கேரள முதலமைச்சரின் வரவேற்கத்தக்க சுற்றறிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 30, 2023

கேரள முதலமைச்சரின் வரவேற்கத்தக்க சுற்றறிக்கை!

கேரள மாநில முதல் அமைச்சர் பினராய் விஜயன் சில நாள்களுக்கு முன் ஒரு முக்கிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

"கோவில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் எந்த நடவடிக்கைகளும் நடைபெறக் கூடாது.

தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளின் பயிற்சி, பேரணி, பொதுக் கூட்டம், ஆயுதப் பயிற்சி உள்ளிட்டவை நடைபெறாமல் தடுக்க வேண்டும். காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தி இதைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த அமைப்புகளின் கிளைகள் உள்ளிட்டவை கோவில்களில் உள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும்" என்ற கேரள மாநில முதலமைச்சரின் அதிகாரப் பூர்வ சுற்றறிக்கை மிகவும் முக்கியமானது.

அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ். என்பது வன்முறையில் நம்பிக்கை கொண்ட மதவெறி - அமைப்பாகும்.

அதன் காரணமாகத்தான் மூன்று முறை தடை செய்யப்பட்டது என்பது உலகறிந்த உண்மையாகும். 

பசுவதைத் தடுப்பு என்ற பெயரால், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர் அவர்களை ஒரு பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உயிரோடு கொளுத்த முயன்ற அமைப்புகளின் பட்டியலில் ஆர்.எஸ்.எஸ்சுக்கு முக்கியமான இடம் உண்டு.

பாபர் மசூதி இடிப்பில் ஆர்.எஸ்.எஸின் பங்கு அளவிட முடியாத ஒன்றாகும்.

மண்டைக்காடு கலவரத்தில் ஆர்.எஸ்.எஸின் பங்கு குறித்து நீதிபதி பி. வேணுகோபால் ஆணையம் விரிவாகவே குறிப்பிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பல பிரிவுகளைத் தனக்குள் அடைகாக்கிறது. அதில் ஒன்றுதான் விஸ்வ ஹிந்து பரிசத் என்பது - பொதுக் கூட்டங்களை நடத்தி மக்களிடம் திரிசூலங்களை அளிப்பது அதன் நடைமுறை.

ஒரு சூலம் முஸ்லிம்களையும், இரண்டாவது சூலம் கிறித்தவர் களையும், மூன்றாவது சூலம் மதச் சார்பின்மைப் பேசுபவர்களையும் குத்திக் கிழிக்கும் என்று வெளிப்படையாகப் பேசுபவர்கள் ஆயிற்றே!

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். டில்லி சென்றபோது மண்டைக்காடு கலவரத்தை முன்னிலைப்படுத்தி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் முதலமைச் சரிடம் வன்முறை காட்டும் அளவுக்கு அநாகரிகமாக நடந்ததை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கூறியதுண்டே!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். (மார்ச்சு 1982) கூறியது என்ன?

"மக்களைப் பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக் காரர்களின் நடவடிக்கைகள் உடனே நிறுத்தப்பட்டாக வேண்டும். அரசு இதனை அனுமதிக்காது.

அச்சுறுத்தல் பயிற்சியைக் கொடுக்கிறார்கள். அதை அரசு ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ். தன் பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும்.  ஏற்கெனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும். ஆர்.எஸ்.எஸின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை.

அரசு விதித்துள்ள தடைகளை மீறுவோம் என்கிறார்கள். அரசு அதைச் சமாளிக்கும். அரசு அதற்குத் தயாராக இருக்கிறது"

முதலமைச்சர் சட்டப் பேரவையிலேயே இதனை அறிவித்தார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும், மன்னார்குடியில் நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவிலும் ஆர்.எஸ்.எஸை எச்சரித்தார்.

கோவில்கள் - வழிபாட்டு இடங்கள் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கம் கோவில்களை ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக ஆக்கிக் கொள்வதும், இளைஞர்களை மூளைச் சலவை செய்வதும், வன்முறைப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுப்பதும் எத்தகைய பேராபத்து.

பல ஊர்களில் உள்ள கோவில் கோபுரங்களில் காவிக் கொடிகளை ஏற்றியுள்ளனர்.

சாமி ஊர்வலங்களை ஆர்.எஸ்.எஸ்காரர்களே நடத்துவது போன்ற தோற்றத்தையும், உணர்ச்சியையும் உண்டாக்கக் காவிக் கொடி ஏந்திச் செல்கிறார்கள்.

வட மாநிலங்களில் இவை எல்லாம் சர்வ சாதாரணம். தென்னக திராவிடப் பகுதிகளில் அவர்கள் கை வரிசையைக் காட்ட முடிய வில்லை. காரணம் திராவிடர் இயக்கமும், அது சார்ந்த ஆட்சிகளும் தான்.

செங்கற்பட்டு மாவட்டம் பம்மல் மூங்கில் (நகர்) ஏரி - முத்து மாரியம்மன் கோயில் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமானது.

இப்பொழுது அங்கு மாட்டப்பட்டிருந்த இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் என்ற விளம்பரப் பலகை அகற்றப்பட்டு விட்டது.

பிஜேபி - ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டு குடமுழுக்கும் நடத்தியுள்ளனர். இது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது. (புகார் மனு நாள் : 20.7.2023)

சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள செங்கற் பட்டு உதவி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று ஆணையர் எழுதிய கடிதம் (7.9.2023) கிடைக்கப் பெற்றுள்ளது.

என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இந்தத் துறையைச் சிறப்பாகக் கவனிக்கும் அமைச்சர் மாண்புமிகு பி.கே. சேகர்பாபு அவர்கள் இதனைக் கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

கேரள முதலமைச்சரின் சுற்றறிக்கையின் சாரம் தமிழ்நாட்டுக்கும் பொருந்தக் கூடியதே! இந்து சமய அறநிலையத்துறை கண் காணிக்கட்டும்!

No comments:

Post a Comment