இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத்தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 1, 2023

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத்தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கை!

முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு! அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்!

சென்னை, அக்.1 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை  29.09.2023 அன்று தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சரும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவரு மான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சந்தித்து, இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை சமர்ப்பித்தார்.

பல்வேறு காலகட்டங்களில் இலங்கையிலிருந்து புகலிடம் தேடி வந்த தமிழர்களுக்கு தாய் உள்ளத்தோடு தமிழ்நாடு அரசானது அவர்களை பாதுகாத்து பராமரித்து பல்வேறு நலத்திட்டங்களை சுமார் 40 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது தற்போது சுமார் 58,357 இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களிலும், 33,479 நபர்கள் காவல்துறை பதிவோடு முகாம்களுக்கு வெளியிலும் தங்கி உள்ளனர்.

இந்திய சட்டங்களின் அடிப்படையில் இவ்வாறு போரினால் தஞ்சம் புகுந்தவர்களை சட்ட ரீதியாக நடத்துவதற்கான முறைமை இல்லாத சூழலிலும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழர் வாழ்வியல் மரபின் அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலிலும், தாய் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு மேம்படுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள், வீட்டு திட்டங்கள், வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான செயல்பாடுகள் ஆகியவை அறிவிக்கப்பட்டு, சிறப்புடன் செயலாக்கம் பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டு இருக்கின்றன.

இவற்றில் முக்கியமான தாக இலங்கை தமிழர்களின் நலன் பேணவும், அவர்களின் நீண்ட கால தீர்வுகளை அடையாளம் காணவும் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் அமைத்தார்.

இக்குழுவில் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மரு. கலாநிதி வீராசாமி, உறுப்பினர்களாக - சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள், அய்க்கிய நாடுகளின் அகதிகளின் அமைப்பின் பிரதிநிதி, தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மூத்த பத்திரிகையாளர், சட்ட வல்லுநர், கல்வியாளர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி, பல்வேறு ஆய்வுகளும், கலந்துரையாடல்களும், சட்ட பகுப்பாய்வுகளும் நடத்தப்பட்டன.

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால தேவைகள் மற்றும் தீர்வுகள், அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட இந்த ஆலோசனைக் குழு, பல கட்டங்களில் வரலாறு மற்றும் சட்ட முறைமைகளை ஆராய்ந்து நீண்டகால தீர்வு, சுயசார்பு மற்றும் வாழ்வாதாரம் குறித்த இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்தது.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, குழுவின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் எ. தமிழரசி, பொதுத்துறை செயலாளர் க. நந்தகுமார், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் மற்றும் உறுப்பினர்-செயலர் ஜெசிந்தா லாசரஸ், உள்துறை துணைச் செயலாளர் சித்ரா, அய்க்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையாளர் சச்சிதானந்தவளன், கல்வியாளர் இ.ரா. இளம்பரிதி, அரசமைப்புச் சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம், ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகத்தின் (ளிதிணிஸிஸி) செயலாளர் செல்வி சூரியகுமாரி, அட்வெண்டிஸ்ட் வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு நிறுவனத்தின் (கிஞிஸிகி) திட்ட இயக்குநர் இக்னேசியஸ், இயேசு சபை புலம் பெயர்ந்தோர் பணி இயக்குநர் அருட்தந்தை பால்ராஜ் மற்றும் பேராசிரியர் கே.எம். பாரிவேலர் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment