ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 14, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: மோசமாக பேசிவிட்டு நீதிமன்றத்தில் 'சாஷ்டாங்க' மன்னிப்பு கேட்பதும், நீதிமன்றமும் அதை ஏற்று பிணையில் விடுவதால் மீண்டும் வெளியே வந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும் வாடிக்கையாகி விட்டதே?

- வ.கோவிந்தசாமி, வேளச்சேரி

பதில் 1: அது "சாவர்க்கார்" மாடல் போலும்! 10 கடிதங்களுக்கு மேல் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய வரலாற்றின் அடிச்சுவட்டில் அவர்கள் பயணிக்கிறார்கள் போலும்! ஆர்.பி.வி.எஸ்.மணியன் என்ற ஒருவரின் தரங்கெட்ட நாராசர நரகல் நடைக்குப் பின் மன்னிப்பு - ஜாமீன். "யாருக்கும் வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை!" - புரட்சிக்கவிஞரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

---

கேள்வி 2: இஸ்ரேல் விவகாரம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற வீரர்களைக் கூட வடமாநில தேர்தலுக்காக பயன்படுத்துகிறாரே மோடி?

- சே.ஆறுமுகம், திருத்தணி

பதில் 2: தோல்வி பயத்தின் உச்சம். "எத்தைத் தின்றால் பித்தம் தீரும்" என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறதா?

---

கேள்வி 3: சிவராஜ் சிங் சவுகான் "என்னை வழியனுப்புகிறீர்களா? வரவேற்கிறீர்களா" என்று பாடல் பாடி அழுகிறாரே?

- மா.வேலு, கிருஷ்ணகிரி

பதில் 3: பசு மாட்டுக்கு குளிர் சாதன ஏற்பாடு  - ஹிந்துத்துவா லேபரெட்ரியாக மத்தியப் பிரதேசம், இவை போதாதா மக்கள் அவரை நிரந்தரமாக வழியனுப்ப?

---

கேள்வி 4: "ஒன்றிய அரசு என்று கூறி தன்னை அறிவாளி என்று காட்டுகிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்று கேள்வி எழுப்பிய  வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுப் பேசுகிறாரே?

- ஆ.சந்திரன், கூடுவாஞ்சேரி

பதில் 4: வானதி பிறகு சரியான தமிழ் மொழிபெயர்ப்பு கற்றுக்கொண்டிருக்கக் கூடும்! அவர் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆனதால் முன்பு பேசியதை நினைவில் கொள்ளலாமா? மறந்து விடுங்கள்.

---

கேள்வி 5: பட்டாசு ஆலை விபத்துகளில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாவது சமீப காலங்களில் தொடர்கதையாகி வருகிறதே?

- க.சிவக்குமார், மதுரை

பதில் 5: இதற்கென நல்ல வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு - முதலமைச்சர் உருவாக்கி, நல்ல கண்காணிப்பு, பரிசோதனைகள் மூலம் உயிர் காக்கும் செயல் திட்டத்தை உருவாக்க முன்வருதல் அவசரம் - அவசியம்!

---

கேள்வி 6: உத்தரப்பிரதேசத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் கோவில் வடிவில் புதுப்பிக்கப்படும் என்று சாமியார் முதலமைச்சர் அறிவித்துள்ளாரே?

- ச.பிருந்தா, புதுக்கோட்டை

பதில் 6: 'சாமியார்' ஒருவர் முதலமைச்சரானால் இப்படித்தானே செய்வார்? "காவிகளின் ராஜ்யத்தில் உய்யலாலாவாம்!"

---

கேள்வி 7: அமலாக்கத்துறை சோதனை செய்து கொண்டு இருக்கும் போதே ஊடகங்கள் கற்பனைக் குதிரைகளை செய்திகளாக வெளியிடுகின்றனவே (எ.கா. பிணவறையில் மூட்டை மூட்டையாக அமெரிக்க டாலர் பிடிபட்டது) - இது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குத் தெரியாதா?

- ம.முத்துக்குமரன், திருச்சி

பதில் 7: என்ன செய்வது? "ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்" என்ற எஜமானக் குரலில் அனைவரும்  ஊழியர்கள். அதைத்தானே செய்வார்கள், செய்ய முடியும் - பரிதாபம்! பரிதாபம்!!

--

கேள்வி 8: "கூட்டணி தர்மத்திற்காக நீங்களும்தானே சில சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்கள்" என்று அதிமுக கூறியுள்ளதே?

- வெ.கோபாலகிருட்டிணன், குற்றாலம்

பதில் 8: ஒரு பழைய தவறு, புதிய தவறுக்குப் பதிலாகவோ, நியாயம் கற்பிப்பதாகவோ ஆகக் கூடாது; முடியாது.

--

கேள்வி 9: புதுச்சேரியில் ஜாதிக்கொடுமையால் ஒரு அமைச்சரே பதவி விலகி உள்ளாரே? இது குறித்து தமிழ்நாட்டு விவகாரத்தில் எப்போதுமே மூக்கை நுழைக்கும் அந்த மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை எதுவும் கருத்து தெரிவிப்பாரா?

- தி.முருகேசன், ஒசூர்

பதில் 9: பெண்களைக் காப்பாற்ற - அதுவும் ஆதிதிராவிட பெண் அமைச்சரைக் காப்பாற்றக் கூட முடியாது அந்தப் பெண் ஆளுநர் - நடந்துகொண்டது நியாயம் தானா?

--

கேள்வி 10: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனிடமே இணையதள மோசடிக்காரர்கள் பெருந்தொகையைப் பறித்துள்ளனரே? சாமானியர்களின் நிலை என்ன ஆகும்?

- பா.பெருமாள், வியாசர்பாடி

பதில் 10: இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு நமது பாராட்டுகள்!


No comments:

Post a Comment