நூல் அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

நூல் அரங்கம்

நூல்:

“காமராசர் கொலை முயற்சி சரித்திரம்”

ஆசிரியர்: கி.வீரமணி 

வெளியீடு:

திராவிடர் கழக வெளியீடு

முதல் பதிப்பு 1967

பக்கங்கள் 168

நன்கொடை ரூ. 110/-

*  காந்தியாரை சுட்டுக் கொன்ற மராட்டிய சித்பவன் பார்ப்பான் நாதுராம் கோட்சே

ஹிந்துத்துவாவின் ஊற்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த சங்கி என்பது வரலாற்றில் எழுதப்பட்டுள்ள உண்மை!

*  அதே பார்ப்பன - பனியா - பணக்கார கூட்டம், டில்லியில் பெருந்தலைவர் காமராசரை உயிருடன் கொளுத்த முயன்றதையும், அவரது வீட்டுக்கு தீவைத்து வன்முறையில இறங்கியதையும் வரலாற்று ஆவணங்களோடு தெரிவிக்கின்ற அரிய நூல் இது!

*  பசுவதை தடுப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையில் - தலைநகர் டில்லியில் 1966ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி  இன்றைய பாஜகவின் அன்றைய அமைப்பு ஜனசங், இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங்கராச்சாரிகள், நிர்வாண சாமியார்கள் ஒன்றிணைந்து மிகப் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்!

*  கலவரத்தின் இறுதியில் காமராசரின் பங்களாவிற்கு தீ வைத்தனர்! காமராசரை உயிரோடு எரிக்க முயன்றனர்!  நல்ல வேளையாக காமராசரை அவரது உதவியாளர்கள் காப்பாற்றினர். அந்த பயங்கரவாத செயலை படம் பிடித்து காட்டுகின்ற ஆவண நூல் இது! 

*  அந்த கொடிய சம்பவம் நடந்தது 1966ஆம் ஆண்டு ! உடனேயே 1967ஆம் ஆண்டு இந்த நூல் வெளியிடப்பட்டது!  நூலாசிரியர் கி.வீரமணி அவர்கள், நிகழ்ச்சியின் ஆதாரமாக பல இதழ்களின் செய்திகளைச்  சேர்த்துள்ளார்கள் என்பது நமக்கு வியப்பைத் தருகிறது! 

*  பெரியார் அணுக்கத் தொண்டர் ஆதாரமில்லாமல் சேதாரம் விளைவிக்க மாட்டார் என்பதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு அந்த இதழ்களின் பட்டியல். 

ஆங்கில இதழ்கள் : பிளிட்ஸ் | பேட்ரியாட் | லிங்க் | கரண்ட் | ஆர்கனைசர் | இந்து | மெயில் | இண்டியன் எக்ஸ்பிரஸ் | 

தமிழ் இதழ்கள் : மித்திரன் | குமுதம் | கலைமகள் | சுதந்திரச் சங்கு | குடிஅரசு | நவசக்தி | விடுதலை

வெளிநாட்டு இதழ்கள் : பிராவ்தா (ரஷ்யா) | சண்டே டைம்ஸ் | அப்சர்வர் 

*  நூலின் பதிப்புரையில் ஆசிரியர் எழுதுகிறார் - " 1967ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூல், அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் ஆணையிடப்பட்டு என்னால் தயாரிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கில் விற்பனையான நூலாகும்!"..

*  மேலும், " ஆர்.எஸ்.எஸ். கூட்டம் காந்தியாரைக் கொன்ற கூட்டம்! ஆர்.எஸ்.எஸ். கோட்சே கும்பல் அம்பேத்கருக்கு பணியாள் மூலம் விஷம் வைத்துக் கொள்ள முயன்ற அமைப்பு!" ... என்ற அதிர்ச்சித் தகவலையும் கூறி, "புதிய தலைமுறையினருக்கு பழைய உண்மைகளை போதிக்கவே இந்த நூல் வெளியாகியுள்ளது ! " ....என்ற நியாயமான காரணத்தையும் தெரிவித்துள்ளார்! 

*  நூலின் முன்னுரையை விளக்கமாக எழுதியுள்ள பெரியார், பார்ப்பனர்களின் அநியாய, துரோக குணநலத்தின் காரணத்தை இவ்வாறு தெளிவுபடுத்துகிறார். 

*  "எந்த விதமான அதர்மத்தையும் கையாள்வது - அதாவது கொலை, நாசவேலை, நாணயம், ஒழுக்கம், சத்தியம் ஆகியவைகளைச் சிறிதும் பாராமல், காரிய சாத்தியத்திற்கு தேவை என்று தோன்றுகின்ற எந்தக் காரியத்தையும் செய்யலாம் என்கின்ற உரிமை, உயர் வகுப்பாருக்கு மதத் தர்மத்தின் படியும், இராமாயணப்படியும் அளிக்கப்பட்டிருப்பதால், உயர்ந்த வகுப்பார் என்பவர்களிடம், எப்போதுமே ஒழுக்கம், நாணயம், நேர்மை, சத்தியம் முதலிய எதையும் எதிர்பார்க்க முடியாது! " .......

*  காமராசரை ஹிந்துத்துவா சக்திகள் எரித்துக் கொல்ல முயன்ற கொடூர செயலுக்குப் பின்னே இருந்த காரணங்களையும் காரியங்களையும்‌ அறிந்து கொள்வோம் :

*  1966ஆம் ஆண்டு இந்தியாவில் பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என அன்றைய ஜனசங் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் தீவிரமாக வேலை செய்தன. அன்றைய காங்கிரஸ் ஆட்சிக்கு பெரிய நெருக்கடியைத் தந்து 1967இல் வர இருந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனசங் ஆதரவு கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க ஆயத்தமானார்கள்!

*  பம்பாயில் 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி (டில்லி கலவரத்திற்கு சரியாக மூன்று மாதங்கள் முன்பு ) ஜே. பி. மங்காராம் பங்களாவில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பல பணக்கார முதலாளிகள், சாமியார்கள், ஜனசங் ஆதரவாளர்கள் கூடி, ஆரியக் கலாச்சாரம் காப்பதே இலக்கு என முடிவு செய்தார்களாம்! பசுவதைச் சட்டம் கொண்டு வராவிட்டால் உள்நாட்டுப் போர் ஏற்படுமென மிரட்டினார்கள்!

*  டில்லியில் 1966ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பசுவதை தடுப்பு கிளர்ச்சி நடைபெற உள்ளதை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராசர் கண்டித்தார்!

*  "அக்கிளர்ச்சியை ஏதாவது ஓர் இடத்தில் நடத்தப் பொருத்தம் என்றால், சென்னையில் நடைபெறலாமே (அப்படி நடந்தால் தந்தை பெரியார் பதிலடி தருவார் என்ற நம்பிக்கையில்) தவிர டில்லியில் நடத்துவதற்கு எந்த பொருத்தமும் இல்லை " ... என காமராசர் திட்ட வட்டமாக கூறினாராம்!

*  டில்லி கலவர நாள் - நவம்பர் 7ஆம் தேதி 1966ஆம் ஆண்டு.

பசுவதை தடை கோரி, நாடாளு மன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு, ஜனசங், ஆரிய சமாஜ், ஹிந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களை சேர்ந்தோரும், சங்கராச்சாரியர்கள், நிர்வாண சாமியார்கள் பெட்ரோல் டின்களுடன் கூடினார்கள்! நாடாளுமன்றம் மீது கல் வீசித் தாக்கினார்கள்! 

* அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள ஆல் இண்டியா ரேடியோ, ரிசர்வ் வங்கி கட்டடங்களை கல் வீசித் தாக்கினார்கள் . நிர்வாண சாமியார்கள் கையிலிருந்த சூலத்தைக் கொண்டு காவல் துறையினரையும் தாக்கினார்கள்.

*  ஏறத்தாழ ஒன்றரை லட்சம் கலவரக் கார்கள் டில்லியை சேதப்படுத்தினர்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் துவக்கத்தில் இருந்ததாகவும், வன்முறை, தீ வைப்புக்குப் பின்னர் காவல் துறையின் கைது நடவடிக்கையின் போது, தப்பி ஓடி விட்டதாகவும் நாளிதழ் செய்தி கூறுகிறது! 

* கலவரம் நிகழ்த்திக் கொண்டே காவிக்கும்பல் ஜந்தர் மந்தரை அடைந்தது. அருகேயே இருந்த ஒன்றிய அமைச்சர் ரகுராமையா இல்லத்திற்கு தீ வைத்தது. அந்த வீடு காமராசரின் வீடு என நினைத்து தீ வைத்தார்கள். பின்பு அவர்களுக்கு வேறு உத்தரவு வரவே காமராசர் வீட்டிற்கு சென்றார்கள்!

*  காமராசரின் இல்லத்தை வன்முறைக் கும்பல் நெருங்கியது. காமராசர் மதிய உணவு உண்டு,தனி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். கும்பல் வீட்டைச் சுற்றி வளைத்தது! கூட்டத்திலிருந்து கல்லெறி வீசப்பட்டது!

* காமராசரின் உதவியாளர் நிரஞ்சன் லால் பதிலுக்கு கற்களை எறிந்தார். சேவகர் பகதூர் சிங் தற்காப்புக்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். ரவைகள் தீர்ந்து போனது. கும்பல் வீட்டிற்குள் நுழைந்து விட்டது. பகத்சிங் ஒரு அறைக்குள் தாளிட்டுக் கொண்டார். நிரஞ்சன் லால் வேறு ஒரு அறையில். கும்பல் வரவேற்பு அறைக்குள் நுழைந்து பெட்ரோல் நனைத்த துணிகளைக் கொண்டு தீ வைத்தது!

*  இதனிடையே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காமராசரை அவசரமாக எழுப்பி, பாதுகாப்பாக பின் கதவு வழியே வெளியே கூட்டி வந்து வேறு ஒரு நண்பரின் வீட்டில் தங்க வைத்தார்கள். வீடு எரிந்து கொண்டிருந்தது. காவல் துறை வந்து சேர்ந்தது!

*  அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பச்சைத் தமிழர் என பெரியாரால் அழைக்கப்பட்ட, காமராசருக்கு நடந்த இந்த கொடுமையை கண்டித்து பெரியார் பல அறிக்கைகளை வெளியிட்டார். விடுதலை நாளிதழில் 18.01.1967இல் வெளி வந்த கட்டுரை.

*  "இந்த முயற்சியை ( பசுவதை தடை சட்ட கிளர்ச்சி ) காமராசரின் சொந்த நாடான தமிழ் நாட்டில் நடத்தினால், பார்ப்பன சமுதாயமே பூண்டற்று போய் விடுமே என பயந்து, தமிழனுக்கு எவ்வித நாதியும், கேள்வி கேட்பாரும் இல்லாத வடநாட்டான் ஆதிக்கத்தில் இருக்கிற டில்லி மாநகரத்தில் அமலுக்கு கொண்டு வர துணிந்து விட்டார்கள்!  .... என்று தனது மனக் குமுறலை பதிவு செய்துள்ளார்!

*  காந்தியாரின் கொலை சரித்திரத்தை தெரிந்து கொண்ட ஒவ்வொருவரும்,

காமராசர் கொலை முயற்சி சரித்திரம் பற்றியும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!

* 2.10.2023 அன்று காமராசரின் 48ஆவது நினைவு நாள் (02.10.1975). இந்த நினைவு நாளில் மதவாத சக்திகளின் சூழ்ச்சியையும் திட்டங்களையும் புரிந்து கொள்வோம்! அதை புரிந்து கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.

- பொ. நாகராஜன்

பெரியாரிய ஆய்வாளர்


No comments:

Post a Comment