சவாலை சந்திக்கத் தயார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 4, 2023

சவாலை சந்திக்கத் தயார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, செப். 4 சனாதனத்தை ஒழிப்போம் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சால் பா.ஜ.க. தலைவர்களும், அதன் ஆதரவாளர்களும், சங்கிகளும் அதிர்ச்சி யடைந்து அலறுகின்றனர். அவருக்கு எதிராகப் பொய்களை, அவதூறுகளை அள்ளிவீசுகின்றனர். 

 உதயநிதியின் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று அமித் மால்வியா என்பவர் (பா.ஜ.க.வின் ஊடகப் பிரிவு தலைவர்)  பதிவிட்டார்.  

அவதூறுகளுக்குப் பதிலடி கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலை செய்யவேண்டும் என நான் ஒருபோதும் அழைப்பு  விடுக்கவில்லை. சனாதன தர்மம்  என்பது ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத் தையும், மனித சமத்துவத்தையும் நிலை நிறுத்துவதாகும். நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன்.  

சனாதன தர்மத்தால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் சார்பாக நான் பேசினேன். சனாதன தர்மம் மற்றும் சமூகத்தில் அதன் எதிர்மறையான தாக்கம் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் விரிவான எழுத்துக்களை எந்த மன்றத்திலும் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். எனது உரையின் முக்கிய  அம்சத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன்: வைரசால் கோவிட் 19 பரவுவதுபோல, கொசுக்களால், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதுபோல, பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நான் நம்புகிறேன். நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை  எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.” என்று பதிவிட்டுள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘சனாதன தர்மத்தை மட்டும் விமர்சித்தேன், சனாதன தர்மத்தை ஒழிக்கவேண்டும் என்று மீண்டும் சொல்கிறேன். இதைத் தொடர்ந்து சொல்வேன். இனப்படுகொலைக்கு அழைத்தேன் என்று சிலர் சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்கள். திராவிடத்தை ஒழிக்கவேண்டும் என்று தொடர்ந்து கூறுகிறார்கள். அப்படி என்றால், திராவிடர்கள் கொலை செய்யப்படவேண்டும் என்று பொருளா? ‘காங்கிரஸ் முக்த் பாரத்' (காங்கிரஸ் இல்லாத இந்தியா) என்று பிரதமர் கூறும்போது, காங்கிரசார் கொல்லப்படவேண்டும் என்று அர்த்தமா? சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்றால், எதுவும் மாறக்கூடாது, அனைத்தும் நிரந்தரம். ஆனால், திராவிட மாடல் மாற்றத்தை அழைக்கிறது. அனைவரும் சமமாக இருக்கவேண்டும் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

No comments:

Post a Comment