தொடர் பயணத்தில் அரூர், சேலம் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 29, 2023

தொடர் பயணத்தில் அரூர், சேலம் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

 ஆளுநரின் அறியாமையைக் கண்டு இரங்குகிறோம்

எங்களுக்கு குலத்தொழில்; பார்ப்பானுக்கு மட்டும் படிப்பு; இதுதானே மனுதர்ம யோஜனா?

அரூர், அக், 29 ‘‘ஆளுநரின் அறியாமையைக் கண்டு இரங்குகிறோம்; எங்களுக்கு குலத் தொழில்; பார்ப்பானுக்கு மட்டும் படிப்பு; இதுதானே மனுதர்ம யோஜனா?'' என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

குலத்தொழிலை மீண்டும் திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பணிகளில் அரூர், சேலம் பகுதிகளில் ஆசிரியர் சுற்றுப் பயணம் செய்து உரையாற்றினார்.

”விஸ்வகர்மா யோஜானா”வா? ” “மனுதர்ம யோஜனா”வா? என்ற கேள்வியை முன் னிலைப்படுத்தி, ஒன்றிய அரசின் இந்த சதித் திட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு தழுவிய தொடர்  பயணப் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்க தமிழர் தலைவர் ஆசிரியர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்தப் பயணத்தில் நான்காம் நாள் அரூர், சேலம் ஆகிய இரண்டு பகுதிகளில் இடம் பெற்றன. 

தருமபுரி மாவட்டம் அரூரில்...

முதல் கூட்டம் 28.10.2023 அன்று, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் கச்சேரி மேடு சாலையில் மாலை 5 மணிக்கு தொடங்கியது. முதலில் கோவன் கலைக் குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பகுத்தறிவு கலைத்துறை மற்றும் தமிழ்நாடு மாணவர் மன்றம் இணைந்து சமூகத்தில் நடைபெறும் அவலங்களைச் சுட்டிக்காட்டி நாடகமாக அரங்கேற்றினர். நாடகம் நடந்து கொண்டி ருக்கும்போதே ஆசிரியர் அரசு பயணியர் விடுதி அருகே சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, பறை இசை முழக்கம் வழிகாட்ட தோழர்களுடன் சாலையில் நடந்து வந்தார். மற்றவர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்த னர். ஆசிரியர் மேடையேறுவதைக் கண்டு மேடையிலிருந்த பெருமக்கள் எழுந்து நின்று வரவேற்றனர். திரண்டிருந்த மக்களும் அனிச்சையாக எழுந்து நின்று ஆசிரியருக்கு வரவேற்பளித்தனர்.

முதலில் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. போட்டி போட்டுக்கொண்டு புத்தகங்களை பெற்றுச் சென்றனர். தொடர்ந்து ஆசிரியருக்கு முக்கிய பிரமுகர்கள் பயனாடை அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  பிரமுகர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தனர். மாவட்டத் தலைவர் தங்கராஜு தலைமையேற்க, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர், தி.மு.க. ஆதிதிராவிடர் நலக் குழு இணைச் செயலாளர் அரூர் இராஜேந் திரன் வரவேற்றார். நிகழ்ச்சியை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஒருங் கிணைக்க, மாநில கலை துறைச் செயலாளர் மாரி கருணாநிதி இணைப்புரை வழங்கினார்.  பொதுக்குழு உறுப்பினர் பழ.பிரபு, கழகக் காப்பாளர் தமிழ்செல்வன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தலைமைக் கழக அமைப்பாளர் திராவிட மணி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர்கள் சேட்டு, வேங்கை, தமிழ்ச்செல்வன், சசிகலா, மாவட்ட ஆசிரியரணித் தலைவர் சிவாஜி, பெரியார் பெருந் தொண்டர் அரூர் முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், திருப்பத் தூர் மாவட்டச் செயலாளர் கலைவாணன், தருமபுரி மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளர் பழ னியப்பன் உரையாற்றினார். 

நிறைவாக ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரையில்...

ஆசிரியர் தனது உரையில், “ஒரு மாநாடு போல மக்கள் கூடியிருப்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடை கிறேன். என்னுடைய வயதே குறைந்துவிட்டது. இங்கே வரும்போது இங்கே இருந்த எத்தனையோ தோழர்களின் நினைவுகள் எழுகின்றன. 70 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அறிவித்த குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டத்தில் இந்தப் பகுதியிலிருந்து ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். ஜாதி ஒழிப்பு மாநாடே நடைபெற்றிருக்கிறது. ‘மிசா'வில் இருந்தவர் அய்யா வேணுகோபால் குடும்பத்தினர். வீராசாமி அவர்கள், அதுபோலவே தமிழ்நாட்டிலேயே பெரியார் பெயரில் முதலில் ஒரு பூங்கா அமைத்தது அரூரில்தான்; குள்ளப்பன் அந்த பெருமைக்கு உரியவர். எஸ்.கே.சின்னப்பன், சாமிக்கண்ணு, சி.எம்.சேகர் என்று தோழர்களது பெயரை அடுக்கிக் கொண்டே சென்றார். 

ஆசிரியரின் வயதையும், அவரது நினைவாற்றலையும் தொடர்புபடுத்திக் கொண்ட மக்கள் வியப்பில் வாயைப் பிளந்தவாறு தம்மையும் அறியாமல் கைதட்டினர். 

‘‘குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள தோழர்களை பாராட்டுகிறேன்” என்று உற்சாகத்துடன் தொடங்கிய ஆசிரியர், ”சமூகத்தில் நிலவிய பேதங்களைப் போக்க புத்தர், சித்தர்களெல்லாம் செய்ய முடியாததை குறுகிய காலத்தில் செய்து காட்டியவர் தந்தை பெரியார்” என்று தொடர்ந்தார். மேலும், ‘‘மனுதர்ம யோஜனா வந்தால், செருப்பு தைக்கிறவர் பிள்ளை செருப்பு தைக்கவேண்டும். முடிதிருத்தம் செய்கிறவர் பிள்ளை முடிதிருத்தம் செய்ய வேண்டும். பானை செய்கிறவர் பிள்ளை பானை செய்ய வேண்டும். மலம் எடுக்கிறவர் பிள்ளை மலம் எடுக்க வேண்டும். ஆனால், பார்ப்பான் மட்டும் படிக்கவேண்டும்” என்பதுதான் நடக்கும். நம்மை மீண்டும் 2000 ஆண்டுகளுக்கு முன் அழைத்துச் சென்று விடும். அதைத் தடுக்கின்ற ஆற்றல் ‘இந்தியா' கூட்டணிக்கு உண்டு! அதன் காரணமாக பா.ஜ.க.வுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது என்று இன்றைய பா.ஜ.க.வினர் மனநிலையை படம் பிடித்துக்காட்டினார். ஆகவே, தனித்தனியாக இவர்களுடன் போராட முடியாது. 2024 தேர்தலில் ‘இந்தியா' கூட்டணிக்கு வாக்களியுங்கள். விடியல் கிடைத்துவிடும்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

சிறப்பு அழைப்பாளர்கள்

சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சித் தலைவர் இந்திராணி தனபால், அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா தனபால், தி.மு.க. நகரச் செயலாளர் முல்லை ரவி, வி.சி.க. மாவட்டச் செயலாளர் சாக்கன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராமதாஸ், சி.பி.அய்.எம். மாவட்டச் செயலாளர் குமார், வி.சி.க. மண்டலச் செயலாளர் தமிழ் அன்வர், கல்வி நிலைய தாளாளர் சிந்தை ராஜேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சுபேதார், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி, தேசிய மக்கள் கட்சி நிறுவனர் சிவா, இந்திய குடியரசுக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் பழனிசாமி, கிறிஸ்தவ சபை போதகர் ஜெபமணி ஆகியோர் அழைக்கப்பட்டு, வருகை தந்து சிறப்பித்தனர். 

நிறைவாக மாவட்டச் செயலாளர் பூபதி ராஜா நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அரூர் மக்களின், முக்கிய பிரமுகர்களிடம் விடைபெற்றுக்கொண்டு ஆசிரியர் தனது பயணப் படைக் குழுவினருடன் சேலம் நோக்கிப் புறப்பட்டார்.

சேலம் அம்மாபேட்டையில்...

உற்சாக கொள்கை முழக்கங்களுடன் சேலம் அம்மாபேட்டையில் பெரியார் நினைவுத் தூண் அருகில் அமைக்கப்பட்டுள்ள மேடையில்  ஆசிரியர் ஏறினார். அப்போது முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் இளவழகன் தலைமையேற்றிருந்தார். செயலாளர் வைரம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழகக் காப்பாளர்கள் ஜவகர், பழனி. புள்ளையண்ணன், ஆத்தூர் தங்கவேல், சிந்தாமணியூர் சுப்பிரமணியன், தலைமைக் கழக அமைப்பாளர்கள் கா.நா. பாலு, ஆத்தூர் சுரேஷ், சேலம் மாநகரத் தலைவர் இளவரசன், சேலம் மாநகர செயலாளர் பூபதி, பகுத்தறிவு ஆசிரியரணி மாநிலத் தலைவர் தமிழ் பிரபாகரன், ஆத்தூர் மாவட்டத் தலைவர் வானவில், மேட்டூர் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கலைவாணன்,  மாநகர காங்கிரஸ் பொருளாளர் ராஜகணபதி ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர். தி.மு.க. சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சுபாசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்து உரையாற்றினர். முன்னதாக முனைவர் துரை. சந்திரசேகரன் பேசி முடித்திருந்தார். புத்தகங்கள் வெளியீடு, விற்பனை, பிரமுகர்களுக்கு, ஆசிரியருக்கு மரியாதை செய்யும் நிகழ்வுகள் முடிந்த பிறகு நிறைவாக ஆசிரியர் பேசினார்.

சேலத்தில் தமிழர் தலைவர் உரை

அவர் தமதுரையில், நிகழ்ச்சியின் தலைப்பை நினைவு படுத்திப் பேசி, அது தலைகீழாக மாற்றப்பட்டிருப்பதையும், அதற்கு காரணமாக தந்தை பெரியார் இருப்பதையும் சுட்டிக்காட்டி, “இன்றைக்கு பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத்துக்கே தேவைப்படுகிறவராக அறியப்படுகிறார்” என்ற தகவலை அழுத்தமாக பதிவு செய்தார், மக்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையில். 

ஒரு பிரகடனம் போல், “எழுதி வைத்துக்கொள்ளுங்கள், 2024 தேர்தலில் ‘இந்தியா' கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது” என்று சொன்னதும், மக்களின் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடி, கைதட்டல்களால் அதிர வைத்தனர் அப்பகுதியை. அந்த அளவுக்கு அந்தத் தகவல் மக்களுக்கு பெருங்கிளர்ச்சியை கொடுத்திருந்தது. ஆசிரியர் போன்ற ஒருவர் அவ்வார்த்தைகளை சொன்னதும் அவர்களது நம்பிக்கை அதிகரித்திருந்தது. பிரதமர் மோடி இந்தியாவை ‘பாரத்' என்று பெயர் மாற்றம் செய்ததை நினைவூட்டி, “சேலம்'' என்ற பெயரை உடனடியாக மாற்றிவிட முடியுமா? அதற்கு எத்தனை நடைமுறைகள் இருக்கின்றன. ஏன் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்கு எத்தனை போராட்டங்கள், உயிரிழப்புகள் நடந்தன. தானடித்த மூப்பாக இந்தியா பெயரை மாற்றுகிறார்கள் என்றால், அவர்கள் அந்த அளவுக்கு சேலம் ‘இந்தியா' கூட்டணியைக் கண்டு அச்சப்படுகிறார்கள். அதனால் ழிஷீஷ் ஷீக்ஷீ ழிமீஸ்மீக்ஷீ என்று சொல்வது போல, எதையாவது செய்து நாசம் செய்துவிடவேண்டும் என்று கொண்டு வரப்பட்டதுதான் இந்த ‘மனுதர்ம யோஜனா' என்று மோடி, அமித்ஷாக்களின் அச்சத்தை படம் பிடித்துக் காட்டினார். 

குஜராத் மாடல் தேவையா? 

‘திராவிட மாடல்' தேவையா? 

நடப்பு அரசியலை தொடர்புபடுத்திப் பெண்களை ஏமாற்றி அவர்களின் ஓட்டுக்களைப் பெற்றுவிட கொண்டுவரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு; அதிலும் சூழ்ச்சிப் பொறி; தமிழ்நாடு செய்துள்ள மகளிர் உரிமைத் திட்டங்கள் என்று ஒப்பீடு செய்து குஜராத் மாடல் தேவையா? ‘திராவிட மாடல்' தேவையா? என்று மக்களை சிந்திக்க வைத்தார். நாள்தோறும் தமிழ்நாடு ஆளுநர் அரசுக்கு  முட்டுக்கட்டை போடுவதை எடுத்துச்சொல்லி, திராவிடம் - ஆரியம் பற்றிய ஆளுநரின் அறியாமையைக் கண்டு, மனுதர்மத்தில் திராவிடம் தனி நாடாக வருவதையும், பாரதம் தனி நாடாக வருவதையும் படித்துக்காட்டி, “ஆளுநரின் அறியாமையைக் கண்டு நாங்கள் இரங்குகிறோம்” என்று கண்ணியத்தின் உச்சத்தில் நின்று ஆசிரியர் ஆளுநரை விமர்சித்தார். அதேபோல், தமிழ்நாட்டு முதலமைச்சரும் கண்ணியத்துடன், “2024 தேர்தல் வரையில் ஆளுநரை மாற்றிவிடாதீர்கள்” என்று ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க, அம்மாபேட்டை பகுதிச் செயலாளர் இராஜா, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சங்கேஷ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சையத் மூசா, 40 ஆம் மாமன்ற உறுப்பினர் மஞ்சுளா ராஜ்மோகன், மாநகர காங்கிரஸ் பொருளாளர் கு.ராஜகணபதி, 39 ஆம் மாமன்ற உறுப்பினர் மா.திருஞானம், 37 ஆவது கோட்ட தி.மு.க. செயலாளர் டி.சுரேந்திரன், 38 ஆவது கோட்ட தி.மு.க. செயலாளர் ஜீவா (எ) எம்.என்.சிவக்குமார், 30 ஆவது கோட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.சரவணன், 40 ஆவது கோட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.தங்கவேல், மாவட்ட சிறுபான்மையினர் உரிமை பிரிவுத் தலைவர் கே.தாஜீதின், மாநகர சிறுபான்மை உரிமைப் பிரிவு தலைவர் அ.முபாரக், மாநகர நெசவாளர் அணி வி.பி.சிங் (எ) ராஜமாணிக்கம், மாநகர் வர்த்தக அணி துணை அமைப்பாளர் பீரோ என். ஆறுமுகம், தி.மு.க. கு. அரிபாஸ்கர், 35 ஆம் மாமன்ற உறுப்பினர் பச்சியம்மாள் மாரியப்பன், தி.மு.க. மகளிரணித் தோழர் புவனேசுவரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட இளைஞரணி தலைவர் அ.இ.தமிழர் தலைவர், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ப. கலைமணி, கழகத் தொழிலாளரணி தலைவர் கே.எம். கணேசன், ஜெ.கருணாகரன், கழகத் தொழிலாளரணி மா. அமைப்பாளர் பா.கதிர்வேல், தி.க. வழக்குரைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் இரா. செல்வக்குமார், சூரமங்கலம் பகுதி தலைவர் பழ. பரமசிவம், சூரமங்கலம் செயலாளர் போலீஸ் கு.ராஜூ, தாதகாப்பட்டி பகுதித் தலைவர் இரா.வீரமணி, தாதகாப்பட்டி செயலாளர் ச.வெ.இராவண பூபதி, அம்மாபேட்டை பகுதி தலைவர் க.குமாரதாசன், பொன்னம்மாபேட்டை பகுதித் தலைவர் சு.தமிழ்ச்செல்வம், பொன்னம்மா பேட்டை செயலாளர் மோ.தங்கராஜூ, அஸ்தம்பட்டி பகுதி தலைவர் சு,மணிமாறன், அ.பட்டனம் ஒன்றிய அமைப்பாளர் பி.கே.மாதேஸ்வரன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்கள் அ. பாஸ்கர், ச.தினேஷ், மாவட்ட ப.க. தலைவர் வீரமணி இராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் கே.கமலம், பேங்க் இரா.இராசு, மகளிரணி அமைப்பாளர் த.சுஜாதா, மகளிரணித் தோழர்கள் வழக்குரைஞர் து.மேகலா, சு.மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நிறைவாக அம்மாபேட்டை பகுதிச் செயலாளர் இமயவரம்பன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment