பொய்யுரை புகல்வோர், திசைதிருப்புவோர் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

பொய்யுரை புகல்வோர், திசைதிருப்புவோர் எச்சரிக்கை!

கேரள மீடியா அகாடமியின் ‘மீடியா மீட் 2023’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்

சென்னை, செப். 9- சென்னையில் நடைபெற்ற கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை யாற்றுகையில், பொய் பரப்புரைகளுக்கும், திசை திருப்புபவர்களுக்கும் முக்கியத்துவம் தராமல் ஊடகங்கள் இந்தியாவைக் காப்பாற்ற தங்களது பங்களிப்பையும் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் கள் நேற்று (8.9.2023) சென்னையில் நடைபெற்ற கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய உரை வருமாறு:

சில நாள்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய நமது மலையாளமொழிச் சொந்தங் களுக்கு, மலையாளத்தில் என்னுடைய வாழ்த்து களைச் சொன்னேன். இதற்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் நான் மலையாளத்தில் பேசியிருக்கிறேன்.

நாம் ஒரே மொழிக் குடும்பத்தைச்சார்ந்தவர்கள். அதாவது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த வர்கள். சமத்துவத்திற்கு எதிராக இருக்கக்கூடியவர் களுக்கு இன்றைக்கு ‘திராவிடம்’ என்று சொல் ஒரு எரிச்சலாகவே இருக்கிறது.

ஜனநாயகம் உயிர்ப்போடுத் திகழ 

ஊடக சுதந்திரம் தேவை

கேரள அரசின் கீழ் இயங்கக் கூடிய தன்னாட்சி பெற்ற நிறுவனமாக கேரளா மீடியா அகாடமி செயல் பட்டு வருகிறது. சார்புத் தன்மை இல்லாத மதச்சார் பின்மையை போற்றுகின்ற ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கு இந்த அகாடமி பங்காற்றி வரு கிறது. இன்றைய நிலைமையில் இது மிகவும் தேவையான ஒன்று. ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப் போடு இருக்கும். அந்த வகையில் மிக சிறப்பான நீண்ட அனுபவம் மிக்க ஊடகவியலாளர்களால் நிர்வகிக்கப்படும் இந்த அகாடமி எதிர்காலத்திலும் அத்தகைய ஊடகவியலாளர்களை உருவாக்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கேரள மீடியா அகாடமி சார்பில் நடைபெறும் இந்த சிறப்பான விழாவில் பங்கெடுத்து உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு நான் பெருமை அடைகிறேன்.

இந்த விழாவில் பங்கெடுக்க வேண்டும் என்று, அருமை நண்பர் அருண்ராம் அவர்கள் என்னை அழைத்தார்கள். தலைவர் கலைஞர் அவர்களுக்கும் நெருக்கமான பத்திரிக்கையாளர்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அருமையான நண்பர் அருண்ராம் அவர்கள். அதேபோல் என் மீதும் அன்பு காட்டக் கூடியவர்தான் அருண்ராம். அந்த வகையில் அவரது அழைப்பை ஏற்று இங்கு நான் வருகை தந்துள்ளேன்.

அச்சு ஊடக காலத்திலிருந்து 

ஊடகத் துறை அடைந்துள்ள மாற்றம்!

ஏசியாநெட்டின் நிறுவனர் சஷி குமார் அவர் களும் இங்கு வருகை தந்துள்ளார். நடிப்பு, - திரைப் படத் தயாரிப்பு,- திரைக்கதை எழுதுதல் எனப் பன்முக ஆற்றலைப் பெற்றவர் இவர், இப்போது சென்னை ஆசிய இதழியல் கல்லூரியின் தலைவராக இருக்கிறார்.

மரியாதைக்குரிய மூத்த பத்திரிக்கையாளர் பி.ஆர்.பி.பாஸ்கர் அவர்கள் எழுதிய ‘THE CHANGING MEDIASCAPE’ என்ற முக்கியமான நூலை வெளியிடுவதில் நான் மிகுந்த பெருமைப் படுகிறேன். அவருக்கு வயது 91. 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் செயல்பட்டு வருவதைப் பார்க்கும்போது எழுத்தின் மீதும், ஊடகத் துறையின் மீதும், அதையும் தாண்டி இந்த நாட்டு மக்கள் மீதும் அவர் கொண்டுள்ள உண்மையான அக்கறையை நமக்கு அது எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது. 

தி இந்து பத்திரிக்கையில் 1952 ஆம் ஆண்டு சேர்ந்து அங்கு ஆறு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.

 தி ஸ்டேட்ஸ்மேன் -

 பேட்ரியாட்-

 யு.என்.அய் செய்தி நிறுவனம்

 தி டெக்கான் ஹெரால்டு

 ஏசியா நெட் - எனப் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

செய்தி நிறுவனங்களுக்காக இந்தியாவின் பல் வேறு நகரங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்றும் இருக் கிறார். எனவே இந்த நூலை படித்துப் பார்த்தால் உலகம் முழுக்க பயணம் செய்யும் அனுபவம் நமக்கு ஏற்படும்.

அச்சு ஊடக காலம் தொட்டு ஊடகங்களின் இன்றைய மாற்றம் வரை அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் பாஸ்கர் அவர்கள்.

பத்திரிகையாளர்கள் பாடம் பெற 

படிக்கவேண்டிய நூல்!

அவருடைய கட்டுரைகள், செய்திகளுக்கு பின்னால் இருக்கும் ஆர்வம், அணுகுமுறை, தெளி வான சிந்தனை ஆகியவை இன்றைய பத்திரிக்கை யாளர்களுக்கு மிகப்பெரிய பாடமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

அவசர நிலைக்காலம் குறித்த அவரது பதிவுகள் மிக முக்கியமான தாக உள்ளது. மிசாவில் கைதாகி ஓராண்டு காலம் சென்னை சிறையில் இருந்தவன் நான். எனவே அந்த உரிமையோடு இதை நான் இங்கே குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன்.

மனித உரிமைகள் மீதான பாஸ்கர் அவர்களின் ஆர்வம் இதன்மூலம் வெளிப்படுகிறது. இந்த துறைக்கு தான் வந்த காலத்தில் பெண் பத்திரிக்கை யாளர்கள் குறைவாக இருந்தது குறித்து பதிவு செய் துள்ளார். ஆனால் இன்று ஏராளமான பெண் பத்திரிக் கையாளர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதையும் பார்க்கிறோம்.

மேலும், தாழ்த்தப்பட்ட சமூகப் பத்திரிக்கையாளர் களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது என்ற அவரது ஆதங்கமானது சமூகநீதிக் குரலாக வெளிப்பட்டுள்ளது. இது ஓரளவு உண்மைதான்.

ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களுக்கு 

அரசின் இதழியல் இலவச பயிற்சி!

இதனை உணர்ந்துதான் ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் இதழியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவசமாக இதழியல் பயிற்சியை லயோலா கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு வழங்கியது.

அவர், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற ‘திராவிட மாடல்' ஆட்சியின் நோக்கத்தை நான் சொல்லி வருகிறேன் என்றார். சமூகநீதி எந்தளவுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் - மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத்திய பிறகும் சமூகநீதிக்கு எத்தகைய தடைகள் விழுந்தன என்பதையும் இந்நூலில் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இத்தகைய சமூகநீதிக்காகத்தான் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை பாஸ்கர் அவர்களுக்கு நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நூலில் திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி ஏதாவது வருகிறதா என்பதை ஆர்வத்துடன் தேடிப் பார்த்தேன். பத்திரிக்கையாளர் பாஸ்கரிடம் 1957 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி கேட்டுள்ளார்.

ஊடகவியலாளர் பி.ஆர்.பி.பாஸ்கரின் தொலைநோக்கு சிந்தனையே வென்றது!

“நீங்கள் தென்னகத்தில் இருந்து வருகிறீர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

“1957 தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பட்டது. அவர்களது பணி தேர்தலோடு நின்றுவிடவில்லை. அதன் தொண்டர்கள் இப்போதும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்த வேகத்தில் தொடர்ந்து செயல்பட்டால், இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று சொல்லி இருக்கிறார் பாஸ்கர் அவர்கள்.

அவர் சொன்னது போல பத்து ஆண்டுகளில் - அதாவது 1967-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தி.மு.க. மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறதுஎன்று பாஸ்கர் அவர்கள் சொன்னதை அந்த அதிகாரி ரசிக்கவில்லையாம். பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு கேட்டுக் கொண்டிருந்த காலம் அது. அதனை மனதில் வைத்து, ‘தெற்கு பிரிந்து விடும் என்றுசொல்கிறீர்களா?” என்று அவர் கேட்டிருக்கிறார். அந்த சிந்தனையிலும் மாறுதல் வரும் என்றும் பாஸ்கர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவரது தொலைநோக்கு சிந்தனையை இதன் மூலமாக அறியலாம்.

இந்தியாவை சிதைக்கத் துடிக்கிறார்கள்!

இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக, இந்தியாவின் பாதுகாப்பே முக்கியம் எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிடநாடு' கோரிக்கையைக் கைவிட்டார்கள்.

அந்நிய நாட்டால் இந்தியாவுக்கு ஆபத்து வந்த காலம் அது. வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என்று விளக்கம் அளித்து இந்த நிலைப்பாட்டை எடுத்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள். இதே போன்றுதான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு இன்று ஆபத்து வந்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்திருக்கிறது. சமூகநீதியை சிதைக்கப் பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் சிதைப்பதன் மூலமாக இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறார்கள். இதனை அரசியல் தளத்தில் அரசியல் இயக்கங்க ளாகிய நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

இந்தியாவைக் காப்பாற்றும் பணியில் ஊடகங்களும் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இந்திய விடியலுக்கு கேரள மக்களின் 

பணியும், பங்கும் மீண்டும் தேவை!

ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபிறகு ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் என்னுடைய வேதம்’ என்று சொல்லி நாடாளுமன்றத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் வணங்கியவர் பிரதமர். இப்போது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதனை நாட்டிலுள்ள அனைத்து மக்களும் உணர்ந்து இந்த போக்கை எதிர்க்க வேண்டும்.

இங்கு கூடியிருக்கும் எனது மலையாள சொந்தங்களுக்கும் கேரளத்தில் வாழக்கூடிய சொந்தங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது, தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல் ஊடகங்களும், பொய்பரப்புரைகளுக்கும் திசை திருப்புபவர்களுக்கும் முக்கியத்துவம் தராமல் விடுதலைப் போராட்டக் காலத்தில் செயல்பட்டதைப் போல மீண்டும் செயல்பட வேண்டும் என்று கேட்டு இந்த சிறப்பான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றமைக்காக நான் மீண்டும் ஒருமுறை எனது இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்.

- இவ்வாறு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment