தளபதி அர்ச்சுனன் நூற்றாண்டு விழாவில் ‘இனமுரசு' சத்யராஜ் முழக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

தளபதி அர்ச்சுனன் நூற்றாண்டு விழாவில் ‘இனமுரசு' சத்யராஜ் முழக்கம்!

‘‘நாம் நடிகனாக இருப்பது முக்கியமா? பெரியார் தொண்டனாக இருப்பது முக்கியமா?'' என்று பார்த்தால், பெரியார் தொண்டனாக இருப்பதுதான் முக்கியம்; அதுதான் மனசாட்சியோடு நடந்துகொள்வதற்கு நியாயமான விஷயம்!

முழுமையான நாத்திகனாக மாறி, எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாமல் இருப்பதினால்தான், நிம்மதியாக இருக்கிறேன்!

சென்னை, அக்.23 ‘‘நாம் நடிகனாக இருப்பது முக்கியமா? பெரியார் தொண்டனாக இருப்பது முக்கியமா? என்று பார்த்தால், பெரியார் தொண்டனாக இருப்பதுதான் முக்கியம்; அதுதான் மனசாட்சியோடு நடந்துகொள் வதற்கு நியாயமான விஷயம்; ஒரு முழுமையான நாத்திகனாக மாறி, எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாமல் இருப்பதினால்தான், நிம்மதியாக இருக்கி றேன்'' என்றார் ‘இனமுரசு' சத்யராஜ் அவர்கள்.

தளபதி அர்ச்சுனன் நூற்றாண்டு விழா

கடந்த 14.10.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற தளபதி அர்ச்சுனன் நூற் றாண்டு விழாவில் பங்கேற்று  இனமுரசு’ சத்யராஜ் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்லவேளையாக அண்ணன் இளங்கோவன் அவர்கள் உரையாற்றிய பிறகு, முதலமைச்சர் காணொலி மூலம் உரையாற்றி, என்னுடைய ‘மூடை' மாற்றிவிட்டார். இல்லாவிட்டால், நீங்கள் பேசியவுடன் எம்.எஸ்.வி.1 9999 என்பதிலேயே இருந்திருப்பேன். அந்தக் காலகட்டத் திற்குப் போனேன். சிவப்பு கலர் வண்டி.

இங்கே பெரியார் திடலில் எவ்வளவோ நிகழ்ச்சியில் நான் உரையாற்றியிருக்கிறேன். எத்தனையோ கூட்டங் களில் பங்கேற்று இருக்கிறேன்.

அய்யா முத்தமிழறிஞர் மாண்புமிகு மேனாள் முதல மைச்சர் கலைஞர் முன்னிலையில் பேசியிருக்கிறேன். ஆனால், இன்றைக்கு எந்த ரூட்டில் பேசுவது என்று தெரியவில்லை. ஏனென்றால், சொந்த பந்தங்களும் இருக்கிறீர்கள். அண்ணன் கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்; பக்கத்தில் என்னுடைய அன்புச் சகோதரர் மாணிக்கம் அவர்களும் இருக்கிறார்.

இவர்கள் எல்லோரும் நான் பேசி முடித்தவுடன், நீங்கள் பேசியது இப்படி தவறு; அப்படி தவறு என்று விவாதம் செய்வார்கள்.

இந்த இயக்கத்திற்கு வரும்பொழுது 
எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருந்திருக்கும்....

தளபதி அர்ச்சுனன் அவர்களைப்பற்றி எனக்குப் பெரிய வியப்பு என்னவென்றால், 18 வயதில் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குமுன்பு எப்படி இந்த சுயமரியாதைக் கருத்துகளாலும், பகுத்தறிவு கருத்துகளாலும் ஈர்க்கப் பட்டு, இந்த இயக்கத்திற்கு வரும்பொழுது எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருந்திருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன்.

ஏனென்றால்,  தந்தை பெரியாருடைய இயக்கத்தைப் பற்றி, திராவிடர் இயக்கத்தைப்பற்றி நம்முடைய தம்பி களும், தோழர்களும் யூ-டியூபில் ஒரு பதிவு போடு வார்கள்.

சாமி கும்பிடுவதற்கு எதிரான 

இயக்கம் இல்லீங்க; ‘‘கும்பிடறேன் சாமி’’ 

என்பதற்கு எதிரான இயக்கம்!

இவ்வியக்கம் சாமி கும்பிடுவதற்கு எதிரான இயக்கம் இல்லீங்க; ‘‘கும்பிடறேன் சாமி'' என்பதற்கு எதிரான இயக்கம் என்று.

அந்த இடத்திலிருந்து ஒருவர், ‘‘கும்பிடறேன் சாமி'' என்று தோளில் இருக்கின்ற துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு கும்பிடும்பொழுது, அதை அனுபவிக்கவேண்டிய இடத்தில் இருக்கும் ஓர் அர்ச்சுனன் அவர்கள், அதற்கு எதிராக வந்து போராடுகிறார் என்பதுதான் சிறப்பான ஒரு விஷயமாகும்.

யாராக இருந்தாலும் அதை ரசிப்பார்கள். இன்றைக்கு நம்மிடம் ஒருவர் வந்து ‘‘சார்'' என்று சொன்னால் நமக்கு குளுகுளுவென்று ஆகிவிடும்; ‘‘அய்யா'' என்று சொன் னால் நமக்கு ஜில்லுன்னு ஆகிவிடும்.

அப்படியிருக்கும்பொழுது, ‘‘சாமி'' என்று கூப்பிடு வதை எதிர்த்து ஏற்படுத்தப்பட்ட ஓர் இயக்கத்திற்கு வந்திருக்கிறார் அவர்.

அய்யா பெரியார் அவர்கள், தளபதி அர்ச்சுனன் அவர்களை ‘‘சாமி'' என்றுதான் கூப்பிடுவார்கள். அவருக்கு எப்பொழுதும் அந்த மரியாதை அந்தக் குடும்பத்திற்கு எப்பொழுதும் இருந்திருக்கிறது.

இது எனக்கு மிகவும் அதிசயமாக இருக்கிறது. ஏன் இதை அதிசயமாக நினைக்கிறேன் என்றால், நான் என்னை வைத்துப் பார்க்கிறேன்.

பிறப்பால் யாரும் உயர்ந்தவர்கள் - தாழ்ந்தவர்கள் இல்லை

நான் 40 ஆண்டுகளுக்குமுன்பு தந்தை பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தக் கொள்கைகளில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்டு, அது என்ன நியாயம்? சமூகநீதி என்பதில் என்ன நியாயம் என்றால், பிறப்பால் யாரும் உயர்ந்தவர்கள் - தாழ்ந்தவர்கள் என்பது இல்லை.

குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தால், உயர்ந்தவன்; குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தால் தாழ்ந்தவன் என்பது கிடையாது. அது அயோக்கியத்தனம். அப்படி ஒரு நிலைமையை உருவாக்குகின்ற அயோக்கியத்தனம்.

ஆணாகப் பிறந்தால் உயர்ந்தவன்; பெண்ணாகப் பிறந்தால் தாழ்ந்தவள் என்று ஒரு நிலையை உருவாக் குவது அக்கிரமம், அயோக்கியத்தனம் என்பதை எடுத்துரைக்கும் ஓர் இயக்கம்தான் பெரியாருடைய இயக்கம். அதுதான் சமூகநீதி.

எங்களுக்கு, சாமி இருக்கிறாரா, இல்லையா என்பது இரண்டாம்பட்சம்தான்.

பெரியார் சொல்லியிருக்கிறார், ‘‘கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது கடவுளுடைய பிரச்சினைங்க, நம்ம பிரச்சினை இல்லீங்க'' என்று.

‘‘ஏனுங்கய்யா, கடவுள் இல்லை என்று சொல்றீங்க, திடீரென்று கடவுள் உங்கள் முன் வந்தால் என்ன சொல்லுவீங்க?'' என்று கேட்டார் ஒருவர்.

‘‘இருக்கார் என்று சொல்லிவிட்டுப் போறேன். அதான் வந்து எங்கே நிக்குதுங்க; வந்து நிக்கல என்பதுதானே பிரச்சினை'' என்றார்.

கடவுள் என்பது  ஒரு இமெஜனரி அய்டியாலஜி!

இந்தக் கோட்பாடு, பிறப்பால் உயர்ந்தவன் - தாழ்ந் தவன்; ஆணாகப் பிறந்தவன் உயர்ந்தவன், பெண்ணாகப் பிறந்தால் தாழ்ந்தவள் என்கிற ஒரு கோட்பாட்டிற்கு, கட்டமைப்பிற்கு, ஒரு தலைமை தாங்கும் இடத்தில், ஒரு கற்பனை கருத்தியலைக் கொண்டு போய் வைக்கிறார்கள்.

கடவுள் என்ற ஒரு கற்பனைக் கருத்தியல் - அது ஒரு இமெஜனரி அய்டியாலஜி! கடவுள் என்பது  ஒரு இமெஜனரி அய்டியாலஜி!

சொல்லி சொல்லி பயமுறுத்தி, உங்களுடைய ஆசையினாலும், அறியாமையானாலும், எதிர்பார்ப்பினாலும், அச்சத்தினாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு கற்பனைக் கருத்தியல்தான் அந்தக் கடவுள் என்கிற ஓர் அமைப்பு.

அதை வைத்துக்கொண்டு, இந்தப் பிறப்பால் ஏற்பட்ட உயர்வு - தாழ்வைக் கட்டிக் காப்பதற்கு அப்படியொரு இமெஜனரி அய்டியாலஜி வைத்திருப்பதை அடித்து உடைத்தோம் என்றால்தான் சரி வரும் என்பதற்காகத் தான், அதன் தலையிலேயே கை வைத்தார் தந்தை பெரியார் அவர்கள்.

இல்லாவிட்டால் அவர் சொல்வாரா, ‘‘கடவுளுக்கும், நமக்கும் வாய்க்கால் வரப்பு தகராறா? நான் இதற்கு முன்னாடி பார்த்ததும்கூட இல்லீங்க'' என்பார்.

எவ்வளவு கிண்டலாக சொல்லுகிறார் பாருங்கள்!

மாநாட்டுப் பந்தலுக்குக்கூட தீ வைத்திருக்கிறார்கள்!

அதுபோன்ற ஓர் இயக்கத்தில், 80 ஆண்டுகளுக்கு முன்பு, தளபதி அர்ச்சுனன் அவர்கள், எனக்கு பெரியப்பாவோ, சித்தப்பாவோ எனக்குத் தெரிய வில்லை. அன்றைக்கு ஊர் ஊராகச் சென்று அவர்கள் இயக்கக் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அவர் கலந்துகொண்ட மாநாட்டுப் பந்தலுக்குக்கூட தீ வைத் திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

அவர் அப்படி போகவேண்டிய அவசியமே இல்லாத குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்.

நம்முடைய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அய்யா சொன்னதுபோன்று, ‘‘பான் வித் சில்வர்ஸ்பூன்'' என்றும், நம்முடைய சேனாபதி அய்யா சொன்னதுபோன்று, அப்படிப்பட்ட ஒரு குழந்தை, இப்படிப்பட்ட ஒரு இயக்கத்திற்கு வந்து கலந்துகொண்டு போராடியது என்பது பெரிய விஷயம்.

ஆனால், அந்தக் காலத்தில் எல்லோரும் அப்படித் தான் இருந்திருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள், பெரிய பணக்காரர். ஈரோட்டில் மய்யப் பகுதியில் மூன்று மாடியில் வீடு.

சர்.பிட்டி. தியாகராயர் அவர்கள் ஒரு பெரிய செல் வந்தர். பனகல் அரசர், டி.எம்.நாயர் போன்றோர் இந்தக் கட்டமைப்பை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் அத்துணை பேரும் இந்த இயக்கத்திற்கு வந்து போராடியது என்பது மிகப்பெரிய விஷயமாகும்.

இதன் காரணமாகத்தான், இதற்குத் தடங்கலாக இருக்கும் கடவுள் என்ற கற்பனைக் கருத்தியலை அடித்து உடைப்பதுதான் பெரியாருடைய முக்கியமான வேலை. மற்றபடி அப்படி ஒரு அயிட்டம் இருந்தால், இருந்துவிட்டுப் போகட்டுமே என்பதுதான்!

ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய ‘கடவுளின் பொய்த்தோற்றம்‘’ 

ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்ற மிகப்பெரிய அறிஞர், அவர் ‘‘The God  Delusion'' - ‘‘கடவுளின் பொய்த் தோற்றம்'' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகம் பெரியார் திடலில் கிடைக்கிறது.

அவர் எந்த ரூட்டில் வருகிறார் என்றால், விஞ்ஞான ரீதியாக கடவுள் என்று ஒரு கட்டமைப்பு இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று நிரூபிப்பதற்காக எழுதியிருக் கிறார். அவருடைய அறிவை பறைசாற்றுவதற்காக எழுதப்பட்ட புத்தகம்தான் ‘‘The God  Delusion''  என்ற புத்தகம்.

பெரியாருடைய கடவுள் மறுப்பு என்பது மனிதநேயத்தின் அடிப்படையில் அமைந்தது!

ஆனால், பெரியார் எங்கிருந்து வருகிறார் என்றால், இந்த ஏற்றத்தாழ்வுகளை உடைப்பதற்குத் தடையாக இருப்பது கடவுள் என்ற கருத்தியல் என்பதற்காகத்தான்.

பெரியாருடைய கடவுள் மறுப்பு என்பது மனிதநேயத்தின் அடிப்படையில் அமைந்தது. அப்படிப்பட்ட கடவுள் மறுப்பை புரிந்துகொண்டு வந்தவர்தான் தளபதி அர்ச்சுனன் அவர்கள்.

ஒரு பக்கம் கடவுள் உண்டு என்று சொல்லி ஒரு மாட்டு வண்டியை இங்கே மேடையில் ஏற்றியி ருக்கிறார்கள்; இன்னொரு பக்கம் கடவுள் இல்லை என்று சொல்லி இன்னொரு மாட்டு வண்டியை ஏற்றியிருக்கிறார்கள். இரண்டு மாட்டு வண்டிகள் ஏறியிருக்கின்றன. அது மாட்டினுடைய பலத்தைப் பொறுத்ததேயொழிய, கடவுளைப் பொறுத்ததல்ல.

அலகு குத்திக் கொள்வதும் - தீ மிதிப்பதும் எப்படி?

ஒருமுறை பெரியார் திடலில், தந்தை பெரியாருடைய பிறந்த நாள் விழா நடைபெற்றது. அப்பொழுது பறவைக் காவடி அலகுக் குத்திக்கொண்டு கோவில் விழாக்களில் வருவது போன்று, கடவுள் மறுப்பை வலியுறுத்தி அலகுக் குத்திக் கொண்டு ஊர்வலமாக நம்முடைய தம்பிகள், கையில் சிகரெட்டை வைத்துக்கொண்டு, (சிகரெட் பிடிப்பது தவறுதான்) ‘‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை'' என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள்.

கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டே தீக்குண்டம் இறங்கினார்கள்.

நான் கேட்டேன், ‘‘ஏங்க, கால் சுடாதா?'' என்று.

இல்லீங்க, முதலில் 10 பேர் ஓடிவிட்டார்கள் என்றால், பிறகு தீயினுடைய சூடு குறைந்துவிடும்'' என்றனர்.

‘‘சரி, அலகு குத்திக் கொண்டு, பறவைக் காவடியை தூக்குகிறார்களே, வலிக்காதா?'' என்றேன்.

‘‘இல்லீங்க, குத்தும்போது வலிக்கும்; பிறகு வலிக் காது - காது குத்துவது போன்றதுதான்'' என்றனர்.

‘‘யாருங்க, அலகு குத்துவது?'' என்றேன்.

ஒரு பெரியவர் அங்கே அமர்ந்திருந்தார், அவரிடம் சென்ற நான், ‘‘அய்யா, வலிக்காமல் அலகு குத்துவீர் களா?'' என்றேன்.

‘‘அட, பழனிக்குப் போகிறவர்களுக்கும் நான்தான் அலகு குத்துவேன்'' என்றார்.

பழனிக்குப் போகிறவர்களுக்கும் அவர்தான் அலகு குத்துகிறார்; கடவுள் இல்லை என்று சொல்கிறவர்களுக்கும் இவர்தான் அலகு குத்துகிறார்.

குத்தும் போது வலிக்கும்; பிறகு பேலன்ஸ் செய்து தூக்கினோம் என்றால் சரியாகிவிடும் என்றார்.

அதுபோன்று, இந்தப் பகுத்தறிவு சித்தாந்தம் எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்றால், நம்முடைய வாழ்க்கை மிகவும் இலகுவாகிவிடும்.

என்னுடைய பெரியப்பா தளபதி அர்ச்சுனன் அவர்கள் இருந்திருந்தார் என்றால், நானும் 15 வயதி லேயே பெரியாருடைய தொண்டனாக மாறியிருப்பேன். ஏனென்றால், எனக்கு ஒரு தைரியம் கிடைத்திருக்கும்.

முதன்முதலாக பெரியார் திடலுக்கு வருகின்றபொழுது பெரிய சிரமமாக இருந்தது!

நம்முடைய குடும்பத்தில் இப்படி ஒருவர் இருக்கிறார்; அவரைப் பின்பற்றியே நாமும் வந்துவிடலாம் என்று.

ஏனென்றால், நான், முதன்முதலாக பெரியார் திட லுக்கு வருகின்றபொழுது பெரிய சிரமமாக இருந்தது. 

நான் இங்கே வந்து, எனக்கு சுத்தமாக கடவுள் நம்பிக்கை போய், கடவுள் மறுப்புக் கொள்கை பேசு வதற்கு, என்னை வைத்துப் படமெடுக்கும் தயாரிப் பாளர்கள் எல்லாம், ‘‘அய்யய்யோ, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று அங்கே போய் பேசாதீர்கள்'' என்று சொல்லி, என்னை பயமுறுத்தினார்கள்.

எது முக்கியம்!

இருந்தாலும், எனக்கு என்ன தோன்றிற்று என்றால், ‘‘நாம் நடிகனாக இருப்பது முக்கியமா? பெரியார் தொண்டனாக இருப்பது முக்கியமா? என்று பார்த்தால், பெரியார் தொண்டனாக இருப்பதுதான் முக்கியம்; அதுதான் மனசாட்சியோடு நடந்துகொள்வதற்கு நியாய மான விஷயம்'' என்று நான் நினைத்தேன்.

இப்படி ஒரு குடும்பப் பின்னணி இருந்தது என்று தெரிந்திருந்தால், நான் 20 வயதிலேயே இங்கே வந் திருப்பேன்.

ஏனென்றால், தளபதி அர்ச்சுனன் அவர்கள், அவருடைய 18 ஆவது வயதில் இந்த இயக்கத்தில் சேரும்பொழுது, பெரியார் அவர்களுக்கு 60 வயது இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

60 வயது முதியவர் பேச்சு - 18 வயது இளைஞரை ஈர்த்தது!

60 வயது முதியவருடைய பேச்சும், சிந்தனையும், செயலும், கொள்கையும், 18 வயது இளைஞனாகிய மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த, பணக்கார மகன் என்று சொல்வதைவிட, ஒரு ராயல் ஃபேமிலி என்று சொல்கிற பழையக்கோட்டை பட்டக்காரர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை ஈர்த்திருக்கிறது என்றால், அந்தக் கொள்கையிலும், சித்தாந்தத்திலும் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

இங்கே நிறைய எங்களுடைய சொந்த பந்தங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். இது மாமாவிற்காக எடுக்கப் பட்ட விழா, பெரியப்பாவிற்கான விழா, தாத்தாவிற்கான விழா என்று கையை ஆட்டிவிட்டுப் போய்விடாதீர்கள்.

சிந்தித்துப் பாருங்கள், ஏன் அவர் அந்த வயதில் இந்த இயக்கத்திற்கு வந்தார் என்று.

அக்கா, மதுரையை ஆட்சி செய்தால் மட்டும் போதாது; திராவிட ஆட்சியையும் செய்யவேண்டும்.

மஞ்சை வசந்தன் எழுதிய  ‘‘பக்தர்களுக்கு 100 கேள்விகள்’’ 

ஆகவே, பெரியார் திடலில், மஞ்சை வசந்தன் என்கிற ஒரு தோழர், ஒரு தொண்டர், அய்யாவினுடைய தம்பி அவர்கள் ‘‘பக்தர்களுக்கு 100 கேள்விகள்'' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்த பிறகும் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது என்றால், மன்னித்துக் கொள்ளுங்கள், நீங்கள் இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்றுதான் அர்த்தம்.

அவ்வளவு ஆணித்தரமாக தெள்ளத் தெளிவாக, அந்தப் புத்தகத்தில் விவாதம் செய்திருப்பார்.

நம்முடைய பிசினஸ் பார்ட்னர்தானே!

நானும் கோவிலுக்குச் சென்றவன்தான்; பழனி கோவிலுக்குச் சென்று மொட்டையடித்துக் கொண்டவன், மருதமலையில் மொட்டையடித்துக் கொண்டவன், திருப்பதியில் மொட்டையடித்துக் கொண்டவன்தான். எதற்கெடுத்தாலும் சாமியிடம் டீலிங் பேசிவிடுவேன். அவர் நம்முடைய பிசினஸ் பார்ட்னர்தானே! 

இதை செய்துகொடுத்தால், நாலணாவை உன்னு டைய உண்டியலில் போடுகிறேன்; எட்டணாவை உண்டியலில் போடுகிறேன் என்ற டீலிங்தான் அது.

‘‘ஆத்திகத்திற்கும் - நாத்திகத்திற்கும் என்ன வித்தியாசம்?’’

உண்டியல் என்றவுடன் எனக்கு நினைவுக்குவருவது என்னவென்றால், தந்தை பெரியாரிடம் கேட்டார்கள், ‘‘ஆத்திகத்திற்கும் - நாத்திகத்திற்கும் என்ன வித்தி யாசம்?'' என்று கேட்டார்கள்.

அது ஒண்ணுமில்லீங்க, ‘‘கோவில் கட்டுவது ஆத்தி கம்ங்க; ராத்திரி அந்த சாமியைத் தூக்கிட்டுப் போகாம இருக்கறதுக்காக கோவிலைப் பூட்டிட்டுப் போறீங்க பாருங்க, அதுக்குப் பேரு நாத்திகம்ங்க'' என்பார்.

‘‘சாமிக்கு முன்னாடி உண்டியல் வைத்து கலெக்சன் பண்றீங்க பாருங்க - அந்த சாமி சிலைக்கு முன்னாடி உண்டியல்  வைப்பது ஆத்திங்கம்க; அந்த உண்டிய லுக்குப் பூட்டு போடுகிறீங்க பாருங்க, அதானுங்க நாத்திகம்'' என்பார்.

இப்படித் தெள்ளத்தெளிவாக எல்லாவற்றையும் சொன்னவர். இது உண்மையான கதையா என்று எனக்குத் தெரியவில்லை; நான் கேள்விப்பட்டதுதான்.

தந்தை பெரியாருடைய பயணம் செய்துகொண் டிருந்த கார், ஒரு கோவிலுக்கு அருகில், ரிப்பேர் ஆகி நின்றுவிட்டது.

நாங்கள் நம்புகிற சாமியைப் போய் கல்லுன்னு சொல்றீங்களே!

அங்கே இருந்த ஒருவர், ‘‘அய்யா, உங்கள் மேல் எங்களுக்குப் பெரிய மரியாதை இருக்கிறது. ஏழை மக்களுக்காக நீங்கள் பாடுபடுகிறீர்கள்; தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகிறீர்கள்; பெண் ணடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகப் பாடுபடுகிறீர்கள்; பெண் விடுதலைக்காகப் பாடுபடுகிறீர்கள். எல்லாம் சரிங்க அய்யா, இருந்தாலும் நாங்கள் நம்புகிற சாமியைப் போய் கல்லுன்னு சொல்றீங்களே, அதுதான் எங்கள் மனதிற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது'' என்று சொன்னார்.

‘‘அப்படிங்களா, இப்போ எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார் தந்தை பெரியார்.

‘‘கோவிலுக்குத்தான் போறேங்க'' என்று அவர் சொல்கிறார்.

‘‘நானும், வருகிறேன் உங்களோடு'' என்று சொல்லி, தந்தை பெரியாரும் கோவிலுக்கு அவரோடு போகிறார்.

கோவிலுக்குள் சென்றதும், ‘‘டிங் டிங்''கென்று மணி யடித்துக் கொண்டு வந்து, பூசாரி கற்பூரத் தட்டை நீட்டி யிருக்கிறார்.

பித்தளையா? செம்பா?

தந்தை பெரியார் அந்தப் பூசாரியிடம், ‘‘ஏணுங்கய்யா, உள்ளே இருக்கிறதே சிலை, அது பித்தளையா? செம்பா?'' என்று கேட்டார்.

‘‘அட, அது கல்லுங்க'' என்று சொல்லியிருக்கிறார் பூசாரி.

உடனே அருகே இருந்தவரிடம், ‘‘பாருங்க, பூஜை செய்கிறவரே கல்லு என்று சொல்லுகிறார்; நான் சொன்னால், கோபித்துக் கொள்கிறீர்களே?'' என்று தந்தை பெரியார் சொன்னார்.

இப்படி எல்லா விஷயங்களிலும் மிகப் பிரமாதமாக விவாதம் செய்தவர்தான் பெரியார்; அவருடைய தொண் டர்களும் அப்படித்தான்.

நான் முதன்முதலாக இந்த விஷயம் சம்பந்தமாக யோசிக்க ஆரம்பித்தது, கோயம்புத்தூரில் ராம் நகரில் நம்முடைய வீடு இருந்தது. இங்கே உரையாற்றிய சகோதரர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் டிரைவ்-இன் விஷயத்தைச் சொன்னார் அல்லவா! அதேபோல, ராம்நகரில் கோகுல தெருவில் உள்ள பெட்டிக்கடையில், அக்கவுண்ட் வைத்து வாங்கிக் கொள்வோம். ஒருமுறை அங்கே திராவிடர் கழக கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய தோழர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. பெரியார் படத்தை வைத்து, ‘‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை'' என்று எழுதி வைத்திருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தை நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு பித்தளை சொம்பை கீழேயும், மேலேயும் ஆட்டிக் காட்டிவிட்டு, அந்த சொம்பில் அவர் கையை விட்டு காட்டிவிட்டு, அந்த சொம்பை கூட்டத்திற்குள் கொடுத்து அனுப்புகிறார். நல்ல பார்த்துக் கொள்ளுங்கள், நல்லா பார்த்துக் கொள்ளுங்கள், என்று சொல்கிறார். அந்தக் கூட்டத்தில் இருக்கின்றவர்களில் நிறைய பேர் அந்த சொம்பிற்குள் கையை விட்டுப் பார்க்கிறார்கள்; நானும் கையைவிட்டுப் பார்த்தேன்; காலி சொம்புதான். சொம்புவிற்குள் எதுவும் இல்லை.

சொம்பிலிருந்து குங்குமம் கொட்டியது!

அந்த சொம்பு மேடைக்குக் கொடுத்தனுப்பப்பட்டது. அந்த சொம்பைப் பிடித்துக்கொண்டு, ‘‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை'' என்று சொல்லி, அந்த சொம்பிற்குள் கையை விட்டார், அந்த சொம்பிலிருந்து குங்குமம் கொட்டியது.

‘‘இப்பொழுதாவது தெரிந்துகொள்ளுங்கள்; இதெல் லாம் மேஜிக்'' என்று சொல்லி, தலையை சுற்றி வீசினார்.

பிறகு, ஒரு கண்ணாடி டம்ளர் கூட்டத்திற்குள் கொடுத்தனுப்பினார். அந்தக் கண்ணாடி டம்ளரில் வெறும் தண்ணீர்தான் இருந்தது.

வாயிலிருந்து ஒரு சிவலிங்கம் வந்தது!

நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, அந்தக் கண்ணாடி டம்ளரிலிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, ‘யோவ்' என்று சொன்னார், வாயிலிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்தார்.

இதெல்லாம் மேஜிக் - இனிமேல் யாராவது ஒரு சாமியார் உங்கள் பகுதிக்கு வந்து, தண்ணீர் குடித்துவிட்டு, வாயிலிருந்து சிவலிங்கத்தை எடுத்துக் கொடுத்தால், ‘‘அய்யா, சிவலிங்கம் வேண்டாம் அய்யா, எங்கள் வீட்டில் ஏற்கெனவே இருக்கிறது; ஒரு ஸ்கூட்டரோ, ஒரு அம்பாசிட்டர் காரோ எடுத்துக் கொடுத்தீர்கள் என்றால், ஓட்டிச் செல்வதற்கு வசதியாக இருக்கும் என்று சொல்லுங்கள்'' என்றார்.

அதைக் கேட்ட நான், ‘‘அடடா, பிரமாதமாகப் பேசு கிறாரே'' என்று நினைத்துக்கொண்டேன். பிறகு அதை நான் அந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டேன்.

நாத்திகனாக இருப்பதால் நிம்மதியாக இருக்கிறேன்!

பின்னாளில் இங்கே வந்தவுடன்தான், தந்தை பெரி யாருடைய புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியவுடன், ஒரு முழுமையான நாத்திகனாக மாறி, எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாமல் இருப்பதினால், நிம்மதி யாக இருக்கிறேன்.

ராகு காலம் இல்லை, எமகண்டம் இல்லை, அஷ்டமி  இல்லை, நவமி இல்லை, ‘குட்' பிரைடே இல்லை, ‘பேட்' பிரைடே இல்லை, ரைட் இல்லை, லெப்ட் இல்லை அடித்துக் கிளப்பி போய்க்கொண்டே இருக்கலாம்.

‘‘அய்யோ, இன்றைக்கு செவ்வாய்க்கிழமைங்க; பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதுங்க'' என்று சொல்வார்கள்.

புதன் கண்டிப்பாக வரும்; பொன்தான் கிடைக்காது!

டேய், புதன் ஏழு நாளுக்கு ஒருமுறை நீ வேண்டாம் என்றாலும், கண்டிப்பாக வரும். ஆனால், பொன்தான் கிடைக்காது; பொன் என்றால், காசு. அது நீ கஷ்டப்பட்டு உழைத்தால்தான் கிடைக்கும்.

புதன் ஏழு நாளுக்கு ஒருமுறை இலவசமாகவே வரும். சும்மா எதையாவது உளறிக் கொட்டுகிறார்கள்.

எனக்கு 69 வயதாகிறது; க்ரோனோஸ்கோபி செய் வார்கள். அது எதற்கென்றால், வயிற்றில் ஏதாவது கேன்சர் நோய் இருக்கிறதா? என்று.

டாக்டர் என்னிடம், ‘‘உங்களுக்கு க்ரோனோஸ்கோபி செய்யலாமா?'' என்று கேட்டார்.

‘‘செய்யலாம்'' என்றேன் நான்.

‘‘ஏதாவது டைம் பார்க்கவேண்டுமா?'' என்றார் டாக்டர்.

‘‘கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்'' என்றேன் நான்.

‘‘ஏனுங்க'' என்றார் டாக்டர்.

‘‘நல்ல ராகுகாலம், எமகண்டம் எப்பொழுது என்று பாருங்கள், அப்பொழுது நான் அந்தப் பரிசோதனை செய்துகொள்கிறேன்'' என்றேன்.

‘‘நல்ல செவ்வாய்க்கிழமை, நல்ல ராகுகாலம், நல்ல எமகண்டத்தில் பரிசோதனை செய்யுங்கள்; நான் செய்துகொள்கிறேன்'' என்றேன்.

நான் சொன்னதைக் கேட்டு, டாக்டர் சிரித்தார்.

கேன்சர் என்றால், அது ஏற்கெனவே உள்ளே இருக்கும்.

மூடநம்பிக்கையும் இல்லாத வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை!

இந்த மூடநம்பிக்கை வாழ்க்கை என்பது ஒரு எழவு எடுத்த வாழ்க்கை.

எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாமல், வண்டி கிளம்பிப் போயிற்று என்றால், வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மூடநம்பிக்கையிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்றால், மீண்டும் அதற்குள் போவதற்கு வெட்கமாக இருக்கிறது.

கோவிலுக்கு யாராவது கூப்பிட்டால், போய்விடு வேன், ஆனால், எனக்குக் கூச்சமாக இருக்கும். 

சாஸ்திர, சடங்கு, சம்பிரதாயத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

திரைப்படத்தில் நடிப்பது போன்றதே தவிர, வேறொன்றுமில்லை!

அப்படி ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் என்னை நீங்கள் பார்த்திருந்தால், அது குடும்பத்தில் இருக்கின்றவர்களின் பாசத்திற்குக் கட்டுப்பட்டு, அங்கே போய் நின்று இருப்பேன். அது திரைப்படத்தில் நடிப்பது போன்றதே தவிர, வேறொன்றுமில்லை.

உடனே தயாராக இருப்பார்கள் யூடியூப் அலை வரிசையினர்.

என் சகோதரிமீது எனக்குப் பாசம் இருக்கும் அல்லவா! என் சகோதரி இறந்துவிட்டார். அதற்காக கொடுமுடி ஆற்றில் ஈமச்சடங்கு செய்கிறார்கள். என் தங்கச்சியின்மீது இருக்கும் பாசத்தின் காரணமாக அங்கே சென்று நான் நிற்கிறேன்.

உடனே, ‘‘ஆகா, சத்யராஜ் வாய்க்கிழிய பேசுகிறான்; எந்த மூடநம்பிக்கையும் எனக்கு இல்லை என்று. ஆனால், தங்கச்சியின் ஈமச்சடங்கு நிகழ்ச்சியில் நிற்கிறான்'' என்று.

‘‘ஏண்டா, லூசு! பாசத்திற்கும், இதற்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு?'' அவர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

பெரியார் கொள்கை என்பது, சமூகத் தொண்டு!

பெரியார் கொள்கை என்பது, சமூகத் தொண்டு, இவர்கள் எல்லாம் சமூகத்திற்காகப் பாடுபடுகிறவர்கள்.

நான் சுயநலமாகச் சொல்கிறேன், எந்த மூடநம்பிக் கையும் இல்லாவிட்டால், சூப்பர் ஜாலியாக இருக்கிறது. அப்படி இல்லையென்றால், வாழ்க்கையே கர்மம் பிடித்ததுபோல் இருக்கிறது. நல்ல நேரம், கெட்ட நேரம், ராகுகாலம், எமகண்டம் எல்லாவற்றையும் பார்த்து, பார்த்து வாழுகிறார்கள்.

உண்மையிலேயே கடவுள் என்ற ஒருவன் இருந்தால், அவனுக்கு என்னைத்தான் மிகவும் பிடிக்கும்.

ஏனென்றால், அப்ளிகேஷனே கொண்டு போவ தில்லை நான்.

எதற்காக கோவிலுக்குப் போகிறார்கள்? அப்ளி கேஷன் இருந்தால்தானே போகவேண்டும்.

அப்ளிகேஷன் நம் கையில் இல்லை. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பவன் நான்.

‘‘Praying is nothing but detecting and giving instructions to the ultimate power.''

கடவுள் என்னை நாத்திகனாக மாற்றிவிட்டார்; தேங்க்யூ காட், தேங்க்யூ வெரிமச்!

கடவுள்தான் அனைத்திற்கும், அவருக்குத்தான் சக்தி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன் - அண்ட சராசரங்களுக்கும் சேர்ந்து அவர்தான் ஹெட் ஆஃப் டிபார்ட்மெண்ட் என்றால், அவரிடம் சென்று, வேண்டுதல் என்ற பெயரில், நீ இன்ஸ்ட்ரெக்சன் கொடுத் தீர்கள் என்றால்,  உங்கள்மேல் கோபம் வருமா, வராதா?

அப்படியென்றால், அவனுக்கு சத்யராஜைப் பிடிக் குமா? உங்களைப் பிடிக்குமா?

என்னைத்தான் மிகவும் பிடிக்கும். அதனால்தான், இவன் ஜாலியாக இருக்கட்டும் என்று, கடவுள் என்னை நாத்திகனாக மாற்றிவிட்டார்; தேங்க்யூ காட், தேங்க்யூ வெரிமச்! நன்றி, வணக்கம்!

- இவ்வாறு ‘இனமுரசு’ சத்யராஜ் அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment