நாடெங்கும் கொண்டாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 20, 2023

நாடெங்கும் கொண்டாட்டம்!

தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நாடெங்கும் மிகப் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, டில்லி ஜவகர்லால் நேரு (JNU) பல்கலைக் கழகம் வரை சிறப்பாகக் கொண்டாடப் பட்டுள்ளது.

பல்கலைக் கழக மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி வரவேற்கத்தக்கது. ராமராஜ்ஜியத்தை நிறுவுவோம் என்றும், ஒரே நாடு, ஒரே மதம் என்று  டில்லி யிலிருந்து சங்கிகள், ஆட்சி அதிகாரம் தங்கள் கைகளில் கிடைத்தது என்ற இறுமாப்பில் கொக்கரிக்கிறார்களே; அதே டில்லியில், அதுவும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் அமைப்புகள் முன்வந்து கொண் டாடுகின்றனர் என்ற செய்தி வடபுலத்திலும் பெரியார் மய்யம் கொண்டுள்ளார் என்பதற்கான அடையாளமாகும்.

பிர்சா அம்பேத்கர் பூலே மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஜே.என்.யூ.வில் பேராசிரியர் அஜித் கன்னா அவர்கள் தந்தை பெரியார் பற்றிச் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவித்த - தந்தை பெரியார் பிறந்த நாள் - சமூகநீதி உறுதிமொழியையும் மாணவர்கள் எடுத்துக் கொண்டது சிறப்பானதாகும்.

வெளிநாடுகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இவ்வாண்டு குக்கிராமங்களில் எல்லாம் திருவிழாவாகக் கொண் டாடப்பட்டுள்ளது.

கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் வீடுகளின் வாயிலில் தந்தை பெரியார் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. 

தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய தலைவர் தந்தை பெரியாரின் பிறந்த நாளைவிட தமிழர் களுக்கு வேறு விழா எதுவாக இருக்க முடியும்?

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும், அவர்தம் பிறந்தநாள் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும். இது தந்தை பெரியார் அவர்களுக்கே உரித்தான தனி சிறப்பாகும்.

அந்த விழா என்பது ஏதோ சம்பிரதாயமான விழா அல்ல! சுயமரியாதை, சமத்துவ, சமதர்ம, சமூகநீதி, பாலியல் நீதிக் கொள்கை பரப்பும் விழாவாகும். அந்த விழாக்களில் எல்லாம் பக்திப் பழமாகக் காட்சி அளிக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றவர்களே கூட பங்கு கொண்டு, தந்தை பெரியார் அவர்களுக்குப் புகழாரம் சூட்டுவார்கள்.

ஆம், ஜாதி, மதம், ஆன்மிகம், ஆண் - பெண் பேதம் இவற்றை எல்லாம் கடந்து ஓரினத்திற்குச் சுயமரியாதை அடையாளத்திற்காகப் போராடிப் போராடி பெற்றுத் தந்த தலைவர் ஆயிற்றே! தந்தை பெரியார் என்று அழைக்கப் படுபவராயிற்றே!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மாண்பமை நாகமுத்து அவர்கள், வட மாநிலங்களுக்கு காந்தியார் தந்தை என்றால், தமிழ் நாட்டிற்குத் தந்தை என்று போற்றத்தக்கவர் பெரியாரே என்று கூறி உறுதி செய்ததுண்டே!

நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்பவர் ஆயிற்றே! நீதிபதி பதவிகளிலும் இடஒதுக்கீடு தேவை என்று குரல் கொடுத்தவராயிற்றே!

அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் திரு. ஏ. வரத ராசன் அவர்கள் நீதிபதியாய் கொலுவேறினார் என்றால், அதன் பின்புலத்தில் இருந்தவர் தந்தை பெரியார் தானே!

தந்தை பெரியார் கூற்றைக் கட்டளையாக ஏற்று, அதனை செயல்படுத்திய முத்தமிழ் அறிஞர் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞரையும் இந்த நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூர்தல் அவசியம் ஆகும் (1973).

அந்த ஜஸ்டிஸ் திரு. ஏ.வரதராஜன் அவர்கள் தான் உச்சநீதிமன்றத்திற்கும் சென்ற பட்டியலி னத்தைச் சேர்ந்த முதல் நீதிபதியாவார்.

ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் பேசிய பேராசிரியர் திரு. அஜித்கன்னா குறிப்பிட்டுள்ளதை அடிகோடிட்டுக் கவனிக்க வேண்டும்.

"வட இந்தியாவில் அண்ணல் அம்பேத்கர் கருத்து களுடன் தந்தை பெரியாரின் கருத்துகளும் இணையும் போது, இந்திய மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும்" என்ற பகுதி கண்ணில் ஒத்திக் கொள்ளத்தக்க கருத் தூன்றும் வைரத் துண்டாகும்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!


No comments:

Post a Comment