பெரியார் என்ன பெரிதாக செய்தார் என்று அவ்வப்போது சில சில்லறைகள் சொல்லிக்கிட்டே இருக்காங்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 28, 2023

பெரியார் என்ன பெரிதாக செய்தார் என்று அவ்வப்போது சில சில்லறைகள் சொல்லிக்கிட்டே இருக்காங்க!

பெரியார் என்ன கிழித்தார் என்று  முதியவர் ஒருவர் கூறியதைப் படியுங்கள்.

பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்த காலம் (1955-1956) அது.  எனது சித்தப்பா  தியாகராயர் நகரில் உள்ள நடேச அய்யர் தெருவில் ஒரு பழைய வீட்டை வாங்கினார். (தற்போதைய சரவணா ஸ்டோர் கடைக்கு பின்புறம் இருக்கும் நடேசன் தெரு அது. சிவா விஷ்ணு கோயிலுக்கு அருகில் உள்ளது இந்தத் தெரு.)

வீட்டை பழுது பார்த்து சீர்படுத்த விரும்பிய எனது சித்தப்பா, அதற்காக செங்கல், சிமென்ட், மணல், ஜல்லி போன்றவற்றை வாங்கி வீட்டுக்கு முன் கொட்டியிருந்தார். பழுதுபார்க்கும் வேலைகளும் நடந்தன. அந்தத் தெருவில் இருந்தவர்களுக்கு அது பிடிக்கவில்லை. ஏனெனில், அய்யர், அய்யங்கார்கள் முழுவதும் வசித்த அந்தத் தெருவில் வீடு வாங்கிய எனது  சித்தப்பா நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்.  இதை விரும்பாத சிலர், எனது சித்தப்பாவிற்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்தனர்.  ஜல்லி, மணல், செங்கலை தெருவில் கொட்டி, இடைஞ்சல் ஏற்படுத்துவதாகக் கூறி

கார்ப்பரேஷன், மின்வாரியம், போலீஸ் என எல்லா இடத்துக்கும் மொட்டைக் கடுதாசி எழுதிப் போட்டனர். செங்கல், மணல் திருடும் போயின. இவ்வாறாக பல்வேறு வகையில், அத்தெருவாசிகள் இடைஞ்சல்கள் கொடுத்துள்ளனர். 

இடைஞ்சல்கள் அதிகரிக்கவே, செய்வதறியாத எனது சித்தப்பா, தந்தை பெரியாரிடம் போய் நடந்த சம்பவங்களைச் சொல்லி, இந்தப் பிரச்சினையை நீங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதைக்கேட்ட பெரியார், நான் உனது வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியுள்ளார். அப்போதெல்லாம் காசு வாங்காமல் போட்டோ கூட எடுக்க மாட்டார் பெரியார்.

எனது சித்தப்பா வீட்டிற்கு தானே  வருவதாக பெரியார் கூறியவுடன்,  பணம் தருவேன் என்று எனது சித்தப்பா வலியுறுத்திச் சொன்னபோதும் பெரியார் ஏற்க மறுக்கிறார்.  பெரியார் சொன்னபடி  ஒரு நாள் காலையில பெரியார் தன்னுடைய பிரச்சார வாகனத்தில் திடுதிப்புன்னு நடேச அய்யர் தெருவில் வந்து இறங்கினார்.

மணியம்மையாரும் உடன் வந்தார். தந்தை பெரியார் தெருவுக்குள் நடந்து வரும்போது "பெரியார் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க, பெரியார் வாழ்க" என்று முழக்கம் அதிர்ந்தது. 

காலையிலிருந்து மாலை 6 மணி வரை சித்தப்பா வீட்டில் பெரியார் இருந்தார். காலை டிபன், மதியம் சிக்கன் பிரியாணி, மாலை ஸ்நாக்ஸ் சாப்பிட்ட பின்னர் தான் பெரியார் கிளம்பினார்.

அந்த நாளிலிருந்து எந்தப் பிரச்சினையும் இல்லை. மொட்டைக் கடுதாசியும் இல்லை. செங்கல் திருட்டும் இல்லை. அனைத்தும் தீர்ந்துவிட்டன.  அதன் பின்னர்தான்,  அந்தத் தெருவில் உள்ளவர்கள் என் சித்தப்பாவிடம் சகஜமாக பழகினார்கள்  என்று என்னிடம் பலமுறை என் சித்தப்பா  சொல்லி இருக்கிறார்.

அப்போது எடுத்த போட்டோ தான் இது. பெரியாருக்கு வலதுபுறம் மணியம்மையார். மணியம்மையார் மடியில் அவர்கள் வளர்த்த சிறுவன் (பெயர் தெரியவில்லை). இடதுபுறம் எனது சித்தப்பாவும் சித்தியும் உள்ளனர். ஓரத்தில் டவுசரோடு நிற்பது நான். பெரியாரின் வளர்ப்பு நாயான அல்சேஷன் நாயும் உடன் வந்திருந்தது.

எங்க சித்தப்பா வைத்திருந்த காபி கடை இன்னும் அந்தத் தெருவில் இருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நடேச அய்யர் தெருவை நடேசன் தெரு என்று மாற்றிவிட்டனர். 

இப்படிக்கு 

T.N.U.திருப்பதி, பெரியார் பற்றாளர், தியாகராய நகர், சென்னை.

இந்த தகவல் படத்தோடு முரசொலியில்  வெளியிப்பட்டது.

பார்ப்பனரல்லாத மக்கள்  நிலம் வாங்கி தனது உழைப்பில் வீடுகட்டி குடியிருப்பது கூட மிகக் கடினமாக இருந்த காலம் உண்டு அதையெல்லாம் மாற்றுவதற்கு கூட பெரியார் தேவைப்பட்டார்.

No comments:

Post a Comment