பார்ப்பனர்களை நோக்கி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 23, 2023

பார்ப்பனர்களை நோக்கி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கி வைக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்துள்ள, தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குலக்கல்வி திட்ட மாடல் என்று பேசியிருந்தார். அது தொடர்பான காட்சிப் பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், "விஸ்வகர்மா ஜெயந்தி அன்று, பாரம்பரிய திறன்களுடனோ கருவிகளுடனோ, கைகளாலோ வேலை செய்யும் மக்களுக்கு, பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கு சுமார் 13 ஆயிரம் ரூபாய் வழங்கவுள்ளோம்" என்று அறிவித்தார்.

PM Vishwakarma  என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் இந்த திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பொருளாதார விவரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது.

பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ந்தால், அந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு 'பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்' மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் அவர்களுக்குவழங்கப்படும். பிறகு இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்பட உள்ளது.

பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி செய்பவர், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், டெய்லர் உட்பட, 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன் பெற உள்ளார்கள்.

மேலும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தொழிற்கலைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் பயிற்சி பெற்ற பின்னர் தொழிற்கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக விமர்சித்த தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், குலக்கல்வி மாடலின் மறுவடிவம் என்றார். இது தொடர்பாக அண்மையில் அவர் பேசிய காட்சிப் பதிவில், குலக்கல்வி என்ற மாடலை, அதாவது அப்பா செய்ததைதான் நாம் செய்ய வேண்டும் என்பதை உடைத்துக்காட்டியதே அந்த உயர் ஜாதியினர் தான்.

அர்ச்சகர்களாக இருந்தவர்களுக்கு என்றைக்கு முன்சீப் வேலையும், கலெக்டர் வேலையும்,நீதிபதி வேலையும், ஆடிட்டர் வேலையும், பேங்க் வேலையும், வக்கீல் வேலையும் கிடைத்ததோ, அதைவிட்டுவிட்டு அவர்கள் அங்கே போய்விட்டார்கள். அப்படி என்றால், நீங்கள் பிறந்ததற்கும், செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்று நமக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருந்தவர்கள் உயர் ஜாதியினர்.

ஆனால் இன்னுமே நம்மிடம் வந்து குலக்கல்வி கொண்டு வந்து அப்பா செய்ததைதான் செய்ய வேண்டும் என்று சொல்வது எப்படி நியாயம் என்று நாம் கேட்போம்" இவ்வாறு பிடிஆர் கூறியிருக்கிறார். அந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment