ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 21, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: பிரதமர் மோடி அவர்கள் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக சிஏஜி  ரிப்போர்ட் ஆதாரத்துடன் வெளியிட்டபோதிலும், எதிர்க்கட்சிகளோ, ஊடகங்களோ அதுபற்றி வாய் திறக்காதது ஏன்?

- இரா.சு.மணி, காட்பாடி

பதில் 1: பிரதான எதிர்க்கட்சிகள் வாய் திறந்து மக்களுக்கு இந்த ஊழலைப் பற்றி விளக்குகிறார்கள். பா.ஜ.க.வின் “பி- டீம்” ஆன, தங்களைப் பெயரளவில் எதிர்க்கட்சி போல காட்டிக் கொள்பவர்கள்தான் வாய் திறப்பதில்லை.

ஊடகங்கள் - பெரு முதலாளிகளின் கருவிகள் என்பதால் ஆளுங் கட்சியை - பா.ஜ.க.வை - பிரதமர் மோடி அரசை அம்பலப்படுத்த அச்சப்படுகிறார்கள்!

தற்போதுள்ள ‘இந்தியா’ கூட்டணி இதைச் சிறப்பாக முன்னெடுத்துச் சொல்வார்கள் என்றே நம்புகிறோம்.

---

கேள்வி 2: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்திருந்தேன்; என்னுடைய அலைபேசியில் ‘‘தங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது; கள ஆய்விற்குப் பின் முடிவு செய்யப்படும்'' என்று குறுஞ்செய்தி வந்து ஒரு மாதமும் ஆயிற்று; அதற்குப் பின் எந்தவிதமான தகவலும் இல்லையே?

- பா.கண்மணி, சென்னை-14

பதில் 2: புகார்களைக் கவனிக்கும் பிரிவுக்கு நினைவூட்டி எழுதுங்கள் - உரிய பதில் கிடைக்கும்.

---

கேள்வி 3: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான சண்டையின் உள்நோக்கம் என்ன?

- கே.பழனி, திருத்தணி

பதில் 3: நாடற்ற யூதர்கள், பாலஸ்தீனத்தில் ஒண்ட வந்த பிறகு அதில் ஒரு பகுதியை ‘இஸ்ரேல்’ நாடு என்று பெற்ற நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தை ஒதுக்கி மேற்கு கரை - காசா பகுதியை மட்டும் அவர்கள் வசம் இருக்கச் செய்தனர். அமெரிக்கா போன்ற நாடுகள் அதற்கு ஒத்துழைப்புத் தந்தன. மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புத் தொடரவே ஹமாஸ் என்ற அந்த அமைப்பினர் தற்போது உரிமையை நிலைநாட்ட ஆக்கிரமிப்பு - அடக்குமுறையை எதிர்க்கின்றனர். அதன் விளைவே இந்த விரும் பத்தகாத போர். இந்திய அரசு - காங்கிரஸ் உள்ளிட்ட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி யில் ஒருசேர இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையில் தெளிவான நிலை. இப்போது நிலைமை தலைகீழானது என்றாலும் இரு தரப்பிலும் மனிதம் கொல்லப்படுவது என்பது வேதனை!

---

கேள்வி 4: விளையாட்டிலும் மதவாதப் பிரச்சினையை கிளப்பிவிடும் நபர்களைப்பற்றி தங்கள் கருத்தென்ன?

- செ.செல்வம், திருவண்ணாமலை

பதில் 4: மதவெறியை மாய்க்க வேண்டிய அவசியம் இப்போது புரிகிறதா?விருந்தினராக வந்துள்ள விளையாட்டு வீரர்களிடம் இப்படி வெறுப்பு அரசியலைத் தூவுதல் விரும்பத்தக்கதல்ல; வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

கிரிக்கெட்டுக்கும், இராமனுக்கும் என்ன சம்பந்தம்? பஜனை மடமா என்ன கிரிக்கெட் மைதானம்?

இதே மாதிரி பாகிஸ்தானில் நடந்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா? துடித்தெழுந்து கண்டனக்குரல் எழுப்ப மாட்டோமா? யோசியுங்கள்!

---

கேள்வி 5: அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் ‘‘இனிமேல் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை'' என்பதை சொல்லி வருகிறார்களே தவிர, பா.ஜ.க.விடமிருந்து எந்தவிதமான அறிகுறிகளும் வெளிப்படவில்லையே?

- க.வேலு, திருநெல்வேலி

பதில் 5: இன்னமும் செமி கோலனாக, அரைப் புள்ளியாகவே தென்படுகிறது. தேர்தல் வரட்டும் பிறகு முழுப் படம் வெளியாகும். பார்ப்போம். பிறகு முழுமையாக வரவேற்போம்!

---

கேள்வி 6: நாகப்பட்டினம் - இலங்கை இடையே விடப்பட்ட கப்பல் போக்குவரத்து சில நாள்களிலேயே ரத்து செய்யப்பட்டு இருக்கிறதே?

- மு.ஏழுமலை, திருவள்ளூர்

பதில் 6: பிரதமர் மோடி ஆட்சியில் பண மதிப்பிழப்பு, 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தல் - திரும்பவும் அதை பின்வாங்கிக் கொள்ளல் போன்ற “வளர்ச்சியில்” இதுவும் ஒரு தனி ரகம்!

---

கேள்வி 7:  நீண்ட நாள்களாக சிறையில் இருக்கும் கைதிகளை, உடல்நலம் குன்றிய கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ்நாடு ஆளுநரின் முட்டுக்கட்டை ஏன்?

- இரா.இராஜூ, கள்ளக்குறிச்சி

பதில் 7: மதவெறி - ஆர்.எஸ்.எஸ். பக்தி! - அதுதான்! மேலும் தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கவே! 

---

கேள்வி 8: ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு மோடியின் பா.ஜ.க. ஒன்றிய அரசு அஞ்சி அலறுவது ஏன்?

- கி..இராமலிங்கம், திருப்போரூர்

பதில் 8: வெளிப்படையாகத் தெரிகிறதே!

1. சமூக நீதியைப் பிறகு புறந்தள்ள முடியாது - நீதிமன்றங்களுக்கு வழக்குப் போனாலும்கூட- என்று புரிந்துகொண்டதாலும்!

2. ஆர்.எஸ்.எஸ். கொள்கையான உயர்ஜாதி நலப் பாதுகாப்பு வளையம், அதன் மூலம் உடையும் என்பதாலும் தான்!

---

கேள்வி 9: நூற்றாண்டு காணுகின்ற திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து அவர்களைப்பற்றி தங்களது நினைவுக் குறிப்புகளிலிருந்து ஏதேனும் கூற முடியுமா?

- ஆ.ஆதவன், மயிலாடுதுறை

பதில் 9: அய்யா தந்தை பெரியாரிடம் ஒரு செல்லப்பிள்ளை போல் வந்து அன்பு சொரிவதும், உரிமையுடன் சில மனக்குமுறல்களைக் கூறுவதும், அதற்குப் பிறகு அதே பாணியை அம்மாவிடம் (என்னிடமும் கூட சில நேரங்கள் கூறி) ஆற்றிக்கொண்டதும் பல!

---

கேள்வி 10: ‘‘பெரியார் திடல்தான் எங்களை வழிநடத்துகிறது'' என்று சொல்லியிருக்கிறாரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனால் இன எதிரிகள் எரிச்சலடையமாட்டார்களா?

- கே.பாண்டுரங்கன், பழனி

பதில் 10: நீங்கள் இன எதிரிகள் பற்றி நன்கு புரிந்துகொண்டுள்ளீர்கள். பலே, பலே! வாழ்த்துகள்! நன்றி!


No comments:

Post a Comment