புதுச்சேரியில் பெண் அமைச்சரின் குற்றச்சாட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 14, 2023

புதுச்சேரியில் பெண் அமைச்சரின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி மாநிலத்தில் முதன் முதலாக பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டும் வாய்தா காலம் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியவில்லை என்பது பெரும் அவலமாகும்.

சந்திர பிரியங்கா என்ற அமைச்சர் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையார் சந்திர காசா அவர்களும் அமைச்சராக இருந்தவர். முதன் முதலாக ஒரு பெண் அமைச்சராக அம்மாநிலத்தில் நியமிக்கப்பட்டு இப்பொழுதுதான் போக்குவரத்துத் துறை, ஆதி திராவிடர் நலம், வீட்டு வசதி, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, கலைப் பண்பாடு என்று பல்வேறு துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன.

அத்தகைய அமைச்சர் பதவி விலகியது, புதுச்சேரி மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது - பதவி விலகலுக்கு அவர் கூறியுள்ள காரணம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக, மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும், மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம் வரை ஓயாமல் செய்து வருகிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதைப் பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன். மக்கள் செல்வாக்கு மூலம் சட்டமன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, பெண் என்ற பெருமையோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து ஜாதிய ரீதியிலும் - பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன். சொந்தப் பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரிகமல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாத நிலையில் அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து கண் மூடித்தனமாக விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன். 

சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடியும் அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன். இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினைத் தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். எனக்கு இப்பதவியினைக் கொடுத்த முதலமைச்சருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருக்கு எனது  தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன். 

இறுதியாக, பெண்களுக்கான முன்னுரிமை, அதிகாரத் தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நன்றியினை தெரி வித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் ஓடத்துவங்கிய வந்தே பாரத் ரயிலில் எந்த ஒரு பயணத் திட்டமும் இல்லாமல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்  பயணம் செய்து அரசியல் விமர்சனம் செய்கிறார். அவர் தான் நியமிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் - ஒரு பெண் அமைச்சர் தன் மீது ஜாதியக் கொடுமை நடந்துள்ளதாக மறைமுகமாகவும், நேரடியாகவும் கூறியுள்ளார். தற்போது பதவி இழந்துள்ளார் - இதுகுறித்து தமிழிசை எதுவும் பேசுவாரா, இல்லை தமிழ்நாட்டில் நடந்தால் மட்டும்தான் கருத்து தெரிவிப்பாரா என்று தெரியவில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகப் பெண் அமைச்சர் ஒருவர் கூறி இருக்கும் குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்த முடியாது - கூடாது.

உயர் ஜாதி ஆணவமும், ஆண் என்ற அகந்தையும் இதன் பின்னணியில் இருப்பதை அமைச்சரின் அறிக்கை மூலம் உணர முடிகிறது.

இது குறித்து புதுவை முதலமைச்சர் உரிய வகையில் விசாரணை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பெண்ணாக இருக்கும் ஓர் ஆளுநர் ஒரு பெண்ணின் துயரக் குரலை மதிப்பாரா? இல்லை அதிலும் அரசியல் கண்ணோட்டம் தானா! 

பா.ஜ.க. கூட்டணியின் உண்மை முகம் இதுதான்!

No comments:

Post a Comment