'நா' நயமும், நாணயமும் மிக்க அண்ணா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

'நா' நயமும், நாணயமும் மிக்க அண்ணா

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் அண்ணா அவர்களின் உருவம் பொறித்த அய்ந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ள - வெளியிட்டதோடு ஒளி மிகுந்த கருத்துக்களை வழங்கியுள்ள மத்திய நிதி அமைச்சரும், என்னுடைய நீண்ட நாளைய நண்பருமான நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி அவர்கள் மிக அருமையாக உரையாற்றி இருக்கின்றார்கள். நாணயத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்றால், அண்ணாவின் 'நாணயம்’ அரசியலிலே எப்படிப்பட்டது என்பதை இப்பொழுது வெளியிட்டிருக்கின்றார்கள் என்றுதான் அதற்குப் பொருள்.

அண்ணாவின் நாணயம் எத்தகையது என்பதற்கு அவருடைய அரசியல் வரலாற்றில் எத்தனையோ கட்டங்கள் உண்டு. எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. அவர் அரசியலிலே கடைப்பிடித்த நாணயத்திற்கு உதாரணம் சொல்லவேண்டுமேயானால் எங்கள் அருமை தந்தை பெரியார் அவர்களோடு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விலக வேண்டிய சூழ்நிலை உருவான போது, சிலர் அண்ணாவிற்கு அரிய யோசனை என்று கருதிக்கொண்டு சில யோசனைகளைச் சொன்னதுண்டு. அது என்ன யோசனை என்றால், “நீங்கள் விலகினால் போதாது, பெரியாருடைய தலைமையிலே உள்ள திராவிடர் கழகத்தையே கைப்பற்ற வேண்டும்” என்று சொன்னார்கள். அப்போது அண்ணா அவர்கள் காட்டிய பெருந்தன்மைதான் ஈடு இணையற்ற அரசியல் நாணயம் ஆகும்.

அண்ணா சொன்னார்கள், “நீங்கள் சொல்வதைக் கேட்டால் திராவிடர் கழகத்தாரும், நாம் தொடங்குகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் சண்டை போட்டுக் கொண்டு வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்திலே இருக்கத்தான் நேரிடும். இப்போது இரண்டு கழகங்களும் தனித்தனியே பணியாற்றும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இருக்கு”மென்று சொன்னார்.

அதுவும், அவர் தீர்க்கதரிசிதான் என்பதற்கு இன்றைக்கு திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டும், இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருக்கிறது என்பதை நீங்கள் நிதர்சனமாகக் காணுகிறீர்கள். எனவேதான் அண்ணா அவர்கள் அன்றைக்குக் காட்டிய அரசியல் நாணயம், வெற்றிகரமாக பலித்து இன்றைக்கு திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் பணியாற்றுகின்ற நிலைமையை தமிழகத்திலே காண முடிகின்றது."

(பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் கலைஞர் உரையிலிருந்து... 15-9-2009)


No comments:

Post a Comment