எத்தனை வழக்குகள் தான் வரட்டுமே, சந்திக்கத் தயார்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரத்த குரல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

எத்தனை வழக்குகள் தான் வரட்டுமே, சந்திக்கத் தயார்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரத்த குரல்

சென்னை, செப்.5 சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை  என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (4.9.2023) நடைபெற்றது. இதில் இந்த துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். 

அப்போது அளித்த பேட்டி வருமாறு:- 

கேள்வி: நீங்கள் சனாதனம் குறித்துப் பேசியது இனப்படுகொலை போன்று... 

பதில்:  நான் பேசும்போது எந்த இடத்திலும் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். மாற்றுகிறார்கள். சனாதனம் என்றால் எல்லாமே நிலையானது. மாற்ற முடியாது என்று ஒரு அர்த்தம் சொல்கிறார்கள். ஆனால் பெண்கள் படிக்கக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றார்கள். ஒரு காலத்தில் கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறவேண்டும். பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்றார்கள். இதையெல்லாம் சட்டப்போராட்டம் நடத்தி மீட்டு உரிமையை பெற்று தந்துள்ளோம். 

எனவே எல்லோருக்கும் எல்லாம் என்பது திராவிடம் என்று நான் பேசினேன். காங்கிரஸ் இல்லாத இந்தியா வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். அவர் காங்கிரஸ் கொள்கையை எதிர்க்கிறார். எனவே அவர் பேசியது இனப்படுகொலை என்றால், நான் பேசியதும் இனப்படுகொலைதான். தி.மு.க. தொடங்கப்பட்டதே சமூக நீதிக்காகத்தான். எந்தவொரு மதத்துக்கு எதிராகவும் நான் பேசவில்லை. மதத்துக்குள் இருக்கிற ஜாதி பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்பதை தான் தி.மு.க. பேசி வருகிறது.

வானதி சீனிவாசனுக்கு பதில்

கேள்வி: உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையை கூட உங்களால் ஒழிக்க முடியவில்லை என்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர். வானதி சீனிவாசன் கூறியுள் ளாரே?

பதில்: சாமி கும்பிடக்கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லை. இது அவரவர் விருப்பம். முன்பு ஜாதியை வைத்து கோவிலுக்குள் எல்லோரையும் உள்ளே அனுமதித்தார்களா? அதற்கு நாங்கள்தான் சட்டப்போராட்டம் நடத்தினோம். அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகும் உரிமையை பெற்று தந்ததும் தி.மு.க. - எங்களுடைய தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் அதிக உறுதியுடன் இருக்கிறேன். இதனால் என் மீது எத்தனை வழக்குகள் வந்தாலும் பரவாயில்லை. பார்த்துக்கலாம். 

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

நேற்று (4.9.2023) மாலையில் தூத்துக்குடி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்தில் கூறியதாவது:-

சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை. நான் பேசியதில் தவறு இல்லாதபோது, எதற்கு பதவி விலக வேண்டும்? சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டு இருந்தனர். கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.

'திராவிட மாடலால்' அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை உணவு திட்டம், பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை 'திராவிட மாடல்' ஆட்சி கொண்டு வந்துள்ளது. அனைத்து மதங்கள் குறித்தும் பேசினேன். ஹிந்து மதம் குறித்து மட்டும் பேசவில்லை. நான் பேசக்கூடாது என்றால், திரும்பத் திரும்பப் பேசுவேன். 

இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment