‘‘வாழும் பெரியார்'' என்றோ, ‘‘வாழும் கலைஞர்'' என்றோ யாரையும் சொல்லக்கூடாது!

குறிப்பாக, தந்தை பெரியாருக்கும் சரி, அண்ணா விற்கும் சரி, கலைஞருக்கும் சரி - என்ன சிறப்பு என்றால், அவர்கள் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு அடையாளம், அவர்கள் மறைந்த பிறகும், எதிரிகள் அவர்களைக் கண்டு பயப்படுவதுதான் தனிச் சிறப்பு.

இன்னமும் பெரியாரை சிலையாகப் பார்த்து பயப்படுகிறார்கள். அதனால்தான் சிலையை சேதப்படுத்துகிறார்கள் இன எதிரிகள்.

இன்னமும் வாழக்கூடியவர்தான் தந்தை பெரியார். அதனால்தான், மிக முக்கியமாக ‘‘வாழும் பெரியார்'' என்று மற்றவர்களை சொல்லாதீர்கள் என்று நான் சொல்வேன்.

பெரியார் மறையவில்லை - மறைந்தால்தானே, மற்ற வர்களை ‘‘வாழும் பெரியார்'' என்று சொல்லவேண்டிய வாய்ப்புகள் இருக்கும்.

‘‘வாழும் கலைஞர்'' என்று யாரையும் சொல்ல முடியாது; ஏனென்றால், கலைஞர் வாழ்ந்து கொண்டிருக் கின்றார்  என்பதற்கு மிக முக்கியமான அடையாளம், மறைந்த பிறகும்கூட, அவர் போராடிக் கொண்டிருந்தார். அவர் உடலால் மறைந்த பிறகும், போர்க் களத்தில் இருந்தார். 

உங்களுக்கெல்லாம் முரண்பாடாக இருக்கும், பகுத்தறிவுவாதி இப்படி பேசுகிறாரே என்று.

அண்ணாவினுடைய நினைவிடத்திற்குப் பக்கத்தில், தன் மறைவிற்குப் பிறகு, அங்கே தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்று முன்பே சொல்லியிருக்கிறார்.

மறைந்த பிறகும், தத்துவ ரீதியாக நின்று எதிர்நீச்சல் போட்டவர் கலைஞர்!

அவர் மறைந்த பிறகு, கடைசி நேரத்தில் அவருடைய உடல் கோடிக்கணக்கான மக்கள் கண்ணீர் வெள்ளத் தோடு திரண்டிருந்த நேரத்தில்கூட, நீதிமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது.

கலைஞர் அவர்களை அண்ணாவிற்குப் பக்கத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்று கேட்டு, அங்கே நீதி வென்று கலைஞர், அண்ணாவிற்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

அதேமாதிரி தந்தை பெரியார் அவர்களுக்கு, நூறாவது ஆண்டு அஞ்சல் தலை வெளியிடும்போது வழக்கு. ‘‘பெரியார்'' திரைப்படத்திற்கு நிதி உதவி செய்த தற்காக கலைஞர்மீது வழக்கு. ஆக, எல்லாவற்றிலும் கலைஞர் அவர்கள்மீது வழக்கு, வழக்கு.

மறைந்த பிறகும், தத்துவ ரீதியாக நின்று எதிர்நீச்சல் போட்ட தலைவர் ஒருவர் உலக வரலாற்றில் இவர் ஒருவராகத்தான் இருப்பார்.

இங்கே உரையாற்றும்பொழுது சொன்னார்கள், நெருக்கடி காலத்தில் கலைஞருடைய சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.

நல்ல அளவிற்கு அதிகாரம், செல்வாக்கு இருக்கும் பொழுது ஒருவர் பெரிய சாதனை செய்வதோ, ஆட்சி யில் இருப்பதோ, அல்லது ஆட்சியில் இருப்பவர்களோடு அருகில் இருப்பதோ அது பெருமையல்ல.

பதவியை துச்சமாகக் கருதியவர்

பதவி போனால் பரவாயில்லை என்று பதவியை துச்சமாகக் கருதினார்.

அதனால்தான் அண்ணா அவர்கள் அழகாகச் சொன்னார், ‘‘என்னுடைய தம்பி கருணாநிதி, தண்ட வாளத்தில் தலைவைத்துப் படுப்பது என்று சொன்னாலும் சரி, கோட்டைக்குள்ளே போகவேண்டும் என்று சொன் னாலும் சரி, பாளையங்கோட்டை சிறைச் சாலைக்குப் போகவேண்டும் என்று சொன்னாலும் சரி - எல்லா வற்றையும் ஒன்றாக மதிப்பவன்'' என்று சொன்னது இருக்கிறதே, அது எல்லோருக்கும் கிடைத்தது அல்ல.

அந்தப் பண்பாடு, அந்த சிறப்பு இருக்கின்ற காரணத்தினால்தான், எதிர்க்கட்சித் தலைவராக அவர் தன்னந்தனியராக இருந்த காலகட்டத்தில், நாங்கள் எல்லாம் ‘மிசா' சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருந்தோம்.

அன்றைக்கு எவ்வளவு கொடூரமான சூழ்நிலை இருந்தது என்பது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர் களுக்குத் தெரியும், மற்றவர்களுக்குத் தெரியாது.

கலைஞருக்குக் கார் ஓட்டியவர்களை 

கைது செய்தனர்!

என்ன சூழ்நிலை என்றால், கலைஞருடைய உதவியாளர், காரை ஓட்டிக்கொண்டிருக்கும்பொழுதே, பயந்து பாதி வழியில் காரை  நிறுத்தி, இறங்கி ஓடிப் போய்விட்டார்.

இந்தத் தகவலை சிறைச்சாலையில் இருந்த நாங்கள் கேள்விப்பட்டு வேதனைப்பட்டோம்.

பிறகு, கலைஞர் அவர்களுக்கு, கண்ணப்பன் அவர்கள் காரை ஓட்டினார், அவரும் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்குள் தள்ளப்படு கிறார்.

டி.ஆர்.பாலு, கார் ஓட்டுகிறார், மிசாவில் கைது; ஆர்.டி.சீதாபதி கார் ஓட்டுகிறார், மிசாவில் கைது செய்யப் படுகிறார்.

அந்த நேரத்தில்கூட கலைஞர் அவர்கள் சமாதானம் செய்துகொண்டு வாழலாம்; எதிர்ப்பு இருக்கிறதே என்று அவர் மலைக்கவில்லை. அதுதான், தந்தை பெரியாரி டத்தில் அவர் கற்றுக்கொண்ட மிகப்பெரிய சங்கதி.

செய்தியாளர்கள் அவரிடம், ‘‘உங்கள் கட்சிக்காரர் களை மிசா சட்டத்தில் கைது செய்து, சிறைச்சாலைக்கு ஏன் அனுப்பினார்கள் தெரியுமா?'' என்று  கேள்வி கேட்டார்கள்.

‘‘நான் ஈரோடு போனவன்; 

நீரோடு போகமாட்டேன்!’’

‘‘எனக்குத் தெரியவில்லை, உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்'' என்றார் கலைஞர்.

‘‘நீங்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்று சொல்கிறார்கள்'' என்று செய்தியாளர்கள் சொன்னார்கள்.

உடனே கலைஞர் அவர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில் சொல்கிறார், ‘‘நான் ஈரோடு போனவன்; நீரோடு போகமாட்டேன்'' என்றார்.

ஆற்றில் நீரோடு போவது ஒன்றும் சிறப்பல்ல; எதிர்நீச்சல் அடிப்பதுதான் தனிச் சிறப்பு.

தமிழ்நாட்டில் உள்ளதுபோன்று 

வேறு மாநிலங்களில் உண்டா?

அதேபோன்று, சமத்துவபுரம். இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன. 75 ஆண்டுகால சுதந்திர நாட்டில், அமுத ஆறு ஓடுகிறது என்று இன்றைக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலாவது - எல்லா ஜாதிக்காரர்களும் ஒன்றாக வசிக்கக்கூடிய ‘‘பெரியார் நினைவு சமத்துவ புரத்தைப்'' போல வேறு எங்காவது இருக்கிறதா? தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பஞ்சாயத்து ஊர்களிலும் திறக்கப்பட்டு இருக்கின்றன.

உத்தரப்பிரதேசம் பெரிய மாநிலம்தானே - அடுத்தடுத்த பிரதமர்களை உருவாக்கக்கூடிய மாநிலம் என்று பெருமையாக சொல்லப்படுகின்ற மாநிலத்தில் உண்டா?

பீகாரில் முடியுமா? மற்ற மாநிலங்களில் முடியுமா? முடியவில்லையே! தமிழ்நாடுதான் அந்த சிறப்புக்குரியது என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்னொரு செய்தி யையும் சொல்கிறேன்.

திராவிடர் இயக்கம், நீதிக்கட்சியை ‘‘குழிதோண்டி புதைத்துவிட்டோம்'' என்று சத்தியமூர்த்தி போன்ற வர்கள் சொன்னார்கள்.

அப்பொழுது தந்தை பெரியார் சொன்னார், ‘‘நீதிக்கட்சியை உங்களால் குழிதோண்டி புதைக்க முடியாது. நீங்கள் குழியைத் தோண்டிக்கொண்டே இருப்பீர்கள்; அதன்மேல் மண் மூடிக்கொண்டே வரும்; உங்கள்மேல்தான் மண் விழும் - நீங்கள் வெளியே வர முடியாது'' என்று.

அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி, பத்தே ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார். 1952 ஆம் ஆண்டு தேர்தலில் நிற்கவில்லை; 1957 இல் தேர்தலில் நிற்கிறார். பிறகு 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன், செய்தியாளர்கள் அண்ணா விடம் கேள்வி கேட்டனர், ‘‘கட்சியைத் தொடங்கி பத்தே ஆண்டுகளில் நீங்கள் இவ்வளவு பெரிய சாதனை செய்திருக்கிறீர்களே, உலகத்தில் இதுபோன்று வேறு எங்கேயும் இல்லையே! இது உங்களுக்குப் பெருமை அல்லவா!'' என்று.

உடனே வேறு யாராவது இருந்தால், ‘‘ஆமாம், இது என்னுடைய சாதனை, என்னுடைய இயக்கம்'' என்று தலையை நிமிர்த்துச் சொல்லியிருப்பார்கள்.

நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சிதான் 

திராவிட முன்னேற்றக் கழகம்!

ஆனால், அண்ணா அவர்கள் அடக்கத்தோடு சொன்னார், ‘‘இது எனக்கான பெருமையல்ல; எங்களுடைய கட்சிக்கான பெருமையல்ல; நான் நீதிக்கட்சியினுடைய பேரன்; ஆகவே, நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்; இந்த வெற்றிக்கான அடையாளம் நீதிக்கட்சி வாழுகிறது என்று அர்த்தம்'' என்றார்.

அண்ணாவிற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் இருக்காது என்று ஆரூடம் கணித்தார்கள்.

அண்ணாவிற்குப் பிறகு 

கலைஞர் பொறுப்பேற்கவேண்டும்: 

தந்தை பெரியார் 

ஆனால், தந்தை பெரியார் அவர்கள், ‘‘கலைஞர் தான் அண்ணாவிற்குப் பிறகு தலைவராக வர வேண்டும்'' என்று உத்தரவு போட்டது போன்று சொல்லியனுப்பினார் - சாட்சியமாக நான் இருக்கி றேன்.

கலைஞர் அவர்கள்கூட கொஞ்சம் யோசித்தார். தந்தை பெரியார் அவர்களின் கருத்தை தராசு நிறுத்திப் பார்ப்பதுபோன்று  மதிப்பீடு செய்தார்  - அதுதான் தலைமைக்கு அடையாளம்.

கலைஞரால்தான் முடியும் என்று சொன்னார் தந்தை பெரியார்.

நெருக்கடி காலம் அதனை நிரூபித்தது. நெருக் கடி காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு யார் தலைவராக இருந்திருந்தாலும் தடுமாறிப் போயிருப்பார்கள்; அந்த இயக்கம் இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்திருக்கும்.

ஒரு தலைமையினுடைய ஆற்றல் என்பது பதவியை வைத்து அளப்பதல்ல!

ஆனால், நெருக்கடி காலத்தைப்பற்றி கவலைப் படாமல், தன்னந்தனியராகவே ஒரு நோட்டீசு அடித்து விட்டு, சென்னை அண்ணா சிலைக்குப் பக்கத்தில், அமர்ந்து மறியல் நடத்திய பெருமை முதலமைச்சராக இருந்த பெருமை கலைஞருக்கு உண்டு என்றால், இந்த வரலாறு வேறு யாருக்காவது உண்டா என்று நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஒரு தலைமையினுடைய ஆற்றல் என்பது பதவியை வைத்து அளப்பதல்ல. அவருடைய ஆற்றல் என்பது பதவியில் இல்லாதபோது எப்படிப்பட்டது என்பதுதான். எதிரிகள் அதிகமாக ஆகும்பொழுது எப்படி அதனைச் சமாளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான்.

எனவேதான், அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment