தமிழ்த்துறை -பச்சையப்பன் கல்லூரி ‘எமரால்டு' எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளைத் தொடக்க விழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 4, 2023

தமிழ்த்துறை -பச்சையப்பன் கல்லூரி ‘எமரால்டு' எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளைத் தொடக்க விழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரை

 அறிவால், அன்பால் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவுமே இல்லை!

எந்தப் பிள்ளையையும் ‘‘முட்டாள்'' என்று சொல்லாதீர்கள் - எல்லோருக்கும் அறிவு இருக்கிறது: தந்தை பெரியார்!

சென்னை, அக்.4 தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்பது இல்லவே இல்லை. அறிவால் தீர்க்க முடியாத பிரச்சினை, அன்பால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே கிடையாது. ஆசிரியர்கள், படிக்காத பிள்ளைகளை யெல்லாம் ஊக்கப்படுத்தவேண்டும்; பெரியார்தான் சொல்வார் - ஆசிரியர்களுக்கு அறிவுரை சொல்லும் பொழுது, ‘‘எந்தப் பிள்ளையையும் ‘‘முட்டாள்'' என்று சொல்லாதீர்கள்; எல்லோருக்கும் அறிவு இருக்கிறது’’ என்பார்  என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ்த்துறை -பச்சையப்பன் கல்லூரி  ‘எமரால்டு’ எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளைத் தொடக்க விழா

கடந்த 14.9.2023 அன்று காலை சென்னை  பச்சை யப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் ‘எமரால்டு' எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை தொடக்க விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் குறித்த பேருரையை ஆற்றினார்.

அவரது உரை வருமாறு:

இந்நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்திக்கின்ற பொழுது பெருத்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த அரங்கம், எனக்கோ அல்லது இந்த மேடையில் அமர்ந்திருக் கின்றவர்களுக்கோ புதிதல்ல.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் இந்த அரங்கத்திலே பலமுறை பேசியிருக்கிறார்கள்; அண்ணா அவர்கள் பேசியிருக்கிறார்கள். கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பேசியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டினுடைய பெருந்தலைவர்கள் பலர் உரையாற்றிய அரங்கம்!

இங்கேயே பேராசிரியராக இருந்து உங்களுக்கு என் றைக்கும் வழிகாட்டக் கூடியவராக இருந்த நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் பேசியிருக்கிறார்கள். இன்னும் தமிழ்நாட்டினுடைய பெருந்தலைவர்கள், கல்விக் கண்ணைத் திறந்த கல்வி வள்ளல் காமராஜர் போன்றவர்கள், இப்படி பலரும் இந்த அரங்கத்திலே பேசியிருக்கிறார்கள்.

இன்றைக்கு ஒரு சிறப்பு இந்த அரங்கத்திற்கு என்ன வென்று சொன்னால்,  நம்முடைய அருமையான தலைவர் நீதியரசர் அவர்கள், ஒரு தந்தை பிள்ளை களுக்கு எடுத்துச் சொல்வதைப்போல, ஒரு தாய், பாசத் தோடு தன் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்வதைப்போல, அதை ஆமோதிப்பதைப்போல நம்முடைய செயலாளர் அவர்கள் - இந்தப் பெருமைகளை இல்லை என்று ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று சொல் லக்கூடிய நிலையையெல்லாம் நினைவூட்டினார்கள்.

படிப்பதற்கு வசதியில்லாத நேரத்தில்கூட...

சிறந்த பழைய மாணவர் ஒருவர் - அந்த மாணவர் உயர்ந்தார் - படிப்பதற்கு வசதியில்லாத நேரத்தில்கூட, அதற்கு உதவியைப் பெற்று படிப்பைப் பெற்றார். அவர்தான் எம்.டி.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.

இன்றைக்கு அவருடைய பெயரால்தான் அறக்கட்ட ளையை உருவாக்குகிறோம் என்று சொன்னால், இங்கே வந்திருக்கின்ற பேராசிரியப் பெருமக்கள், மாணவச் செல்வங்களாக இருக்கின்ற அருமைத் தோழர்கள் - இவர்கள் எல்லோருமே தெரிந்துகொள்ளவேண்டிய செய்தியை குறிப்பாகச் சொல்லி, அடுத்த சில செய்திகளுக்கு நான் செல்லவிருக்கிறேன்.

முதலாவதாக, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த எம்.டி.கோபாலகிருஷ்ணன் அவர்களின் அன்புச்செல் வன் ஒளிவண்ணன் அவர்கள்.

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்எனும் சொல் (குறள் 70)

என்று சொல்லுவதைப்போல சிறப்பான வகையில் அவர்கள் அருமையாக, சுருக்கமாக எடுத்துச் சொன் னார்கள். ஓர் அறக்கட்டளை உருவாக்கினார்கள்.

ஒரு லட்சம் ரூபாய் குறைவான தொகை!

நம்முடைய அய்யா மேனாள் துணைவேந்தர், பொருளாதார நிபுணர் சண்முகசுந்தரம் அவர்கள் சொன்னார்கள், ஒரு லட்சம் ரூபாய் குறைவான தொகை என்று. நிச்சயமாக அதை ஏற்கவேண்டும். இந்த கருத்தை ஒளிவண்ணன் அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபொழுது எடுத்துச் சொன்னேன்.

காரணம், அதனால் பலன்  பெறப் போவது இந்தக் கல்லூரி. இந்தக் கல்லூரியினுடைய மாண வச் செல்வங்கள் பயன்படப் போகிறார்கள்.

தந்தை பெரியாரின் மாணாக்கரில் ஒருவர் 

அய்யா கோபாலகிருஷ்ணன்

ஆனால், ஒரு பழைய மாணவர், படிக்க வசதியில் லாமல் இருந்து, படித்து முன்னேறி, பலரையும் படிக்க வைக்கக்கூடிய பதிப்பகங்களை உருவாக்கி, அதில் பல கருத்துகளைச் சொல்லி, படிப்பறிவு இருந்தால் மட்டும் போதாது - பகுத்தறிவும் இருக்கவேண்டும் என்று சொல்லி, அதற்குச் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்து, தந்தை பெரியாரின் மாணாக்கரில் ஒருவராக நம்முடைய அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்கள் திகழ்கிறார்கள் என்று சொன்னால், அது ஒரு தனித்தன்மையானதாகும்.

நீங்கள் எல்லாம் கேள்விப்படாத ஒரு செய்தி - பேராசிரியர்களில்கூட சில பேருக்குத் தெரியாது. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு பன்னாட்டுப் புகழ் பெற்றவர். எப்படி என்று சொன்னால், நாங்கள் எதைப் பேசினாலும் ஆதாரங்கள் இல்லாமல் பேசமாட்டோம்.

இதோ என் கையில் இருக்கும் நூல் வி.எஸ்.நைபால் என்பவர்  நோபல் பரிசு பெற்றவர். அவர் நோபல் பரிசு பெறுவதற்கு முன், இந்தியாவிற்கு இரண்டு, மூன்று முறை வந்திருக்கிறார்.

‘‘India: A Million Mutinies Now’’

அவர் எழுதிய ஒரு புத்தகம்தான் இது - 35 ஆண்டு களுக்கு முன்பு வெளிவந்த புத்தகம். இந்தப் புத்தகத் தினுடைய தலைப்பு - ‘‘India: A Million Mutinies Now’’ - பத்தாயிரக்கணக்கில் கலகங்களில் இப்பொழுது இந்தியா - என்று ஆராய்ச்சி செய்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

இவர் டிரினிடாட்டில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர். பிறகு லண்டனில் குடியேறினார். அவருடைய ஆங்கில நடையும், ஆங்கில கருத்தும் சிறப்பானவை. ஏராளமான நூல்கள், நாவல்களை எழுதியிருக்கிறார். சென்னைக்கு மூன்று, நான்கு முறை வந்து, அவருடைய அனுபவங்களைப்பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்.

‘‘An Area of Darkness’’

நம்முடைய சென்னை உயர்நீதிமன்றத்திற்குமுன் இருக்கக்கூடிய கழிப்பறைகளைப்பற்றிக்கூட ‘‘An Area of Darkness’’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அவ்வளவு ஆழமான சிந்தனை உள்ளவர்.

அடுத்தபடியாக அவர் யாரைப் பார்த்தார் என்றால், பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கத்தை  எப்படி நடத்துகிறார்கள் என்பதை உணர்த்திடத்  தக்கவர்களைக் கண்டு உரையாடி - பெரியாரை எப்படியெல்லாம் வரு ணிக்க முடியுமோ, அப்படியெல்லாம் வருணித்திருக் கிறார்கள். 

அதற்குப் பிறகு அவருக்கு நோபல் பரிசு கிடைக்கிறது. பச்சையப்பன் கல்லூரியினுடைய மாணவராக இருந்து, ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்து எப்படி மாறினார்கள் மிகத் தெளிவாக என்பதை விளக்கமாக, நண்பர் கோபாலகிருஷ்ணன் அவர்களைப்பற்றி 4, 5 பக்கங்கள் அவர் எழுதிய புத்தகத்தில் இருக்கிறது என்றால்,  இதை விட பச்சையப்பன் கல்லூரிக்கு வேறு என்ன பெருமை வேண்டும்?

பச்சையப்பன் கல்லூரிக்கே நோபல் பரிசு கிடைத்த தாகத்தான் அர்த்தம்.

அதோடு, பச்சையப்பன் கல்லூரியினுடைய மாண வருக்கு, பெரியாருக்கு நோபல் பரிசு கிடைத்ததாகத்தான் அர்த்தம். பெரியாருடைய சீடர் - பெரியாருடைய கொள்கை என்று வரும்பொழுது, சுருக்கமாக ஒரு செய்தியைச் சொல்கிறேன்.

இங்கே நம்முடைய நீதியரசர் மிகவும் கவலையோடு சொன்னார். படிப்பதற்காகத்தானே கல்லூரி, பட்டம் வாங்குவதற்காகத்தானே கல்லூரி- அதற்காகத்தானே பெற்றோர்கள் கஷ்டப்பட்டு தம் பிள்ளைகளை  கல் லூரிக்கு அனுப்புகிறார்கள். அதைத்தானே பேராசிரியர்ப் பெருமக்கள், உங்களையெல்லாம் நல்ல மாணாக்கர்களாக அனுப்பவேண்டும் என்பதற்காகத் தானே பாடுபடு கிறார்கள்.

பச்சையப்பன் கல்லூரியின் படிக்கட்டுக்கே 

ஒரு வரலாறு உண்டு!

பச்சையப்பன் கல்லூரிக்கு வரும்பொழுது, படிக் கட்டை மிதித்து வரும்பொழுதே, மிகவும் உற்சாகத்தோடு வந்தேன். காரணம், பச்சையப்பன் கல்லூரியின் படிக்கட்டுக்கே ஒரு வரலாறு உண்டு.

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த கல்லூரியில் நீங்கள் படிக்கிறீர்கள்; ‘‘நான் படித்தேன். இந்தப் பெரு மைகள் வளர வேண்டாமா? இந்தப் பெருமைகள் நிரந்தரமாக வேண்டாமா? பெருமைகளுக்குமேல் பெருமைகளைச் சேர்க்க நாங்கள் தயார், தயார்'' என்று சொல்லக்கூடிய உணர்வுகளை நீங்கள் பெறவேண் டாமா? அதற்குத்தான் இந்த நிகழ்ச்சி.

வேடிக்கையல்ல - கேளிக்கையல்ல இந்த நிகழ்ச்சி.

வி.எஸ்.நைபால்

வி.எஸ்.நைபால் தாம் எழுதிய புத்தகத்தில் எழுதுகிறார்-

காஷ்மீரில் வசிக்கும் ஒருவரை சந்திக்கிறார். அவர் சென்னை திருவல்லிக்கேணியைச் சார்ந்தவர். உயர் ஜாதிக்காரர் என்ற இன்றைக்குக் கருதப்படுகின்ற ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர். என்றாலும், நட்பு ரீதியாக வந்தவுடன், எங்கெங்கே சென்று பார்க்கவேண்டுமோ, அங்கேயெல்லாம் அழைத்துப் போகிறார். 

அப்படி வருகிறபொழுது, இன்னொரு நண்பரை சதானந்தம் என்பவரின்மூலம் சந்தித்து, ‘‘பெரியாருக்குப் பிறகு, அந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் இருக்கிறார்களா? அந்தக் கொள்கையினால் என்ன பலன் அடைந்தார்கள் என்று தெரியவேண்டும்? அப்படி ஒருவரை காட்டுங்கள்'' என்று சொன்னவுடன்,

சதானந்தம் என்பவர் சொல்கிறார், ‘‘எமரால்டு கோபாலகிருஷ்ணன் என்பவர் ஒருவர் இருக்கிறார்'' என்று சொல்லத் தொடங்கியவுடன், 

வி.எஸ்.நைபால் அவர்கள், ‘‘நான் அவரை சந்தித்து விவரங்களைக் கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் வேறெ தையும் சொல்லவேண்டாம்'' என்று அவர் எழுதியப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அந்தப் புத்தகத்தில்,

‘‘Mr.Gopalakrishnan was the proprietor of Emerald Publishers, publishers of school textbooks and books about the rationalist movement. He told me this story.

My father was a very small business man. He was of the Mudaliar caste. We were lower middle-caste people. He kept a stall. He sold cigarettes, aerated water, little things like that.

‘I became a rationalist in the early 1940s, when I was ten or thereabouts. I was a student at the Sri Ramakrishna High School in Madras. It was a brahmin-dominated school. Even the peons and the watermen, four or five of them, were brahmins. We were only a few non-brahmins in each class. Every day we got sermons from some of our teachers that we were only fit for grazing cattle. We heard that from three teachers in particular. They thought that non-brahmins shouldn’t study, and the words they oft repeated were: “Go and graze the cattle.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘என் அப்பா ஒரு சிறு வியாபாரி. அவர் முதலியார்ஜாதியைச் சேர்ந்தவர். நாங்கள் கீழ் நடுத்தர ஜாதியினர். அவர் ஒரு கடை வைத் திருந்தார். அக்கடையில் சிகரெட், தண்ணீர் இது போன்ற சிறிய பொருள்களை விற்றார்.

1940 ஆம் ஆண்டு முற்பகுதியில், எனக்கு பத்து வயது. நான் சென்னையில் உள்ள சிறீ ராம கிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் மாணவனாக இருந்தேன். அது பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத் தும் பள்ளி. அப்பள்ளியில் பியூன்கள் மற்றும் தண் ணீர் பிடித்து வைப்பவர்களில்கூட, நான்கைந்து பேர் பார்ப்பனர்களே! ஒவ்வொரு வகுப்பிலும் பார்ப்பனரல்லாதோர் சிலர் மட்டுமே இருந்தோம். நாங்கள் மாடு மேய்ப்பதற்கு மட்டுமே தகுதியான வர்கள் என்று எங்கள் ஆசிரியர்களில் சிலர் சொல்வார்கள். குறிப்பாக மூன்று ஆசிரியர்கள் அதனைத் தொடர்ந்து சொல்வார்கள். பார்ப்பனர் அல்லாதவர்கள் படிக்கக் கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள், அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்: “போய் மாடு மேய்த்து வா'' என்றுதான்.

இதைத்தான் இங்கே உரையாற்றிய ஆண்டவர் மறைமுகமாகச் சொன்னபொழுது, இந்தக் கல்லூரி ஒரு காலத்தில் எப்படி இருந்தது என்பதுபற்றி அறிந்து கொள் ளலாம்.  இந்தக் கல்லூரியில், யார் அவரைத் தடுத்தார் களோ, அவர்களே, ‘‘அண்ணாதுரை வந்திருக்கிறார், இந்த நாட்டையே ஆள வந்திருக்கிறார்'' என்று மலைத் துக் கூறிய நிலையில், அவர் உருவாக்கிய ஆட்சியும், அதனுடைய தொடர்ச்சியும் இந்தியா முழுவதும் இன்றைக்குப் பேசக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.

தந்தை பெரியார் இயக்கமும், திராவிடர் இயக்கமும் இந்த நாட்டிற்குக் கொடுத்த அருட்கொடை!

பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர்கள் இன் றைக்கு உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நாளைக்கு சந்திராயனுக்கும் போகக்கூடிய அள விற்கு ஆற்றல் படைத்த மாணவர்கள் அவர்கள் என்பது பெருமைக்குரியது.

‘‘உனக்குப் படிப்பு வராது, உனக்குக் கணக்கு வராது - நீ உன் அப்பன் தொழிலைச் செய் - வெளுக்கப் போ, சிரைக்கப் போ'' என்றெல்லாம் சொல்லப்பட்ட ஒரு சமுதாயத்திலிருந்து, இன் றைக்கு ஆயிரம் அய்.ஏ.எஸ்.களும், அய்.பி.எஸ்.களும், ஆடிட்டர்களும் ஒடுக்கப்பட்ட சமுதாயத் திலிருந்து வந்திருக்கிறார்கள். இதுதான் தந்தை பெரியார் இயக்கமும், திராவிடர் இயக்கமும் இந்த நாட்டிற்குக் கொடுத்த அருட்கொடை. 

இவையெல்லாவற்றையும்விட, படியுங்கள், படியுங் கள் என்று சொல்லி எல்லாவற்றையும் கொண்டு வரலாம். ஆனால், அன்றைக்கு எல்லாவற்றுக்கும் மேலாக, இதுபோன்ற கல்லூரி இருக்கிறது பாருங்கள் - பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை இல்லையானால், இத்தனை பிள்ளைகள் இங்கே படித்திருக்க முடியுமா? 

ஓர் அண்ணா கிடைத்திருப்பாரா? ஒரு பெரிய வாய்ப் புக் கிடைத்திருக்குமா? இந்த நாட்டில் உள்ள ஏராள மானவர்கள் படிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்குமா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

மாணவச் செல்வங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதிலும் இந்தக் கல்லூரி யில்  வந்து உரையாற்றும்பொழுது அதிக மகிழ்ச்சியடை கிறேன்.

ஏனென்றால், பிரசிடென்சி காலேஜ் உள்ளேயே பார்ப்பனரல்லாதார் போக முடியாது. அதை மாற்றியது நீதிக்கட்சி. இந்த வரலாறு தெரியாது பலருக்கு. நாளைக்கு அங்கே போய் உரையாற்றவிருக்கிறேன்.

யாருக்குக் கதவு திறக்கவில்லையோ...!

முதலில் பச்சையப்பன் கல்லூரி - ஏனென்றால், யாருக்குக் கதவு திறந்து ஆள் வரவில்லையோ, அங்கே முதலில் வந்திருக்கிறேன். யாருக்குக் கதவு திறக்கவில் லையோ, அங்கே இரண்டாவது போகிறேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நன்றாக நீங்கள் எண் ணிப்பாருங்கள் தோழர்களே, இன்றைக்கு இருக்கின்ற ஆசிரியப் பெருமக்கள் இங்கே இருக்கிறார்கள். ஒன் றிரண்டு பிரச்சினைகள் இருக்கலாம்; அவையெல்லாம் தீர்ந்துவிடும், அதிலொன்றும் சந்தேகமேயில்லை. யாரும் தவறானவர்கள் கிடையாது. யாரும் திட்டமிட்டு வேலை செய்வதில்லை. சில சம்பவங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். அந்தப் புரிதல் சரியாகிவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்.

ஆகவே, தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்பது இல்லவே இல்லை. அறிவால் தீர்க்க முடியாத பிரச்சினை, அன்பால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே கிடையாது.

எந்தப் பிள்ளையையும் முட்டாள் என்று சொல்லாதீர்கள்; எல்லோருக்கும் அறிவு இருக்கிறது!

ஆகவே, ஆசிரியர்கள், படிக்காத பிள்ளைகளை யெல்லாம் ஊக்கப்படுத்தவேண்டும்; பெரியார்தான் சொல்வார் - ஆசிரியர்களுக்கு அறிவுரை சொல்லும் பொழுது, ‘‘எந்தப் பிள்ளையையும் முட்டாள் என்று சொல்லாதீர்கள்; எல்லோருக்கும் அறிவு இருக்கிறது'' என்பார்.

கல்வி என்ற வார்த்தைக்குத் தமிழில் அர்த்தம் என்ன தெரியுமா?

கல்வி என்றால் தள்ளுதல் - தோண்டுதல் - ஒவ் வொருவருக்கும் அறிவு இருக்கிறது - ஒவ்வொருவருக்கும் ஆற்றல் இருக்கிறது -  ஒவ்வொருவருக்கும் தகுதி இருக்கிறது - ஒவ்வொருவருக்கும் திறமை இருக்கிறது.

அவற்றை உள்ளே இருந்து வெளியே கொண்டு வருவதுதான் - தள்ளுதல் - உங்களுக்குள்ளே இருக்கின்ற திறமையை வெளியே கொண்டுவருவதுதான் ஆசிரியர் களின் பணி.

அப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பு இன்றைக்கு இருக்கிறது. அன்றைக்கு இருந்த ஆசிரியர்கள் - உயர்ஜாதி ஆசிரியர்கள் என்ன சொன்னார்கள்?

‘‘நீ படிப்பதற்கு லாயக்கு இல்லை; மாடு மேய்க்கப் போ'' என்று சொன்னார்கள்.

மாணவர்களே, உங்களை அரவணைக்கக் கூடிய ஆசிரியர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள்!

இன்றைக்கு அப்படி இல்லை. மாடு மேய்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளையெல்லாம் வகுப்புவாரி உரிமையின்படி உள்ளே அழைத்து வந்து, ‘‘இனிமேல் நீங்கள் மாடு மேய்க்கவேண்டாம்; உங்கள் கைகளில் பேனாவைப் பிடிக்கவேண்டும்; அய்.ஏ.எஸ்., அதிகாரி களாக, அய்.பி.எஸ். அதிகாரிகளாக வேண்டும்'' என்று சொல்லி, உங்களை அரவணைக்கக் கூடிய ஆசிரியர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள்.

உங்களை, மேலும் படியுங்கள், படியுங்கள் என்று சொல்லி, தட்டிக் கொடுத்து, உங்களுக்கு என்ன தெரிய வில்லை, எங்களிடம் வந்து கேளுங்கள், நாங்கள் உதவி செய்கிறோம். எங்களைத் தாண்டி இருக்கிறதா? அவற்றுக்கு எங்களுடைய தலைமை, பொறுப்பாளர்கள் உதவி செய்வார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டாமா, அருமை மாணவச் செல்வங்களே!

(தொடரும்)


No comments:

Post a Comment