குலத்தொழில் பயிலகமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

குலத்தொழில் பயிலகமா?


விஸ்வ கர்மா என்ற திட்டத்தின் கொடுமை குறித்து நாம் பார்க்க வேண்டும்.

வட இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இது போன்ற கழிப்பறைகள் (மலத்தை அள்ளுவதற்கு ஏற்ப) கட்டப்பட்டு வருகின்றன. அரியானா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தக் கழிப்பறைகளை பொதுவாக காணலாம், மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் முன்பு இந்தியா முழுவதும் இருந்த பல்வேறு கழிப்பறைகளின் மாதிரிகள் உள்ளன. (இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை). அதில் இந்தக் கழிப்பறையும் ஒன்று. நகர்த்தும் கழிப்பறையும் இருக்கும். அதாவது கழிப்பறைகளை மலம் அள்ள வருபவர்கள் நகர்த்தி மலத்தை அள்ளி விட்டு மீண்டும் பழைய இடத்திற்குக் கொண்டுவருவார்கள். 

இந்தக் கழிப்பறைகளை கட்டக்கூடாது என்று யாருமே சொல்ல முடியாது, காரணம் "மண்ணை தெய்வமாக மதிக்கிறோம், எங்கள் பகுதியில் செப்டிக் டாங்க் கட்டக்கூடாது" என்று கூறும் கூட்டமும், "செப்டிங் டாங்க் கட்டினால் எங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் கெட்டுப்போகும்" என்று கூறும் கூட்டமும் இன்றும் மிக அதிகம், வடமாநிலங்களில் குறிப்பாக அரியானாவை எடுத்துக்கொண்டால்   இது போன்ற கழிப்பறைகளில் உள்ள அசிங்கங்களை அள்ளுவதற்கு ஒரு குடும்பம் அந்த ஊரில் ஒதுக்குப்புறத்தில் இருக்கும். 

அந்தக் குடும்பம் காலை ஒரு நேரமும், மாலை ஒரு நேரமும் வீட்டுக்கு வீடு வந்து அசிங்கங்களை அள்ளிக்கொண்டு போகும். முன்பு மூங்கில் கூடையினுள் புற்களையும், இலை தழைகளையும் போட்டுவந்து மலம் அள்ளுவார்கள். தற்போது டயர்களை வெட்டி கைப்பிடி வைத்து பயன்படுத்துகின்றனர்.

மூங்கில் கூடை உறுதியாக இருக்கும். ஆகவே தலையில் வைத்துக்கொண்டு போக முடியும், ஆனால் கைப்பிடி வைத்த டயர்களை தலையில் தூக்க முடியாது. அதே நேரத்தில் ஒருவரே அந்த அசிங்கத்தை அள்ளிப்போட்ட டயர் பெட்டியைத் தூக்கவும் முடியாது. 

இங்கே மற்றுமொன்றை கூறவேண்டும், மலம் அள்ள ஒட்டுமொத்த குடும்பமே வரும்.   ஆண் ஒருபக்கம் அசிங்கங்களை அள்ளிக்கொண்டு இருப்பார், பெண் ஒருபக்கம் அசிங்கங்களை அள்ளிக்கொண்டு இருப்பார். வீட்டின் பின்பகுதியில் வீட்டில் உள்ளவர்கள் இரவு தின்றுவிட்டு மீதமுள்ள ரொட்டிகளை இதற்கென்று ஒரு கல் அல்லது  மேடை போன்று ஒன்றின் மீது வைத்துவிடுவார்கள். உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் அதன் மீது இருக்கும். அதை பெற்றோருடன் வரும் பிள்ளைகள் ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் இருக்கும் ரொட்டிகளை எடுத்து சுருட்டி ஏற்கெனவே தம்மிடம் இருக்கும் அழுக்கு படிந்த ஒரு துணியில் வரிசையாக வைத்துக் கட்டிக்கொண்டு செல்வார்கள். சில நாள் 20 ரொட்டி கிடைக்கும். சில நாள் 4 ரொட்டிகள்தான் கிடைக்கும். ஆனால் அத்தனை ரொட்டிகளும் இரவு முழுவதும் கல்லின் மீது இருந்ததால் எறும்புகளும், பல்லி, கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளும் மேய்ந்த ரொட்டியாகத்தான் இருக்கும். சில வேளைகளில் சில பூச்சிகள் ரொட்டியின் உள் பாகங்களில் சென்று இருந்துகொள்ளும். சிறு பிள்ளைகள் கவனிக்காமல் எடுத்து சுருட்டிக்கொண்டு வந்து வீட்டில் ரொட்டியை எடுத்துச்சாப்பிடும் போது சில நேரங்களில் அந்தப் பூச்சிகளையும் சுவைக்கும் நிலை ஏற்படும். இது போன்றே கழிப்பறைகளில் இருந்து கொண்டுவரும் மலங்களை கொட்டுவதற்கு தனிப்பட்ட இடங்கள் எல்லாம் கிடையாது, ஊருக்கு வெளியே தூரத்தில் இருக்கும் நீர் நிலைகளும், வயலும் இல்லாத மேய்ச்சலுக்கும் பயன்படாத பகுதிகளில் மண்வெட்டி கொண்டு தோண்டி மலங்களைப் போட்டு மூடவேண்டும். 

அங்கே கை, கால், முகம் கழுவதற்கு தண்ணீர் இருக்காது. அப்படியே வரும் வழியில் யாருடைய கிணறு அல்லது வாய்க்காலிலும் கழுவ முடியாது. பிள்ளைகள் பித்தளைப் பாத்திரங்களில் அடிப் பம்புகளில் பிடித்து கொண்டுவரும் தண்ணீரில்தான் உடலைக் கழுவுவார்கள்.   இதுதான் அவர்களின் தினசரிப்பணிகள், ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கமுடியாது, யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் ஒருவரே ஊரின் அனைத்து கழிப்பறைகளையும் தூய்மைப்படுத்தவேண்டும். 

இவர்களுக்கு ஊதியம் என்றால் முன்பு சில ரூபாய்களும், வெல்லக்கட்டியும் தருவார்கள்.   தற்போதும் அதே தான்... இவர்கள் இந்த வாழ்க்கைச்சக்கரத்தில் இருந்து வெளியே வரமுடியாது, இதில் அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்குப் போய்விட்டால் மலம் அள்ளும் கையாலேயே ரொட்டியை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும். ஆகவே பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடியாது. பள்ளியா - ரொட்டியா என்று பார்த்தால் ரொட்டிதான்... சரி ஊரை விட்டு நகரங்களுக்குச் செல்லலாம் என்றால் எங்கே செல்வது? 

இப்படி மலம் அள்ளும் பெற்றோருடன் ரொட்டி சேகரிக்கச் செல்லும் பிள்ளைகள் தாயிடமிருந்து மலம் அள்ளும் தொழிலைக் கற்றுக்கொள்ளுவர். இவர்களுக்கு ஊரில் வேறு வேலை எதுவுமே கொடுக்கவும் மாட்டார்கள். இவர்கள் மலம் அள்ளுபவர்கள் என்று பல ஊர்களுக்குத் தெரியும். ஆகவே இவர்கள் ஒரு பேரூராட்சியில் வசிப்பவர்கள் என்றால் அந்த பேரூராட்சியில் உள்ள அனைத்து ஊர்களிலும் இவர்களைப் பற்றி தெரிந்திருக்கும். ஆகவே இவர்களை யாரும் எந்த வேலைக்கும் எடுக்கமாட்டார்கள். 

அதுமட்டும் இல்லை. கொடுமை என்னவென்றால் இவர்கள் உள்ளூர் சுகாதார நிலையங்களுக்குச் சென்றாலும் தூரத்தில் நின்று என்ன ஏது என்று கேட்டு மருந்து மாத்திரைகளைதூக்கிப் போட்டோ, நீண்ட கம்பிகள் கட்டிய பாத்திரத்தில் வைத்தோ நீட்டுவார்கள்.

இன்றும் இது நடக்கிறது. தற்போது மூங்கில் கூடை போய் டயர் பைகள் வந்துவிட்டதால், ஒருமுனையில் தாயும், ஒருமுனையில் பிள்ளையும் அந்த அசிங்கம் அடங்கிய டயர் பைகளைப் பிடித்துக்கொண்டு செல்லவேண்டும். இப்போது ஒரு கையில் பிள்ளைகள் சேகரித்த ரொட்டி இருக்கும் மறுகையில் மலக் கூடையின் ஒரு கைப்பிடி. 

இந்தக் கொடூரத்தில் இருந்து விடுதலை அளிக்க வேண்டியது ஒன்றிய அரசு. ஆனால் மோடி என்ன செய்கிறார். நீ இதையே செய் உனக்கு பணமும் தருகிறேன் என்று கூறுகிறார். 

"விஸ்வகர்மா திட்டம்" என்றால் அதன் கொடுமை என்னவென்று இந்தப் பதிவில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment