தஞ்சை இரு பெரும் விழாவில் தமிழர் தலைவர் உரை வீச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

தஞ்சை இரு பெரும் விழாவில் தமிழர் தலைவர் உரை வீச்சு

* ‘பாராட்டிப் போற்றிய பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால்  இடியுது பார்’ என்றார் கலைஞர்       

* இன்னும் இடிக்கப்பட வேண்டியவை இருக்கின்றன

* அன்று கலைஞர் 'யுபிஏ'யை உருவாக்கினார்,  இன்று நமது முதலமைச்சர் 'இந்தியா'வை உருவாக்கியுள்ளார்

* அதனால்தான் பிரதமர் எங்கு சென்றாலும் நமது முதலமைச்சரைத் தாக்குகிறார்   

* 'இந்தியா'  கூட்டணிதான் நாளை ஆளப் போகிறது

எங்கள் திராவிட ஏவுகணை முதலமைச்சர் அவர்களே! 

நீங்கள் வாழ்க - உங்கள் பணி தொடர்க!


தஞ்சை, அக்.7 அன்று கலைஞர் ‘யுபிஏ’யை உருவாக்கியதுபோல, இன்று நமது முதல மைச்சர் ‘இந்தியா’வை உருவாக்கியுள்ளார். அதுதான் நாட்டை அடுத்து ஆளப் போகிறது. அதனால்தான் எங்கு சென்றாலும் பிரதமர் மோடி நமது முதல் அமைச்சரை எங்கு சென் றாலும் தாக்கிப் பேசுகிறார். அது அச்சத்தின் அறிகுறி, எங்கள் திராவிட ஏவுகணை முதல் அமைச்சர் அவர்களே, உங்கள் பணி தொடரப் படும் என்று திராவிடர் கழகத் தலைவர் உரை யாற்றினார். உரை வருமாறு: 

‘‘உங்களுடைய பணி என்பது தனி நபர் களைத் தாக்காது - தத்துவங்களைத் தாக்கும், தகர்க்கும்! எங்கள் திராவிட ஏவுகணையே, நீங்கள் வாழ்க! உங்களுடைய பணி வளர்க’’

என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கலைஞர் நூற்றாண்டு விழா - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா!

நேற்று (6.10.2023) மாலை தஞ்சையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் தலை மையுரையாற்றினார்.

அவரது தலைமையுரை வருமாறு:

‘‘கடிகாரம் ஓடும்முன் ஓடு'' என்று புரட்சிக் கவிஞர் நீண்ட நாள்களுக்குமுன்பு கட்டளையிட்டது, இந்த மேடைக்கும் அவசியமாகிறது என்கின்ற காரணத்தினால், அனைவரையும் விளித்ததாக, எனக்கு முன்னால் வரவேற்புரை கூறி, மற்றவர்கள் சொன்னதைப்போல, அத்தனைப் பேரையும் விளித்ததாகக் கருத வேண்டுகிறேன். அன்புச் சகோதரர்கள், ஆன் றோர் பெருமக்கள், அறிஞர்கள் அத்துணை பேரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அன்போடும், பாசத்தோடும், உரிமையோடும் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

தாய்க்கழகத்தினுடைய உரிமையான கட்டளையை, அன்புக்கட்டளையை...

இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு ஒரு நாள் ஒதுக்கி, பல்வேறு பணிகளுக்கிடையில், தாய்க்கழகத்தினுடைய உரிமையான கட்டளையை, அன்புக்கட்டளையைத் தட்டமாட்டேன் என்பதற்காக இங்கே வந்து தன்னுடைய நேரத்தை ஒதுக்கித் தந்து, விரைவில் அவர்கள் விமானத்தில் போகவேண்டிய அவசியத்தில் இருக்கின்றது.

இங்கே உரையாற்றிய பெருமக்களே, மேடையில் அமர்ந்திருக்கின்ற சான்றோர்களே, அறிஞர்களே, எதிரில் இருக்கின்ற நம்முடைய இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும், அரசியலில் கூட்டணிக் கட்சியாகவும் இருக்கக் கூடிய அருமைப் பெரியோர்களே, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தாய்மார்களே, சகோதரிகளே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எங்களுடைய தலைதாழ்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

17 ஆண்டுகளுக்குமுன்னால்...

இந்நிகழ்ச்சி, தஞ்சை வரலாற்றிலேயே ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்களுக்கு - 17 ஆண்டுகளுக்குமுன்னால், அவர் ஆட்சிக்கு வந்தவுடன், இங்கே அமர்ந்திருக்கின்றவர்களில் பலர், நம்முடைய எம்.பி., பழனி மாணிக்கம் போன்றவர்கள் அன்றைக்கு அந்த நிகழ்ச்சியில் அமர்ந்திருந்தார்கள் - ஒரு பெரிய நிகழ்ச்சி - விழாவுக்குப் பின் ஒரு கவிதையையே எழுதினார் கலைஞர் அவர்கள் - அவ்வளவு பெரிய சிறப்பு, மகிழ்ச்சி!

நூற்றாண்டு விழா என்பது கலைஞர் என்ற 

ஒரு தனி மனிதருக்கு அல்ல!

இன்றைக்கும் அதேபோலத்தான் மிகுந்த மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் இருக்கிறோம். காரணம் என்னவென்றால், நூற்றாண்டு விழா என்பது கலைஞர் என்ற ஒரு தனி மனிதருக்கு அல்ல. 

ஒரு நீண்ட வரலாறு - திராவிடத்தினுடைய வரலாறு!

நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் - திராவிடர் கழகமாக மாறி, சுயமரியாதை இயக்கம் உள்ளடக்கப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் அமைப்பாக அங்கமாக ஆகி, ஒரு பெரிய வரலாற்றைத் தந்திருக்கிறது.

‘‘பல நூற்றாண்டுகளை ஒரு குளிகையில் அடைப்பதைப்போல...’’

அண்ணா அவர்கள் 18 ஆண்டுகளுக்குப் பின், தந்தை பெரியார் அவர்களை திருச்சியில் சந்தித்துப் பேசுகின்ற நேரத்தில், உணர்ச்சிப்பூர்வமாக ஒரு வார்த்தை சொன்னார்.

‘‘பெரியாருடைய பணி எப்படிப்பட்டது என்றால், ‘‘Putting Centuries in to a Capsule''' என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

‘‘பல நூற்றாண்டுகளை ஒரு குளிகையில் அடைப்பதைப்போல''  என்றார்.

அதை அப்படியே செய்தவர் - தொடர்ந்தவர் கலைஞர். அதை மிஞ்சியவர் நம்முடைய இன்றைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர்.

இவருடைய பணி சாதாரணமான பணியல்ல. நாம் இவரைப் பாராட்டுவது, அவரைப் பெருமைப்படுத்துவது என்பதைவிட, இந்த சமுதாயத்தை உயர்த்துவதற்காக - இந்த சமுதாயம் பயனடைய வேண்டும் என்பதற்காக.

தமிழ்நாட்டுத் தலைவர் மட்டுமல்ல - 

அகில இந்தியாவிற்கும் வழிகாட்டக் கூடியவர்!

ஏனென்றால், தமிழ்நாட்டைத் தாண்டி, திராவிடத்தைத் தாண்டி, இந்தியாவே இப்பொழுது இவரைத்தான் நம்பிக் கொண்டிருக்கின்றது; இவர்களுடைய தலைமையைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. புதிய இந்தியாவை உருவாக்கக் கூடிய அளவிற்கு இன்றைக்கு அவர்கள்தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்லுகின்றபொழுது, நம்முடைய தலைவர், தமிழ்நாட்டுத் தலைவர் மட்டுமல்ல - அகில இந்தியாவிற்கும் வழிகாட்டக் கூடியவராக இருக்கின்றார்.

கலைஞர் வழியை 

அப்படியே பின்பற்றுகிறார்!

கலைஞர் இருந்தபொழுது, யு.பி.ஏ. என்கிற அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்கினார். அந்த வழியிலே, ‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை'' என்று சொல்லுகின்ற வள்ளுவர் குறள்போல, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்கள் - கலைஞர் வழியை அப்படியே பின்பற்றுகிறார்.

கலைஞர், பெரியார் வழி, அண்ணா வழியைப் பின்பற்றினார். அப்படியே அகலமாகிக் கொண்டே இருக்கிறது ஈரோட்டுப் பாதை. அதனுடைய விழியாக, அகில இந்தியாவிற்கும் இப்பொழுது வழிகாட்டக் கூடிய அளவிற்கு இருக்கிறார். அதனால்தான், எதிரிகள் இவரைக் கண்டு மிரளுகிறார்கள். இன்னும் மிக முக்கியமாக, எங்கே போனாலும், தி.மு.க.தான் நம்முடைய பிரதமர் அவர்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

பிரதமர் மோடியே ஆடிப் போயிருக்கிறார்!

அப்படியானால் என்ன அர்த்தம் என்று சொன்னால், அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி அவர்கள், இதே மண்ணிலே பிறந்து, இதே மண்ணிலே மறைந்தார். அவருக்கு நினைவுச் சின்னம் இங்கேதான் வைக்கப்பட்டு இருக்கிறது. அவர் சொல்வார்.

‘‘ஈட்டி எட்டிய வரையில் பாயும் -

பணம் பாதாளம் வரையில் பாயும் -

எங்கள் பெரியார் கொள்கைகள் இருக்கிறதே,

அவை அண்ட பிண்ட சராசரங்கள் 

அத்தனையிலும் பாய்ந்து - அதற்கு 

அப்பாலும் பாயும்!'' என்று சொன்னார்.

இப்பொழுது அதை உணர்கிறோம். அதனால்தான், பிரதமர் ஆடிப் போயிருக்கிறார். கோவில்களையெல்லாம் தி.மு.க. அபகரித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.

1924-1925 ஆம் ஆண்டு நீதிக்கட்சி சட்டம் போட்டு, இந்தியாவில் முதன்முறையாக அறநிலையப் பாதுகாப்புத் துறை சட்டம் - அதன்படி காணாமல் போன கடவுள்களையும், விசா இல்லாமல் திருப்பிக் கொண்டு வரக்கூடிய ஆட்சியாகத்தான் இந்த ஆட்சி இருக்கிறது என்று சொல்லும்பொழுது, பிரதமருக்கு வரலாறு தெரியவில்லையா? தெரிந்தும் அவருக்குச் சொல்ல மனம் இல்லையா? என்ற சூழ்நிலையே தெரிகிறது.

அன்று யு.பி.ஏ.யை உருவாக்கினார் கலைஞர் - இன்று ‘இந்தியா' கூட்டணியை உருவாக்கியிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர்!

எனவேதான், இங்கே இருக்கக்கூடிய எங்கள் முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - ‘இந்தியாவை’ -  உருவாக்கினார். கலைஞர் அவர்கள் யு.பி.ஏ.வை உருவாக்கியதைப்போல, இன்றைய நம்முடைய  முதலமைச்சர் ‘இந்தியா' கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்.

‘இந்தியா'வின் நம்பிக்கையாக இருக்கிறார்!

‘இந்தியா' கூட்டணிதான் நாளைக்கு ஆளப்போகின்ற கூட்டணியாக இருக்கின்றது என்பதற்கு அச்சாரமாக முதலில் அவர் பணியேற்று இருக்கிறார்.

இதுதான் பல பேருக்குக் குத்துகிறது, குடைகிறது, அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த சூழ்நிலையில், எங்கள் திராவிட ஏவுகணையே, நீங்கள் வாழ்க! உங்களுடைய பணி வளர்க!

உங்களுடைய பணி என்பது தனி நபர்களைத் தாக்காது - தத்துவங்களைத் தாக்கும், தகர்க்கும்!

பாராட்டிப் போற்றி வந்த பழைமைலோகம்

ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்! என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர்.

தாய்க்கழகம் உங்களை உச்சிமோந்து பாசத்தோடு பாராட்டுகிறது, வரவேற்கிறது!

இடிக்கவேண்டிய பகுதிகள் பாக்கியிருக்கின்றன; அதை நீங்கள் செய்யுங்கள். அதற்குத்தான் தாய்க்கழகம் உங்களை உச்சிமோந்து பாசத்தோடு பாராட்டுகிறது - வரவேற்கிறது.

வாழ்க கலைஞர்!

வாழ்க நம்முடைய தளபதி!

வருக புதிய சமுதாயம்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.


No comments:

Post a Comment