மதுரை: திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 4, 2023

மதுரை: திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

 பார்ப்பனர்களை விரட்டி, அவர்களுக்கு இட ஒதுக்கீடு
கொடுக்கவே கூடாது என்பதல்ல நம்முடைய தத்துவம்! 

உங்கள் பங்கை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்; எங்கள் பங்கை எங்களுக்குத் தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்!

மதுரை, செப்.4 ‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’ என்று சொல்லும்பொழுது நண்பர்களே, பார்ப்பனர்களை விரட்டி, அவர்களுக்குக் கொடுக்கவே கூடாது என்பது நம்முடைய தத்துவம் அல்ல. யாருக்கும் விரோதமாக இல்லை நாம்; யாரையும் பட்டினிப் போடுவது என்பது நம்முடைய கருத்து அல்ல. பழிவாங்கவேண்டும் என்பது சமூக நீதி அல்ல. மாறாக, உங்கள் பங்கை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்; எங்கள் பங்கை, எங்களுக்குத் தாருங்கள் என்றுதான் நாம் கேட்கிறோம்.என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கம்

கடந்த 18.8.2023 அன்று மாலை மதுரை தமிழ்நாடு விடுதியில் நடைபெற்ற திராவிடர் கழக சட்டத் துறை கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

தேவையான முழக்கங்களோடு, கோரிக்கைகளோடு வழக்குரைஞர்களுடைய கருத்தரங்கம் மதுரை தோழர் களாலே, மதுரை வழக்குரைஞர் நண்பர்களாலே திராவிடர் கழகத்தின் சட்டத்துறையின் சார்பில் சிறப்பாக நடை பெறக்கூடிய இந்த அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, நேரத்தின் நெருக்கடியால் விடை பெற்றுச் சென்ற திராவிடர் கழக சட்டத் துறை தலைவர் அருமை நண்பர் வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்களே,

இந்நிகழ்வில் சிறப்பாக கலந்துகொண்டு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய அரசு கூடுதல் தலைமை வழக் குரைஞர் பெருமைக்கும், பாராட்டுதலுக்கும் உரிய அய்யா வீர.கதிர வன் அவர்களே, அதேபோல, பெருமைக்கும், பாராட்டு தலுக்கும் உரிய அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் உயர்திரு. பாஸ்கரன் அவர்களே, மாநில சட்டத் துறை துணை செயலாளர் வழக்குரைஞர் ந.கணேசன் அவர்களே, வரவேற்புரையாற்றிய பெருமைக்குரிய திராவிடர் கழக சட்டத்துறை செயலாளர் சித்தார்த்தன் அவர்களே,

இங்கே உரையாற்றிய வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களே, மாநில சட்டத் துறை இணை செயலாளர் அவர்களே,

இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கின்ற பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

துணிவுசால் நீதிபதி அரிபரந்தாமன்

இந்நிகழ்வில், எனக்கு முன் சிறப்பான, ஒரு நீண்ட ஆதாரப்பூர்வமான, யாரும் மறுக்க முடியாத தகவல் களை இங்கே எடுத்துச் சொல்லி, இந்தக் கருத்தரங் கத்தினுடைய நோக்கம் என்ன? என்பதை நியாயப் படுத்தி, எல்லோருக்கும் ஆயுதங்களைக் கொடுப்பதைப் போல, ஒரு பெரிய சமூகநீதிப் போரில், மிகப்பெரிய ஆயுதப்பட்டறையிலிருந்து ஆயுதங்களைக் கொடுப்ப தைப்போல, ஆதாரப்பூர்வமான பல்வேறு வகையான அரிய தகவல்களையெல்லாம் எடுத்துச் சொன்ன துணிவுசால் நீதிபதி - என்னை ‘தகைசால்' என்று சொன்னார்கள் - ஆனால், இவர் துணிவுசால் நீதிபதி - இதற்குமேல் தனக்கு ஒன்றும் தேவையில்லை என்று நினைப்பதால், துணிச்சல் தானாக வருகிறது. இன்னும் எங்கே போவது? எங்கே போவது? என்று இருந்தால், துணிச்சல் குறையும். நம்மவர்கள் எவ்வளவு தெரிந்த வர்கள் இருந்தாலும், அவர்களுக்குத் துணிவு குறைவாக இருப்பதற்குக் காரணம், ‘ஆஸ்பிரேசன்' என்று சொல் லக்கூடிய மனிதர்களுக்கு இருக்கக்கூடிய பலகீனம்தான். ஆனால், சமூகத்தைப் பார்க்கின்றபொழுது, அவற்றைப் பின் தள்ளி, சமூகத்தினுடைய வளர்ச்சியை, ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைக் குரலை உயர்த்தும்பொழுது, தனித்தன்மையோடு எப்போதும் தனித்து உயர்ந்து இருப்பவர் அய்யா அரிபரந்தாமன் அவர்களாவார்கள். அவர்கள் மிக அற்புதமான செய்திகளை இங்கே எடுத்துரைத்தார்.

அதுபோலவே, நம்முடைய மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ அவர்கள், சிறப்பான பல தகவல் களை இங்கே எடுத்துச் சொல்லி விடைபெற்றுச் சென்றார். அதுபோலவே, எப்போதும் நம்மிடம் இருக்கக் கூடிய கொள்கையாளர், லட்சிய வீரர், உயர் செயல்மட்ட திட்டக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் சகோதரர் பொன்முத்துராமலிங்கம் அவர்களே,

இப்படி சிறப்பாக மற்றும் இங்கே திரளான அளவிற்குப் பங்கேற்கக்கூடிய திராவிடர் கழகத்தின் சட்டத் துறை பொறுப்பாளர்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதிபதி அரிபரந்தாமன் முன்மொழிந்ததை அப்படியே வழிமொழிகிறேன்!

இங்கே அய்யா ஜஸ்டிஸ் அரிபரந்தாமன் அவர்கள் அழகாக எடுத்துச் சொன்னார். முதலில் ஒரு வார்த் தையைச் சொல்லுகிறேன்; அவர் முன்மொழிந்ததை அப்படியே வழிமொழிகிறேன்.

அதற்கு மேல் ஒரு சில கருத்துகளைச் சொல்லுகிறேன்.

தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது பெற்ற மைக்காக எல்லோரும் என்னைப் பாராட்டினீர்கள். உங்களுடைய பாராட்டிற்குத் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியாரின் கருத்து!

அதேநேரத்தில், பொதுவாக தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள், ‘‘என்னைப் பொறுத்தவரையில் வாழ்க என்பதற்காக நான் மகிழ்ச்சியடைந்தால், என்னை வாழ்க என்று சொல்பவர்களைவிட, ஒழிக என்று சொல்பவர்கள்தான் அதிகம். அதற்காக நான் மிகவும் கவலைப்படவேண்டி இருக்கும்; வாழ்க என்று சொல் வதைக் கேட்டு நான் மகிழ்பவனும் அல்ல; ஒழிக என்று சொல்வதைக் கேட்டு நான் கவலைப்படுவதுமில்லை'' என்று சொல்வார்.

அந்த மனநிலையைத்தான் பெரியார்தம் தொண்டர் களுக்கு உருவாக்கி இருக்கிறார்கள்; அந்த வகையில் இருந்தாலும், உங்கள் அன்பிற்கு ஏற்ப மேலும் உழைப்பேன்; இறுதிவரையில் உழைப்பேன்.

ஒரு போராளியாக எப்பொழுதும் இருக்கிறேன் என்று அய்யா அரிபரந்தாமன் அவர்கள் சொன்னதுதான் எனக்குப் பெருமை.

விருது பெற்றேன் என்பதல்ல; ஒரு போராளியாகத் தான் எப்பொழுதும் வாழவேண்டும்; மற்றவர்கள் பின்வாங்குகிற இடத்தில் இருக்கவேண்டும். அதுதான் வாழ்க்கைப் பயனுள்ளதாக இருக்கும்.

‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை'' என்றார் தந்தை பெரியார் அவர்கள்.

எனவே, நாம் யாரும் தானாகவும் பிறக்கவில்லை; தனியாகவும் பிறக்கவில்லை.

சமூகத்திற்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்விக்கான விடை காணக் கூடிய...

சமூகத்தில் நாம் ஓர் அங்கம். அந்த சமூகத்திற்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்விக்கான விடை காணக் கூடிய ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண் டிருக்கின்றேன்.

அதனுடைய விளைவுகளாக இதுபோன்ற விருதுகள் கிடைக்கின்றன. உங்கள் அனைவருக்கும் நன்றி!

தோழர்களே, குறிப்பாக ஒன்றிரண்டு தகவல்களை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இப்பொழுது இருக்கின்ற நிலை என்ன?

ஜஸ்டிஸ் வரதராஜன் அவர்கள், பட்டியல் இனம் என்று சொல்லக்கூடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். பட்டியல் இனம் என்பதைவிட, தாழ்த்தப்பட்டு இருந்தார்கள் என்று சொன்னால்தான், அந்த உணர்ச்சி வரும் நமக்கு. பிற்படுத்தப்பட்டோர் என்று சொல்லும் பொழுது, யார் நம்மை பிற்படுத்தியவன்? யார் நம்மை தாழ்த்தியவன்? என்கிற கோபம் வரவேண்டும் சமூகத் திற்கு. அந்த வார்த்தைகளை  அதற்காகத்தான் பயன்படுத்துகின்றோம்.

தந்தை பெரியாருக்கு, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் நடத்திய வரவேற்பு விழா!

ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து பெரியார் அவர்களுக்கு ஒரு வரவேற்பு விழா நடத்தி, நன்றி சொன்னார்கள்.

 கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டம் அது.

சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் அவ்விழா நடைபெறுகிறது.

அய்யாவின் உழைப்பினால்தான் நாங்கள் இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம் என்று உரையாற்றிய எல்லோரும் சொன்னார்கள்.

பெரியாரின் மனதில் எழுந்த கேள்வி!

தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது, ‘‘உங்களுடைய ஆற்றல், திறமை எல்லாம் இருந்த தினால்தான் இந்நிலைக்கு வந்திருக்கிறீர்கள். நான் ஏதோ பாடுபட்டேன், அவ்வளவுதான். அது ஓரளவிற்குப் பயன்பட்டது. உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்; தன்மானம் வேண்டும்'' என்றெல்லாம் சொல்லிவிட்டு, ‘‘நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்கள்; என்னுடைய சிந்தனையெல்லாம் எங்கே இருக்கிறது என்றால், சென்னை உயர்நீதிமன்றம் ஏற்பட்டு, நூறாண்டுகளுக்கு மேல் ஆகிறது; இந்த நூறாண்டில், ஒரே ஒரு எஸ்.சி., சமுதாயத்தைச் சேர்ந்தவர்கூட ஏன் நீதிபதி ஆக வில்லை? என்கிற கேள்விதான் என் மனதில் எழுகிறது.

நீங்கள் எல்லாம் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரி களாக ஆகியிருக்கிறீர்கள். ஆனால், நீதிபதியாக வில்லையே என்கிற கேள்வி இருக்கிறது. இன்றைய ஆட்சி அதனை செய்யவேண்டும். 

வேறு எந்த ஆட்சியில் நடைபெறும்?

தி.மு.க. ஆட்சி, கலைஞர் ஆட்சி, அண்ணாவிற்குப் பிறகு வந்திருக்கின்ற ஆட்சியில், அது நடைபெறவில்லை என்றால், வேறு எந்த ஆட்சியில் நடைபெறும்?

ஆகவே, நான் சொல்கிறேன், உடனடியாக ஒடுக் கப்பட்ட சமுதாயத்திலிருந்து குறிப்பாக ஆதிதிராவிட சமுதாயத்திலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் வரவேண்டும்'' என்று சொன்னார்.

எல்லோரும், பெரியார் அவர்கள் பாராட்டு விழாவிற்கு நன்றி சொல்லி பேசுவார் என்று நினைத்திருந்த அனைவருக்கும் பெரியாரின் பேச்சைக் கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. 

‘விடுதலை'யில் தலையங்கம்!

விழா முடிந்து நாங்கள் வேனில் திரும்பிக் கொண் டிருந்தபொழுது, என்னைப் பார்த்து, ‘‘வீரமணி, நீங்க நாளைக்கே ‘விடுதலை'யில் தலையங்கம் எழுதுங்கள்; இங்கே நான் பேசியதைப்பற்றி; முதலமைச்சர் படிப்பார் அதை'' என்று சொன்னார்.

‘விடுதலை'யில், அய்யாவின் பேச்சை தலையங்கமாக எழுதினேன்.

முதலமைச்சர் அதைப் படித்துவிட்டு, சட்ட அமைச்சர் மாதவனை அழைத்தார்; அன்றைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சராக சவான் அவர்கள் இருந்தார்.

நல்ல வாய்ப்பாக ஜஸ்டிஸ் வீராசாமி அவர்கள் தலைமை நீதிபதியாக இருந்தார். அவருக்கு ‘விடுதலை' நாளிதழை அனுப்புங்கள் என்றார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

உடனடியாக ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள் என்று முதலமைச்சர் கலைஞர் சொன்னார்.

ஜோலார்பேட்டையைச் சேர்ந்த வரதராஜன்

மாவட்ட நீதிபதி வரிசையில் 11 ஆவது இடத்தில் இருக்கிறார் நம்முடைய வரதராஜன் அவர்கள். ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் அவர். கடலூரில் மாவட்ட நீதிபதியாக அன்றைக்கு இருந்தார் அவர்.

உடனடியாக விமானத்தில் சென்று, அவரை நேரில் சென்று சந்தியுங்கள் என்று தனியாக ஒரு கோப்பை தயார் செய்து அனுப்பினார்.

தலைமை நீதிபதியாக இருந்த வீராசாமி அவர்களும் அதற்கு முயற்சித்தார். 

நூற்றாண்டு விழா நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர்

ஒரு வாரத்திற்குள் எல்லாம் நடந்தது. கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நேரத்தில் நாம் அதனை பெருமையோடு நினைக்கவேண்டிய செய்தியாகும் இது.

‘‘நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன்; சமூகநீதியின்மீது நம்பிக்கை உள்ளவன்; எத்தனை மிகமிக மிக வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்'' என்று கலைஞர் அவர்கள் சொன்னார். எனக்குப் பெரிய பாரம்பரியம் கிடையாது என்று சொல்லி, பதவிக்கு வந்தவர் அவர்.

ஹண்டே அவர்கள் சட்டப்பேரவையில், இது மூன்றாந்தர அரசு என்று சொன்னபொழுது, அவையில் இருந்த தி.மு.க. உறுப்பினர்கள் கோபப்பட்டு எழுந்த பொழுது, நீங்கள் அமைதியாக இருங்கள்; நான் பதில் சொல்கிறேன் என்றார்.

மூன்றாந்தர அரசல்ல - சூத்திர மக்களுக்காக இருக்கின்ற நாலாந்தர அரசு!

‘‘ஹண்டே அவர்கள் மூன்றாந்தர அரசு என்று சொன்னார்; இல்லை, என்னுடைய அரசு நாலாந்தர அரசு. நாலாந்தர மக்களாக இருக்கின்ற சூத்திர மக் களுக்காக, பஞ்சம மக்களுக்காக இருக்கக்கூடிய அரசு'' என்றார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

ஆகவே, அவ்வளவு வேகமாக செயல்கள் நடை பெற்று, ஒரு வாரத்திற்குள் மாவட்ட நீதிபதி வரதராஜன் அவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

பொறுப்பேற்ற பிறகு, அய்யா பெரியார் அவர்களைப் பார்க்கவேண்டும் என்று வந்தார்; பார்க்க முடியாமல் சென்றார்.

என்னுடைய வேலையை நான் செய்கிறேன்; உங்களுடைய பணியை நீங்கள் பாருங்கள்!

‘‘என்னை எதற்காக நீங்கள் பார்க்கவேண்டும்; என் னுடைய வேலையை நான் செய்துகொண்டிருக்கிறேன்; என்னை நீங்கள் பார்க்கவேண்டாம்; உங்களுடைய பணியை நீங்கள் செய்யுங்கள்'' என்றார் தந்தை பெரியார் அவர்கள்.

யாரும் வந்து பார்ப்பதைக்கூட தந்தை பெரியார் அவர்கள் விரும்பமாட்டார்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்.எஸ்.மலையப்பனை தந்தை பெரியார் அவர்கள் பார்த்ததே கிடையாது; ஆனால், அவருக்காக சிறைக்குப் போனார் தந்தை பெரியார் அவர்கள்.

ஆக, இப்படி அந்த உணர்வோடு  நடந்ததால், ஒன்றிரண்டு கிடைத்தது. நியாயமாகக் கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை.

இன்றைக்கு ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்கிறேன் - இன்றைக்குத் தமிழ்நாட்டில் என்ன நிலை?

நல்ல வாய்ப்பாக இந்த மேடையைப் பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது; இன்றைக்கு அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக நம்மவர்கள் இருக்கிறார்கள். பெரிய பதவிக்கு வந்திருக்கிறார்கள்.

இதுபோன்ற பதவிகள் உச்சநீதிமன்றத்திலும் இருக் கிறதே - அந்தப் பதவியில் ஒடுக்கப்பட்ட நம்மவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டாமா?

அனைவருக்கும் அனைத்தும்‘’ என்று வந்ததினால்தான்....

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒடுக்கப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்தவர்கள் பதவியில் இருக்கிறார்களே, அதற்கு என்ன காரணம்? ‘திராவிட மாடல்' ஆட்சி இங்கே இருக்கின்ற காரணத்தினால்தான். ஒப்பற்ற  முதலமைச்சர் - அவருடைய சமூகநீதி - தந்தை பெரியாருடைய பிறந்த நாளை, சமூகநீதி நாளாகக் கொண்டாடி, உறுதிமொழி  எடுங்கள். ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்று வந்ததினால்தான், இவ்வளவு பேர் இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில், பதவிக்கு வந்த நபர்களை, நம்மவர்களை நாங்கள் பார்த்ததே கிடையாது. இன்றைக்குத்தான் அவர்களுடைய பெயர் தெரியும்; உருவத்தை நேரில் பார்க்கின்றோம். பார்க்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் என்ன தேவை இருக்கிறது? ஒன்றுமே கிடையாது.

திராவிட இயக்கம் என்பது சமூகநீதிக்காகப் பிறந்த இயக்கம் நூறாண்டுகளுக்கு முன்பாக - நாமெல்லாம் பிறப்பதற்கு முன்பாக - சமூகநீதிக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்ற இயக்கம்!

உயர்நீதிமன்றத்தின் இன்றைய நிலை என்ன?

அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, சென்னை உயர்நீதிமன்றத்தின் இன்றைய நிலை என்ன?

மொத்தம் நீதிபதிகளின் எண்ணிக்கை 75

ஆனால், இதுவரையில் நிரப்பப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 63.

‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்பது சமூகநீதி - அந்த உறுதிமொழியைத்தான் பெரியார் பிறந்த நாளில்கூட அரசு அதிகாரிகள் எடுத்தனர்.

நன்றாக கவனிக்கவேண்டிய செய்தி என்னவென்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்று சொல்லும் பொழுது நண்பர்களே, பார்ப்பனர்களை விரட்டி, அவர் களுக்குக் கொடுக்கவே கூடாது என்பது நம்முடைய தத்துவம் அல்ல. யாருக்கும் விரோதமாக இல்லை நாம்; யாரையும் பட்டினிப் போடுவது என்பது நம்முடைய கருத்து அல்ல. பழிவாங்கவேண்டும் என்பது சமூக நீதி அல்ல.

மாறாக, உங்கள் பங்கை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்; எங்கள் பங்கை, எங்களுக்குத் தாருங்கள் என்றுதான் நாம் கேட்கிறோம்.

(தொடரும்)


No comments:

Post a Comment