நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர்கள் ‘‘சொர்க்க புரியிலே'' வாழ்வார்கள் என்ற பி.ஜே.பி. ஆட்சியில்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் நாளும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 30, 2023

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர்கள் ‘‘சொர்க்க புரியிலே'' வாழ்வார்கள் என்ற பி.ஜே.பி. ஆட்சியில்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் நாளும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்!

தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு - பாதுகாப்பு 

ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை வரும் தேர்தலில் வீழ்த்துவதே!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர்கள் ‘சொக்கபுரியிலே' வாழ்வார்கள் என்று சொன்னவர்கள்தானே இப்பொழுது ஆட்சியிலே இருக்கிறார்கள்; ஆனால், நடப்பது என்ன? தமிழ்நாடு மீனவர்கள்  இலங்கைக் கடற்படையால் நாள்தோறும் தாக்கப்படும் கொடுமைதான். இதற்கு ஒரே தீர்வு - வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை ஒழித்துக் கட்டுவதே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

இலங்கைக் கடற்படையால் நேற்று (29.10.2023) கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நமது முதலமைச்சர் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' மு.க.ஸ்டாலின் அவர் கள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர் களுக்குக் கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையால் தொடர் தாக்குதல்கள்!

நமது கடல் எல்லைக்குள் தமிழ்நாட்டு மீனவ சகோதரர்கள் தங்களது வாழ்வாதாரமான மீன் பிடித் தொழிலைச் செய்தாலும், அவர்களை நடுக்கடலில் துன்புறுத்தி, தொல்லை கொடுப்பது, தேவையற்ற கைது நடவடிக்கைகள், படகுகளைப் பறிமுதல் செய்து அவர் களை தொழில் செய்யவிடாமல் ஆக்குவது போன் றவை நாளும் தொடரும் அக்கிரம, அநியாய தொடர் கதைகளாகி வருவது வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்!

கடந்த 9 ஆண்டுகளுக்குமுன் பா.ஜ.க. (2014) ஆட் சிக்கு வருவதற்குமுன், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டு மீனவர்கள் (அவர்கள் நம்பும்) ‘‘சொர்க்க புரி''யிலேயே வாழ்வார்கள்'' என்று கூறினார்கள்.

ஆனால், நடப்பது என்ன?

‘உருட்டைக்கு நீளம், புளிப்பில் அதற்கு அப்பன்' என்ற பழமொழியை நினைவூட்டுவதுபோல, அன் றாடத் தாக்குதல்கள் - மீனவ சகோதரர்கள் கதறிக் கதறி இங்கே தரையில் கண்ணீர் - மீன்பிடிக்க உயிரைப் பணயம் வைத்து கடலில் சென்றவர்கள் கடல் அலைபோல கண்ணீர் சிந்துவது - தொடர் நிகழ்வு களாக இருக்கின்றன!

இந்த லட்சணத்தில் புதைகுழிக்குப் போன இலங் கைப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல ஆயிரம் கோடி ரூபாய்கள் கடனாகவும், கருணையாகவும் வழங்கும் நிலை!

இலங்கைக்குப் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசு செய்த உதவியை மறக்கலாமா?

தமிழ்நாடு ‘கப்பல் கப்பலாக' உதவிகளை கருணை யும் மனிதநேயமும் பொங்கும் வகையில் உதவிடுகின்ற போதிலும், மீனவர் நலன் என்பது நெருப்பின்மீது ஊற்றும் நெய்போல நாளும் வெந்தும் நொந்தும் கொண்டுள்ளது!

தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள், மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வலியுறுத்தவிருப்பது வரவேற்கத்தக்கதே!

இதற்கு ஒரே முடிவு ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை 2024 தேர்தலில் ஒழித்துக் கட்டுவதே!

எத்தனை நாளைக்கு இராமேசுவரம் மீனவர்களும், நாகை மீனவர்களும் மற்ற மீனவர்களும் வேலை நிறுத்தம், பட்டினி கிடந்து ‘உண்ணாவிரத' அறப்போர் - இவற்றை பொழுது விடிந்து பொழுதுபோனால் மேற்கொள்ளும் நிர்ப்பந்திக்கும் நிலை என்றால், ஒன்றிய மோடி அரசு இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு கண்டு மீனவ சகோதரர்களின் துன்பத்தைத் துடைத் தெறிய முன்வரவேண்டாமா?

இராமநாதபுரம் பக்கம் வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்கள், ‘‘மீனவர் நலம் காப்போம்'' என்று வாயால் உறுதிமொழி செவி கிழியச் சொல்லிவிட்டுச் செல்வது ஒரு வாடிக்கையாகிவிட்டது.

இனி இதற்கு ஒரே வழிதான் உண்டு. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான ஒன்றியத்தை ஆளும் - மீனவ நலனைக் காவு கொடுக்கும் இந்த ஆட்சியை மீண்டும் வராமல் தடுத்து, வரும் 2024 பொதுத் தேர்தலில் ‘‘இந்தியா'' கூட்டணியை வெற்றி பெறச் செய்ய - இந்திய மீனவர்கள் எழுச்சியுடன் முடிவு செய்வதுதான் ஒரே தீர்வு!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.10.2023


No comments:

Post a Comment