பட்டியலின மக்களுக்குப் பூணூலா? பதில் சொல்வாரா ஆளுநர்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

பட்டியலின மக்களுக்குப் பூணூலா? பதில் சொல்வாரா ஆளுநர்?

மின்சாரம்

நந்தனார் குரு பூஜை என்ற பெயரால் ஒரு திருக்கூத்து சிதம்பரத்தை அடுத்த ஆதனூரில் நடைபெற்றுள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஜாதி ஒழிப்பு வீரர் போல தொடை தட்டியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் 300 பட்டிய லினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிக் கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி பேசிய பேச்சு - அபத்தத்தின் உச்சம்!

"நந்தனார் குரு பூஜை. விழாவில் பங்கேற்பதை பாக்கியமாகக் கருதுகிறேன். மாபெரும் முனிவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்தே தோன்றியுள்ளனர். வேதத்தில் நம்மில் யாரும் தாழ்ந்த வர்களோ, உயர்ந்தவர்களோ அல்ல; அனைவரும் சமமானவர்கள் என்றே கூறப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இதுபோன்ற பாகுபாடு பிரிவினை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களை அறியும் போதும், ஜாதிய வன்கொடுமைகள் திணிக்கப் படுவதை நினைக்கும்போதும் மனம் வேதனை அடைகிறது.

சமுதாயத்தில் ஒரு மாபெரும் பிரிவினர் கோயிலுக்குள் செல்ல தடை ஏற்படுத்தப் படுகிறது. இது போன்ற செயல்கள் ஸநாதன தர்மத்திலோ அல்லது ஹிந்து மதத் தர்மத்திலோ இல்லை" என்று அண்டப்புளுகுகளை தன் உள்ளக் குதிரிலிருந்து அவிழ்த்துக் கொட்டியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்கள் - இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் போலும்!

ஆளுநரா, ஆர்.எஸ்.எஸ். பிரச்சார செயலாளரா என்ற அய்யமெல்லாம் இனி தேவையில்லை; அவரே பூணூல் தனத்தை அட்டகாசமாக பிரஸ்தாபித்த பிறகு - கைப்புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?

(1) முதலில் ஓர் அடிப்படையை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். பூணூல் என்பது பார்ப்பனர்கள் தாங்கள் துவி ஜாதி - இரு பிறப்பாளர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்ளவே! அதனால் தான் பார்ப்பனச் சிறுவர்களுக்குப் பூணூல் அணிவதைப் பூணூல் கல்யாணம் என்று கொண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டம் என்ற ஒரு நாளை ஏற்படுத்தி, அன்று பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

2) இன்னொரு முக்கிய கேள்வியும் உண்டு; மனிதர்களில் ஒரு கூறான பெண்களுக்குப் பூணூல் அணியும் உரிமை உண்டா? அந்த உரிமை மறுக்கப்பட்டது ஏன்? அதற்குள் தான் ஸநாதன சர்ப்பம் தலைதூக்கி ஆடுகிறது.

3) இராமானுஜரும், பாரதியாரும் பட்டியலின மக்களுக்கு பூணூல் அணிவித்தார்களே - அது செயல்பாட்டுக்கு வந்ததா? யதார்த்தத்தில் இப்பொழுது நடைமுறையில் உள்ளதா?

4) பூணூல் யார் யாருக்கெல்லாம் அணிய முடியும் என்று - ஸநாதனத்தின் மூலஸ்மிருதியான மனுநீதி சாஸ்திரம் என்ன கூறுகிறது?

"பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணையொத்த முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு க்ஷணப்பன் நாரினாலும் மேடு பள்ளமில்லாமல் மெல்லியதாகப் பின்னி, மூன்று வடமாக மேலரை ஞாண் கட்ட வேண்டியது.

(மனுதர்மம் அத்தியாயம் - 2 - சுலோகம் - 42).

இதில் சூத்திரர்கள் என்று இந்து வர்ணாஸ்ரம ஸநாதனம் கூறும் வருணப் பட்டியலில் உள்ள சூத்திரர்களுக்குப் பூணூல் அணிவதுபற்றிக் கூறப் பட்டுள்ளதா?

வருணப் பிரிவுகளுக்குள்ளேயே வராமல் ஹிந்து ஸநாதனம் ஒதுக்கி வைக்கும் பட்டியலினத்துக்குப் பூணூல் அணியும் சரத்து உள்ளதா?

இந்த நிலையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 சகோதரர்களுக்கு வள்ளலாரின் ஆதனூரில் 'மேதகு' ஆளுநர் முன்னிலையில் பூணூல் அணியப்பட்டது எப்படி?

ஆளுநர் ஹிந்துவின் ஸநாதன வருண தர்மத்தை மறுதலிக்கிறாரா? குழி தோண்டிப் புதைத்து விட்டோம் என்று கூறப் போகிறாரா?

(5) இன்னொரு அபாயகரமான மனுதர்மத்தின் கட்டளையை ஆளுநர் மீறப் போகிறாரா? அல்லது தவறு நடந்து விட்டது என்று கூறி, பூணூல் அணியத் தகுதியில்லாதவர்கள் என்று மனுதர்மத்தால் கூறப்பட்டவர்களை என்ன செய்ய உத்தேசம்?

இதோ அந்த மனுதர்மம் - அத்தியாயம் 9 சுலோகம் 224

"சூத்திரன் பிராமண ஜாதிக் குறியான - பூணூல் முதலியவற்றைத் தரித்தால், அரசன் சூத்திரர்களின் அங்கங்களை வெட்ட வேண்டும்."

ஆளுநர் 'பெருமானே', என்ன செய்ய உத்தேசம்?

(6) குருவானவர் தம் சிஷ்யர்களுக்கு 'முஞ்சா' என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்குத் தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அறையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரிநூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது"

ஆகப் பூணூல் என்பது சிஷ்யர்களின் கோவணமாக இருந்தது என்ற தகவலை சொல்லியிருப்பவர் யார் தெரியுமா?

அமெரிக்கா வரை சென்று தங்களின் மதத்தை - பிராமணீயத்தை அட்ட காசமாகப் பிரசங்கம் செய்த பீரங்கியும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதான சீடருமான சாட்சாத் விவேகானந்தர்தான் (ஆதாரம்: 'சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை' பக்கம் 26-28).

கோவணத்தைப் புனிதமாக்கும் பிர்மாவின் முகத்தில் பிறந்த பிராமணர் களும், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்யும் ஆளுநர் ஆர்.என். ரவியும் இதற்குக் கூறும் பதிலை கரைபுரளும் ஆர்வத்தோடு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பூணூல் அணியும் உரிமையுடைய வைசியரான காந்தியார் என்ன சொல்லுகிறார்?

"நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் பலர், நல்ல எண்ணத்தின் பேரிலேயே என்னைப் பூணூல் அணியும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றி அடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் அணிந்து கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத் தாருக்கு மட்டும் அதை அணிந்து கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவர்களுடன் வாதாடினேன். பூணூல் அணிந்து கொள்வது தேவை யற்ற பழக்கம் என்பது என் கருத்து. ஆதலால், அதை அணியவேண்டும் என்பதற்குப் போதுமான காரணம் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. பூணூலைப் பொறுத்தவரையில் எனக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் அதை அணியவேண்டும் என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை."

காந்தியார் கூற்றுக்கு என்ன பதில்?

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி - திருப்பதி ஏழு மலையானுக்கு மூன்றரைக் கிலோ தங்கத்திலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணி யனுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலும் தங்கப் பூணூல் அணிவித்தாரே - அப்படியானால் கடவுளும் ஜாதிப் பட்டியலுக்குள் வந்து விட்டாரா?

பார்ப்பானும் சாமி - கடவுளும் சாமி - இப்பொழுது புரிகிறதா பூணூலின் மகத்துவத்தை!

கடைசியாக ஒரு கோரிக்கை. பூணூல் போட்டு பட்டியலின மக்களை மேல் நிலைக்கு உயர்த்திய 'பெருங்குடி' மக்களே!  வள்ளலாரின் ஆதனூருக்கு அருகாமையில் உள்ள சிதம்பரம் நடராஜன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று, அப்படியே கர்ப்பக் கிரகத்துக்குள்ளும் பூஜை நடத்திட அனுமதிப்பீர்களா?

நந்தன் நுழைந்தார் சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குள் என்று சொல்லி, அக்கோயிலின் தெற்கு வாசலில் தீண்டாமைக்கு அடையாளமாக சுவர் எழுப்பப்பட்டுள்ளதே - அந்தச் சுவரையும், பூணூல் போடப்பட்ட அந்தப் பட்டியலின மக்களைக் கொண்டே இடித்து முடித்து விடலாமே! செய்வார்களா?

அமைச்சர் மாண்புமிகு மானமிகு க.பொன்முடி அவர்கள் மிகச் சரியாகவே சொல்லி இருக்கிறார் - இது 'பெரியார் மண்' உங்கள் ஜம்பம் பலிக்காது - எச்சரிக்கை!

No comments:

Post a Comment