வரலாற்றுச் சுவடுகளிலிருந்து... நாயுடு - நாயக்கர் - நாடார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

வரலாற்றுச் சுவடுகளிலிருந்து... நாயுடு - நாயக்கர் - நாடார்

எஸ்.வீ.லிங்கம்

நாயுடு, நாயக்கர், நாடார் இவர்களைப் பற்றி ஓர் குறிப்பு எழுதுங்கள் என்று "முரசொலி"யின் மாப்பிள்ளை தம்பி ஒர் கடிதம் எழுதியது. எதிர்காலத் தலைவர்களிடம் எனக்கு பயமும், ஆசையும் அதிகம். ஆதலால் இக்குறிப்பை உடனே எழுதி அனுப்புகிறேன்.

நாயுடு, நாயக்கர், நாடார் நம் நாட்டின் மாபெரும் தலைவர்களான பி.வரதராஜுலு நாயுடு எம்.எல்.ஏ. அவர்கள் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள். கே.காமராஜ நாடார் எம்.எல்.ஏ. அவர்கள், இவர்களையே குறிக்கும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் பெங்களூர் சாப்பர்ஸ் அண்டு மைனஸ் பட்டாளத்து சிப்பாயாக இருந்தேன். பட்டாளத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக ஒரு பிரிவு மதுரைக்கு வந்தது. அதில் நான் போனேன்.  தேசபக்தர்களைப்பற்றி எனக்கு ஆசை அதிகம். அன்று நமது டாக்டர் பி.வரதராஜலு நாயுடு அவர்களுக்குத் தென்னாட்டுத் திலகர் என்று பெயர். தமிழ்நாட்டில் தமிழில் பேசி - தூங்கிக் கிடந்த தமிழர்களை முதன்முறையாக தட்டி எழுப்பிய பெருமை அவரையே சாரும். இன்று தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தேச பக்தர்களும் டாக்டர் நாயுடுவினால் சிருஷ்டிக்கப்பட்டவர்களேயாவர். ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டு மதுரை கோர்ட்டில் வழக்கு நடந்தது. அவ்வழக்கிற்கு வக்கீலாக வந்தவர்தான் சி.ராஜகோபாலாச்சாரியார் பி.ஏ.பி.எல். அவர்கள் அதாவது இன்று ராஜாஜி என்று அழைக்கப்படுபவர்!

இதற்கு மூன்று ஆண்டு கழித்து பெல்காம் என்ற ஊரில் அ.இ. காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதற்கு தமிழ் நாட்டிலிருந்து செல்லும் பிரதி நிதிகள் பெங்களூர் வழியாகச் சென்றார்கள். பகலில் பெங்களுரில் தங்கி இரவு மெயிலில் புறப்பட வேண்டும். இவ்விதம் வரும் தேச பக்தர்களுக்கு வேண்டிய சவுகரியங்களைக் கொடுத்தோம். எல்லாத் தலைவர்களும் தங்கிச் சென்றார்கள். அவர்களில் நாயுடு, நாயக்கர், ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் பி.ஏ.பி.எல். இவர்கள் குறிப்பிடக் கூடியவர்கள். பலிஜா நாயுடு மாளிகையில் டாக்டர் நாயுடு அவர்களைக் கண்டு பேசினேன். அவரது 'பிரபஞ்ச மித்திரன்' என்ற பத்திரிகைக்கு நான் ஒரு சந்தாதாரர் என்றும் சொல்லிக் கொண்டேன். 'பட்டாளத்திலிருந்து கொண்டு நீ தைரியமாக இதையெல்லாம் செய்கிறாயே' என்று என்னைப் பாராட்டிப் பேசினார். அரசியலில் எனது முதல் தலைவர் நாயுடு அவர்களே ஆவார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் பட்டாளத்தை விட்டு விலகி நேராக சேலம் வந்து நாயுடு அவர்களின் விடுதியில் தங்கி அவரின் மாணாக்கர்கள் சிலரில் ஒருவனானேன். நாமக்கல் கவி ராமலிங்கம் பிள்ளை அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். நாமக்கல், மோகனூர், கரூர் இப்பகுதிகளில் பிரச்சாரத்தில் நான் ஈடுபட்டேன். இக்காலத்தில் பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்களை நான் சந்தித்தேன்.

1920-1925 இந்த ஆண்டுகள் தமிழ்நாட்டில் தேச விடுதலை ஆர்வமும், சமூக விடுதலை ஆர்வமும், தலைகாட்டும் காலமாகும். சமுதாயத்தில் ஒரு சின்னக் கூட்டமாக உள்ள அய்யர்மார் மீது விரோதமாக ஓர் இயக்கம் ஆரம்பமாகி விட்டது. இது காங்கிரஸ் கட்சியிலும் மறைமுகமாக நிலவியது. இக்காலத்தில் காந்தியார் வடக்கே "நிலவரி மறுப்புப் போர்" துவக்கினார்.

இதைப்போல் நமது நாட்டிலும் ஓர் கிளர்ச்சி நடத்த வேண்டுமென்பது இங்குள்ள தீவிர காந்தி பக்தர்களின் ஆசை! மாயவரம் தாலுக்கா, ஆயர்பாடி என்ற ஊரில் இதற்கென ஓர் மாநாட்டை நடத்தினேன். எல்லா ஊர்களிலுமுள்ள சில காங்கிரஸ்காரர்கள் எனக்கு ஊக்கமளித்தார்கள். மகாநாட்டிற்குத் தலைவராக நாயுடு அவர்களைப் போட்டேன். இம்மாநாட்டைக் கண்டு பயந்து 144 தடை உத்தரவு போட்டது. நாயுடு அவர்கள் தலைமை வகிக்க வர மறுத்துவிட்டார். எங்களுக்கு எப்படியாவது மாநாட்டை நடத்திவிட வேண்டுமென்பது. அவர் வராவிட்டால் என்ன? ராஜகோபாலாச்சாரியாரைத் தலைவராகப் போட்டு மாநாட்டை நடத்திவிட்டோம். இம்மாநாட்டிற்கு நமது மாகாண இன்றைய முதல் மந்திரி, கனம்.கே.காமராஜ் அவர்களும் வந்திருந்தார்.

குருகுலப் போராட்டம் என்று ஓர் கிளர்ச்சி நடந்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பண உதவி பெற்று இக்குருகுலம் ஆரம்பிக்கப் பட்டது. பிராமண ஜாதியில் ஆடு, மாடு தின்னும் சிறந்த தேசபக்தரான வ.வே.சு.அய்யரே இதை நடத்தி வந்தார். இதில் படிக்கும் பிராமணரல்லாத வாலிபர்கள் இழிவு செய்யப்பட்டார்கள் என்பது நாயுடு அவர்களின் கட்சி. பிராமண மாணவர்கள் அல்லாத மாணவர்களுடன் சமமாக உட்காரக் கூடாது என்பது பிராமண வாதம். இதை நாயுடு அவர்கள் ஆரம்பித்தார் என்றால் அன்று நாட்டின் நிலைமை அதுவேயாகும். காங்கிரசில் அய்யர் கூட்டம் நாயுடு அவர்களை வெறுத்தது. இவர் பயந்து விட்டார். தூங்கிக் கிடந்த தமிழ்நாட்டில் தேச விடுதலைப் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் சிறை சென்று தங்கள் தேச பக்தியை நிரூபித்தது போலவே சமூக இழிவு போக்கவேண்டும் என்ற தங்கள் ஆவலை வெளிப் படுத்தினார்கள். ஆனால் பிந்தியது தோற்றது. இதற்கு உதாரணம்தான் நாயுடுவும், நாயக்கரும். நாயுடு பயந்தார் என்றதும் தமிழ்நாட்டு மக்கள் இதயத்திலிருந்து நாயுடு அவர்கள் அகற்றப்பட்டார். இதை உடனே பெரியார் ஈடு செய்ய வெளிவந்தார். தமிழ்நாட்டின் மக்களின் தலைவராக பெரியார் ஆனார்.

"தனக்கும் தன் சகாக்களுக்கும் வேற்றுமை காணாத நிலை ஏற்படுத்திக் கொள்பவனே தலைவனாவான்.

"அபிப்பிராய பேதமுள்ள சகாக்களை கூடுமானவரை திருத்தி அல்லது சிறிது தன்னை திருத்திக் கொள்பவனே தலைவனாவான்."

"தனது சுயநலம் ஒன்றை மட்டும் கருதாது, தனது லட்சியம் ஈடேற தன் நிலையைக்கூட விட்டுக் கொடுக்கத் துணிபவனே தலைவனாவான்."

"சுய நலமும், பயந்தாங் கொள்ளிகளையும் நம்பியவன் தலைவனாக நீண்ட நான் இருக்க முடியாது."

"இம்மாதிரியான தவறுகளை காந்தியாரும்,ஜின்னா அவர்களும் செய்யவில்லை. வங்கச் சிங்கம் சி.ஆர்.தாஸ் முரண்படுகிறார் என்றால் காந்தியார் உடனே அங்கு சென்றார். தாசை தன்னவர் ஆக்கிக் கொண்டார். அதேபோன்று பாஞ்சாலத்து தான் குடும்பத்தை ஜின்னா அலட்சியப்படுத்தவில்லை. ஆதலால் தான் அவ்விருவர்களும் வெற்றி பெற்றார்கள். ஜின்னாவுக்கு பாகிஸ்தான் பிரிவுக்கு நல்ல ஆதாரங்களை எடுத்துக் காட்டிய நமது பெரியாரோ, கஷ்டங்களை ஏற்க மறுக்கும் சகாக்களை வைத்திருந்ததினால் திராவிட நாடு கிடைக்கவில்லை. விடுதலை பெற்ற திராவிட நாட்டின் தனிப் பெருந்தலைவராக - திகழ வேண்டிய பெரியார் அவர்களை "விடுதலை" தினசரி ஏட்டின் தலைவராக மட்டும் இருக்க நேர்ந்தது குறித்து வருந்துகிறேன்.

ஒரு கட்சி ஆரம்பித்த இரண்டாண்டுக்குள் ஓர் மும்முனைப் போராட்டத்தை நடத்தக்கூடிய ஆற்றல் தி.மு.க.வின் தலைவரான அண்ணாதுரை அவர்களுக்கு எப்படிக் கிட்டியது. கொஞ்ச காலத்தில் ஓர் கலைஞரையும், ஓர் சம்பத்தையும் (சம்பத் குமார ரகுவரத திருவேங்கிட கிருஷ்ண ராமானுஜ தாஸானுக்கு தாஸன்) சேனாவீரர்கள் என்பதை கண்டுபிடிக்க அறிஞர் அண்ணாதுரை இருபது ஆண்டு ஒரே நிலையில் இருந்தார். அய்யர்மார்கள் பத்தாண்டு இடைவெளியில், நாயுடு, நாயக்கர் இவ்விருதலைவர்களையும் மோத விட்டார்கள். இவர்கள் அய்யர்மார் கைப்பொம்மைகளாக சில காலம் இருந்ததினால் ஏற்பட்ட பலன்தான் இம்மாகாணத்திற்கு முதன் மந்திரியாக ஓர் பிராமணர் (ஆச்சாரியார்) வர இடமேற்பட்டது. 

நாயுடுவால் நாட்டிற்கு அறிமுகப் படுத்தப்பட்ட ஆச்சாரியார், நாயுடுவை பிராமண கூட்டுறவுடன் உட்கார வைத்துவிட்டார். நாயுடு குருகுல போராட்டத்திற்கு பின்பும் பிராமண எதிர்ப்புக் கொடியை கீழே எறியாமல் இருந்திருந்தால் ஆச்சாரியார் முதன்மந்திரியாக வந்திருக்க முடியாது. தனது போர் முழக்கத்திற்கு பாலிஷ் கொடுக்க எண்ணியதால் நாயுடுவின் உண்மைத் தொண்டர்கள் பரிதாபப்பட்டு அவரை விட்டுப் பிரிந்தார்கள். ஆச்சாரியாரால் மறைக்கப்பட்ட நாயுடு அவர்கள் காமராசர் சலுகையால் மீண்டும் மக்கள் முன் நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சேலத்தில் நாயுடுவையும், திருவண்ணாமலையில் பெரியார் இராமசாமி¬யும் ஆச்சாரியார் சாக அடித்தார் என்றாலும் இவ்விருவருக்கும் தீங்கிழைத்த ஆச்சாரியாரை வீழ்த்த ஒருவர் வர மீண்டும் பல ஆண்டுகள் ஆயின. சிறந்த தேச பக்தர்களான நாயுடுவும், நாயக்கரும் எதில் எதில் தவறினார்கள் என்பதை நீண்ட நாட்களாக காமராசர் அவர்கள் கவனித்து வந்தார். ஆச்சாரியார் சூழ்ச்சி, நாயுடுவை சாக அடித்ததைப் போலவே பெரியாரை சுலபத்தில் சாக அடிக்க முடியவில்லை. 30 ஆண்டுகள் பொறுத்திருக்க நேரிட்டது.

"தனது சகா ஊழியர்களில், தன்னைப்போல செல்வாக்குப் பெற்று வருபவர்களைக் கண்டு மகிழ்ச்சி அடைபவனே தலைவன் ஆவான்." இம்மகிழ்ச்சியுடன் நில்லாது தனது நிலை. தனது சிஷ்யர்கள் அடையும்போது, தான் இன்னும் புது பலத்தைப் பெற்று, தன்னைப் போல் வளர்ந்த தன் சகாக்களையும் ஒன்று சேர்த்துச் செல்பவனே தலைவனாவான்."

அவர்களால் எப்படி முடிந்தது. தனது சகாக்கள் என்றால் உண்மையிலேயே இவரே சகாவாகிவிடுகிறார். இத்தகைய பலம் கொண்ட படை மட்டும். கிரிப்ஸ் திட்ட காலத்தில் இங்கு உருவாகி இருந்தால் இன்று திராவிட நாட்டுத் தனிப் பெருந் தலைவராக பெரியார் வீற்றிருப்பார். நிதி திரட்டி ஓர் 20 ஆயிரம் ரூபாயில் கார் பெறுவதற்குப் பதில், ரஷ்ய நாட்டின் பிரதமர் புல்கானின் அவர்கள் 'ஓ! பெரியாரே! முன்னமேயே உங்கள் நண்பர் நாங்கள்தான். எங்கள் நாட்டு மக்களின் அன்பு காணிக்கையாக இந்த விமானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். பல ஆண்டுகள் ஆகின்றன. தாங்கள் ரஷ்யாவிற்கு வந்து, மீண்டும் வர பணிவன்புடன் பிரார்த்திக்கிறேன் என்று கூறி இருப்பார். இம்மாதிரியான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கச் செய்யும் தி.மு.க. தன் தூய தொண்டால், நாயுடுவின் பிறந்த தின விழாவுக்கு கனம் கே.காமராசர் தலைமை வகிக்க தகுதி உள்ளவர். ஏனெனில் தன் பழைய தலைவர்களான இருவரை, ஏமாற்றியவரை வீட்டுக்கு அனுப்பியவராவார். இந்த மூன்று பெரியவர்களை நாடு என்றும் மறந்து விடாது. இம்மூவரும் பிராமண துவேசிகள் என்று பெயர் எடுத்தவர்கள்; ஆனால், இவர்களுக்கு பிராமண நண்பர் உண்டு. இவர்களின் பிராமண நண்பர்கள் இதுவரை அவர்கள் சமூகத்திற்கு வேண்டியவைகளை செய்துகொள்ள தவறியது கிடையாது. ஆனால், இவர்கள் பலத்தில் நம் சமூகத்திற்கு தீங்கிழைக்கத் தவறவில்லை. முந்திய இரு தலைவர்கள் தவறியதை காமராசர் செய்யாததினால் இவர் நமது மாகாண முதன் மந்திரியானார். 

மாகாணப் பிரிவினை, இவருடைய டில்லி செல்வாக்கிற்கு சோதனைக் காலமாகும். இம்மாகாண பிராமணியமும், வெளிநாட்டு அம்பாஸிடர்களாக உள்ள மலையாளிகளின் கூட்டுறவும் ஒன்றாகச் சேர்ந்து, இன்று காமராஜரை நெருக்குகிறது. இச்சோதனை காலத்தில் அவர் தவற மாட்டார் என நம்புகிறேன்.

நாயுடு. நாயக்கர், இவர்கள் தங்களின் இறுதிக் காலத்தில் தங்கள் பிராமண நண்பர்களால் வீழ்த்தப்பட்டு மரித்ததைப் போல, காமராஜர் தனது நிலைமைப் பார்த்துக் கொள்ளத் தவறக் கூடாது! முந்தியவர் என்பதோ, நீண்ட நாள் தேசபக்தர் என்பதோ மட்டும் ஓர் தலைவருக்குப் போதுமானதல்லதான், யாருக்காக பாடுபடுவதாக சொல்கிறாரோ. அவர்களின் அவ்வப் போதைய நிலை என்ன? என்பதையும், அவர்கள் எந்தத் திக்கில் செலுத்தப்பட்டால் நாடு விடுதலை பெற்று விமோசனம் பெறும் என்பதையும் சிந்திக்கவும், சிந்தித்து, அதற்குத் தக்க வழியை அவர்களுக்கு காட்டவும் தலைவன் தவறக் கூடாது. இப்பழைய கதைகளை, ஏன் ஞாபகமூட்டுகிறேன் என்றால் எதிர்கால திராவிட இளைஞர்கட்கு ஓர் எடுத்துக்காட்டாக இது இருக்குமென்பதற்காகவே.

நன்றி: ''முரசொலி" பொங்கல் மலர்-1956


No comments:

Post a Comment