வள்ளுவர் கோட்டத்தில் ஒரு சங்கநாதம்! - கவிஞர் கலி. பூங்குன்றன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 7, 2023

வள்ளுவர் கோட்டத்தில் ஒரு சங்கநாதம்! - கவிஞர் கலி. பூங்குன்றன்


சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (6.9.2023) மாலை  "விஸ்வகர்மா யோஜனா" என்னும் ஒன்றிய பிஜேபி அரசின் ச(சா)தித்  திட்டத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்ட பொதுக் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.

"விஸ்வ கர்மா யோஜனா" என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு வெளிவந்த அந்தத் தருணத்திலேயே அதன் சூட்சுமத்தை முதலில் புரிந்து கொண்டவர் 'தகைசால் தமிழர்' நமது  தலைவர் ஆசிரியர் அவர்கள்தான்; காரணம் அவர்கள் அணிந்திருப்பது ஈரோட்டுக் கண்ணாடியாயிற்றே!

1979இல் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது,  பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ஆணையைக் கொண்டு வந்தபோது பலரும் அதன் "ஆலகால விஷத்தை"ப் புரிந்து கொள்ளாது மேலோட்டமாகக் கடந்து சென்ற நிலையில் - அன்றைய கழகத்தின் பொதுச் செயலாளர் நமது ஆசிரியர் இது சமூகநீதியின் ஆணி வேரில் "ஆசிட்டை"க் கொட்டும் அபாயகரமான செயல் என்பதை நுழைமான் நுண்புலத்தோடு அறிந்து, அப்பொழுதும் உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து நாடெங்கும் விழிப் புணர்வு மாநாடுகள் என்ற பெரு மழையைப் பொழிய வைத்தார்.

அரசமைப்புச் சட்டத்தில் - புரியாமலா சமூகநீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற முடிவை மேற்கொண்டனர்.

தீனதயாள் உபாத்தியாயா என்ற ஜன சங்கத்துக்காரரால் பொருளாதார அடிப்படையிலும் - என்பதையும் சேர்க்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டபோது வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்படவில்லையா?

அதை எல்லாம் எடுத்துக்காட்டி மக்களிடத்தில் பிரச்சாரம், போராட்டம் என்ற அணுகுமுறையைக் கையில் எடுத்துக் கொண்டு ஒத்த கருத்துள்ளவர்களை எல்லாம் ஒருங்கிணைத் துக் களமாடி வெற்றி பெற்றவர் நமது தலைவர் அல்லவா!

இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் கிடைக்கப் பெற்றுள்ளது என்றால் அதற்கான அடித்தளம் அமைத்தது திராவிடர் கழகமும், அதன் ஒப்பற்ற தலைவரும் தானே காரணம்!

அதேபோல் தான் இன்றைக்கு ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்படும் "விஸ்வகர்மா யோஜனா" என்ற திட்டமுமாகும். பசு மரத்தில் மறைந்திருக்கும் பாஷாண பாம்பு என்பது இதுதான்.

தொழில் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் நிதி உதவி என்று மேம்போக்காகப் பார்த்தால் - பசுமரத்தில் பதுங்கி இருக்கும் அந்தப் பாம்பின் கொடிய விஷத்தின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் எச்சரிக்கை!

திட்டத்தை அறிவித்தவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? பொதுவாக தொழில் வளர்ச்சி என்று சொல்லவில்லையே!

18 ஜாதிகளின் பட்டியலை வெளியிட்டு பரம்பரையாக தொழில் செய்வோர்க்கு (Traditional) இந்த கடன் உதவி என்பதன் பொருள் என்ன?

அதுவும் 18 வயதுள்ளவர்கள் முதற்கொண்டு விண்ணப் பிக்கலாம் என்ற விதிமுறை எதைக் காட்டுகிறது?

+2 முடித்து விட்ட  மாணவர்களைத் தூண்டில் போட்டு இழுக்கும் ஏற்பாடு தானே!

தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் என்றால், 18 ஜாதிகளின் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்குத்தான் என்ற எலிப் பொறி ஏன்?

இந்த அபாயகரமான ச(£)தித் திட்டத்தை உணர்ந்த காரணத்தால்தான், சமூகநீதியை பிராண வாயுவாகக் கொண்ட திராவிடர் கழகம், இதில் தன் முன் கை நீட்டி முன்னடியையும் எடுத்து வைத்து, 'மக்களே மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதீர்கள்!' என்று கூவிக் கூவி அழைக்கிறது.

"விஸ்வ கர்மா யோஜனா' அறிவிப்பு வந்த நிலையில் அவசர அவசரமாக சென்னைப் பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் திராவிடர் கழகத் தலைவர் கூட்டினார். (29.8.2023)

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியே நேற்று  (6.9.2023) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் சமூக நீதிச் சங்கமம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய தி.மு.க. காங்கிரஸ், சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க., திராவிட இயக்கத் தமிழர் பேரவை, விவசாயிகள் தொழிலாளர் கட்சி, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட நல சங்கங்களின் கூட்டமைப்பு,  முடி திருத்துவோர் சங்கம், பொதுக் கல்விக்கான மாநில மேடை, உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடி சங்கநாதம் செய்தனர்.

இந்திய துணைக் கண்டத்திலே எந்த முற்போக்கு சிந்தனைக்கும் முதல் சங்கு ஊதுவது தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண் தானே!

எனவே, இந்தப் பிரச்சினையிலும் கழகம் களத்தில் நிற்கிறது. சமூக நீதியாளர்களான சகோதரர்கள் கைகோத்து நிற்கிறார்கள்.

2024 மக்களவைத் தேர்தலிலும் இது முதல் வரிசையில் இருக்கப் போகிறது.

1980 ஜனவரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் - தோல்வியையே கண்டறியாத எம்.ஜி.ஆரை மண் கவ்வ வைத்தது கருஞ்சட்டையின் எழுச்சி தானே - சமூகநீதிப் பிரச்சினைதானே முதன்மையான காரணம்.

தமிழ்நாட்டின் இந்த முழக்கம் இந்திய துணைக் கண்டம் முழுவதும் எதிரொலிக்கட்டும்!

'விஸ்வகர்மா யோஜனா' என்பது தமிழ்நாட்டு மக்களின் கல்வியில் மட்டும் மண்ணை அள்ளிப் போடுகிறது என்று பொருள் அல்ல! இந்தியா முழுமையும் உள்ள பரம்பரை ஜாதித் தொழிலாளர்கள் வீட்டுப் பிள்ளைகளை, உயர் கல்விக்குப் போகவிடாமல், பாழுங் கிணற்றில் தள்ளும் பயங்கரமான சூழ்ச்சி சூல் கொண்டு நிற்கிறது.

வள்ளுவர் கோட்டத்தில் சமூகநீதியாளர்கள் கொடுத்த குரல் காஷ்மீர் எல்லைவரை எதிரொலிக்கட்டும்!

குறிப்பாக 'இண்டியா'வில் உள்ள அனைத்துக் கட்சியினரும், வாக்காளர் பெரு மக்களும் இதனை உள்வாங்கி சதிகார பிஜேபி ஆட்சிக்குக் கல்லறை எழுப்பட்டும்!

வெல்லட்டும் சமூக நீதி!

வீழட்டும் சமூக அநீதி!!


No comments:

Post a Comment