ஊடக உரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 8, 2023

ஊடக உரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது!

👉 ‘நியூஸ் கிளிக்' ஆசிரியர் கைது: நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல!
👉ஊடக உரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது!
இதனை எதிர்த்து வரும் 11 ஆம் தேதி 
மாநில சி.பி.எம். கட்சி நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம்!

கருத்துரிமைக்கு எதிராக நாளும் செயல்படும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கனவாகும். இதனைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு) நடத்த விருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வரவேற்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமையன்று (அக்.7) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘‘சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று கூறி ‘நியூஸ் கிளிக்’ முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்கா யஸ்தா, மனிதவள பிரிவின் தலைவர்  அமித் சக்ரவர்த்தி ஆகியோரை ஒன்றிய அரசு கைது செய்துள்ளது. எப்அய்ஆர் பதிவு  செய்து 24 மணி நேரத்திற்கும் மேல் பிரபீர் புர் காயஸ்தா, அமித் சக்ரவர்த்தி ஆகியோ ருக்கு அதன் நகலை வழங்கவில்லை. 

கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான இந்த தாக்குதலை கண்டித்து சென்னையில் பெண் பத்திரிகையாளர்கள் அமைப்பு (நெட்வொர்க்  ஆப் உமன்ஸ் இன் மீடியா - இந்தியா,  சென்னை கிளை) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பத்திரிகை யாளர்கள், “அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. பத்திரிகையாளர்கள் மீது  நடத்திய ஒரு தாக்குதலில் கூட ஆட்சி யாளர்கள் வெற்றி பெற்றது இல்லை. 

உபா ஒரு கருப்புச்சட்டம். அரசு  குற்றம்சாட்டினால், குற்றம்சாட்டப் பட்ட வர்தான் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டும். இந்த சட்டத்தையே கைவிட வேண்டும். மிகப்பெரிய ஊடகங்கள் எதிர்ப்பு குரல் எழுப்ப தயங்குகின்றன. 7, 8 ஆண்டுகளாக ஊடக சுதந்திரம் என் பதே இல்லை. கருத்துசுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரத்திற்கு எத்த கைய தியாகத்தையும் செய்யும் பாரம் பரியம் கொண்டது இந்திய ஊடகம். இந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் நீதி வழங்கும் என்று நம்புகிறோம். 

இத்தகைய அடக்குமுறைகளை பொதுச்சமூகம் ஓரிரு நாட்களில் மறந்து விடும் என்ற ஒன்றிய அரசின் கனவு நிறைவேறாது. ஒன்றிய அரசு  வழக்கை திரும்பப்பெற்று பத்திரிகையாளர்களை விடுதலை செய்ய வேண்டும்.” 

இவ்வாறு பத்திரிகையாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் உரையாற்றினர்.

பல தரப்பினரும் கண்டனம்!

பத்திரிகையாளர் அபிசார் ஷர்மா தனது எக்ஸ் பதிவில்,‘‘டில்லி காவல்துறை யினர் எனது வீட்டிற்கு வந்துள்ளனர். எனது மடிக்கணினி மற்றும் தொலைப் பேசியை அவர்கள் எடுத்துச் செல்கிறார் கள்" என்று தெரிவித்துள்ளார்.

 பத்திரிக்கையாளர் பாஷா சிங், ‘‘இந்த கைப்பேசியில் இருந்து எனது கடைசி ட்வீட் இது தான். டில்லி காவல்துறையினர் எனது போனை பறிமுதல் செய்துள்ளனர்," என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கான பத்திரிகை அமைப் பான ழிகீவிமி அமைப்பும், டில்லி காவல் துறையின் நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது.

 அதேபோல டில்லி பத்திரிகையாளர் சங்கமும் ‘நியூஸ்க்ளிக்' நிறுவனத்தின் நடக்கும் சோதனை குறித்தும், பத்திரிகை யாளர்களின் பொருட்கள் கைப்பற்றப்பட் டது குறித்தும் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது

நியூஸ்க்ளிக் செய்தி இணையதளத் துடன் தொடர்புடைய பத்திரிக்கையாளர் கள் வீடுகளில் டில்லி காவல்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

நியூஸ்க்ளிக் நிறுவனத்தில் காவல் துறை நடத்திய சோதனைக்கு எதிராக தனது கண்டனத்தை ‘இந்தியா' கூட்டணி பதிவு செய்திருந்தது.

அந்த கூட்டணியின் சார்பாக வெளி யிடப்பட்ட ஊடக அறிக்கையில், ஊடக நிறுவனத்தின் மீதான பாஜக அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறோம். இந்திய அரசமைப்பு உறுதி செய்துள்ள பத்திரிகை சுதந்திரத்திற்கும், பேச்சுரிமைக்கும் ஆதர வாக நாங்கள் இருப்போம் என குறிப் பிட்டிருந்தது.

 ‘‘கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாஜக அரசு பல்வேறு வழிகளில் ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது. உதாரணமாக பிபிசி, நியூஸ் லாண்டரி, டைனிக் பாஸ்கர், பாரத் சமாச் சார், காஷ்மீர்வாலா, தி வயர் உள்ளிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுத்துள் ளது.''

 ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா, "காந்தி ஜெயந்தி முடிந்தவுடனே இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது கெட்ட வாய்ப்பே! டில்லி காவல்துறையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஊடகங் கள் மீது நடவடிக்கை எடுக்க பயன் படுத்துகிறது'' என்று கூறியுள்ளார்.

ஜம்மு, காஷ்மீரின் மேனாள் முதல மைச்சர் மெகபூபா முஃப்தியும் இந்த நடவடிக்கைக்கு எதிராக தனது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

 ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா தான் என்று இந்திய அரசு அண்டை நாடுகளில் கூறுகிறது. ஆனால் மறுபுறம் மீதமிருக்கும் தன்னுரிமையுடைய ஊட கங்களின்மீது தனது அதிகாரத்தின் கீழ் செயல்படும் விசாரணை அமைப்புகள் மூலமாக அதிகாரத்தை செலுத்துகிறது.

 சட்டவிரோத கைது நடவடிக்கையும், பொய் வழக்குகள் பதிவு செய்வதும் தொடர் கதையாக இருப்பது கவலையளிக் கிறது என்று தனது எக்ஸ் சமூக ஊடக பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஒன்றிய அமைச்சரின் பேச்சும் - போக்கும்!

இந்த செய்தி இணையதளம் ஆகஸ்ட் மாதத்தில் கூட ஒரு பேசுபொருளானது. இந்த இணையதளத்தை மேற்கோள் காட்டி, ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர், ராகுல் காந்தியை குறிவைக்கத் தொடங்கினார்.

 அப்போது பேசிய அனுராக் தாக்கூர், "2021 ஆம் ஆண்டிலேயே,  நியூஸ்க்ளிக்  இணையதளம்  வெளிநாட்டவர்களின் ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டது. அதை அப்போதே நாங்கள் வெளிப்படுத் தினோம்'' என்று கூறியிருந்தார். மேலும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நியூஸ் க்ளிக் இணையதளத்துக்கு ஆதரவாக களமிறங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அமெரிக்க தொழில் அதிபரான நெவில் ராய் சிங்காம் மூலம் சீன நிறு வனங்கள் நியூஸ்க்ளிக்கிற்கு நிதியுதவி செய்கின்றன என்றும், ஆனால் அந்த நிறுவனத்தின் ஆதரவாளர்கள் இந்தியர் கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் அந்த செய்தி இணையதளத்திற்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டதாகவும் அனுராக் தாகூர் தெரிவித்திருந்தார்.

 முன்னதாக ஆகஸ்ட் 22 ஆம் தேதி, டில்லி காவல்துறையினரின் பொருளாதார குற்றப் பிரிவினர் நியூஸ்க்ளிக் இணைய தளத்துக்கு எதிராக நடவடிக்கை மேற் கொள்ளக்கூடாது என உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை அகற்றக் கோரி காவல்துறையினர் மனு அளித்ததைத் தொடர்ந்து நியூஸ்க்ளிக் இணையதளத் தின் தலைமைச் செய்தி ஆசிரியர் அதி காரி ப்ரபீர் பர்க்கயஸ்தாவுக்கு தாக்கீது அனுப்பப்பட்டது.

 அவரை காவல்துறையினர் கைது செய்யக்கூடாது என்றும், அவர் காவல் துறையினரின் விசாரணைக்கு முழுமை யாக ஒத்துழைக்கவேண்டும் என்றும் ஜுலை 7 ஆம் தேதி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுவெல்லாம் பழைய கதை. இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

 பி.பி.சி.மீதான ஒன்றிய அரசின் நடவடிக்கை

 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் கரசேவர்கள் எரிந்து கருகினர். இதனையடுத்து குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மிகப் பெரிய அளவில் வெடித்தது. இந்த குஜராத் மத மோதல்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

குஜராத் வன்முறையின் போது முதலமைச்சராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. அப்போது மாநில அமைச்சராக இருந்தவர் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா. குஜராத் மத வன்முறைகளின் போது காவல்துறையினரை செயல்படவிடாமல் தடுத்து இருந்தார் மோடி என்பது நீண்டகால குற்றச்சாட்டு. குஜராத் மத மோதல்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னமும் நடைபெற்றும்தான் வருகின்றன.

இந்நிலையில் பிபிசி ஊடகமானது, 2002 ஆம் ஆண்டு குஜராத் படுகொலைகள் தொடர்பாக 2 பாகங்களாக ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வெளி யிட்டது. இதிலும் பிரதமராக உள்ள மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது சர்ச்சையானது. இந்த ஆவணப் படத்துக்கு பாஜகவினர் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரத்தில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் இந்த ஆவணப்படத்தை பல மாநிலங் களில் வெளியிட்டு ஆதரவு தந்தன. இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் பிபிசி ஆவணப்படங்கள் வெளியிடப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டன. ஒன்றிய அரசு நேரடியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டது பெரும் சர்ச்சையானது.

அத்துடன் பிபிசியின் டில்லி, மும்பை அலுவல கங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி இருந்தனர். வெளிநாட்டு நிதி விவகாரங்கள் தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வைத் தொடர்ந்து தற்போது அமலாக்கப் பிரிவானது பிபிசி மீது வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு என வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு - கருத்துரிமைக்கு இடம் உண்டு என்று யாரேனும் கருதுவார்களேயானால், அதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

ஆர்ப்பாட்டத்தை வரவேற்கிறோம் - நானும் பங்கேற்கிறேன்!

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்டு)யின் சார்பில் வரும் 11 ஆம் தேதி மாலை சென்னை தங்கசாலையில் நடைபெறவிருக்கும் கருத்துரிமையை வலியுறுத்தும் வகையிலும், ஊடகங்களின் கருத்து உரிமைக்கு எதிராக செயல்படும் பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட் டத்தை வரவேற்கிறோம். நானும் பங்கேற்கிறேன். கழகத் தோழர்களும் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.10.2023


No comments:

Post a Comment