வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 13, 2023

வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, அக்.13 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக, அக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று விலகாத நிலையில், வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. 

இதுகுறித்து கேட்டபோது, சென்னை வானிலை ஆய்வு மய்ய அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக, ‘தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு பகுதியில் விலகி இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் கிழக்குத் திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வலுப்பெற்று இருக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் பரவலாக மழை பெய்திருக்க வேண்டும்’ என்பன போன்ற நிகழ்வுகள் அடிப்படையில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மய்யம் அறிவிக்கும். 

அக்டோபர் 13 முதல் 27-ஆம் தேதி வரையிலான நாட்களில் எப்போது பருவமழை தொடங்கினாலும் அது வழக்கமான நாளாகவே கருதப்படும். இன்னும் தென்மேற்கு பருவமழை விலகவில்லை. அதனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக, அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்திய வானிலை ஆய்வு மய்ய தரவுகளின்படி 1977ஆ-ம்ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு கால கட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே 1984ஆ-ம் ஆண்டு அக்.5ஆ-ம் தேதி தொடங்கியுள்ளது. 1988, 1992 மற்றும் 2000இ-ல் மிகவும் தாமதமாக நவ.2ஆ-ம் தேதி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் வழக்கமான நாளாக அக்டோபர் 18 நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சுமார் 10 நாட்கள் தாமதமாக தொடங்கும் என்று தெரிகிறது. 

இதற்கிடையே, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, பெரும்பாலான மாவட்டங்களில் வழக்கமான அளவிலேயே இருக்கும். சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் மழைப்பொழிவு வழக்கத்தைவிட சற்றுக் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (13.10.2023) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment