பெண்களின் மீதான அடக்குமுறைக்கு எதிர்ப்பு டிசம்பர் 4 - டில்லியில் அகில இந்திய பேரணி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

பெண்களின் மீதான அடக்குமுறைக்கு எதிர்ப்பு டிசம்பர் 4 - டில்லியில் அகில இந்திய பேரணி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு

சென்னை, அக். 3 - பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக டில்லியில் டிச. 4ஆம் தேதி அகில இந்திய பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தின் மாநிலக்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று (2.10.2023) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இயக்கத்தின் மாநில தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் வாச்சாத்தி வழக்கின் தீர்ப்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இதுபோன்ற மற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வழக்குகளையும் விரைவில் விசாரித்து தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவுகிற ஜாதிய ஒடுக்கு முறை களுக்கு எதிராக அனைவரும் போராட முன்வர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பெண்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக டில்லியில் வரும் டிச.4-ம் தேதி அகில இந்திய பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

நிகழ்வில் இரா.முத்தரசன் பேசியதாவது: இந்தியா ஜனநாயக நாடு. அதை மாற்ற பாஜக முயற்சிக்கிறது. பாஜக என்பது தனித்த கட்சி அல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக. ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் வகையில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர திட்டமிடுகின்றனர். மீண்டும் பாஜக ஆட்சிக்குவந்தால், ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படும். மதச்சார்பின்மை கொள்கை பிளவுபடும். இதனால் நாடு பல துண்டுகளாக உடையும். சமூக வளர்ச்சி பின்னோக்கி செல்லும். எனவே மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆட்சி, அதிகாரத்துக்கு வராமல் தடுப்பதே நமது இலக்காகும். இவ்வாறு அவர் பேசினார். 

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடுஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன், அகில இந்திய தலித் உரிமைகள் இயக்கத்தின் தலைவர் புதுவை ராமமூர்த்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் டி.லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment