அவர்தான் கலைஞர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 28, 2023

அவர்தான் கலைஞர்!

சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவிகள் தங்களது இல்லங்களில் தோட்டங்களை அமைத்துப் பராமரித்து வந்தனர்.

அதற்கான செடி, நாற்றுகளை உருவாக்க ஒரு தோட்டக்கலைச் சங்கம் தொடங்கப்பட்டது. அந்தச் சங்கத்துக்கு பிரிட்டிஷ் அரசு 4 காணி (18 கிரவுண்டு) இடத்தை 99 ஆண்டு குத்தகைக்குத் தருகிறார்கள். 

இதுதான் முன்கதைச் சுருக்கம். 

அந்த இடம் இறுதியாக சென்னையின் மய்யமான ஜெமினி பாலத்துக்கு அருகில், அமெரிக்கத் தூதரகத்துக்குப் பக்கத்தில் அமைந்தது. சென்னை வெயிலிலும் இங்கிலாந்து நாட்டு மலர்ச்செடிகளை வளர்க்க முனைந்த அந்தச் சீமாட்டிகளின் நல்ல எண்ணம். 

காலப்போக்கில் அந்தச் சங்கம் அப்படியே துரைசாணிகளிடம் இருந்து கைமாறி வெவ்வேறு நபர்களிடம் வந்து இறுதியாக கிருஷ்ணமூர்த்தி எனும் அ.தி.மு.க. நபரிடம் வந்து சேர்கிறது.

அப்போது அரசு தந்திருந்த 99 ஆண்டு கால குத்தகை முடியும் நேரம். கிருஷ்ணமூர்த்தி அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆருக்கு வேண்டியவர் என்பதால் அவரிடம் சென்று குத்தகையை நீட்டித்துத் தருமாறு கோருகிறார்.

முதலமைச்சரும் ஒப்புக்கொண்டு அதற்கான கோப்புகளை தயார் செய்யும் நேரத்தில் எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் அமெரிக்கா செல்ல நேரிடுகிறது.

அதன் பிறகு நேர்ந்த முதலமைச்சரின் மரணம், அரசியல் குழப்பங்கள் எல்லாம் முடிந்து 1989 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சர் ஆகிறார்.

கலைஞரிடம் அந்த குத்தகை நீட்டிப்புக் கோப்பு செல்கிறது. அதன் பின்னணியை அறிந்த கலைஞர் கொதித்துப் போய், குத்தகைக்காலம் முடிந்திருந்த இந்த தோட்டக்கலைச் சங்கத்தையும், எதிரில் டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் உணவகம் இருந்த அரசு நிலத்தையும் உடனடியாக கையகப்படுத்தச் சொல்லி அரசுக்கு உத்தரவிடுகிறார். 

அதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். வழக்கு தொடங்கும் முன்னரே ஆட்சி கலைக்கப்படுகிறது.

அதே நேரத்தில் அ.தி.மு.க. கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என பிரபலம் அடைந்து சசிகலா நடராஜனுக்கு நெருக்கமானவராக ஆகிவிடுகிறார். அடுத்து ஆட்சிக்கு வந்த அம்மையாரிடம் அதே கோப்பு போகிறது.

குத்தகை நீட்டிப்பு விஷயத்தில் முடிவெடுக்க முடியாத அளவுக்கு அந்தக் கோப்பில் கலைஞர் கடுமையான குறிப்புகளை எழுதி வைத்திருப்பதைக் காண்கிறார். எனவே அந்தக் கோப்பையே இல்லாமல் ஆக்கிவிட சிலர் முயன்றனர். அது கலைஞருக்குத் தெரிய வந்து மிகக் கடுமையான அறிக்கையை அவர் வெளியிட, எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே நின்று விடுகிறது. ஆனால், அந்த இடம் மட்டும் அதே நபரின் ஆக்கிரமிப்பிலேயே தொடர்ந்து இருந்து வந்தது.

மீண்டும் 96 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி. மீண்டும் வழக்கு நீதிமன்றத்தில் நடத்தப்படுகிறது. எதிர்த்தரப்பு வழக்கமான வாய்தா மேல் வாய்தா வாங்கினாலும் வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து சென்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.

மீண்டும் 2001இல் அ.தி.மு.க. ஆட்சி. மீண்டும் வழக்கு அப்படியே நிற்கிறது. வழக்கை திரும்பப் பெறவும் கூட முயன்றனர். நீதிமன்றம் அனுமதிக்க வில்லை.

மீண்டும் 2006இல் கலைஞர் ஆட்சிக்கு வருகிறார். ஒரு வழியாக டிரைவ் இன் உட்லண்ட்ஸ் இடம் மீட்கப்படுகிறது. ஆனாலும் இந்த தோட்டக்கலைச் சங்க வழக்கு முடியவில்லை. 

மீண்டும் 2011 ஆம் ஆண்டில் அம்மையார் ஆட்சிக்கு வருகிறார். இந்த முறை daring ஆக ஒரு முயற்சியை மேற்கொள்கின்றனர். அரசுக்கு சொந்தமான இடத்தை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அந்த நிலத்தை தோட்டக்கலை சங்கத்தின் மீது சென்னை மாவட்ட ஆட்சியரைக் கொண்டு பட்டா வாங்குகின்றனர். பிறகு அது பெரும் சர்ச்சை ஆகி ரத்து செய்யப்படுறது. 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அந்த இடத்தின் உள்ளே அரசால் கால் வைக்கக்கூட முடியவில்லை. வழக்கு உயர்நீதிமன்றத்தில் அப்படியே நிற்கிறது. 

தமிழ்நாட்டு அரசுக்குச் சொந்தமான ஓர் இடத்தை தனிநபரிடம் இருந்து மீட்கும் அந்த அயராத சட்டப்போராட்டத்தின் முடிவு தெரியாமலேயே கலைஞர் மறைந்து விடுகிறார்.

2021ஆம் ஆண்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார்.

2022ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கை அரசு வெல்கிறது. 2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமும் அந்த தீர்ப்பை உறுதி செய்கிறது.

தலைவர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்கமான இந்த வேளையில், இந்த நாளில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழ்மக்களின் சொத்து ஒரு தனிநபரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக மீட்கப்பட்டுள்ளது.

கலைஞரின் 33 ஆண்டுகால விருப்பம் நிறைவேறியுள்ளது. 

இந்த அரசு நில மீட்பு ஓர் உதாரணம்தான். இதைப் போன்ற எத்தனையோ மாநில உரிமைகளை, சமூகநீதி, கல்வி உரிமைகளை அவர் மீட்டெடுத்ததுதான் தமிழ்நாட்டு அரசியல் சரித்திரம். தமிழ்நாட்டின் தனித்த அடையாளங்களுள் ஒன்று கலைஞரின் போராட்டம் என்றானது.

கலைஞரின் வாழ்நாளில் அவரைச் சட்டப் போராட்டத்தில் வீழ்த்தியவர்கள் எவருமே இல்லை. மறைந்த பின்னரும் கூட அவர் வென்று கொண்டுதான் இருக்கிறார்.

அவர்தான் கலைஞர்!

No comments:

Post a Comment