'இந்தியா' கூட்டணியைக் கண்டு பா.ஜ.க. நடுங்குகிறது சி.பி.அய். பொதுச் செயலாளர் டி. ராஜா பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

'இந்தியா' கூட்டணியைக் கண்டு பா.ஜ.க. நடுங்குகிறது சி.பி.அய். பொதுச் செயலாளர் டி. ராஜா பேட்டி

சென்னை, செப்.8 'இந்தியா' கூட் டணியைக் கண்டு பா.ஜ.க. நடுக்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது 'ஒரே நாடு ஒரே  தேர்தல்' என்று சொல்கிறார்கள். வருங்காலத்தில் 'ஒரே நாடு ஒரே கட்சி', 'ஒரே நாடு, ஒரே தலைவர்', என்ற நிலைக்கு போக கூடிய அபாயம் இருக்கிறது. இதுதான் சர்வாதிகாரம். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது ஏற்புடையது அல்ல. இதை செயல்படுத்த முடியாது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஏற்பதாக இல்லை. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஏற்கவில்லை. இந்தியாவின் பொரு ளாதாரம் மிக பெரியளவில் வளர்ந் திருக்கிறது என்று ஒன்றிய நிதி அமைச் சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார். ஆனால் இன்றைக்கு பொருளாதாரம் நிலைக்குலைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே போகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. இதற்கு எல்லாம் மோடியின் ஆட்சியில் பதில் எதுவும் இல்லை. நாட்டை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். பா.ஜ.க. ஆட் சியை அகற்றவேண்டும் என்ற குறிக்கோளோடு 'இந்தியா' என்ற கூட்டணி உருவாகி இருக்கிறது. இதனால் பா.ஜ.க.வுக்கு அச்சம், பதற்றம் ஏற்பட்டுள்ளது. சனாதன விவகாரத்தை பா.ஜ.க.தான் பிரச்சினையாக்கி உள்ளது. சனாதனத்துக்கான எதிர்ப்பை ஒரு மதத்துக்கான எதிர்ப்பு போன்று திசை திருப்பி உள்ளனர்.  சனாதனம் என்றால் என்ன என்பதை மக்கள் மன்றத்தில், மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் விவாதிக்க தயாரா? சனாதனம் என்பது ஜாதி கோட் பாட்டை, பெண்ணடிமையை நிலை நிறுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கை ஆகும். தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய கண்ணி யத்துடன், மரியாதையுடன், பொறுப்புடன் தனது கருத்துகளை முன்னெடுத்து வருகிறார். இது பாராட்டத் தக்கது. இவ்வாறு அவர் கூறினார். 

மறியல் போராட்டங்கள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணை செயலாளர் மு.வீரபாண்டியன் கூறுகையில், 'விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 12, 13, 14 ஆகிய 3 நாள்கள் தமிழ்நாடு தழுவிய அளவில் மறியல் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 12-ஆம் தேதி  அன்று காலை 10 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செய லாளர் இரா. முத்தரசன் தலைமையில் சென்னை பாரிமுனையில் உள்ள அஞ்சல் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெறும்' என்றார். 


No comments:

Post a Comment