சென்னையில் குற்றச் செயல்கள் நடைபெறும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ரோந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 17, 2023

சென்னையில் குற்றச் செயல்கள் நடைபெறும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ரோந்து

சென்னை, அக் 17 குற்றச்செயல்களை முன் கூட்டியே தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவை அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ரோந்து செல்ல காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, ரோந்து பணி தொடங்கி உள்ளது. 

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட அனைத்து வகையான குற்றங்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் பல்வேறு தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக குற்றம் அதிகம் நடைபெறும் இடங்கள், குற்றங்களின் எண்ணிக்கை, அதற்கான காரணம் என்ன என ஆய்வு செய்யப்படுகிறது. பின்னர், அதை அடிப் படையாக வைத்து அப்பகுதியில் காவல் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி அதிகரிக்கப்படுகிறது. அதோடு மட்டும் அல்லாமல் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் அதிகளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு காவல்துறையினர் கண்காணிக்கின்றனர்.

கேலி, கிண்டல்: இது ஒருபுறம் இருக்க அடி தடி, மோதல், குடிபோதையில் தகராறு, பொதுமக்கள் - பெண்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் அமர்ந்து கொண்டு இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்வது உள்ளிட்ட பல்வேறு வகையாக பொதுமக்கள் அனுபவிக்கும் இடையூறுகள் காவல் நிலையங் களுக்கு பெரிய அளவில் புகாராகச் செல்வது இல்லை. இந்த வகை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இது சாதகமாகி விடுகிறது.

மேலும், மக்கள் நடமாட்டம் குறைவான பகுதி வழியாகச் செல்வோரின் உயிருக்கும், உடைமைக்கும் அவ்வப்போது ஆபத்தும் ஏற்படுகிறது. இதைத் தடுக்கச் செல்லும் காவலர்கள் சமூக விரோதிகளால் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர். இவற்றை எல் லாம் தடுக்கும் வகையில், குற்றம் அதிகம் நடை பெறும் இடங்களைக் கண்டறிந்து, மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும் வகையில் காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தி ரோந்து செல்ல வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதையடுத்து காவல் கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), ஆஸ்ரா கர்க் (வடக்கு) ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் காவலர்கள் துப்பாக்கி ஏந்தி ரோந்து செல்கின்றனர். குறிப்பாக அடையாறு காவல் மாவட்டத்தில் துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் தலைமையில் காவலர்கள் ரோந்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment