ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: சந்திரயான் 3 விண்கலன் வெற்றிக்கு இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், திருவனந்தபுரம் பத்திரகாளி அம்மனுக்கு நன்றி கூறியதும், சமஸ்கிருதம்தான் இந்தியாவில் தோன்றிய அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்று கூறி, அதானி, மோடியின் கனவை நிறைவேற்றுவோம் என்று கூறியது குறித்தும் தங்களின் கருத்து என்ன?

- ஆர்கானிக் உஸ்மான், தருமபுரி

பதில் 1: மடங்களில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் இஸ்ரோவில் எப்படியோ பெரும் பதவியிலிருக்கிறார்கள். விஞ்ஞானம் படித்தவர்களே தவிர, விஞ்ஞான மனப்பாங்கு - அரசியல் சட்ட 51ஏ பிரிவின்படி - பெற்றவர்கள் அல்ல.

இல்லை, அப்படி இல்லை, நன்றாக விவரம் தெரிந்தவர்தான் என்பது பதிலானால், அரசியலுக்கேற்ப வேஷம் போட்டு ஆடுகிறார் என்றுதான் கூற முடியும்.

உழைத்த விண்வெளி விஞ்ஞானிகளே - உங்களுக்கு கிடைக்க வேண்டிய பெருமை திருவனந்தபுரம் பத்திரகாளி அம்மனுக்குப் போவதா?

இவர் எப்போது மொழி அறிஞர் ஆனார்? சமஸ்கிருதம்தான் இந்தியாவில் தோன்றிய அனைத்து மொழிகளுக்கும் தாய் என்று உளறுவதா?

சமஸ்கிருதம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? 'நன்றாக சமைக்கப்பட்டது' என்றால் அதற்கு முன் இருந்த பிராகிருதம் முதலியன பற்றி அறிவாரா? தமிழின் தொன்மை அவருக்குப் புரியுமா? வெட்கக்கேடு!

---

கேள்வி 2: வசதி, வாய்ப்புகளின்றி ஏழ்மை நிலையில் வாடுகின்ற பெண்கள் அனைவருக்கும் எவ்வித பாகுபாடும், நிபந்தனைகளும் இன்றி 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை'' மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை 'திராவிட மாடல்' அரசு செயல்படுத்துமா?

- வி.பிரபாகரன், குடியாத்தம்

பதில் 2: அதைத்தான் செய்கிறார்கள்; நடைமுறையில் மேலும் சில திருத்தங்கள் - மாற்றங்கள் தேவையென்றால் நிச்சயம் தமிழ்நாடு 'திராவிட மாடல்' அரசு செய்யும். அதன் முதல் அமைச்சரும் நிச்சயம் செய்வார்.

---

கேள்வி 3: சனாதனம் குறித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்திருக்கின்றாரே, வடமாநில சாமியார் ஒருவர்?

- கே.நரசிம்மன், சேலம்

பதில் 3: அவர் கைது செய்யப்பட்டு - கொலை செய்யத் தூண்டும் குற்றத்திற்காக - காராக்கிரகத்தில் அடைக்கப்பட வேண்டிய காவி ஆவார்!

---

கேள்வி 4: இந்தியா என்ற பெயர் வெள்ளைக்காரர்கள் வைத்ததாம், அதனால், பாரத் என்று பெயர் மாற்றம் செய்யவிருக்கின்றோம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளதே?

- பா.முகிலன், சென்னை-14

பதில் 4: இந்தியா பரந்து விரிந்த துணைக்கண்டம். பாரதம் - மனுஸ்மிருதிப்படி குறுநிலம் - ஆரியவர்த்தம் மட்டுமே. அப்படி சுருக்கப் போகிறார்களா?

---

கேள்வி 5: ஒரே நாடு, ஒரே தேர்தல் நம் நாட்டில் சாத்தியமா?

- லோ.ஜெகதீஷ், வேலூர்

பதில் 5: "ஒரே நாடு - ஒரே தேர்தல்" - ஜனநாயகத்தில் சாத்தியமில்லை - சர்வாதிகாரத்தில் சாத்தியமே!

---

கேள்வி 6: மக்களை திசை திருப்பும் முயற்சியாகவும், மக்களை ஏமாற்றும் முயற்சியாகவும் அமைச்சர் உதயநிதியின் நடவடிக்கைகள் இருக்கின்றன என்று மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதுபற்றி தங்கள் கருத்து?

- தீ.திருமேனி, திருவண்ணாமலை

பதில் 6: அ.தி.மு.க. ஜெயக்குமார் இதுவரை அர்த்தத்தோடு எப்போதுமே பேசியதில்லை. அந்த வரிசைப் பேச்சில் இதுவும் ஒன்று!

---

கேள்வி 7: சீன அதிபர் ஜி ஜின்பிங் டில்லியில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்காமைக்கு பல காரணங்கள் கூறப்படும் நிலையில், உண்மையான காரணம்தான் என்ன?

- கு.சவுந்தரராசன், சென்னை-11

பதில் 7: அவர்களைத்தான் கேட்க வேண்டும்! மாமல்லபுர நட்பு - உறவு ஏனோ நீடிக்க மறுக்கிறது!

---

கேள்வி 8: சனாதனம்பற்றி பேசியதுகுறித்து எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது, ஆட்சியில் இருக்கின்றோம் என்கிற நம்பிக்கையா? அல்லது அவருடைய தன்னம்பிக்கையா?

- கே.சங்கர், வடலூர்

பதில் 8: அமைச்சர் உதயநிதி - திராவிட இயக்கத்தின் கொள்கை நிதி - அறிவு நிதி. எனவே, துணிவுடன் எதையும் எதிர்கொள்ளத் தயங்குவதில்லை!

---

கேள்வி 9: தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை நிகழ்வுகள் ஏராளம் நடைபெறுகிறதே, இது 'திராவிட மாடல்' ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தாதா?

- சீ.கண்ணன், ஜோலார்பேட்டை

பதில் 9: காவல்துறையை எப்படியெல்லாம் வேகமாக முடுக்கிவிட முடியுமோ அதை சிறப்புடன் முதலமைச்சர் செய்து கொண்டேதான் உள்ளார்! வரும் இரண்டு ஆண்டுகளில் நிச்சயம் நல்ல நிலைமை உருவாகும்.

---

கேள்வி 10: மீண்டும் ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர நேர்ந்தால், இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் நிலை என்னவாகும்?

- ஜே.பிரபாகரன், திருநெல்வேலி

பதில் 10: நெருக்கடி கால எதிர்நீச்சலைப் போல எப்போதும் நீந்தி வெற்றி பெறும் தமிழ்நாடு.

இந்திய மக்கள் - வாக்காளர்கள் நன்கு மோடி ஆட்சியைப் புரிந்துகொண்டுவிட்டார்கள்.

நல்ல முடிவு வரும். எனவே, உங்கள் கணிப்புக்கு வாய்ப்பிருக்காது.

No comments:

Post a Comment