ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: நீங்கள் அடிக்கடி சுட்டிக் காட்டுவது போல பல்வேறு அவதாரங்கள் - 'மாய மான்கள்' - மயக்க பிஸ்கெட்டுகள் தீவிரமாக வேலை செய்கின்றனவே? பாரதிய ஜனதாவின் பாசிசப் பிடியிலிருந்து 'இந்தியா' கூட்டணி நாட்டை கரையேற்றுமா? இந்தியா முழுதும் படிந்துள்ள காவிக்கறையை முற்றிலும் துடைத்து எறியுமா? 'இந்தியா' கூட்டணி நீடிக்காது என்று பல தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகிறதே? இதுபற்றி தங்கள் கருத்து என்ன?

- சிவகுமார் சண்முகம் ( செல்வம் வைரம்), பஹ்ரைன்

பதில் 1: சந்தேகமே வேண்டாம். 'இந்தியா' கூட்டணிதான் வரும் பொதுத்தேர்தலில் வெல்லும்.

அதற்குப் பிறகு அதன் ஆட்சி புதிதாக அமையும். ஜோதிடம், ஆருடம் அல்ல. மக்கள் - நிகழ்வுகள் - ஆளும் மோடி அரசின் பதற்றமும், பயமும், பஞ்சமில்லாத தடம் மாறுதலும் "வித்தைகளும்" அதற்குக் கட்டியம் கூறுகின்றபடியால்.

நாளும்  Indian National Developmental Inclusive Alliance-யைத்தான் மக்கள் வரவேற்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆறு மாநிலத் தேர்தல்களில் அதை ஓரளவு பார்ப்பீர்கள்.

கேள்வி 2: 'இந்தியா' கூட்டணியிலிருந்து தமிழ்நாட்டு அளவில்கூட 'சீட்டு'க்காக எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் திமுக கூட்டணியை விட்டு விலகி வேறு கூட்டணிக்கு சென்று விடுவார் என்று சில அரசியல் தரகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனரே, இதுகுறித்துத் தங்கள் கருத்து?

- சண்முகம் சிவகுமார் ( செல்வம் வைரம்), பஹ்ரைன்

பதில் 2: சிலரின் ஆசை, சிலரின் உளறல் எல்லாவற்றிற்கும் வி.சி.க. வன்னியரசு நன்றாக ஆப்பு அடித்தாரே, அதற்குப் பிறகுமா சந்தேகம்!

இது கொள்கைக் கூட்டணி. அரசியல் சந்தர்ப்பவாத இடந்தேடிகளின் மடம் அல்ல! திருமா போன்றவர்கள் கொள்கைத் தெளிவு உடையவர்கள்.

கேள்வி 3: சடங்குகள் இல்லாமல் நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளாரே?

- பா.முகிலன், சென்னை-14

பதில் 3: உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோதமாக இப்படி கருத்து தெரிவிப்பது அங்கே வாடிக்கையான வேடிக்கைதானே!

கேள்வி 4: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நந்தனார் நிகழ்வில், பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவிக்கப்பட்டுள்ளதே?

- பா.கண்மணி, வேலூர்

பதில் 4: 5.10.2023 'விடுதலை'யில் பதிலடி காண்க.

கேள்வி 5: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது சரியான நடவடிக்கையா?

- லோ.விஜயலட்சுமி, திருச்சி

பதில் 5: நாங்கள் போராட்டத்தில் (கூட்டணிக் கட்சிக்காரர்கள்) ஈடுபடும்போதும்கூட கைது, சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்குத் தேவைப்படும் அங்கமாவோம். விரைவில் சுமூகத் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.

கேள்வி 6:  அன்று திராவிடர் கழகம் சார்பில் முதலமைச்சர் கலைஞருக்குத் தஞ்சையில் பாராட்டு - இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு - இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

- மே.காத்தவராயன், கன்னியாகுமரி

பதில் 6 : ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மாநில அதிகார மீட்சிப் போர் - இப்படிப்பட்ட கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்ட ஆட்சியின் தொடர்ச்சியில் வேறுபாடு - மாறுபாடு கிடையாது. வளர்ச்சிப் பரிமாணங்களே உண்டு.

கேள்வி 7: கனடா - இந்தியா இடையே உள்ள பிரச்சினையின் உள்நோக்கம் என்ன?

- இரா.ரமேஷ், திருவண்ணாமலை

பதில் 7: அதை இரண்டு நாடுகளுமே உலக அரங்கிற்கு தெளிவாக விளக்கவில்லையே இன்னமும்கூட.

கேள்வி 8: பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. முன்னணித் தலைவர்கள் ஒவ்வொருவரும் கூறிவருவது எந்த அளவிற்கு உண்மை?

- ப.ஆனந்த், மயிலாடுதுறை

பதில் 8: உண்மை என்பதில் 'எந்த அளவு' என்ற சந்தேகம் வருவதே அதற்கு பெருமை அளிப்பதாக இருக்காது!

முழுமையாக விலகி பா.ஜ.க.வுக்கு தேர்தல் முடிவுக்குப் பின் என்ன நிலை என்பதுவரை முழுத் தெளிவுடன் விளக்கினால் முழு நம்பிக்கை ஒருவேளை வரக்கூடும்.

கேள்வி 9: தமிழ்நாடு - தி.மு.க. அரசிடமிருந்து ஆக்கிரமிக்கப்படும் இந்து கோவில்கள் மீட்கப்பட வேண்டுமென்று தெலங்கானாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளதுபற்றி தங்கள் கருத்து என்ன?

- ம.இளங்கோ, வந்தவாசி

பதில் 9: ஹிந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் 1924 - 1925இல் ஏன் வந்தது என்ற அரசியல் வரலாறு அவருக்கு தெரியாமல் பேசுகிறாரா மோடி, அல்லது தெரிந்தே திசை திருப்புகின்றாரா என்பதே கேள்வி. தேர்தல் தோல்வி பயம். தி.மு.க.வைக் கண்டால் சிம்ம சொப்பனமாக அவருக்கு இருக்கிறது போலும்!

கேள்வி 10: பிரதமர் மோடி வெளி மாநிலங்களில் பிரச்சாரத்தினை மேற்கொண்டாலும், தி.மு.க.மீது குற்றஞ்சாட்டுவதிலேயே குறியாக இருக்கிறாரே?

- எ.மணி, பெங்களூரு

பதில் 10: மேலே சொன்ன பதிலே இதற்கும். "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற பழமொழியை நினைவூட்டுகிறது பிரதமர் மோடியின் பேச்சு!


No comments:

Post a Comment