பழைய கோட்டையில் உதித்த புதிய விடிவெள்ளிக்கு ஒரு நூற்றாண்டு விழா - வாரீர்! - கவிஞர் கலி. பூங்குன்றன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 13, 2023

பழைய கோட்டையில் உதித்த புதிய விடிவெள்ளிக்கு ஒரு நூற்றாண்டு விழா - வாரீர்! - கவிஞர் கலி. பூங்குன்றன்

"மூன்று ஆண்டுகளாகத்தான் திராவிடர் கழகத்தில் பங்கு கொண்டார் என்றாலும், அவர் தனது 20ஆம் ஆண்டிற்கு முன்பே திராவிடத் தொண்டராகி விட்டார் என்று கூறலாம். அம்மூன்றாண்டுகளில் அவர் திராவிட மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும், வீட்டுப் பேச்சில் கலந்து பேசும்படியான அளவுக்கு வியாபகம் பெற்று விட்டார் - திராவிடச் செல்வர்களுக்கு வெட்கமும், சங்கடமும் பொறாமையும் ஏற்படும்படியான அளவுக்கு அவ்வியாபகம் உச்சம் பெற்றிருந்ததென்றே சொல் லலாம் - ஏனெனில் அர்ச்சுனன் ஒரு இலட்சம் ஏக்கர்  நிலமுடையவர் மாத்திரம் என்பதல்லாமல், பல ஆயிரக் கணக்கான கால்நடைகளைக் கொண்டவர் என்பது மாத்திரமல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்களைத் தனது பண்ணை ஆட்களாகக் கொண்டிருந்தார் என்பது மாத்திரமல்லாமல் கொங்கு நாட்டு வேளாள சமுதாயத்திற்கு 'எஜமாங்களே', 'எஜமாங்களே' என்று அழைக்கும் படியான சமுதாயத் தலைமை ஸ்தான முடி சூட்டப் பெற்ற மன்னராயும் விளங்கினார். இப்படிப்பட்ட ஒரு இளவல் மாணிக்கம் தனது தலைமையைத் துறந்து சாதாரண தன்மையில் இருந்து கொண்டு, பாமர மக்கள் இடையில் கலந்து தொண்டாற்றுவதையும் அதனால் அவர் பொது மக்களால் பாராட்டிப் புகழப்படுவதையும் காணும் பெரும் பண்ணைகளும், ஜமீன் மிட்டாக் களுடம், தங்கள் தன்மைக்கு மதிப்பில்லாமல் போவ தால் சங்கடப்பட வேண்டியதும், மக்கள் இலட்சியம் செய்யாததால் வெட்கப்பட வேண்டியதும், தம்மிலும் உயர் புகழ் அவருக்கு ஏற்பட்டு விட்டதால், பொறா மைப்பட வேண்டியதுமாக ஆகி விட்டார்கள் என்று குறிப்பிட்டோம்" என்று 23 வயதிலேயே (குடிஅரசு தலையங்கம் 19.10.1946) மரணத்தை முத்தமிட்ட ஒரு மாவீரர்பற்றி (14.10.1923 - 12.10.1946) இந்த மண்ணை மணந்த மணாளராம் தந்தை பெரியார் இவ்வளவுக் கொட்டியிருக்கிறார் என்றால், அது சாதாரணமா? எப்படி எல்லாம் எடை போட்டு வைத்திருந்தால், தந்தை பெரியாரின் பேனா முனை இப்படி கரை உடைத்த வெள்ளமாகப் பாய்ந்திருக்கும்.

பழைய கோட்டை அர்ச்சுனன் மரணித்தார் என்ற தகவல் கேட்டவுடன் பதறி அடித்து ஓடியிருக்கிறார் தந்தை பெரியார். 

எவ்வளவோ தந்தை பெரியார் எதிர்பார்த்திருந்த ஏ.டி. பன்னீர்செல்வம் 52 வயதில் விமான விபத்தில் உயிர் துறந்த போது, தந்தை பெரியாரின் ஒவ்வொரு அணுவும் துடிக்கத் துடிக்க எழுதினார் "காலஞ் சென்ற பன்னீர்செல்வமே!" என்று கதறினார்.

ஒருவரின் இழப்பை எடை போடுவது எந்தத் தராசில்? அவரால் மக்கள் பெறும் நலனின் கனத்தைப் பொறுத்தே! இதுதான் தந்தை பெரியாரின் கணிக்கும் திறன்!

அந்தப் பட்டியலில் வரக் கூடியவர்தான் பழைய கோட்டை இணைய பட்டக்காரர் என். அர்ச்சுனன்.

மூன்று ஆண்டுகள் தான் கருப்புச் சட்டைக்காரராக இருந்து பணியாற்றி இருக்கிறார். அந்த மூவாண்டிலும் பரக்கப் பரக்க, பறந்து பறந்து அவர் ஆற்றிய இயக்கப் பணி இருக்கிறதே - அப்பப்பா -  அவ்வளவுப் பெரிது - வியக்க வைக்கக் கூடியது.

அவர் கலந்து கொள்ளாத மாநாடு இல்லை, பொதுக் கூட்டம் இல்லை, அமைப்புக் கூட்டம் இல்லை - இல்லை - அறவேயில்லை!

திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் என்பது அவருக்கே உரித்தான அணிகலன்.

திராவிடர் கழக நிதி திரட்டப்பட்டபோது, அந்தக் குழுவின் தலைவர் என்றால் அவர் என். அர்ச்சுனன் தான் (விடுதலை 1.8.1943 பக்கம் 3).

அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டிற்குத் தலைவர் யார் தெரியுமா?

தோழர் அர்ச்சுனன் என்கிறது 'விடுதலை'.

அம்மாநாட்டில் அவர் பேசவில்லை - கர்ச்சனை செய்திருக்கிறார்.

'விடுதலை'யின் தலைப்பு (16.7.1946) என்ன தெரியுமா?

"வெள்ளையன் சுரண்டலுடன், வடநாட்டான் சுரண்டலும் ஒழிய வேண்டும்" என்கிறார்.

வெள்ளையன் என்ற இடத்தில் பார்ப்பனரையும் வட நாட்டான் என்ற இடத்தில் பிஜேபியையும் கலந்து போட்டுப் பாருங்கள் - பளிச் சென்று புரிந்து விடும்.

எத்தகைய பெரு தொலைநோக்கு!

அதனால்தான் அர்ச்சுனன் மறைந்தபோது 'திராவிட நாடு' இதழில் (13.10.1946) தன் உள்ளத்து உணர்ச்சிகளை ஓயா மழைபோல் கொட்டினார் அண்ணா. 

"பால் வடியும் முகம், பார்ப்பவரைச் சொக்கிடச் செய்யும் பார்வை, அரும்பு மீசை.. புன்னகை இழைத்த பொன் அதரம், காதளவு நீண்ட கவர்ச்சி மிக்க கண்கள், காண்போரை நண்பர்களாக்கி விடும் ஓர் மோகன சக்தி - இவ்வளவும் கொண்ட எழில் உருவம், இலட்சிய புருஷன், கொங்கு நாடு நமக்குத் தந்த தங்கம், பழைய கோட்டையின் புதிய வீரன், பயமறியாப் பரம்பரையில் உதித்த தீரன், தமிழகத்தின் தோழன். அர்ஜுனன் மறைந்து விட்டார். சலிப்பெனும் காரிருள் சூழ்ந்திருந்த வேளையில் நமது கட்சிக் கோட்டத்திலே கண்டடோம் அந்தச் சுந்தரப் புருஷனின் உருவை, கம்பீர மொழி கேட்டோம். கவலையைத் துடைத்துக் கொண்டு எழுந்தோம். பெற்றோம் ஓர் மாவீரனை, இனி பயம் இல்லை. ஜெயமுண்டு மனமே என்று கூறினோம். நாலைந்து ஆண்டுகளாக அந்த மாவீரன் ஆற்றிய அரும் பணியும், அவருடைய அறிவாற்றலும், அதனை விட மேலான அவருடைய அன்பும், நாற்பது ஆண்டு கட்சிப் பணிபுரிந்தும், பலரால் அடைய முடியாத இடத்தில் அவரைக் கொண்டு சேர்த்தது. எத்தனையோ வீரர்கள் வந்தனர், சென்றனர், இருந்தனர், இருக் கின்றனர். பெரும்பான்மையோடு நமது பார்வையில் படும் உருவங்களாக மட்டுமே, இருக்க முடிந்தது. அர்ஜுனன் நமது இதயத்தில் இடம் பெற்று விட்டார். நெடு நாட்கள் நம்முடன் இருந்தல்ல, வந்தார் புன்னகையை வீசினார். அவருடைய கண்களினின்றும், கனிவும், வீரமும், ஒளியென வெளிப்பட்டு நின்றார். நமது இதயத்தைத் தட்டினார். குடி ஏறி விட்டார்! இப்படி நம்மை வென்ற கட்சிப் பணியாளர்கள் அதிகம் பேர் இல்லை. நாம் பாராட்டியிருக்கிறோம். பலரை சிலரை வணங்கி இருக்கிறோம். சிலரிடம் மதிப்பு வைத் திருக்கிறோம் சிலரைக் கண்டு வியந்திருக்கிறோம். இன்னும் சிலரிடம் கோபமாக நடந்து கொண்டிருக் கிறோம்! ஆனால் மனதைப் பறி கொடுத்தது இந்த மாவீரனிடம் தான்!" என்று அறிஞர் அண்ணா அவர்கள் அவருக்கே உரித்தான அழகும், அர்த்தமும் நிறைந்த சொற்களால் தலையங்கம் தீட்டி, இளைஞர்களைத் தட்டி எழுப்பியுள்ளார். 

('திராவிட நாடு' 20.10.1946 பக்கம் 4).

தலையங்கத்தை முடிக்கும்போது 'அர்ச்சுனன் அன்புமொழி கேட்ட வண்ணம்தான் இருக்கிறது. நம்மோடு இருக்கிறார் - நம்மிடம் கலந்துவிட்டார் - இதுவே இன்று நிலைமை - உண்மையும் இதுவே!' என்று கிறங்கிப் போய் நெகிழ்ச்சியாக முடித்திருக்கிறார்.

ஒன்றை எடுத்துக்காட்டி நிறைவு செய்யலாம் இவர் இதிகாச காலக் கற்பனை அர்ச்சுனன் அல்ல -

நிகழ்கால ஈடு இணையற்ற கருஞ்சட்டை இளஞ்சிங்கம் - சென்னை சட்டசபை மந்திரி பக்தவத்சலம் பழைய கோட்டையைப் பார்வையிட வந்த அன்று, தோழர் அர்ச்சுனன் கருப்புச்சட்டை அணிந்து அதில் பெரியார் பேட்ஜை மாட்டிக் கொண்டு மந்திரியாரை வரவேற்ற காட்சி மந்திரியாரையே திகைக்க வைத்து விட்டது என்பதுதான் அந்த உன்னதத் தகவல்!

அந்த மாவீரனின் நூற்றாண்டைத்தான் - அவர் பெரும் பணியாற்றிய தாய்க் கழகமான திராவிடர் கழகம் எடுக்கிறது - கொண்டாடுகிறது. கர்மத்துக்குரியது திராவிடர் கழகம் தானே! நூற்றாண்டு மயமாகவே ஆகி விட்டது திராவிடர் கழகத்துக்கு இவ்வாண்டு!

மாவீரர் அர்ச்சுனன் நூற்றாண்டையும் கழகம் கொண்டாடுகிறது.

நாள்: 14.10.2023 சனி மாலை - சென்னை பெரியார் திடலில் தகைசால் தமிழர் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை வகிக்கிறார்.

'திராவிட மாடல்' ஆட்சித் தலைவர் நமது முதல மைச்சர் காணொலி மூலம் கருத்துரை வழங்குகிறார்.

அர்ச்சுனன் குடும்பத்தார்கள் பங்கு ஏற்கின்றனர். அமைச்சர்கள், சு. முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், அ. கணேசமூர்த்தி எம்.பி., கார்த்திகேய சிவசேனாதிபதி, வி.அய்.டி. விசுவநாதன், அந்தியூர் ப. செல்வராசு எம்.பி., ஆகியவர்களுடன் இனமுரசு சத்தியராஜ் எழுச்சி முழக்கமிடுகிறார். நவின் மன்றாடியர் நன்றி நவில்கிறார்.

இவற்றிற்குமேல் என்ன சுவை வேண்டும்? வேறு என்ன கனம்' வேண்டும்?

23 வயதில் மூன்றாண்டுகள் அழியாக் கல்வெட்டுபோல் முத்திரை பதித்து கழகப் பணியாற்றி கழகத்தின் மணிக்கொடியாய்ப் பிரகாசிக்கிற ஓர் இளைஞருக்குத் தாய்க் கழகம் நடத்தும் நூற்றாண்டு விழாவுக்கு இளைஞர் பட்டாளமே திரண்டு வா! இன எழுச்சிப் போர் முழக்கம் கொட்டுவோம்.  

புறப்பட்டு  வாரீர்! வாரீர்!!


No comments:

Post a Comment