நூல் அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 21, 2023

நூல் அரங்கம்

பொ.நாகராஜன்

பெரியாரிய ஆய்வாளர்

நூல்: “சித்திரபுத்திரன் கட்டுரைகள் தொகுதி 2”

ஆசிரியர்: தந்தை பெரியார் 

தொகுப்பாசிரியர்: கி.வீரமணி

வெளியீடு: திராவிடர் கழக வெளியீடு

முதல் பதிப்பு 2023

பக்கங்கள் 320

நன்கொடை ரூ. 300/-

*  தந்தை பெரியார் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் 1925ஆம் ஆண்டு முதல் 1973 வரை பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு வந்தார்! அவற்றில் 1925ஆம் ஆண்டு முதல் 1930 வரை குடிஅரசு இதழில் வெளியானவற்றில் 61 கட்டுரைகளை தேர்ந்தெடுத்து -  சித்திரபுத்திரன் கட்டுரைகள் தொகுதி 1  என்ற நூலாக வெளியிட்டார்கள்!

*  இந்த (தொகுதி 2 ) நூலில்,  ஆண்டு 1931 முதல் 1946 வரை குடிஅரசு மற்றும் பகுத்தறிவு இதழ்களில் வெளியானவற்றில் 62 கட்டுரைகளை தேர்வு செய்து சிறப்பான தொகுப்பு நூலாக வெளிக் கொணர்ந்துள்ளார்கள்.

*  தொகுப்பாசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள் பதிப்புரையில், "அவரது (பெரியார்) பகுத்தறிவு, பட்டறிவு, சுயசிந்தனை இவற்றின் ஆழமும் அகலமும் மறுக்க முடியாத வாதங்களின் அடுக்கடுக்கான அணிவகுப்பு.

அந்த அறிவு ஆசானின் ஏட்டில் சித்திரபுத்திரன் கட்டுரைகள், உரையாடல்கள் மூலம் வந்து கிண்டல், கேலி என்ற ஒப்பனை இல்லாத உண்மைகள் இவற்றை நகைச்சுவை தேன் கலந்து தருவார்கள்!"... என்று சித்திரபுத்திரனின் பாணியை விளக்குகிறார்!

*  சித்திரபுத்திரனாக பெரியார் மாறி, அவரது கட்டுரைகளுக்கான தலைப்புகளை அமைத்த விதமும் அதில் அவர் தெரிவிக்கின்ற செய்திகளும் நமக்கு அன்றைய தமிழ்நாட்டின் காலக்கட்டத்தை காட்டும்  கருப்பு வெள்ளை திரைப்படங்களைப் பார்த்த அனுபவத்தை தருகின்றது. 

கட்டுரைகளின் தலைப்புகளிலிருந்தே பெரியார் எதைச் சொல்ல வருகிறார் என புரிந்து கொள்ள முடிகிறது!

*  கட்டுரைகளின் வித்தியாசமான தலைப்புகளில் சில :

சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அய்யர் - அய்யங்கார் சம்பாஷணை!

சுயமரியாதை வீரய்யச் செட்டியாருக்கும் சுய ஆட்சி சுப்பையருக்கும் சம்பாஷணை!

வைதிகப் பார்ப்பானுக்கும் கோயில் பிரவேச பார்ப்பானுக்கும் சம்பாஷணை! 

வம்பனுக்கும் கம்பனுக்கும் சம்பாஷணை!

காங்கிரஸ் திராவிடனுக்கு விண்ணப்பம்!

இப்படிப்பல ......

*  03.05.1931 அன்று வெளியான குடிஅரசு இதழில் சித்திரபுத்திரனின் கட்டுரை - ' சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அய்யர் - அய்யங்கார் சம்பாஷணை! ' என்று வெளி வந்தது. சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி பற்றியும், அதை தகர்க்க பார்ப்பனர்கள் பேசுவதாகவும், காந்தியாரைப் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் பயன் படுத்தினார்கள் என்பது பற்றிய கற்பனையாக, சம்பாஷணையாக ( உரையாடலாக ) எழுதப்பட்டிருந்தது! 

*  சம்பாஷணையின் ஒரு பகுதி : 

அய்யங்கார்: இந்த காந்தியார் கூட எதுவரையிலும் மகாத்மா? உமக்குத் தெரியுமா? ... 'ராமராஜ்ஜியம் ஸ்தாபிப்பேன்! கீதைதான் என்னை நடத்துகிறது! பெண்கள் எல்லாம் சந்திரமதி போல் இருங்கள்! வர்ணாசிரம தர்மம் உங்க நடவடிக்கைகளுக்கு சிறந்தது! ' .... என்று சொல்லும் வரைதான் மகாத்மா! அப்படிக்கில்லாமல் கொஞ்சம் மாறினாலும் தலைகீழாகக் கவிழ்த்து விடுவோம்! 

இது உமக்குத் தெரியாதா? ...என்று எழுதியிருந்தார்!

*  இந்த கட்டுரையை பெரியார் கற்பனையாக எழுதியதோ - 03.05.1931இல்! 

அவர் எழுதியது போலவே, ஹிந்துத்துவா ஸநாதன சக்திகள் காந்தியாரின் மத நல்லிணக்கத்தைப் பொறுக்காமல், காந்தியாரை மராட்டிய சித்பவன் பார்ப்பான் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றதோ - 30.01.1948இல்! 

பெரியாரின் தொலை நோக்குப் பார்வைக்கு 

இதுவும் ஒரு எடுத்துக்காட்டு! 

*  வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடும் வேளை இது! 

வைக்கம் போராட்டத்தின் துவக்கத்தில் காந்தியார் ஆதரவு தர மறுத்ததும், பின்னர் பெரியார் கலந்து கொண்டு, சிறை சென்று, வைக்கம் வீரர் என பெயர் எடுத்து, போராட்டம் நிறைவு பெறும் காலத்தில் காந்தியார் ஆதரவு தெரிவித்து போராட்டத்தின் வெற்றியில் தனக்கு முக்கிய பங்கைப் பெற்றதும் வரலாற்று உண்மைகள்! 

*  இது பற்றி மேலும் கூடுதலாக தெரிந்து கொள்ள - 15.11.1931 குடிஅரசில் வெளியான ' இரண்டு சந்தேகம்? ' என்ற கட்டுரையில் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் காந்தியார் பங்கும் உள்நோக்கமும் என்னவாக இருந்ததென்பதை பெரியாரின் உரையாடல்கள் உதவுகிறது!

*  உரையாடல்களின் ஒரு பகுதி :

கேள்வி : அப்படியானால் வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு அவர் (காந்தியார்) எப்படி உதவி செய்தார்? 

விடை : வைக்கம் சத்தியாக்கிரகம் திரு. காந்தியார் ஆரம்பித்ததல்ல! மற்றவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்! ' நம்பிக்கை இருக்கின்றவர்கள் செய்யுங்கள்! ' என்று அனுமதி மாத்திரம் கொடுத்து விட்டார்! 

கேள்வி :  வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு காந்தியார் பணம் கூட கொடுத்தாரே! 

பதில் : ஆம்! அந்தப் பணம் எதற்கென்றால் - வைக்கம் சத்தியாக்கிரகத்தை நடத்த பஞ்சாபில் இருந்து சீக்கியர்கள் பதினாயிரக் கணக்கில் ரூபாய்களுடன் வந்து விட்டார்கள். அவர்களைக் கொண்டு சத்தியாகிரகம் நடந்தால், ஜனங்கள் சீக்கியர்கள் ஆய்விடுவார்களே என்று கருதியும், மற்றும் பணம் தாராளமாக இருந்தால் தீண்டாமை விலக்குக்கு நினைத்த இடங்களில் எல்லாம் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டு விடுமே என்று பயந்தும், சீக்கியர்களை திரும்பி போகும் படி செய்து விட்டார்! அதனால் சிறிது உதவி செய்ய வேண்டியதாயிற்று! .....

*  இந்த வரலாற்று உண்மையை அறியாத அரை வேக்காடுகள், வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கை இருட்டடிப்பு செய்தும், காந்தியார் மற்றும் ராஜாஜியின் சொற்ப பங்கை வானளாவ புகழ்ந்தும் எழுதி வருவது, பார்ப்பன ஊடகவியலாளர்களால் தொடர்ந்து வெட்கமில்லாமல் நடைபெற்று வருகிறது! 

*  குடிஅரசு 30.11.1946 அன்று வெளியான ' காங்கிரஸ் திராவிடனுக்கு விண்ணப்பம் ' என்ற கட்டுரை, பெரியாரின் மனக்குமுறலை, இனத்திற்காக துடிக்கும் அவரது இதயத்துடிப்பை உணர்த்துவதாக உள்ளது! 

*  சித்திரபுத்திரன் கட்டுரையை இவ்வாறு துவக்குகின்றார் : 

" என் அருமைக் காங்கிரஸ் திராவிடத் தோழரே! 

நீர் சூத்திரர்! அவர்கள் பார்ப்பனர்கள்! பிராமணர்கள்! மறந்து விடாதீர்! " ...என்ற எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கின்றார்! 

சூத்திரன் என்றால் யார்? அவன் எத்தனை வகை என்பதை விளக்குகின்றார்! சூத்திரனுக்குள்ள கடமைகளை சொல்கின்றார். 

பார்ப்பனர்களின் உச்சமான வாழ்க்கைத் தரத்தையும் விளக்குகின்றார்! 

பார்ப்பான் - சூத்திரன் பாகுபாட்டால் எப்படிப்பட்ட அநீதி நடக்கின்றது என்பதை அந்த காங்கிரஸ் திராவிடனுக்கு புரியும் படி இவ்வாறு விளக்கிச் சொல்கிறார்: 

"சத்தியமூர்த்தி அய்யர் கோவணம் கட்டாத காலத்தில் சிதம்பரம் பிள்ளை கப்பலோட்டிய தேச பக்தர்! 

ஜெயிலில் பல வருஷம் மூத்திரச் சட்டியில் தண்ணீர் குடித்த தியாகி! 

அவரது பிள்ளை குட்டிகள் சோற்றுக்குப் பாடுபடுகின்றன! 

சத்தியமூர்த்தி குடும்பமோ, பங்களா வாழ்வு, பிரபு வாழ்க்கை வாழ்கிறது! 

ஒரு பொய், பித்தலாட்டம் இருக்காது சிதம்பரம் பிள்ளையிடத்தில்! ஆனால் ஒரு சத்தியம், நாணயம் காண்பது மிகமிகக் கடினம் சத்திய மூர்த்தி இடத்தில்! 

வித்தியாச வாழ்வுக்கு காரணம் - 

சிதம்பரம் பிள்ளை சூத்திரர்!

சத்திய மூர்த்தி அய்யர் - பிராமணர்! " ....என்று பள்ளிக்கூட மாணவனுக்கு பாடம் எடுப்பது போல எழுதியுள்ளார்! 

*  இந்த நூல் ஒரு காலப் பெட்டகம்! தமிழ் நாட்டின் சமூக, அரசியல் வரலாற்று ஆவணம்! தந்தை பெரியாரின் சிந்தனைகள் வெளிப்படும் கையேடு! ஒவ்வொருவரும் படித்து பாதுகாக்க வேண்டிய தொகுப்பு நூல்! பொ.நாகராஜன்

பெரியாரிய ஆய்வாளர்


No comments:

Post a Comment