மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் : பரிசோதனை வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் : பரிசோதனை வெற்றி

சிறிஅரிகோட்டா அக் 22  மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக  மேற்கொள்ளப் பட்டது. ஆளில்லா விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி, மீண்டும் பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது 

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப் பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ககன் யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் 2025ஆ-ம் ஆண்டில் 3 விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் தரையில் இருந்து 400 கி.மீ. தூரம் கொண்ட சுற்று வட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கிருந்தபடியே 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் மீண்டும் அவர்களைப் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வருவதே இத்திட்டத் தின் நோக்கமாகும். இதற்கிடையே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் அழைத்து வருவது சவாலான பணியாகும். இதில் விண்கலத்தை எதிர்பாராத ஆபத்துகளில் இருந்து பாதுகாப் பது மிகவும் முக்கியமானதாகும். இதற்காக பல்வேறுகட்ட பரிசோ தனைகள் நடத்துவதற்கு இஸ்ரோ திட்டமிட்டது.

ஏற்கெனவே விண்கலம் கீழிறங் கும்போது பாராசூட்கள் விரிதல் போன்ற சிறிய அளவிலான சோதனைகள் இஸ்ரோவால் நடத்தப்பட்டது. தொடர்ந்து மனிதர்களை சுமந்து செல்லும் ஆளில்லாத விண்கலத்தை 4 முறை விண்ணுக்கு அனுப்பி பத்திரமாக பூமிக்கு கொண்டுவரும் பரிசோ தனைகளை மேற் கொள்வதற்கு முடிவு செய்யப் பட்டது. அதன்படி முதல் கட்டமாக சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மய்யத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து டிவி-டி1 ராக்கெட் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் விண்ணில்  செலுத்தப்பட்டது. தரையில் இருந்து 11.6 கி.மீ உயரம் சென்றதும் ராக்கெட்டில் இருந்து விண்கலம் தனியாக விடுவிக்கப் பட்டது. அதன்பின் 16.7 கி.மீ உயரம் எட்டியதும் விண்கலம் தரையிறங்குவதற்கான செயல் பாடுகள் தொடங்கின. அப்போது மணிக்கு 1,470 கி.மீவேகத்தில் விண்கலம் பூமியை நோக்கி வந்தது. இதையடுத்து விண்கலத் தில் உள்ள 10 பாராசூட்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பிரிந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இறுதியாக சிறீஅரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள வங்கக்கடல் பகுதியில் விநாடிக்கு 8 மீட்டர் வேகத்தில் விண்கலம் வெற்றிகரமாக இறக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக சுமார் 10 நிமிடங்களில் இந்த பணிகள் முடிந்துவிட்டன. 

விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப உள்ள திட் டத்தின் ஏதேனும் ஒரு சூழலில் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தால் அதி லுள்ள வீரர்களை பாதுகாப்பாக மீட்க ஏதுவாக இத்தகைய பரிசோதனைகள் மேற்கொள் ளப்படுகின்றன. 

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது, ‘‘விண்கலத்தை விண்ணுக்கு அனுப் பும்போது எதிர்பாராத ஆபத் துகள் நேரலாம். அப்போது விண்கலத்தை பாதுகாப்பாக கடற்பரப்பில் விழச் செய்வதே இந்த சோதனைகளின் நோக்கமாகும். அதில் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. இதை யடுத்து மீட்கப்பட்ட விண்கலத்தை ஆய்வு செய்து அதிலுள்ள பாராசூட்கள் மற்றும் பிற தொழில் நுட்ப அம்சங்களின் செயல் பாடுகள் மேம்படுத்தப்படும். 

இத் திட்டத்தை செயல்படுத்த இன் னும் 2 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் பலவிதமான சோத னைகள் மேற்கொள்ளப்படும். அவற்றில் அவசர கால பாதுகாப்பு வசதிகள், விண்வெளியின் புறச் சூழல் பாதிப்பு மற்றும் கதிர்வீச்சு அபாயங்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட அம்சங்கள் பரிசோதிக் கப்படும்’’ என்றனர். 

No comments:

Post a Comment