நமது வாழ்வின் முக்கிய பயணம் இதோ (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 23, 2023

நமது வாழ்வின் முக்கிய பயணம் இதோ (2)

 நமது வாழ்வின் முக்கிய பயணம் இதோ (2)

மன்னித்து விட்டபிறகு மனம் லேசாகி, இதயத்தை அன்பு நதியின் ஈரத்தோடு எப்போதும் வைத்திருக்க அந்த மன்னிக்கும் பண்பும், மன்னித்த பாங்கும் நமக்குப் பெரும் நிம்மதியை, ஆறுதலை, ஏன் உண்மை மகிழ்ச்சியையும் தருகிறது.

மன்னிக்காது, வன்மத்தை வளர்த்துக் கொண்டே போகும்போது, நாம் நம்மைப் பற்றி எண்ணுவதைவிட, நம்முடைய வருங்கால பய ணங்களில் கண்டு மகிழ வேண்டிய காட்சிகளான வாய்ப்புகளை இழந்து விட்டு, எப்போதும் நமது துரோகிகளையோ, வஞ்சித்தவர்களையோ தான் நமது நெஞ்சத்தில் சுமைந்து அலைகிறோம்.

தேவையா இச்சுமை? மன்னிப்பு மூலம் அவர்களை நம் இதயத்திலிருந்து வெளியேற்றி விட்டு உண்மையாகவே நாம் அனுபவிக்கும் பல்வேறு உணர்வுகளை நாம் சுகமான சுமைகளாக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதன்மூலம் கிட்டுகிறதல்லவா?

எனவே நான் எதிரியிடம் சிறைப்பட்ட - சதா அதையே நினைத்து, அவனைப் பழிவாங்குவ தெப்படி என்பதையே நினைத்து  மகிழ்ச்சிக் காற்றை  சுவாசிக்கும் வாய்ப்பை நானே ஏன் தடுத்துவிட வேண்டும் என்பது முக்கிய கேள்வி அல்லவா?

அதற்குப் பதிலாக உங்கள் ஆத்திரம், வன்மம் - இவைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துப் பாருங்களேன். விளைவு?

கோபம், வெறுப்பு இவைகளை கட்டுக்குள் வைக்காமல் அவற்றின் ஆளுமைக்கு நாம் ஆட்படும்போது நமது நிலை என்ன?

சற்றே எண்ணிப் பாருங்கள்;  நமது தசைகள் எல்லாம் முறுக்கிக் கொண்டு, இதயமெல்லாம் கடும் படபடப்புடன் - தோலில் ஏதோ ஒன்று வந்து தொடர் தாக்குதலில் ஈடுபடுவது போன்ற வலி, மூச்சில் வேகம், ரத்தக் கொதிப்பு, நாவறட்சி, தொண்டை அடைத்தல், தெளிவற்ற குழப்பம் நிறைந்த பார்வை இவைகள்தானே மிச்சம்?

பாதிக்கப்படுவது யார்? நாமா? நம் எதிரிகளா? துரோகிகளா?

உடல் நலமும், உள்ள நலமும் ஒருமித்து பாதிப்பு அடைவதை மன்னிப்பு என்ற மாபெரும் மருந்து "தடுத்தாட்கொண்டு" நமக்கு அமைதியான இன்பத்தை நோக்கிய திசை காட்டுவது - மன்னிப்பு என்ற பயணம்!

கருணை காட்டுவது நமக்கு நல்லது! "எப்படி கொடை கொடுப்பவரை அக்கொடை மேலும் உயர்த்திட்டு உண்மை செல்வவானாக்குகிறது தூங்குகிறவரை விட" என்று வள்ளுவர் கூறுவது போல், கருணை காட்டுவதும் நம்மை மேலும் பண்பை பாசத்தோடு கூட்டும் உண்மை மனிதம் நிறைந்த மனிதனாக அல்லவா உயர்த்துகிறது?

அதைவிட மிகப் பெரிய இன்பம் ஏது?

ஒரு மனிதனை நாம் வெறுக்குமாறு சதா அவனைப்பற்றி நினைத்துக் கொண்டே பொருமிக் கொண்டே இருப்பது மட்டுமல்ல, நாளடைவில் நாமும் அவனது நிலைக்கு நம்மை அறியாமலேயே தாழ்ந்து வீழ்ச்சியடைகிறோமா  இல்லையா?

ஆழ்ந்து யோசித்த பிறகே இது புரியும்; உங்கள் இதயத்தில் நீண்ட காலம் வாழும் குடக் கூலியான எதிரியை தொடர்ந்து இருத்திக் கொள்ளாமல் வெளியேற்றி உங்களிடம் அன்பு, பாசம், உண்மை அன்பு காட்டும் மனிதர்களை குடியேற்றி வைத்துக் கொள்ள முயற்சியுங்கள்.

"சமூகத்திடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் எப்போதும் நாம் பெறுவதைவிட நாம் அவர்களுக்கு தருவதே பெரிய அளவில் இருக்க வேண்டும்" என்ற இலக்கில் நமது அந்தப் பயணம் இருந்தால் நமக்குக் கசப்பான அல்லது வெறுப்பான துன்ப இயலாக நம் வாழ்க்கை ஒரு போதும் மாறாது!

அது நம் முடிவில் மட்டுமே உள்ளது - 'தீதும் நன்றும் பிறர்தர வாரா.' உண்மையின் 'ஸ்கேன்' வடிவச் சொற்கள் அல்லவா அந்த கணியன் பூங்குன்றனார் அறிவுரை!

உங்கள் பிறந்த நாளை உங்கள் நண்பன் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் அவரின் பிறந்த நாளை நீங்கள் மனதில் எழுதி வைத்திருக்க வேண்டாமா?

அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்காதே என்று பெற்றோர்கள், குழுந்தைகளுக்கு அறிவுரை கூறி, கடும் கட்டுப்பாடு விதிக்கும் முன்பு, தாங்கள் தொலைக்காட்சியைப் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு, இந்த அறிவுரையைக் கூறினால்தானே அக்குழந்தைகள் அதனை 'சீரியசாக' எடுத்து மனம் மாறி, குறைந்த அளவே அதைப் பார்க்கும் நிலை ஏற்படும்? இல்லையா?

எனவே முதலில் நம்மை பக்குவப்படுத்த ஆயத்தமாகுங்கள்.

இவற்றை எப்போதிலிருந்து ஆரம்பிக்கலாம் என யோசிக்காதீர்கள்.

"இப்போதிலிருந்தே தொடங்கி விட்டேன்!" என்று உறுதி கூறி செயல்படுங்கள்.

உங்கள் பயணம் வெற்றிப் பயணமாகி உங்களது வாழ்க்கை இன்ப  ஊற்றாக என்றும் இருக்கும்!

எதையும் நம்மிலிருந்து நாம் தொடங்குவோம்  பிறரை எதிர்பாராமல் - ஆயத்தமாகி விட்டீர்களா நண்பர்களே!

No comments:

Post a Comment