தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு விடுதலை பிறந்தநாள் மலர் - ஆவணக் களஞ்சியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 13, 2023

தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு விடுதலை பிறந்தநாள் மலர் - ஆவணக் களஞ்சியம்


இனிய நண்பர்களே!

பொலிவும் புதுமையும் பூத்துக் குலுங்கும் பொன்னேடாக ‘விடுதலை’ தந்தை பெரியார் பிறந்தநாள் மலர் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. அருமைப்பாடு மிக்க ஆவணங்களின் தொகுப்பாக மலர் விளங்குவதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடையலாம். இது ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன்தருவதாகும். ஆற்றல் மிகுந்த கழகக் கண்மணிகளுக்கு மிகச் சிறந்த கையேடு! தமிழ்நாட்டின் அண்மைக்கால வரலாறு இந்த மலருள் பொதிந்து கிடக்கிறது.

- பேராசிரியர் டாக்டர்
ப.காளிமுத்து எம்.ஏ., பிஎச்.டி

மலரைத் திறந்தவுடன் “திராவிடர் கழகம் மறைந்துவிட்டால் திராவிட மக்களின் மானத்துக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் வேறு எந்தவித வாய்ப்பும் இராது. பழைய வர்ணாசிரம தர்மம் தலைதூக்கிவிடும். திராவிடர் கழகத்தின் வாழ்வில் என்றென் றும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். திராவிடர் கழகத்தின் வாழ்வில்தான் திராவிட மக்களின் வாழ்வு இருக்கிறது. இதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என்னும் தந்தை பெரியாரின் எச்சரிக்கை மணி நம்மை வரவேற்கிறது. இதனைத் தொடர்ந்து அய்யாவின் பொன்மொழிகள் மலரை அழகு செய்கின்றன.

“நீ யார் என்று என்னைக் கேட்டால் பள்ளன்-பறையன் என்று சொல்லுவேன். சூத்திரன் என்பவன் இவனைவிடக் கீழா னவன்” என்னும் பெரியாரின் பொன்மொழி நம்மைச் சிந்திக்க வைக்கிறது!

தந்தை பெரியாரின் பிறந்தநாள் செய்தியாக ஆசிரியர், தமிழ்நாட்டில் கடந்தகாலத்தில் நடந்த போராட்டங்களையும் அதனால் நாம் பெற்ற வெற்றிகளையும் நிரல்படுத்திக் காட்டுகிறார்.

1921-இல் திராவிட ஆட்சியான நீதிக்கட்சியின் ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1929-இல் செங்கற்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானத்தைப் பெரியார் நிறைவேற்றினார்.

1989-இல் கலைஞர் ஆட்சியில் பெண்களுக்குச் சொத்துரி மைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

கோவிலுக்குப் பொட்டுக் கட்டித் தேவதாசிகளாக்கி எங்கள் சகோதரிகளைத் தாசிகளாக்கியது ஸநாதனத்தின் கோரமுகமல் லவா? அதனை ஒழித்துக் கட்டிப் பெண்களை மருத்துவர்களா கவும், பொறியாளர்களாகவும், சந்திரயான்களுக்கும் சூரிய ஆராய்ச்சிக்குமுரிய அறிவியல் அறிஞர்களாகவும் ஆவதற் கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்தது சுயமரியாதை இயக்கம்!

அடித்தட்டு மக்களாகிய சூத்திரர்களுக்கும் பஞ்சமர் களுக்கும் பெண்களுக்கும் மறுக்கப்பட்ட கல்வி இன்று ஊக்கத் தொகையுடன் அவர்கள் படித்துப் பட்டதாரிகளாக வெளியேறி டும் மகத்தான மாறுதல் திராவிடர் இயக்க ஆட்சியால் ஏற் பட்டது.

அனைத்து ஜாதியினரும் - ஆதிதிராவிடர் உள்பட அர்ச்சராகி ஜாதி - தீண்டாமையின் அடித்தளத்தையே அடித்து நொறுக்கிப் புதியதோர் அமைதிப் புரட்சியைத் திராவிடராட்சி நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. இவை போலும் புரட்சிகரச் செயல் திட்டங்களைத் ‘திராவிட மாடல்’ ஆட்சி செய்துவரும் நிலை யில் பா.ஜ.க. இவற்றைத் தடைப்படுத்த முயற்சி செய்கிறது; முட்டுக்கட்டை போடுகிறது. இந்த ஆரிய ஆட்சியை அகற்று வதற்காக உருவாகியுள்ள ‘இந்தியா’ என்னும் கூட்டணியை வலுப்படுத்த கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்’ என்று ஆசிரியர் அறி வுறுத்தும் கட்டுரையை அரசியலார் ஒவ்வொருவரும் ஊன்றிப் படிக்க வேண்டும்.

அடுத்து இந்த ஆண்டுக்கான செயல்திட்டங்களை ஆசிரி யர் வரிசைப்படுத்துகிறார். புதிய தோழர்களுக்கான பெரியாரி யல் பயிற்சிப் பட்டறைகள், குறும்படப் பயிற்சி, சமூக ஊடகப் பயிற்சி, நாடகப் பயிற்சி, கிராமப் பிரச்சாரத் திட்டம், பெரியார் நாட்காட்டி செயலி முதலான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய முறைகளைத் தோழர்களுக்கு ஆசிரியர் விளக்கு கிறார்.

தகைசால் தமிழர் விருது

இளம்பருவத்திலிருந்தே பொதுவாழ்வில் ஈடுபட்டு, சமூகநீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் தந்தை பெரியார் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளுக்குத் தமிழ்நாடு அரசு ‘தகைசால் தமிழர் விருதி’னை அளித் துப் பெருமை பெற்றது. 15.8.2023-ஆம் நாள் தமிழர் தலைவ ருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரு தளித்துப் பாராட்டிய நிழற்படம் மலருக்கு அழகு சேர்க்கிறது. இது மட்டுமா?

தந்தை பெரியாரின் சமூகநீதி, பெண் விடுதலை, கல்விப் பணிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துத் தொண்டாற்றி வருகின்றமைக்காகப் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரான ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது-‘2023’ என்னும் விருதினைப் புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் ‘சிஜி ஸ்மார்ட் ஃஹாபிடேட் பவுண்டேசன்’ என்ற அமைப்பு டி ஆர்க் பில்டு அமைப்புடன் இணைந்து 25.8.2023 அன்று வழங்கியது.

மேலும் ‘ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காகவும் தமிழ் மக்களின் தொன்மையான மொழி, பண்பாடு, கலை ஆகியவற் றைப் பாதுகாக்கத் தன் வாழ்நாள் முழுமையும் அர்ப்பணித்த உலகளாவிய அளவில் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் தமிழர் தலைவர் இனமான ஆசிரி யர் கி.வீரமணி அவர்களுக்கு ‘அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதேமில்லத் விருது 31.1.2023 அன்று காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியில் வழங்கப்பட்டது. இவை யெல்லாம் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள்!

30.11.1946-இல் குடிஅரசு இதழில் தந்தை பெரியார் எழுதியுள்ள ‘என்னைக் கொல்லு!’ என்னும் தலைப்பிலான கட்டுரையைப் படிக்கும்போது நம் கண்கள் குளமாகின்றன.

“என்னை அடித்தோ கொன்றோ வெற்றி கண்டு விட்டா யானால், அப்பொழுதாவது உனது சூத்திரப் பட்டம் ஒழிந்து விடுமா? சொல், நிஜமாகவே சொல்: நானே விஷம் குடித்துச் செத்துப் போகிறேன். நீ இல்லாவிட்டாலும் எந்தப் பார்ப்பானை யாவது கொல்லச் சொல். நிஜமாகவே விஷம் குடித்துச் செத்துப் போகிறேன். உனக்கு என்னைக் கொல்ல வேண்டிய கஷ்டம் கூட வேண்டாம்.”

நம்முடைய சூத்திரப் பட்டத்தை ஒழிப்பதற்காகத் தந்தை பெரியார் சாவதற்கும் ஆயத்தமாக இருக்கிறார். நான் செத்துப் போனாலாவது திராவிட மக்களின் மீது சுமத்தப்பட்ட சூத்திரப் பட்டம் ஒழியாதா? என்று பெரியார் ஏங்கித் தவிப்பதைப் பார்க்கிறோம். மேலும் பெரியார் எழுதுகிறார்,

“காமராஜரைப் பார்!

முத்துராமலிங்கத் தேவரைப் பார்

கலியாணசுந்தர முதலியாரைப் பார்

திரிகூட சுந்தரம் பிள்ளையைப் பார்?

வரதராசுலு நாயுடுவைப் பார்!

ஏன் ராமசாமியையே பார்!

இவர்கள் எல்லாம், தேசபக்தர்களாக, ராஷ்ட்ரபதிகளாக, தமிழ்நாட்டு முடிசூடா மன்னர்களாக இதே பார்ப்பனர்களால் மதிக்கப்பட்டவர்கள்! தேசியத்தால் பொருளோ பட்டமோ பதவியோ அடையாதவர்கள் என்பது மாத்திரமல்லாமல் தேசிய ‘நாதியற்ற’ பிணமாகச் சிதம்பரம் பிள்ளை போலச் சாகப் போகிறவர்கள்!

எந்தப் பார்ப்பான் இன்று காமராஜரை வரவேற்கிறான்? முத்துராமலிங்கத் தேவர் விலாசம் என்ன? திரிகூட சுந்தரம் எம்.ஏ.,பி.எல் வக்கீல் வேலையை விட்டவர். இவர் எந்த உலகத்தில் இருக்கிறார் என்பது கூட மக்களுக்குத் தெரியாது!

சத்தியமூர்த்தி அய்யர் கோவணம் கட்டாத காலத்தில் சிதம்பரம் பிள்ளை கப்பலோட்டிய தேசபக்தர்! ஜெயிலில் பல வருஷம் மூத்திரச் சட்டியில் தண்ணீர் குடித்த தியாகி! அவர் பிள்ளைகுட்டிகள் சோற்றுக்குப் பாடுபடுகின்றன.

சத்தியமூர்த்தி குடும்பமோ பங்களா வாழ்வு! பிரபு வாழ்க்கை வாழ்கிறது. சிதம்பரம் பிள்ளையிடத்தில் ஒரு பொய் பித்தலாட்டம் இருக்காது. ஆனால் சத்தியமூர்த்தி இடத்தில் ஒரு சத்தியம், நாணயம் காண்பது மிகமிகக் கடினம்! 

இந்த வித்தியாச வாழ்வுக்குக் காரணம் சிதம்பரம் பிள்ளை சூத்திரன்! 

சத்தியமூர்த்தி அய்யர் பிராமணர்! 

ஒரு வரதாச்சாரி தேசியத்தின் பேரால் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்.

ஒரு கல்யாணசுந்தரம் புத்தகம் விற்றால் அச்சுக் கூலி கிடைத்தால் சாப்பாடு! 

இருவர் யோக்கியதைக்கும் காரணம் என்ன? வரதாச்சாரி பிராமணர்! கல்யாணசுந்தர முதலியார் சூத்திரர்!” 

இவ்வாறு ஒப்பிட்டுக் காட்டிவிட்டுப் பெரியார் கடைசியில் கண்கலங்கி எழுதுவதை நோக்குங்கள்:-

“விளையாட்டு யோசனையில் இந்தச் சங்கதியை எழுத ஆரம்பித்தேன். எழுத எழுத ஆத்திரம்! நெஞ்சு துடிதுடிப்பு! கைநடுக்கம்! கண்களில் கண்ணீர் திரை ஏற்பட்டு மேலும் எழுத முடியாமல் போயிற்று; இல்லாவிட்டால் இன்னமும் எழுதியிருப் பேன்! ஆகையால் நம்பி இதோடு நிறுத்திவிட்டேன்”

எதற்கும் கலங்காத தந்தை பெரியாரின் கண்களில் கண்ணீர்! அது தனி வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தினால் வந்த கண்ணீர் அல்ல! இந்தச் சமூகத்திற்கு ஏற்பட்ட துயரத்தை நினைத்து வந்த கண்ணீர்! இந்தக் கட்டுரையை நாம் திரும்பத் திரும்பப் படித்து மனதில் பதிய வைக்க வேண்டும்.

‘குடி அரசு’ அலுவலகத்தில் தாம் துணையாசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தை நினைத்து கலைஞர் எழுதியுள்ள கட்டுரை, ‘திராவிடர் கழகம் நம் தாய்க் கழகம்’ என்பதைத் தோழர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. அக்காலத்தில் பெரியார் நடத்திய போராட்டங்களைக் கலைஞர் எழுத்தோவியமாக்கி யுள்ளார்.

“அவர் காணாத களங்கள் இல்லை; எந்தக் களத்திலும் அவர் எவனுக்கும் பயந்ததுமில்லை; சிறைச்சாலைப் பிரவேசம் அவருக்குப் பொழுது போக்காகவே இருந்தது; போர் முழக்கம் அவரது இதயத் துடிப்பு, முன்வைத்த காலைப் பின் வைக்காத துணிவும் உறுதியும் அவரின் கூடப் பிறந்தவைகள். அவருக்கு இன்று பிறந்தநாள். இந்த நாளில் அவர் பெற்றிருந்த துணிவை யும் உறுதியையும் நாம் பெறுவோம். ஊளையிடும் எதிர்ப்பு களை ஊதி எறிவோம் என்ற தெம்புடன் பீடுநடை போடுவோம்” - என்று முத்தமிழறிஞர் கலைஞர் தீட்டியுள்ள எழுத்தோவியம் வரலாற்றுப் பொன்வரிகள்! 

இதனையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் எழுத்தோவியம் இடம் பெற்றுள்ளது. தந்தை பெரியார் பாதை யில் பெண்ணுரிமை பேணும் அரசாகத் தி.மு.கழக அரசு பீடு நடை போட்டு வருவதை முதலமைச்சர் வரிசைப்படுத்துகிறார்.

அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி கற்ப தற்கு ஏதுவாக அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்! பட்டம் பெறும் பெண்களைத் தகுதிப்படுத்த அவர்களுக்கு வழங்கப் படும் ‘திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்! மகளிருக்காகக் கட்டண மில்லாப் பேருந்துப் பயணம்! அதற்கு ‘விடியல் பயணம்’ என்று பெயர்! வேலைக்குச் செல்லும் பெண்கள் வெளியூர்களில் தங்குவதற்காகத் ‘தோழி’ எனும் பெயரில் தங்கும் விடுதிகள்! குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம், பெண்களின் பணிச்சுமையைக் குறைப்பதோடு உடல் வலிவுள்ள குழந்தை களை உருவாக்கும் திட்டம்! காலம் காலமாகச் சமூகத்துக்காக உழைத்துவரும் குடும்பத் தலைவிகளின் தன்னலமற்ற உழைப்புக்கு மரியாதை செய்யும் வகையிலும் அவர்களின் உரிமையைப் போற்றும் வகையிலும் அண்ணா பிறந்த நாளன்று தொடங்கப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ எனும் பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய்! - இவ்வாறு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களைப் பட்டியலிடும் மாண்புமிகு முதலமைச்சர், “சமூகநீதி - சுயமரியாதை காப்பதில் தி.மு.க. அரசு எப்போதும் பெரியார் பாதையிலேயே பயணிக்கிறது” என்று தமது கட்டுரையை முடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாகும்.

ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்கள், அமெரிக்கப் பேராசிரியர் ஜான் ரைலி, ‘இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் நடந்திராத மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி, தமிழ்நாட்டில் தான் நடந்திருக்கிறது. தந்தை பெரியார் தான் அந்தப் புரட்சியைச் செயத்வர்’ என்பது அமெரிக்காவில் உள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்தாகும்’ என்று எடுத்துக்காட்டியுள்ள மேற்கோளை நமக்கு எடுத்துக்கூறி, ‘பெருமைக்குரிய நம் பெரியாரின் சிந்தனைகளை அறிவாயுதமாக ஏந்தி மூட நம்பிக்கைகளையும், இன இழிவுகளையும் சங்பரிவார் ஆட்சியையும் ஒழித்துக் கட்டுவோம் என்று எழுத்திலேயே முழக்கமிடுகிறார் புரட்சிப்புயல்! 

வைக்கம் போராட்ட நூற்றாண்டுச் சிந்தனைகளாக இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கி.தளபதிராஜ் எழுதியுள்ள "வான் நின்று முழங்குவோம் வைக்கம் வீரர் பெரியார் என்றே" எனும் கட்டுரை வைக்கம் போராட்ட நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறது. ‘வைக்கம் 100 - தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்’ என்ற தலைப்பில் பழ.அதியமான எழுதியுள்ள கட்டுரை, கேரள அரசும், தமிழ்நாடு அரசும் வைக்கம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்க எடுத்துவரும் நடவடிக்கைகளை விரிவாக விளக்குகிறது. பழ.அதியமான் ‘வைக்கம் போராட்டம்’ என்னும் சிறந்த நூலின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த நூலைக் கேரள அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து மலையாளத்தில் வெளியிட்டிருக்கின்றன. மேலும் கேரளத்தின் புலமை உலகம், ‘வைக்கம் போராட்டம்’ என்ற தலைப்பையே விரும்புகிறது என்பதை அதியமான் சுட்டிக்காட்டுகிறார்,

இதே இடத்தில் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்ட கே.பி.கேசவமேனன், கேரளச் சிறையில் தந்தை பெரியார் எவ்வளவு கொடுமையாக நடத்தப்பட்டார் என்பதை ‘வைக்கம் போராட்ட நினைவலைகள்’ என்ற நூலில் குறிப்பிடும் செய்தி இடம் பெற்றுள்ளது. “கேரள மாநிலத்து மக்கள் அனுபவிக்கும் கொடுமையை நீக்கவேண்டும் என்பதற்காக எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் தான் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே அதைப் பார்த்து இந்த மாநில(கேரள) மக்களாக இருக்கின்ற எவருக்குமே வெட்கமே ஏற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவமிக்க தலைவர்கள் சாய்வு நாற்காலிகளைத் தூக்கியெறிந்துவிட்டுத் தங்கள் பங்கைச் செலுத்த இப்பொழுதாவுது வரவேண்டாமா?” என்று கே.பி.கேசவமேனன் உணர்ச்சி பொங்க உரைப்பதை எடுத்துக்காட்டியிருப்பது பெரியார் பிறந்தநாள் மலருக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டுச் சிந்தனையாகத் திருமாவேலன் எழுதியுள்ள ‘கலைஞரின் பெரியார் நாடு’ என்னும் கட்டுரை, தமிழ்நாட்டு வரலாற்று நிகழ்வுகளை எடுத்தியம்புகிறது.

“இன்றைய தமிழ்நாட்டில் நாம் பார்க்கும் திட்டங்கள், கொள்கைகள், செயல்கள் அனைத்தும் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டவை என்றால் அதற்கான சிந்தனை - வடிவத்தைக் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள்” என்று எடுத்த எடுப்பிலேயே திராவிட அரசியலின் மூலத்தை எடுத்துக்காட்டுகிறார் திருமாவேலன்.

திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் இரண்டுக்கும் மாறுதலோ, மோதலோ எதுவும் இல்லை. சமுதாயத் துறையில் சீர்திருத்தம் பொருளாதாரத் துறையில் சமதர்மக் குறிக்கோள் அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள் தான் தி.மு.க.வின் கோட்பாடுகள் என்று விளக்கும் திருமாவேலன், தி.மு.க. எந்தவிதத்திலும் திராவிடர் கழகத்துக்கு எதிரானதல்ல; எதிர்நோக்கம் கொண்டதுமல்ல. ‘கொள்கை ஒன்றே கோட்பாடு ஒன்றே’ என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.

அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது, இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது, சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்டவடிவம் கொடுத்தது, பின்னர் கலைஞர் ஆட்சிக்காலத்தில், நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்கு உயர்கல்வி மேலும் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் செயல்படுத்தி வரும் அனைத்துத் திட்டங் களுக்கும் பெரியாரியலே அடிப்படை என்பதைத் திருமா வேலன் மிக அருமையாக, ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எடுத்து விளக்கியுள்ளார்.

டாக்டர் நம்.சீனிவாசனின் ‘குருகுலத்தில் வெற்றிக் கொடி எனும் கட்டுரை, சேரன்மாதேவிக் குருகுலப் போராட்ட நிகழ்ச்சிகளை விரிவாகப் பேசுகிறது. நம்.சீனிவாசன் நல்ல ஆய்வாளர். குருகுல நிகழ்ச்சிகளை விடாது தொகுத்து வழங்கியுள்ள திறம் பாராட்டிற்குரியது.

தந்தை பெரியார் 145-ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலரின் சிறப்புக்கு மேலும் சிறப்புக் கூட்டும் வகையில் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்களின் சிந்துவெளி நாகரிகம் பற்றிய கட்டுரையும் டாக்டர் கி.அமர்நாத் ராம கிருஷ்ணன் அவர்களின் ‘வரலாற்றுத் திரிபுகள்’ என்ற கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. இவை இரண்டும் தொல்லியல் சார்ந்த கட்டுரைகள், பேரா.அ.கருணானந்தன், சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதையும் தெளிவாக நிறுவு கிறார். அது ஆரியக் கலப்பில்லாத நாகரிகம் என்றும் ஆரிய நாகரிகம் வேறு - திராவிட நாகரிகம் வேறு என்றும் பேரா.அ.கருணானந்தன் கட்டுரை விளக்குகிறது. டாக்டர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கட்டுரை தொல்லியல் ஆய்வில் கண்டறியப்பட்ட வரலாற்று முடிவுகள் எவ்வாறு திரிக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது. சிந்துவெளி நாகரிகம் திராவிடப் பழங்குடிகளின் மூலமே கட்டமைக்கப் பட்டது என்று அமர்நாத் தெளிவுபடுத்துகிறார். கீழடியில் அவர் நடத்திய அகழாய்வும் அதில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களும் வரலாற்றுப் பேராசிரியர்களைத் திகைப்பில் ஆழ்த்திவிட்டன. அமர்நாத்தின் கட்டுரை பல அரிய செய்தி களை உள்ளடக்கியிருக்கிறது.

எழுத்தாளர் கோவி.லெனின் ’90-இல் 80-தொண்டு செய்து பழுத்த பழம்’ என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியரைப் பற்றிச் சுவை ததும்ப எழுதியுள்ளார். 60 ஆண்டுகள் ஒருநாளி தழின் ஆசிரியராக இருப்பது உலகத்தில் எவருக்கும் கிட்டாத பேறு; டில்லியில் பெரியார் மய்யம், சமூகநீதிப் போராட்டங்கள், போராட்டக் களம் அவருக்குப் பூந்தென்றல்’ என்று பல்வேறு செய்திகளைக் கோவி.லெனின் பதிவு செய்துள்ளார். நூறாண்டு கடந்தும் ஆசிரியரின் தொண்டறம் தொடரட்டும் என்று லெனின் வாழ்த்துகிறார்.

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தந்தை பெரியாரின் அரசியல் பார்வையை எடுத்துக் காட்டுகிறார். தேர்தல் அரசியலையும் அரசியலில் பங்கேற்பதை யும் விரும்பாதவர் பெரியார்; என்றாலும் அவர் இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் இல்லை! அவர் என்றுமே கட்சிக் காரராக இல்லாமல் கொள்கைக்காரராகவே வாழ்ந்தவர்’ என்னும் வரிகள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை! நீதிக் கட்சியின் சாதனைகளைப் பற்றியும் அதன் தலைவர்களாக விளங்கிய பனகல் அரசர், முத்தையா முதலியார் ஆகிய வர்களைப் பற்றியும், ஹிந்தி மொழித் திணிப்பு, ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் அண்ணா செய்த சாதனைகள் - இப்போது நடந்து வரும் ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று விரிவாக அறிவுக்கரசு அய்யா ஆராய்ந்திருக்கிறார்.

திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள், ‘பெரியாரியக்கம் வறட்டு நாத்திகமல்ல; அது அனைத்துலக மனிதனை நோக்கிய அறைகூவலாகத் திகழ்ந்து வருகிறது. இளைஞர்கள் திராவிடர் கழகத்தின் பரப்புரை நூல்களைப் படிக்கிறார்கள், பெரியாரியத்தைக் கற்கிறார்கள்; அதில் பங்கேற் கிறார்கள்; பெரியாரியத்தில் பார்ப்பனருக்கு இடமில்லை. பெரியாரியத்தைப் போன்ற அமைப்பு உலகில் வேறெங்கும் கிடையாது; இது மாற்றத்தைப் பேணும் மாபெரும் இயக்கம்’ என்பதை அருமையாக விளக்கியிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்திலும், இந்திய உயர்நீதிமன்றங்களிலும் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை கோ.கருணாநிதி அவர்கள் எடுத்துக்காட்டுகிறார். ஒடுக்கப்பட்டோர் அரசுகளைக் கைப்பற்றி ஆட்சி அதிகாரத் தில் அமர்ந்து சட்டம் இயற்றினால் அதற்குமேல் ஒருவர் உட்கார்ந்து கொண்டு அதனைத் தடுப்பார்கள் என்னும் தந்தை பெரியாரின் கருத்தை உள்வாங்கி உச்சநீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்திடும் சட்டம் இயற்றிட அனைத்துச் சமூக அமைப்பு களும் களம் காண வேண்டும்; இது மிகமிக அவசரம் என்று கோ.கருணாநிதி களம் காண அழைப்பதை ஒவ்வொருவரும் உள்ளத்தில் நிறுத்த வேண்டும்.

பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள், பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது துணிச்சலை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தனி மனிதனாக இயக்கத்தைத் தொடங்கினார் என்றும் பின்னாளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படித்த வர்கள் முதல் பட்டங்கள் பெற்றவர்கள், பாமரர்கள் என ஆர்வத்துடன் பலரும் இயக்கத்தில் சேர்ந்ததைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். பெரியாரோடு சேர்ந்த பட்டாளத்தைப் பட்டியலிடு கிறார். அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், திரைத்துறையிலிருந்து கலைவாணர், எம்.ஆர்.ராதா, புரட்சிக் கவிஞர் என்று எத்தனைப் பேர்! பெரியாருக்குப்பின் ஆசிரியர் தலைமையில், திராவிடர் கழகத்தின் கொள்கைகள் உல கெங்கும் பரவி ஒலிப்பதை டாக்டர் சோம.இளங்கோவன் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்.

‘பெரியார் என்னும் ஈடற்ற தத்துவவியலாளர்’ என்னும் டாக்டர் சிவபாலன் இளங்கோவன் அவர்களின் கட்டுரை நம் அனைவரின் கவனத்திற்குரியதாகும். மனநல மருத்துவராகிய இளங்கோவன் ஒரு புதிய கோணத்தில் தந்தை பெரியாரை ஆராய்ந்திருக்கிறார். மனிதர்கள் சமத்துவமாக வாழ்வதும் பிறருக்காகத் தொண்டு செய்து வாழ்வதுமே பெரியாரின் லட்சியமாகும். இந்த லட்சியங்களை நோக்கியே பெரியாரின் சிந்தனைகளும், தத்துவங்களும் இருக்கின்றன. வரலாற்றில் எந்தத் தத்துவவியலாளர்களிடமும் காணப்படாத மற்றொரு சிறந்த பண்பு பெரியாரிடம் இருந்தது. அவர் தனது சிந்தனை களுக்கேற்றபடியே வாழ்ந்தும் காட்டினார். அவரின் சிந்தனை களுக்கும், வாழ்வியலுக்கும் எந்த முரணுமில்லாத வாழ்க் கையை அவர் வாழ்ந்தார். தனது சிந்தனைகளை மட்டுமல்ல தனது வாழ்வையும் கூட நமக்கு எடுத்துக்காட்டாகப் பெரியார் விட்டுச் சென்றிருக்கிறார். டாக்டர் சிவபாலன் இளங்கோவன் அவர்களின் இந்த அணுகுமுறை மிகச் சிறப்பானது.

‘கலகக் காரர் பெரியார்’ எனும் கட்டுரையில் ரா.செந்தில் குமார் அவர்கள், ‘தனது சொந்த வாழ்க்கையை அப்பட்டமாகப் பொதுவெளியில் பெரியாரைப் போல் முன்வைத்தவர்கள் வரலாற்றில் எவரும் இல்லை’ என்று குறிப்பிடும் வாசகம் எவ்வளவு பெரிய உண்மை!’ தன் கண்முன்னே மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் நிகழும் ஒடுக்குமுறையும் அதனால் சகமனிதன் படும்அவமானங்களுமே பெரியாரை இந்தக் கலக வாழ்க்கையைக் கைக்கொள்ளச் செய்தது. இதுவே பெரியாரை ஓர் உலகக் குடிமகனாக, எல்லைகளைக் கடந்த தலைவனாக, தேசாபிமானங்களைத் தாண்டிய மனிதாபி மானியாக என்னை உணரச்செய்கிறது! தந்தை பெரியாருக்குச் சூட்டப்படும் அருமையான புகழ்மாலை இது! 

- தொடரும்


No comments:

Post a Comment