தஞ்சை: இருபெரும் விழாக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான பிரகடனங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

தஞ்சை: இருபெரும் விழாக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான பிரகடனங்கள்!

 திராவிடர் கழகமும், தி.மு.க.வும் உடலும் உயிரும் போன்றவை!

அன்றைக்கும் சொன்னேன் - இன்றைக்கும் சொல்கிறேன்!

இன்றைக்கும் சரி, நாளைக்கும் சரி  எங்கள்  பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்!

‘மிசா'வில் எனக்குத் தைரியம் சொன்னவர் ஆசிரியர் அய்யா

இன்றைக்கும் கொள்கை வழிகாட்டுபவர் ஆசிரியரே!ஆசிரியர் அய்யா அழைத்தால் எங்கும் போவேன் - எப்பொழுதும் போவேன் - எந்த நேரத்திலும் போவேன்!





தஞ்சை, அக்.7 திராவிடர் கழகமும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றார் அறிஞர் அண்ணா. ஒரு நாணயத்தின் இரு பக்கம் என்றார் முத்தமிழ் அறிஞர் கலைஞர். உடலும், உயிரும் போன்றது என்பது நம் முடிவு என்று கூறிய தமிழ்நாடு முதலமைச்சர், இன்றும் சரி, நாளையும் சரி எங்கள் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடலே என்று பிரகடனப்படுத்தினார்.

கலைஞர் நூற்றாண்டு விழா - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா!

நேற்று (6.10.2023) மாலை தஞ்சையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்புரை யாற்றினார்.

அவரது ஏற்புரை வருமாறு:

நாங்கள் எல்லாம் உன் பக்கத்தில் இருக்கிறோம், நீ தொடர்ந்து உன் கடமையை ஆற்று என்று கட்டளையிட்டு...

அன்பு உள்ளம் திராவிடர் கழகத்தின் சார்பில், முத்தமிழறிஞர்  தலைவர் கலைஞருடைய நூற்றாண்டு விழாவும், அடியேன் இன்னும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். உன் கடமையை நீ தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். நாங்கள் எல்லாம் உன் பக்கத்தில் இருக்கி றோம், நீ தொடர்ந்து உன் கடமையை ஆற்று என்று கட்டளையிட்டு, அதற்காக ஒரு பாராட்டு விழா என்கிற பெயரில், மிகச் சிறப்பான நிகழ்ச்சியை நடத்திக் கொண் டிருக்கக் கூடிய திராவிடர் கழகத்தினுடைய தலைவர் ‘தகைசால் தமிழர்' அய்யா ஆசிரியர் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர், நாடாளுமன்றக் குழுவின் தலைவர் அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களே,

மாண்புமிகு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களே, சிவசங்கர் அவர்களே, மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர்கள் துரைசந்திர சேகரன் அவர்களே, கல்யாணசுந்தரம் அவர்களே, அண்ணாதுரை அவர்களே, 

நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம் அவர் களே, சட்டமன்ற, நாடாளுமன்ற மேனாள், இந்நாள் உறுப்பினர்களே, திராவிடர் கழகம், திராவிட முன் னேற்றக் கழகத்தைச் சார்ந்திருக்கக் கூடிய மாவட்டக் கழகத்தின் செயலாளர்கள், முன்னோடிகளே, செயல் வீரர்களே,

மிகச் சிறப்பான வகையில் உரையாற்றி, நமக்கெல் லாம் பெருமை சேர்த்திருக்கக்கூடிய சென்னை உயர்நீதிமன் றத்தின் மேனாள் நீதியரசர் திரு.அக்பர் அலி அவர்களே,

மேற்கு வங்க மாநில மேனாள் தலைமைச் செயலாளர் மதிப்பிற்குரிய பாலச்சந்திரன் அவர்களே,

தஞ்சை மாநகராட்சியின் மேயர் ராமநாதன் அவர்களே, துணை மேயர் அஞ்சுகம் பூபதி அவர்களே,

தொடக்கத்தில் வரவேற்று - அனைவரையும் வர வேற்று அமர்ந்திருக்கக் கூடிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய கவிஞர் 

கலி.பூங்குன்றன் அவர்களே,

சமூகநீதி கண்காணிப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் அண்ணன் சுப.வீ. அவர்களே, மரியாதைக்குரிய தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார் அவர்களே,

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் திரு.அறிவுக்கரசு அவர்களே, பொதுச்செயலாளர் திரு.அன்புராஜ் அவர்களே, நன்றியுரையாற்றிய வழக் குரைஞர் சி.அமர்சிங் அவர்களே,

இணைப்புரையாற்றிக் கொண்டிருக்கக் கூடிய திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

மற்றும் வருகை புரிந்துள்ள திராவிடர் கழகத்தின் நிர்வாகிகளே, வருகை தந்திருக்கக் கூடிய பெரியோர் களே, தாய்மார்களே,

என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புக்களே!

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

திராவிடர் கழகம்தான் 

தலைவர் கலைஞருக்குத் தாய்வீடு!

‘‘பாராட்டி போற்றி வந்த பழைமை லோகம்

ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்!''

என்று தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியிருந்தார்கள். அந்த உரிமைக்குரிய அத்தகைய பகுத்தறிவுப் பகலவனாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தந்தை பெரியாருடைய திராவிடர் கழகம்தான் தலைவர் கலை ஞருக்குத் தாய்வீடு என்ற வகையில் ஒரு புத்தகத்தை வெளியிடக் கூடிய நிகழ்ச்சி இங்கே ஏற்பாடு செய்யப் பட்டு இருக்கிறது.

எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய்வீடு!

தலைவர் கலைஞருக்குத் தாய் வீடு - இது மிகமிக பொருத்தமான தலைப்பு. 

தலைவர் கலைஞருக்கு மட்டுமல்ல, எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய்வீடு!

‘‘தாய்வீட்டில் கலைஞர்'' என்ற நூலை வெளியிடுவதற்காக அல்ல - நானும் என் வீட்டிற்குச் செல்கிறேன் என்கிற உணர்வோடுதான் இந்த மேடைக்கு வந்திருக்கின்றேன்.

முழுத் தகுதியும், கடமையும் 

திராவிடர் கழகத்திற்கு உண்டு!

கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்தக்கூடிய முழுத் தகுதியும், கடமையும் தி.க.வுக்கு உண்டு.

திராவிட முன்னேற்றக் கழகம் உதயமாவதற்கு முன்பே, சுயமரியாதை இயக்கத்தினுடைய வீரனாக, திராவிடர் இயக்கத்தினுடைய தீரராக இருந்தவர்தான் தலைவர் கலைஞர் அவர்கள்.

இன்னும் சொன்னால், அண்ணாவை சந்திப்பதற்கு முன்னாலேயே, தந்தை பெரியாரை சந்தித்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

1937 ஆம் ஆண்டு திருவாரூர் கமலாலயம் குளக் கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரி யாருடைய உரையை முதன்முதலாகக் கேட்டதாகவும், அன்றைய தினம் ஆரஞ்சு நிற சால்வையை அணிந்து கொண்டு, பளபளவென பெரியார் அவர்கள் காட்சி யளித்தார். பளபளவென மின்னினார் என்று கலைஞர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்பொழுது, இறுதியாண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதாமல், தந்தை பெரியாருடைய சுற்றுப்பயணப் பேச்சைக் கேட்கப் போனதால், தேர்வில் தோற்றுப் போனவர் கலைஞர் அவர்கள்.

ஈரோடு குருகுலத்தின் சார்பில் இந்த நூற்றாண்டு விழா நடப்பது மிகமிக மிகப் பொருத்தம்!

‘‘நான் பள்ளிப் பாடத்தில் தோற்றேன். ஆனால், பெரியாரின் பள்ளிக்கூடத்தில் வெற்றி பெற்றுவிட்டேன்'' என்று தலைவர் கலைஞர் அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டார்.

‘‘நான் படித்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளிக் கூடம்; காஞ்சி கல்லூரி மட்டும்தான்'' என்று பத்து பல்கலைக் கழகங்களில் படித்ததுபோல பெருமைப்பட்டுக் கொண் டார் தலைவர் கலைஞர் அவர்கள்.

அதனால்தான் அவர் படித்த பள்ளிக் கூடத்தின் சார்பில், ஈரோடு குருகுலத்தின் சார்பில் இந்த நூற்றாண்டு விழா நடப்பது மிகமிக மிகப் பொருத்தம் என்று நான் கருதுகிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, சிலர் குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தார்கள். அப்பொழுது முதலமைச்சர் பொறுப்பு வேண்டாம் என்று மறுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

கலைஞர் அவர்களை முதலமைச்சர் ஆக்கியதே 

தந்தை பெரியார் அவர்கள்தான்!

‘‘ஆனால், நீங்கள்தான் முதலமைச்சராக வர வேண்டும்; அப்பொழுதுதான் இயக்கம் காப்பாற்றப் படும்; தமிழினம் காப்பாற்றப்படும்; தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள்'' என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

தந்தை பெரியாரின் தூதுவராக மானமிகு ஆசிரியர் அவர்கள்தான் கலைஞரை வந்து சந்தித்தார்.

அந்த வகையில், கலைஞர் அவர்களை முதலமைச்சர் ஆக்கியதே தந்தை பெரியார் அவர் கள்தான்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு சென்னையில் முதன்முதலில் சிலை அமைத்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள். இன்றைய தினம் கலைஞர் அவர்களுக்கு மிகப் பிரம்மாண்டமாக நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருப்பது, அதிலும் குறிப்பாக ‘‘தாய்வீட்டில் கலைஞர்'' என்ற களஞ்சியத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார், நம்முடைய மானமிகு ஆசிரியர் அவர்கள்.

‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்!''

திராவிடர் கழகத்தில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், மானமிகு ஆசிரியர் என்று சொன் னால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - இந்த அடியேன் என மூன்று சகாப்தங்களாக இணைந்து பணியாற்றுகிறோம்.

கருப்பும்  - சிவப்பும் இணைந்ததே திராவிட இயக்கம் என்பதைப் போல, இணைந்தே இருக்கிறோம் - இணைந்தே இருப்போம்.

50 ஆண்டுகாலம் ஓர் இயக்கத்தினுடைய தலைவராக இருந்தவர் கலைஞர். 5 முறை இந்த மாநிலத்தினுடைய முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் அவர்கள்.

அவருடைய கண் அசைவிலே இந்தியப் பிரதமர் களையும், குடியரசுத் தலைவர்களையும் உருவாக்கியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

ஆனால், உங்களை இந்த நாடு எப்படி அடையாளம் காணவேண்டும் என்று கேட்ட நேரத்தில், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்'' என்று அவர் கூறிய அந்த வரியில்தான் தலைவர் கலைஞர் அவர்களுடைய 95 ஆண்டுகால வாழ்க்கை அடங்கியிருக்கிறது.

‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்'' என்ற கலைஞர் அவர்கள், ‘குடிஅரசு' இதழிலே எழுதியதையும், பெரியார் மேடைகளில் பேசியதையும் என தொகுத்து மிகப்பெரிய களஞ்சியமாக ‘‘தாய்வீட்டில் கலைஞர்'' நூலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

‘‘நெஞ்சிக்கு நீதியின்’’ ஏழாவது பாகம் ‘‘தாய்வீட்டில் கலைஞர்!''

‘‘நெஞ்சிக்கு நீதியில்'' ஆறு பாகங்களை தலைவர் கலைஞர் அவர்கள் நமக்காக எழுதித் தந்தார்கள். ‘‘தாய்வீட்டில் கலைஞர்'' என்ற நூல், 6 பாகத்தையும் தாண்டி, இப்பொழுது ஏழாவது பாகமாக இந்த நூல் வந்திருக்கிறது - அதுதான் பொருத்தமாக இருக்கும்.

‘குடிஅரசு' இதழின் துணை ஆசிரியராக இருந்து 40 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து, அன்னை மணியம்மையார் கையாலே ஓராண்டு காலம் சாப்பிட்டு, தன்னுடைய ரத்தத்தைத் தொட்டு திராவிடர் கழகத்துக் கொடியை உருவாக்கியது, புதுவையில் கலைஞர் தாக்கப்பட்ட நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஓடோடிச் சென்று, மடியில் படுக்க வைத்து காயத்திற்கு மருந்து போட்டது, என்னுடைய அண்ணன் மு.க.முத்து பிறந்தபொழுது, குழந்தையை பெரியார் கையிலே கொடுத்து அழகு பார்த்தது; என் அண்ணன் அழகிரி  அவர்கள் திருமணம் நடைபெற்றபொழுது அந்தத் திருமணத்திற்கு வந்த அவர் வாழ்த்தியது - இப்படி எத்தனையோ காட்சிகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

நான்தான் பெரியாருக்கு உணவுப் பரிமாறினேன்!

அதிலும் குறிப்பாக அண்ணன் அழகிரியினுடைய திருமணம் பெரியார் திடலில்தான் நடந்தது. திருமணம் முடிந்து, தந்தை பெரியார் அவர்களுக்கு கோபாலபுரத்தில் விருந்து. அந்த விருந்து நேரத்தில், நான்தான் பெரியாருக்கு உணவுப் பரிமாறினேன் - அதை இப் பொழுது நான் நினைத்துப் பார்க்கிறேன்.

தமிழர்தம் இல்லமெல்லாம், உள்ளமெல்லாம் இருக்க வேண்டிய நூல். இதனை உருவாக்கி இருக்கக்கூடிய ஆசிரியர் அவர்களை நான் உள்ளபடியே நன்றியால், பாராட்டுகிறேன் என்று சொல்லக்கூடாது; வணங்கு கிறேன், வணங்குகிறேன்.

உலகில் உள்ள வேறு எந்த இயக்கத்திற்கும் இருந்திருக்க முடியாது!

இந்த இரண்டு இயக்கங்களுக்குள்ளும் இருக்கக் கூடிய நட்பும், உறவும் உலகில் உள்ள வேறு எந்த இயக்கத்திற்கும் இருந்திருக்க முடியாது; யாராலும் அடையாளம் காட்டிட முடியாது.

முரண்பட்டு மோதல் நடத்திய காலங்கள் இருந்தது; மறுக்கவில்லை. யானை தனது குட்டியைப் பழக்கும் பொழுது மிதிக்கும், அடிக்கும் என்பதைப்போல, பெரியார் எங்களைத் திட்டித் திட்டிப் பழக்கினார் என்று கலைஞர் அவர்களே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

தந்தை பெரியார்மீது, தலைவர் கலைஞர் வைத் திருந்த மரியாதை என்பது உணர்வுப்பூர்வமானது. அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம், இந்த மேடையில்கூட அந்தக் காட்சிப்படுத்திக் காட்டினார்கள்.

இதைவிடப் பெருமை எனக்கு எதுவும் 

இருக்க முடியாது என்றார் கலைஞர்!

பெரியார் அவர்கள் மறைந்தபொழுது, அவருக்கு அரசு மரியாதை தரவேண்டும் என்று முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்த முடிவு.

‘‘பெரியாருக்கு அரசு மரியாதை வழங்கவேண்டும்'' என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சொல்கிறார்.

‘‘அவர் எந்த  அரசுப் பதவியிலும் இல்லையே'' என்று மூத்த அதிகாரி, முதலமைச்சராக இருக்கக்கூடிய கலைஞரிடத்தில் சொல்லுகிறார்.

உடனே முதலமைச்சராக இருக்கக்கூடிய கலைஞர் கேட்கிறார், ‘‘காந்திக்கு அரசு மரியாதை கொடுத்தார்களே, அவர் எந்த அரசுப் பதவியில் இருந்தார்'' என்று டக் கென்று கேட்கிறார்.

அதன்பிறகும் அந்த அதிகாரி விடவில்லை. ‘‘மாநில அரசு இப்படி முடிவெடுத்தால், மத்திய அரசினுடைய கோபத்திற்கு ஆளாகவேண்டும்'' என்று அந்த அதிகாரி சொல்லுகிறார்.

‘‘கோபப்படுவார்கள்!'' என்கிறார்.

‘‘கோபப்பட்டால் என்ன செய்வார்கள்?'' கலைஞர் திருப்பிக் கேட்கிறார்.

‘‘ஆட்சியைக்கூட கலைக்கலாம்'' என்கிறார் அந்த அதிகாரி.

‘‘ஆட்சியைக் கலைக்க இதுதான் காரணமாக இருக்குமானால், இதைவிடப் பெருமை எனக்கு எதுவும் இருக்க முடியாது'' என்று கலைஞர் சொல்கிறார்.

அறிவாலயத்தில் நடந்த உரையாடல் அல்ல இது; கோட்டையில் நடந்த உரையாடல்.

தந்தை பெரியார் என்ற கொள்கைக் கோட்டையின் தலைமகன் கலைஞர்!

தமிழ்நாடு அரசினுடைய கோட்டையிலே முதல மைச்சராக கலைஞர் அவர்கள் இருந்தாலும், தந்தை பெரியார் என்ற கொள்கைக் கோட்டையிலே தலை மகனாக இருந்தார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

‘‘ஆட்சியோ, தந்தை பெரியாருக்குக் காணிக்கை'' என்றார்  அண்ணா.

‘‘தமிழ்நாடு அரசுதான் பெரியார்; பெரியார்தான் தமிழ்நாடு அரசு'' என்று சொன்னார் தலைவர் கலைஞர்.

நானும், அதையே உங்கள் அனைவரின் சார்பில் வழிமொழிகிறேன்.

உங்களுடைய பலத்த கரவொலிக்கிடையே மீண்டும் அதை நான் வழிமொழிகிறேன்.

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறக் கூடிய மாநிலமாக, தன்னிறைவு பெற்ற மாநிலமாக மலரவேண்டும்; உயரவேண்டும். 

இந்திய ஒன்றிய அரசின் ஆட்சிக் கருத்தியலாக, கூட்டாட்சி கருத்தியல் மலரவேண்டும்.

அரசியல் கூட்டணியல்ல - கொள்கைக் கூட்டணி!

அனைத்துத் தேசிய இனங்களும் உரிமைப் பெற்ற வையாக,  அனைத்து மாநில மொழிகளும் ஒன்றிய ஆட்சி மொழியாக உயர்ந்து நிற்கவேண்டும்.

அனைவர் குரலுக்கும் ஒரே மரியாதை, மதிப்பும் இருக்கவேண்டும். இதுதான் இந்திய ஒன்றியமும், அதன் உள்ளடங்கிய தமிழ்நாடும் இயங்கவேண்டிய முறை.

அத்தகைய கூட்டாட்சி கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே, ‘இந்தியா' கூட் டணியை அமைத்திருக்கிறோம். இது அரசியல் கூட் டணியல்ல - கொள்கைக் கூட்டணி!

தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு இதனை நாங்கள் உருவாக்கவில்லை. அந்த வெற்றிக்குப் பின்னால், அமையப் போகும் ஆட்சியில், கோலோச்ச வேண்டிய கொள்கையை மனதில் வைத்தே நாங்கள் செயல்படுகிறோம்.

இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும்; மீட்கப்பட்டே தீரவேண்டும்!

தமிழ்நாடு இதுவரைக்கும் இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும்; மீட்கப்பட்டே தீரவேண்டும்.

கல்வி உரிமை, 

நிதி உரிமை, 

சமூகநீதி உரிமை, 

மொழி உரிமை, 

இன உரிமை, 

மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம்!

தமிழ்நாட்டு நாடாளுமன்ற, மக்களாட்சி உரிமை களுக்குக் கேடு விளைவிக்கப் பார்க்கிறார்கள்.

நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்க சதிச் செயல்!

மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்றத் தொகுதியினுடைய எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச் செயலை அவர்கள் அரங்கேற்றப் பார்க்கிறார்கள்.

குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாக செயல் படுத்தியதற்காக, தமிழ்நாட்டிற்குத் தண்டனையாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள்.

39 எம்.பி.,க்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்கள் என்று சொன்னால், நம்முடைய உரிமையை எடுத்துச் சொல்ல, உரிமையை நிலைநாட்டச் செல்கிறார்கள் என்று பொருள்.

இந்த எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்று சொன்னால், அது பொருத்தம். ஆனால், அது குறையக் கூடாது.

மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. முழு ஈடுபாட்டோடு அதனை கொண்டு வந்திருக்கிறதா?

அதேபோல, மகளிருக்கான இட ஒதுக்கீடு 33 சத விகிதம் அறிவித்தார்கள் - ஆனால்,  அறிவித்த அள விற்கு, பா.ஜ.க. முழு ஈடுபாட்டோடு அதனைக் கொண்டு வந்திருக்கிறதா?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்ததற்குப் பிறகே, தொகுதி வரையறை முடிந்ததற்குப் பிறகே செய்வோம் என்பதே - அதை நிறைவேற்றாமல் இருப்பதற்கான தந்திரம்.

அதிலும் குறிப்பாக இதர  பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மகளிர் இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது, பா.ஜ.க.வினுடைய - உயர் வகுப்பினருடைய மனோ பாவம்!

காலப் போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டையும் காலி செய்யக்கூடிய ஆபத்து இதில் இருக்கிறது.

பெரியாரின் கொள்கைக் கோட்பாடுகளைப் பரப்பிடும் பணியைத் தொண்டர்கள் தொய்வின்றித் தொடரவேண்டும்!

மக்கள் மன்றத்தில் திராவிடர் கழகத் தோழர்கள், திராவிட இயக்கத்தினுடைய தோழர்கள், பெரியாரின் தொண்டர்கள் கொள்கைக் கோட்பாடுகளைப் பரப்பிடும் பணியைத் தொய்வின்றித் தொடரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

‘‘வீரமணி வென்றிடுக!'' என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள். அதையும் நான் வழிமொழிகிறேன்.

அய்யா ஆசிரியர் அவர்களே, ‘‘ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சொன்னால், உங்களுக்குக் கோபம் வந்துவிடும். அவருக்குப் பிடிக்காது.

பெரியாரையும், கலைஞரையும் கடந்து நீங்கள் வாழவேண்டும்!

இருந்தாலும் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. ஓய்வெடுத்துப் பணியாற்றுங்கள் - பெரியா ரையும், கலைஞரையும் கடந்து நீங்கள் வாழவேண்டும்.

‘‘பெரியாரின் ஆட்சிக்கு நாங்கள் காரணகர்த்தாக்கள்!

பெரியாரின் மாட்சிக்கு வீரமணிதான் காரணம்'' என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்.

பெரியாரின் மாட்சி இன்னும் பரவ, நீண்ட காலம் நீங்கள் வாழவேண்டும், வாழவேண்டும்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்புரையாற்றினார்.

என்னைக் காத்தவர் - இன்றைக்கும் 
காத்துக் கொண்டிருக்கக் கூடியவர் ஆசிரியர்


அதிலும் குறிப்பாக திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் அழைத்தால், எங்கும் போவேன் - எப்பொழுதும் போவேன் - எந்த நேரத்திலும் போவேன்! காரணம், என்னைக் காத்தவர் - இன்றைக்கும் காத்துக் கொண்டிருக்கக் கூடியவர்.
அதிலும் குறிப்பாக ‘மிசா' காலத்திலே, சிறைச்சாலை இருட்டறையில் எனக்குத் தைரியம் கொடுத்தவர்தான் அய்யா ஆசிரியர் அவர்கள்.
‘‘தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இல்லாத நேரத்தில்,  எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் வீரமணி'' என்று தலைவர் குறிப்பிட்டார்.
என்னைப் பொறுத்தவரையில், இவர்களோடு, தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாத நேரத்தில், கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் அய்யா ஆசிரியர் அவர்கள்தான் எனக்கு.
அதனால்தான், நான் போகவேண்டிய பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டு இருக்கிறேன்.
இதைத்தான் நேற்றும் சொன்னேன் - இன்றைக்கும் சொல்கிறேன் - நாளைக்கும் சொல்வேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய நேரத்தில், அறிஞர் அண்ணா அவர்கள் குறிப் பிட்டார்கள், ‘‘திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல; அதே கொள்கையை வேறொரு பாணியில் சொல்வதற்காகத்தான் - அந்தக் கொள்கையை செயல் படுத்திக் காட்டுவதற்காகத்தான்'' என்று அறிஞர் அண்ணா அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
‘‘தி.க.வும், தி.மு.க.வும் 
உயிரும், உணர்வும்போல!’’
‘‘தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக் கிகள்'' என்று அறிஞர் அண்ணா சொன்னார்.
‘‘தி.க.வும், தி.மு.க.வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்'' என்று கலைஞர் சொன்னார்.
என்னைப் பொறுத்தவரையில், ‘‘தி.க.வும், தி.மு.க. வும் உயிரும், உணர்வும்போல.''
உயிரும், உணர்வும் இணைந்து உடல் இயங்கு வதைப்போல, நாம் இந்த இனத்தின் உயர்வுக்காகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

சமூகநீதியைக் காக்க என்னுடைய வாழ்க்கையை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன்!
தமிழ் மொழி காக்க, 
தமிழினம் காக்க, 
தமிழ்நாட்டை காக்க, 
இந்தியா முழுவதும் சமதர்மம், சமத்துவம், சகோ தரத்துவம், சமூகநீதியைக் காக்க என்னுடைய வாழ்க் கையை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன் என்பதுதான், எனக்குத் திராவிடர் கழகம் நடத்தி யிருக்கக் கூடிய இந்தப் பாராட்டு விழாவில், நான் எடுத்துக்கொள்ளக்கூடிய உறுதிமொழி.
நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்று சொல்வதற்காகத்தான் இந்தப்  பாராட்டு விழா!
ஏதோ சாதித்துவிட்டான், நினைத்ததை முடித்து விட்டான் என்பதற்காக நடத்துகிற விழா அல்ல - இன்னும் நீ சாதிக்கவேண்டியது நிறைய இருக்கிறது - அதை சாதிப்பதற்கு நீ தயாராக இருக்கவேண்டும். நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் இந்தப் பாராட்டு விழா நடந்து கொண்டிருக்கிறது.
எனக்குக் கிடைத்திருக்கக் கூடிய இந்த வாய்ப்பை நான் மிகச் சரியாகப் பயன்படுத்துவேன்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழர் தலைவர் கலைஞர் ஆகியோருடைய கொள்கைக் கோட்பாடுகளை சட்டமன்றத்திலும், நாடாளுமன் றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிப்போம்!

No comments:

Post a Comment