பாட்னா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் - உதயநிதிக்கு ஆதரவாக உரத்தக் குரல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

பாட்னா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் - உதயநிதிக்கு ஆதரவாக உரத்தக் குரல்!

ஸநாதனம் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பேசியது, அதன் தாக்கம் குறித்து வட இந்தியாவில் அதிகம் பேசத்துவங்கிவிட்டனர். 

பாட்னா உயர்நீதிமன்றத்தில் உதயநிதியின் கருத்து தொடர்பாக வழக்குரைஞர்களிடம் நேசனல் தஸ்தக் என்ற போஜ்புரி மொழி செய்தி தொலைக்காட்சி பேட்டி கண்டது. அதன் தமிழாக்கம் வருமாறு:

· ஊடகவியலாளர் ரவி மேத்தா நேசனல் தஸ்தக் செய்தி தொலைக்காட்சி:

தமிழ்நாட்டின் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும் கூட - அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ஸநாதன தர்மம் என்ற பெயரில் நடக்கும் மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்து பேசினார். இவ்வாறு பேதம் பேசும் ஸநாதனத்தை டெங்கு, மலேரியாவைப் பரப்பும் கொசுவைப் போன்று ஒழித்துவிடவேண்டும் என்று பேசினார். 

இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  ஒரு சாரார் தங்களின் மத உணர்வை புண்படுத்திவிட்டதாக கூறுகிறார்கள். தெற்கில் உள்ள மக்களோ தங்களின் உணர்வை இளைய தலைமுறையிடம் வலுவாக சேர்க்கும் செயலை இளையவர் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ளார் என்று கூறுகின்றனர். 

பாட்னா, டில்லி உள்ளிட்ட சில நகரங்களில் அவர் மீது சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக பாட்னா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சிலரின் கருத்தைக் கேட்போம்.

"சூத்திரர்கள், பெண்கள், மாடு களைப் போல் இருக்க வேண்டும் என்று கூறியது ஸநாதனம்”

வழக்குரைஞர் ருத்ரஸ்வாகி 

· முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு விழுக்காடு சரியானதே!

அது சரியானதே,.. என்று ஏன் கூறுகிறேன்  என்றால்,  இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் அனைவரும் சட்டத்தின் முன்பு சமமானவர்கள் என்று வந்துவிட்டது. இப்போது யாராவது ஸநாதன தர்மம் குறித்து பேசுகிறார்கள் என்றால் அந்த ஸநாதன தருமத்தில் என்ன உள்ளது. 

டோல், க்ஙவார் சூத்ர பஷு நாரி 

யஹ சப் தாடண கே அதிகாரி

அதாவது தோலால் செய்த இசைக்கருவி, பயித்தியக்காரன், சூத்திரன், கால்நடை மற்றும் பெண் இவை எல்லாம் அதிகாரம் பெற தடைசெய்யப்பட்டவைகள் என்று உள்ளது. 

உள்ளபடி கூறவேண்டுமானால் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர்ந்த நபர்கள் மீது தேசத்துரோகப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும்.

அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உள்ளனர். நம்முடைய அரசமைப்பு சமத்துவம் குறித்து பேசுகிறது, அதைத்தான் உதயநிதி ஸ்டாலினும் பேசினார். ஆனால் ஸநாதன தர்மம் பிரிவினையைப் பேசுகிறது.

ஸநாதன தர்மம் சூத்திரர்களை இடுப்பில் விளக்குமாறைக் கட்ட வைத்தது, கழுத்தில் கலயம் கட்ட வைத்தது, காரணம் அவர்கள் பாதையில் துப்பக்கூடாது, அவர்களின் கால்தடம் அழியவேண்டும் என்பதற்காகத்தான் விளக்குமாறு! இதுதான் ஸநாதன தர்மம் கூறும் மனிதாபிமான மற்ற விதிமுறை ஆகும்.

· வழக்குரைஞர் சகோதரி மீரா கூறியதை இங்கே நான் கூறுகிறேன். சூத்திரப் பெண்களின் மார்பிற்கு வரி போட்டார்கள், இந்த கொடுமைகள் எல்லாம் ஸநாதன தர்மத்தில் உள்ளது.. இந்த ஸநாதனத்தை யாரும் ஆதரித்தால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யவேண்டும். 

தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியவேண்டும். காரணம் அவர்கள் இந்திய அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக பேசுகின்றனர். சமூகநீதி சமத்துவம் சகோதரத்துவம் மக்களாட்சி பொதுவுடைமை இது நமது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை தூண்கள் ஆகும். 

சமத்துவம் குறித்து பேசுவதில் என்ன தவறு - ஸநாதன தர்மம் பிரிவினை குறித்து பேசுகிறது. அதுதான் நமது நாட்டிற்கு தேவையில்லாத தர்மம் ஆகும். 

· ஊடகவியலாளர்:  பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா புலே,  பெரியார் அனைவரும் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள் - என்னவென்றால் ஜாதி இந்த நாட்டை சீரழித்துவிட்டது - ஜாதி இந்த நாட்டிற்கு புற்றுநோய் போன்றது. ஜாதியை ஒழிப்பது எப்போது அதைக்கூறும் சாஸ்திரங்களை ஒழிப்பது, அந்த சாஸ்திரங்களை ஒழிப்பதுதான் முக்கியம் என்று கூறினார்களே?

· வழக்குரைஞர் ருத்ரஸ்வாகி: ஆமாம் உண்மைதான்  பாபாசாகிப் அம்பேதகர் 22 சபதம் எடுத்தார். அதில் ஒன்று - நான் பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களை கும்பிடமாட்டேன், ஹிந்து சடங்குகளைச் செய்ய மாட்டேன். அவை கூறும் கட்டுக்கதைகளை நம்பமாட்டேன் - இது ஆடம்பரமாகும் என்றார்.

இப்போது நான் கூறுகிறேன் இந்த நாட்டில் மத்திய ஆசியப் புல்வெளியில் இருந்து  வந்த மனிதர்கள்  இங்குள்ள அமைதியான மற்றும் சமத்துவமாக வாழ்ந்த  மக்களை ஏமாற்றி அவர்களுக்கு பாவம்,  புண்ணியம்,  பகவான், சுவர்க்கம், நரகம் மற்றும் அதிர்ஷ்டம் போன்ற 6 மூடநம்பிக்கைகளை புகுத்தி மக்களை பயமுறுத்தி இங்குள்ள மண்ணின் மைந்தர்களாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக ஜோதிடம் என்ற பெயரில் இந்தக் காரியம் செய்தால் உனக்கு நல்லது நடக்காது - கெட்டது நடக்கும் என்று பலவிதமாக கூறி வைத்துள்ளனர்.

முதலில் கடவுள் பெயரில் மக்களை ஏமாற்றி ஆட்சியில் இருந்தார்கள், பின்னர் ஜாதியின் பெயரில் ஆட்சி - தற்போது தர்மத்தின் பெயரில் ஆட்சி செய்ய முயல்கின்றனர். 

நம்மை ஏமாற்றி அவர்கள் சுகபோகத்தில் வாழ இவ்வாறு செய்தனர். உதயநிதி ஸ்டாலின் என்ன தவறாக சொல்லி விட்டார்? அவர் நமது அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சமத்துவத்தைத்தானே பேசினார்.

நாம் மக்களாட்சி குறித்து பேசுவோம் - எங்கே எங்கே பேதங்கள்  போதிக்கப்படுகிறதோ அது எந்தத் தருமமாக இருந்தாலும் இந்திய மண்ணின் மைந்தர்கள் அதை எதிர்த்து நிற்பார்கள். 

முக்கியமாக நீதிமன்றம் - உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் இன்றும் சமத்துவம் இல்லை. நமது அரசமைப்புச் சட்டத்தை அதிகம் சிறுமைப்படுத்துவது நீதிமன்றங்கள்தான். 

அங்கு சாமானியர்களின் பிள்ளைகளுக்கு நீதிபதி பதவி கிடைப்பதில்லை. கொலீஜியம்  சிஸ்டம் எப்படிப்பட்டது என்றால் நேராக மனு வந்து எழுதிக்கொடுப்பதாக உள்ளது. அங்கு அனைவருக்கும் சமபங்கு அதிகாரம் பெறவேண்டும் என்பது குறித்து ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை. 

அவர்கள் சொல்வது ஒரே தேர்தல் என்பதுதான் - அவர்கள் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப இவ்வாறு பேசுகின்றனர். 

· ஊடகவியலாளர் ரவி மேத்தா,  பெண் வழக்குரைஞர் மீராவிடம்  அம்மா உங்களிடம் ஒரு கேள்வி:  ஸநாதன தருமத்தில் வருண முறை உள்ளது. அதில் பெண்களுக்கு இடமே இல்லை சூத்திரன் என்று கூறப்படும் மக்களை அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும்  விலக்கியே வைத்துள்ளனர். 

சொத்து, கோவில், பொது இடம், கல்வி இது எதுவுமே அவர்களுக்கு கிடைக்காமல் ஸநாதன தருமம் செய்துவிட்டது. இதைத்தானே உதயநிதி கூறுகிறார் உங்கள் கருத்து என்ன?

· வழக்குரைஞர் மீரா: உண்மைதான் இந்தியாவின் கோடிக்கணக்கான சாமானிய மக்களின் வலியை அவர் பேசியுள்ளார். அவர் இப்போது பேச வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது  என்பது குறித்து நான் பேசப்போகிறேன். 

அக்காலத்தில் இருந்து நாம் அனைத்திற்கும் வரி கொடுத்து வருகிறோம். இப்போதும்  கொடுக்கிறோம். கோவிலுக்குப் போனால் அக்கோவில் கட்ட நம்மிடம் பணம்  வாங்குகிறார்கள். 

கோவில் கட்ட செங்கல் சிமெண்ட் உள்ளிட்ட அனைத்தும் நமது உழைப்பில் இருந்து உருவானது. ஆனால் அனைத்து சுகபோகங்களும் ஒரே ஜாதியினருக்குச் செல்கிறது. கோவிலில் தனியான ஒரு இட ஒதுக்கீடு உள்ளது. கோவிலில் அனைத்து  சுகபோகங்களையும் அனுபவித்து வரும் அவர்கள் நம்மைப் பார்த்து கூறுகிறார்கள். இதோ இவர்கள் ஸநாதன தருமத்தை பற்றி மோசமாக பேசுகிறார் என்று கோவில் நிலம், அதன் மூலம் வரும் கோதுமை, அரிசி இதர செல்வங்களில் சாமானிய மக்களுக்கு ஏன் பங்கு தருவதில்லை - அந்த இடம் யாருடையது அது? இம்மண்ணின் மைந்தர்களின் இடங்களாகும், இது குறித்து யாருமே பேச மறுக்கின்றனர். 

· ஊடகவியலாளர் ரவி மேத்தா: இந்தியாவில் இன்றும் 29 விழுக்காடு மக்கள் ஒண்ட சிறிய குடிசைகூட இல்லாமல் உள்ளனர்.  இவர்கள் யார்?

· வழக்குரைஞர் மீரா: இவர்கள் அனைவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் அவர்களுக்காக கோவில் நிலங்களை கொடுங்கள். அவர்கள் அங்கு வாழட்டும். அதற்காகத்தானே திட்டங்கள் தீட்ட நாங்கள் வரி கொடுக்கிறோம். இவர்கள் ஒரு கற்சிலையை கோவில் வைத்து மக்களை அச்சுறுத்தி வருகின்றனர் இது அனைத்துமே குறிப்பிட்ட மக்களின் சுக போகத்திற்காகவே செய்யப்படுகிறது.

· ஊடகவியலாளர் ரவி மேத்தா: ஸநாதன தருமத்தில் பெண்களுக்கு என்ன இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொஞ்சம் கூறமுடியுமா?

· வழக்குரைஞர் மீரா: இதை நான் சொல்லவேண்டும் - ஸநாதன தருமம் என்ன கூறுகிறது என்றால் "டோல் சூத்ர பசு நாரி  சப் தாடனு கே   அதிகாரி" அதாவது நாங்கள் (பெண்களும்) எந்த ஒரு அதிகாரத்தையும் நினைத்துக் கூடப் பார்க்க கூடாத மக்கள் என்று ஸநாதனம் கூறுகிறது.

ஊடகவியலாளர் ரவி மேத்தா:  சிரமப்பட்டு உழைக்கிறீர்கள், கோவிலில் கொண்டு போய் கொட்டுகிறீர்கள், உங்கள் உழைப்பில் உங்களுக்கு பங்கில்லை - அனைத்தையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்களே?

பெண்களை இழிவுபடுத்தும் ஸநாதனம்

· வழக்குரைஞர் மீரா: உண்மைதான் இதனால் தான் நாம் நூற்றாண்டுகாலமாக அடிமைகளாக இருக்கிறோம். பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும். அவர்களுக்கு சொந்தமாக எதுவுமே செய்யக்கூடாது.

சமீபத்தில் ஒரு சாமியார் தீரேந்திரன் என்பவர் நெற்றியில் பொட்டு இல்லாவிட்டால் அந்தப் பெண்ணை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் (அந்த வீடு காலியாக உள்ளது யார் வேண்டுமானாலும் செல்லலாம்) என்று கூறினார். இவர் என்ன சொல்கிறார் - நான் பொட்டு வைக்கவில்லை - அப்படி என்றால் என்னை காலியாக உள்ள வீடு என்கிறாரா? யார் வேண்டுமானாலும் வரலாம், யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறுவது  - இதுதான் ஸநாதன தருமம் கூறும் கருத்து. கண்டிப்பாக இது குறித்து நாம் பேசவேண்டும்.  நமது குரலாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவரது குரலுக்கு எதிராக யார் பேசினாலும் அது மிகவும் தவறானது.  நாங்கள் அனைத்து மதத்தையும் சமமாகப் பார்க்கிறோம். அந்த மதத்தில் பேதங்களை கற்பிக்கும் பிற்போக்குத்தனமானவைகள் இருந்தால் அதை கண்டிக்க வேண்டும் - அழித்தொழிக்க வேண்டும்.

பெண்களை இழிவுபடுத்தும் சாமியார்களையும், தலையை வெட்டுவேன் என்று கூறும் சாமியார்களையும் அவர்களது சார்பாக பேசுபவர்களையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 

தனது தாயிடம் குடித்த பாலுக்கான கடனை தீர்க்க முயன்றிருக்கிறார்.

90 விழுக்காடு பெண்களின் சகோதரனாக - அரணாக நிற்கிறார் உதயநிதி ஸ்டாலின்

· ஊடகவியலாளர் ரவி மேத்தா: மற்றொரு பெண் வழக்குரைஞரிடம்...

சதி என்ற கொடூரமான நடைமுறையை தடை செய்த போது  ஒரு சிறு கூட்டம் அன்றும் இதே போன்று கதறியது. அய்யோ ஸநாதன தருமத்திற்கு ஆபத்து என்றது. சாவித்திரி பாய் புலே தாழ்த்தப்பட்ட கைவிடப்பட்ட பெண்களுக்கு பள்ளியைத் திறந்த போது அப்போதும் சிறு கூட்டம் அய்யோ ஸநாதன தருமத்தை இழிவு படுத்துகிறார் என்று எதிர்த்தது, ஸநாதன தருமத்தில் பிரிவினை உள்ளது இதைத்தானா உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். 

பெண் வழக்குரைஞர்: முதலில் நான் உதயநிதியின் துணிச்சலுக்கு  புரட்சிகரமான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்  யார் உதயநிதி மீது வழக்குத் தொடர புகார் கொடுத்தார்களோ, அவர்கள் தான் தேசத்துரோகி - மக்கள் மன்றத்தில் இதுபோன்ற நபர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யுங்கள் என்று கூறுவேன் -  உதயநிதி தனது தாயிடம் குடித்த பாலின் கடன் தீர்க்கிறார். தனது கோடானகோடி சகோதரிகளின் சகோதரனாக அரணாக இருந்து தனது கடமையைச் செய்கிறார்.  அவர் கோடான கோடி சகோதரிகளின் வலியை உணர்ந்துள்ளார்.  அதனால் தான் துணிவோடு ஸநாதன தர்மம் குறித்து பேசுகிறார். 

இன்று இந்த நாட்டில் "ஒன் நேசன் ஒன் எலக்சன்" என்று பேசும் நடிப்புக்காரர்கள், பெண்களின் இட ஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டுவர பல சாக்குப்போக்குகளைக் கூறி தட்டிக்கழிக்கிறார்கள் - ஏன்?  10 சதவீதம் உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டை ஒரே இரவில் கொண்டுவந்துள்ளனர்.  இது நமது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தெரிந்தும் அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் 50 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அந்தப் பெண்கள் யார்? இந்த  மண்ணுக்கான பெண்கள் - இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள் மிகவும்  பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினப் பெண்கள் இவர்கள் என்றுமே  சொந்தமாக சிந்திக்கக் கூடாது என்பதற்காகத்தான் அடிமைகளாக வைக்க ஸநாதன தர்மத்தைக் முன்னிறுத்துகிறார்கள். இது சமூகநீதிக்கு எதிரானது இந்த  பேதத்தை காட்டும்  ஒன்றைத்தான்  ஸநாதன தர்மம் என்று உயர்த்திப் பிடிக்கின்றனர். 

இந்த அக்கிரமம் பிடித்த ஒன்றை தருமம் என்று கூறி எங்களை  கொடுமைப்படுத்தி அடக்கி வைத்துள்ளார்கள் இதனை எதிர்த்துக் கேட்ட அவரது துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன்.

ஒட்டுமொத்த பெண்களும், இந்தியாவில் உள்ள பாதிக்கப்பட்ட 99 விழுக்காடு பெண்கள் உதயநிதியின் பின்னால் நிற்கிறார்கள். 

· ஊடகவியலாளர் ரவி மேத்தா: தொலைக்காட்சிகளில் பலர் உதயநிதியை மோசமாக பேசுகிறார்கள்.

நாடு முழுவதும் சமூகநீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் பிரதமராக வரவேண்டும்

· பெண் வழக்குரைஞர்: தொலைக்காட்சி, முன்னணி ஊடகங்கள் மனுவாதிகளின் கைகளில் உள்ளன. அவர்கள் இப்படித்தான் செய்தி வெளியிடுவார்கள் மனுவாதி சிந்தனை இல்லாத பெரும்பாலான பாதிக்கப்பட்ட பெண்கள்  உதயநிதியின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். எங்களுக்கு மு.க.ஸ்டாலின் போன்ற பிரதமர் வேண்டும். தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தது. நமக்கு அது போன்ற இயக்கத்தின் பின்புலத்தில் இருந்து வந்த பிரதமர் வேண்டும். 

· ஊடகவியலாளர் ரவி மேத்தா: இப்போது கோவில்களில் அனைத்து ஜாதி அர்ச்சகர் திட்டத்தை நடைமுறைப்படுத்தி அங்கும் அனைவரும் சமம் என்பதைக்  கொண்டுவந்துவிட்டார்.

· பெண் வழக்குரைஞர்:  இதனால் தான் இது போன்ற பிரதமர் வேண்டும் என்கிறோம். மோடியை விரட்டி மு.க.ஸ்டாலின் போன்ற பிரதமரைக் கொண்டுவாருங்கள்.  அப்போதுதான் இந்த நாட்டில் 90 விழுக்காடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான உரிமைகள் கிடைக்கும். 

· ஊடகவியலாளர் ரவி மேத்தா, வழக்குரைஞர் ஜெயயஸ்பாலிடம்: உங்கள் பெயர். 

பெண் வழக்குரைஞர் என் பெயர் ஜெயயஸ்பால். 

· ஊடகவியலாளர் ரவி மேத்தா: 

உதயநிதி ஸ்டாலின் கூறினார் - ஸநாதன தருமம் டெங்கு, மலேரியா போன்றது - அதை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்று கூறினார். இது குறித்து நீங்கள் என்ன கூறவருகிறீர்கள். 

· ஜெயஜஸ்பால்: அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைகளை உணர்ந்துள்ளார். இன்றும் ஜாதியக் கொடுமைகளின் பிடியில் மக்கள் சிக்கி உள்ளார்கள். இன்றும் பாட்னா போன்ற நகரங்களில் உள்ள பாலங்களின் அடியிலும் சாலை ஓரத்திலும் குடிசைகளில்  வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை இன்றும் டெங்கு மலேரியாவால் முடிந்து போகிறது. 

அவர்களை விட பன்றிகள் - நாய்கள் நல்ல வாழ்க்கை வாழ்கின்றன.  இதைத்தான் அவர்களின் குரலாக உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

· ஊடகவியலாளர் ரவி மேத்தா: உண்மைதான் உதயநிதிக்கு நாங்கள் உளப்பூர்வ நன்றிகளை கூறிக்கொள்கிறோம்

· வழக்குரைஞர் ஜெயஜஸ்பால்: அவர் இதை தேசிய பிரச்சினையாக கொண்டு சென்றுவிட்டார். இப்போது நாங்கள் பேசத் துவங்கிவிட்டோம். அதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின். இனி எந்த ஒடுக்குமுறையானாலும் நாங்கள் துணிந்து பேசுவோம். 

உதயநிதி எங்களுக்கு துணிச்சலை வழங்கி உள்ளார். எந்த ஊடகமும் உதயநிதியை எதுவும் சொல்லட்டும் நாங்கள் பெருமைப்படுகிறோம், மகிழ்கிறோம், எங்கள் தலைவர் எங்களுக்காக பேசியுள்ளார்.  இதுவரை எங்கள் பெயரைச்சொல்லி பெண்ணுரிமையை மீட்போம் என்று பேசி பிழைத்த அரசியல் தலைவர்களில் பலர் வாய்திறக்காமல் தங்களின் வாக்குகள் சிதறிவிடுமே என்று அமைதியாக இருந்தனர். அப்படிப்பட்ட தலைவர்களிடமிருந்து இன்றைய தலைமுறை அரசியல் தலைவர்  இளம் தலைவர் உதயநிதி பேசத் துவங்கி உள்ளார். இளம் தலைவர் பேசத் துவங்கியதால் எங்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. 

எங்கள் எதிர்காலத் தலைமுறை இனி அமைதியாக இருக்காது. எவ்வளவு தவறான மோசமானவைகள் ஸநாதன தருமத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் நடந்ததோ  எங்கள் தாய்தந்தை எங்கள் மூத்த தலைமுறையினர் எந்த அளவு கொடூரங்களை  சகித்து வாழ்ந்தார்களோ அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க  உதயநிதி உதயமாகிவிட்டார். 

எங்களுக்கான உரிமையை கவுதம புத்தரின் வழியில் சென்று, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வழியில் சென்று தந்தை பெரியார் வழியில் நின்று உரிமையைப் பெறுவோம்

இது மிகவும் அவசியமான ஒன்று. இத்தனை ஆண்டுகளாக எங்களுக்காக  வருங்கால தலைமுறை ஒருவர் வருவார் - அவர் எங்களுக்காக பேசுவார் என்று காத்திருந்தார்கள் - இதோ உதய நிதி பேசிவிட்டார் - நாங்கள் மகிழ்கிறோம் எங்கள் எதிர்காலம் பேசத் துவங்கிவிட்டது. இதன் மூலம் இனி வரும் தலைமுறை மேலும்  விழிப்புணர்வு அடையும். எங்கள் பெற்றோர்கள் கோவில்களில் பூஜை செய்வதிலும் பூசாரிகளின் ஏமாற்றுப் பேச்சிற்கு அடிமையாகி இருப்பதையும் பார்த்தோம்.  கடவுள் பெயரைச் சொல்லி தங்களின் உழைப்பை அங்கே கொண்டு சென்று கொட்டினார்கள் 

· ஊடகவியலாளர் ரவி மேத்தா: பாபாசாகிப் அம்பேத்கர்  கோவிலுக்குச் சென்று உழைப்பை வீணடிப்பதை கடுமையாக எதிர்த்தார்.

· வழக்குரைஞர் ஜெய ஜஸ்பால்: ஆமாம். கோவிலில் மணி அடிக்கக் கூடாது. பள்ளிகளுக்கு மாணவர்களை அழைக்கும் மணி ஓசை கேட்கவேண்டும் - ஆனால் நமது முந்தைய தலைமுறை என்ன செய்தது?

200 ஆண்டுகளுக்கு முன்பு சாவித்திரி பாய் புலே செய்து முடித்த செயலை இன்று  மறந்துவிட்டனர்  இப்போது சாவித்திரி என்ற கற்பனை சாவித்திரியை வட் சாவித்திரி என்ற பெயரில் பூஜை  செய்கின்றனர். சாவித்திரி பாய் புலே கல்விக்காக பாடுபட்டார். இன்றைய நமது பெண்கள் பூஜை செய்கிறார்கள். மூடநம்பிக்கையில் படித்த பெண்களும் மூழ்கிவிட்டார்கள்.

படிக்காத பெண்கள் நாம் ஒன்றுமே கூறமுடியாது பெண்கள் மருத்துவர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் என பலர் மூடநம்பிக்கையில் மூழ்கி உள்ளனர். அறிவியல் படித்த பெண்களும், பட்டதாரிகளும் கணவர் நீண்ட நாள் உயிர்வாழ  பூஜை செய்கின்றனர்; அதாவது படித்த பெண்களையும் இவர்கள் ஏமாற்றி  வைத்துள்ளனர், கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி உள்ளனர் - படித்த பெண்கள் இவ்வாறு ஏமாறும் போது படிக்காத பெண்கள் குறித்து என்ன சொல்லமுடியும்? படித்த பெண்கள் கண்ணாடி போன்றவர்கள் - அவர்களைப் பார்த்து மற்ற பெண்களும் மூடநம்பிக்கையில் மூழ்கிவிட்டனர். எங்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட குரல் கொடுத்த உதயநிதியோடு நாங்கள்  கைகோத்து நிற்கிறோம். 

· ஊடகவியலாளர் ரவி மேத்தா:  பள்ளிகள் கல்லூரிகள் அதிகம் திறக்கப்பட்டதால் படிக்கச்சென்ற நம்பிள்ளைகள் விழிப்புணர்வு ஆகிவிட்டனர். 

உதயநிதி கூறியது  பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்று கூறுகிறார்கள் -  அவர்கள் அவர் ஏன் அப்படிக் கூறினார் என்று பார்க்கவேண்டும். உதயநிதியின் ஸநாதன தர்ம ஒழிப்பு பேச்சை கேட்டு அதிர்ச்சி அடையும்  உயர்ஜாதியினரே நீங்கள் ஒரு ஆண்டு சூத்திரனாக தாழ்த்தப்பட்டவராக அவர்களின் குடும்பத்தோடு வாழ்ந்து பாருங்கள் - அப்போது தெரியும் நீங்கள் புகழும் அந்த தருமத்தின் கொடுமைகள். அதன் பிறகு நீங்களும்  உதயநிதியோடு இணைந்து கைகோத்து அழிக்க  முன்வருவீர்கள்.

கோடான கோடி சாமானிய மக்கள்  ஸநாதன தருமத்தின் பெயரில் அடிமையாக வாழ்ந்தார்களோ அந்த அடிமையான வாழ்க்கைக்கு முடிவு கட்ட இப்போது உதயநிதியின் குரல்  மூலமாக ஒரு நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்துள்ளது..

(ஊடகவியலாளர் ரவிமேத்தா பாட்னா உயர்நீதிமன்றத்தில் இருந்து...)

மொழிபெயர்ப்பு: 

சரவணா இராஜேந்திரன்

No comments:

Post a Comment