பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டிற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் விருப்பம் மல்லிகார்ஜுன் கார்கே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டிற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் விருப்பம் மல்லிகார்ஜுன் கார்கே

புதுடில்லி அக்.5 பிற்படுத் தப்பட்டோரின் மேம்பாட்டுக்கு உதவும் என்பதால் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த காங்கிரஸ் விரும்புவதாக அதன் கட்சித்தலைவர் மல்லிகார் ஜுன கார்கே கூறியுள்ளார். 

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி  வருகிறது. இது தொடர்பாக ஒன்றிய அரசை கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதைப்போல கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார் கேயும்  இது குறித்து விரிவாக பேசினார். சத்தீஷ்காரின் ரெய்கார் மாவட்டத்தில் நடந்த மாநில அரசின் நம்பிக்கை மாநாட்டில் உரையாற்றிய கார்கே, இது தொடர்பாகவும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாகவும் ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- மகளிர் இடஒதுக்கீடு மசோ தாவை காங்கிரஸ் எதிர்ப்பதாக பா.ஜனதா கூறுகிறது. உள்ளாட்சி அமைப் புகளில் மகளிருக்கான இடஒதுக் கீட்டை கொண்டு வந்தது யார்? அது காங்கிரஸ் கட்சி. ஜனசங்கமாக இருந் தாலும் சரி, பா.ஜனதா அல்லது ஆர்.எஸ்.எஸ்.சாக இருந்தாலும் சரி, அவர் கள்தான் பெண்களுக்கு எதிரான வர்கள். பெண்கள் முன்னேறுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். பெண்கள், பிற்படுத்தப் பட்டவர்கள் மற்றும் ஏழைகள் மீது அவர் களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இப்போதே அமல்படுத்த வேண்டும். ஆனால் தற்போதைய மசோதாப்படி 2034-க்கு முன் அமல்படுத்த முடியாது.

 ஜாதிவாரி கணக்கெடுப்பு

 பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கணக்கெடுப்பை நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் அவர்களில் எத் தனை பேர் மிகவும் பின்தங்கியவர்கள், எத்தனை பேர் கல்வியறிவு பெற்றவர்கள், எத்தனை பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் போன்ற தகவல்கள் வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பில் இந்த விவரங்கள் அனைத்தும் வெளியிடப்படும். அதன்மூலமே அவர்கள் மேம்பாட்டுக்காக நாம் நடவடிக்கை எடுக்க முடியும். எனவேதான் பிற்படுத் தப்பட்டோர், ஏழைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனால் பிரதமர் மோடியோ, நாட்டை பிளவு படுத்தவும், பெண்களின் உரிமைகளை பறிக்கவும் விரும்புகிறார். மோடிஜி, மக்கள் தற்போது விழிப்புணர்வு அடைந்து விட்டனர். உங்கள் விளையாட்டெல்லாம் நீண்ட காலம் நீடிக் காது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.


No comments:

Post a Comment