பேரறிஞர் அண்ணா - புகழ் மாலைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

பேரறிஞர் அண்ணா - புகழ் மாலைகள்

அண்ணாவை அறிஞர் அண்ணா என்று சொல்லக் காரணம் அவரது அறிவின் திறம் தான். அவரது ஆட்சிக் காலத்தில் எந்தத் தமிழனுடைய உரிமையையும் அவர் புறக்கணிக்கவில்லை. அதனாலேயே தமிழர் சமுதாயத்தினுடைய அன்பை இதுவரை யாரும் பெற்றிராத அளவுக்கு அண்ணா பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கிறது. நாட்டில் எல்லாக் கட்சியாருடனும், எல்லா மக்களுடனும் மிக்க அன்புக்குரியவராகவும் நேசமாகவும் இருந்து வந்தார். அண்ணாவின் குணம் மிக தாட்சண்ய சுபாவமுடையது. யாரையும் கடிந்து பேச மாட்டார். தன்னால் முடியாத காரியமாய் இருந்தாலும், முடியாது என்று சொல்லத் தயங்குவார்.

- தந்தை பெரியார்

***

"அண்ணாதுரையைப் பின்பற்றியவர்கள் அவரைப் பின்பற்றியது மட்டுமன்றி அவரை நேசித்தனர். மக்களின் அன்பைக் கவருகிற இத்திறனே தலைவர்களை உண்டாக்குகிறது".

- மூதறிஞர் இராஜாஜி

***

அண்ணாதுரை என்னும் அண்ணல் தமிழ்நாட்டு

வண்ணான்,

அழுக்கெடுப்பில், வாய் மொழியில் - பண்ணாவான்

சிற்பன் எழுத்தோவியத்தில் செவ்வரசு; நாவாயின்

அற்புதம் சூழ் மாலுமி என்று ஆடு.

- திரு.வி.க.

***

"தோழர் அண்ணாதுரை கருத்துப்

புரட்சி செய்துவரும் வீரர்

அவர் எழுதும் தலையங்கங்களிலும்

பேசும் பேச்சுகளிலும் புரட்சி

வித்துக்கள் நிறைந்துள்ளன”.

- டாக்டர் மு. வரதராசனார்

***

பால்போன்ற நகைச் சுவைக்குப்

பெர்னாட்ஷா என்பார்கள்

மேலான அறிவியலில்

எம். என். ராய் என்பார்கள்

கோலக் குளிர் நடைக்குக்

கோல்ட்சுமித்தே என்பார்கள்

அவரெல்லாம் உரைகல் தான்

அண்ணா ஓர் அசல் தங்கம் !

- கவிஞர் எஸ்.டி.சுந்தரம்

***

வான்புகழும் திருக்குறளை உலகுக் கீந்து

வகைமலிந்த கலைபலவும் வளர்த்த தாயாம்

தேன்வடியும் தமிழ்மொழியின் திறத்தைப் போற்றித்

தென்னகத்தின் பழஞ்சிறப்பை மீட்போம் என்று

ஊன்உருக உளம் உருக உணர்ச்சி பொங்க

ஊக்கமதைத் தூக்கிவிடும் உரைக ளாற்றித்

தான்பிறந்த தமிழ்நாட்டின் மேன்மைக் காகத்

தவிக்கும் அண் ணாதுரையவர்கள் வாழ்க! வாழ்க!

- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

***

மாண்புமிக்க உயர்திரு. சி. என். அண்ணாதுரை அவர்கள் கல்வியறிவில் அதியுயர்வும், பேனாவின் வல்லமையில் அரிய திறனும், நாவன்மையில் இனிய பெருஞ்சிறப்பும் படைத்திருப்பதோடு குணவொழுக்கப் பண்பாட்டிலும் அருமை மிக்க மேம்பாட்டைப் பெற்றவராய் விளங்கி நிற்கின்றார்.

- காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப்

***

அண்ணாதுரை இந்த மதிப்பு மிகுந்த மாமன்றத்தில், மேலவையில் உறுப்பினராய் இருந்தார். மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று விலகிச் சென்று தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருந்த உறவு முறையில் அவர் நடுநிலையோடு நடந்து கொண்டார். மாறுபட்ட அரசியல் கட்சியில் இருப்பினும் கூட அதை அவர் வெளிக் காட்டவில்லை. அண்ணாதுரை உண்மையான ராஜதந்திரி; புகழ்வாய்ந்த இந்தியர்.

- மேனாள் பிரதமர் இந்திரா காந்தி

***

திரு. அண்ணாதுரையை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். மாநிலங்களவை உறுப்பினராகத் டில்லி வந்தபோதும் பார்த்திருக்கிறேன். நான் அவரது கன்னிப்பேச்சை மாநிலங்களவையில் கேட்டேன். அந்தச் சபைக்குள்ளே மிகவும் மனங்கவரத்தக்க வகையில் இருந்தது.

- மேனாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்

***

ஆங்கிலம் கற்றவர்களில் பலர் அம்மொழியிலேயே ஆழ்ந்து விடுகின்றனர். இரண்டொருவர் கரையேறினாலும் அவர்கள் ஏறியது தமிழ்நாட்டுக் கரையாக இருப்பதில்லை. ஆங்கிலக் கடல் நீந்தித் தமிழ்க் கரையேறிய அறிஞர்களில் அன்பர் அண்ணாதுரையும் ஒருவர்.

- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்

***

உருவத்தில் தமிழன் - உயர் குணத்தில் தமிழன் - அன்பு எனும் பண்பில் தமிழன் - அடக்கத்திலும் தமிழன்- ஆண்மையில் தமிழன் நம் அண்ணா.

- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

***

அண்ணா நாடாளுமன்றத்திற்கு வந்தது அவரைத் தேசத்தின் அரசியல் வாழ்யோடு நெருங்கிய தொடர்பு கொள்ளச் செய்தது. நாடெங்கிலும் மக்களின் அன்பையும், மதிப்பையும் பெற இது பெருமளவு உதவியது. இந்த அவையில் அவர் ஆற்றிய உரைகள் மரியாதையுடன் கேட்கப்பட்டன. ஏனெனில் அவர் நெஞ்சத் தூய்மையுடனும் பண்பாட்டுடனும் பேசினார்.

- மேனாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி

***

திருச்சிராப்பள்ளியில் `ஓர் இரவு' என்னும் நாடகத்தைப் பார்த்தேன்; பார்த்ததன் பயனாக, "இதோ ஒரு பெர்னாட்ஷா தமிழ்நாட்டில் இருக்கிறார். இப்ஸனும் இருக்கிறார். இன்னும் கால்ஸ்வொர்த்தியும்கூட இருக்கிறார் என்று தோன்றியது.

திராவிடக் கட்சி - சுயமரியாதைக் கட்சி - ஜஸ்டிஸ் கட்சிச் சொற்பொழிவாளர்களிலே தற்சமயம் தலைசிறந்து விளங்குகிறவர் திரு. சி.என். அண்ணாதுரை அவர்கள். அவர் சொற்பொழிவுகள் சிலவற்றை நான் கேட்டிருக்கின்றேன். சொற்பொழிவு என்றால் இதுவல்லவா சொற்பொழிவு, தட்டுத் தடுமாறிச் சொற்களுக்குத் திண்டாடி நிற்பதையெல்லாம் சொற்பொழிவு என்கிறோமே என்று எண்ணத் தோன்றும்.

- கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி

***

திருவாளர் சி.என். அண்ணாதுரை அவர்களை அறியாத தமிழர் இரார். தென்னாட்டில் அவர்களைத் தெரியாதார் யாரும் இரார்.

இவர் ஆங்கிலத்தில் பண்டிதர். பட்டத்தால் மட்டும் பண்டிதராய்த் திரிபவர் பலர் உளர். எனில், எழுத்திலும், பேச்சிலும், பழுத்தமொழி ஆட்சியிலும் திறனுடையார் மிகச் சிலரே: அத்தகைய நல்ல நடை வல்லார்தம் வரிசையிலே முன் அணியில் இடம் உடையார் இவர். தமிழினிலோ. அமிழ்துமிழும் சொல்வளமும், உணர்வெழுப்பும் தொடர்ச் செறிவும், குரவரிடம் கல்லாமல் தான் பயின்று திறம் பெற்ற சொல்லின் செல்வர்.

தமிழ் உயர்வும், தமிழர் தமது உரிமையையும் பெற உஞற்றும் மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவராவார். முடிசூடா மன்னனென இளந்தமிழர், எழுத்தாளர் புகழ்புலவர்.

- நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்

***

No comments:

Post a Comment