கலைஞரும் - ராமகோபாலனும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 16, 2023

கலைஞரும் - ராமகோபாலனும்

கலைஞரை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு. தி.மு.க.வுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பதையும் அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான், ஒரு கூட்டத்தில் ஹிந்துமத மூட நம்பிக்கைகளை கலைஞர் சற்றுக் கடுமையாக விமர்சித்திருந்தார். 

எனவே, காவித் துண்டு தலைப்பாகை அணிந்த திரு.ராமகோபாலனைக் கண்டவுடன் முதலமைச்சரின் செக்யூரிட்டி அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்து சோதனை போட முயல, கலைஞரின் தனி உதவியாளர் திரு. சண்முகநாதன் ஓடிவந்து, அதைத் தடுத்து, அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

கலைஞருக்கு இந்தத் தகவல் சொல்லப்பட, முதல் அழைப்பாக திரு.ராமகோபாலன் மாடிக்கு அழைக்கப்பட்டார். இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டு எதிரெதிரே அமர்ந்தார்கள். இருவரும் உடல்நலன் விசாரித்துக் கொண்ட பிறகு, ராமகோபாலன் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

கலைஞர் அவர்களே! நான் உங்களுடைய ஹிந்து மத விரோதப் பேச்சுகளை கடுமையாக கண்டிக்கிறேன் என்றார். பதிலுக்கு கலைஞர் அவரிடம், உங்களின் கண்டனத்தை நான் அப்படியே முழுமையாக பெற்றுக் கொள்கிறேன் என்றார் சிரித்தபடி. ராமகோபாலன் தனது கையிலிருந்த ஒரு துணிப்பையில் இருந்து, 'பகவத் கீதை' புத்தகத்தை கலைஞருக்கு பரிசாக அளித்து, இதைப் படித்தால் உங்களுக்கு ஹிந்து மதம் குறித்த ஒரு புரிதல் கிடைக்கும் என்றார்.

கலைஞர் மெல்ல எழுந்து (அப்போது அவரே எழுந்து நடப்பார்) அருகிலிருக்கும் ஒரு அலமாரியைத் திறந்து அதில் இருந்த திராவிடர் கழகத்தின் 'கீதையின் மறுபக்கம்' புத்தகத்தை எடுத்து வந்து ராமகோபாலனிடம் கொடுத்து இதைப் படித்தால் உங்களுக்கு ஹிந்து மதம் குறித்த தெளிவு கிடைக்கும் என்றார் சிரித்தபடி.

ராமகோபாலன் திகைத்தபடி அந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார். காஃபி சாப்பிடாம போறீங்களே? என்றார் கலைஞர். நான் காஃபி சாப்பிடுவதில்லை. பால் குடிப்பதுதான் வழக்கம் என்றார் ராமகோபாலன். அப்படியா? அப்போ இதையும் பெற்றுக் கொள்ளுங்கள். இதில் "முப்பாலும்" இருக்கிறது என்றபடி தனது மேசையில் இருந்த திருக்குறளையும் எடுத்துத் தந்தார் தலைவர் கலைஞர்.

இருவருமே சிரித்தபடி பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொள்ள அந்தச் சந்திப்பு முடிந்தது. 


No comments:

Post a Comment