முல்லைத் திணை மக்களின் விழா - மலையாளிகளின் விழாவான ஓணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

முல்லைத் திணை மக்களின் விழா - மலையாளிகளின் விழாவான ஓணம்

ஓணம் பழந்தமிழர்கள் கொண்டாடிய பண்டிகை. இன்றைய கேரளா - அன்றைய சேர நாட்டின் அறுவடைத்திரு நாள். பண்டைய தமிழகத்தின் பழம்பெரும் விழா. தற்போது நமது மலையாள உறவுகளின் தேசிய விழாவாக விளங்கும் ஓணம் பண்டைய சங்க நாள்களில் பழந்தமிழ் விழாவாக நாடெங்கும் கொண்டாடப்பட்டது. சங்கம் மருவிய காலத்தில் இவ்விழா பக்தி இயக்கத்தின் தாக்கத்தால் கோயில்களில் இறைவனுக்கு படையலிடும் விழாவாகவும், பிராமணர்களுக்கு சோறிடும் (சோறூட்டும்) விழாவாகவும், சுருங்கி பிற்பாடு தமிழகப் பகுதிகளில் முற்றிலும் மறைந்து போனது.

ஓணம் விழா செப்பேடுகளின் வாயிலாக வும், கல்வெட்டுகளின் வாயிலாகவும், பதிவாகி இருப்பதைப் பார்ப்போம். சங்க இலக்கியமான பத்துப்பாட்டின் மதுரை காஞ்சி, பக்தி இயக்க கால தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற தமிழ் இலக்கியங்களில் பதிவாகி இருக்கும் திருவோணத் திருநாள் சாசனங்களில் (செப்பேடு/கல்வெட்டு) பதிவாகி இருப்பதை இங்கு பார்ப்போம்.  

செப்பேட்டில் திருவோணம் 

சேரமன்னன் (கோ) தாணுரவியின் 17 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.869) வெளியிடப்பட்ட திருவல்லா செப்பேடுதான் ஓணத்தை விரிவாகப் பதிந்த செப்பேடு.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா கோயிலுக்குரிய கி.பி. 9 ஆம் நூற்றாண்டுச் செப்பேடான அது, தமிழ்மொழி யில் வட்டெழுத்தில் எழுதப்பெற்றது. என்றாலும், மலையாள தொல்லியல் ஆய்வாளர்கள் அது தொல் மலையாளத்தில் எழுதப்பட்டது என்கின்றனர். அச்செப்பேடு, திருவாற்று வாய்ச் சபையும் அடிகளும் கூடி சேந்தன் சங்கரன் ஆவணி ஓண மடுவில் கொடுத்த பூமி சேந்தன் சேந்தனார்கரி பதின்கலம் மற்றும் கடடேறு அய்ஞ்ஞூறு (500) நாழி இவை கொண்டு ஊர் மறையால் ஓணமடவக்கடவ ஊட்டம் செய்ய வேண்டும் என்றும், இதைத் தடுத்தவர் 54 காணம் பொன் தண்டம் கொடுக்க வேண்டும் என்றும் “ஓணச் சோறூட்டு” பற்றி குறிப்பிடுகிறது.

மேலும் இவை இரண்டும் (சோறூட்டு + தண்டம்) செய்யாது ஒழிகில் நெய் பயறு சர்க்கரை வாழை எண்ணை ஆகியன கொடுத்து காலை 12 அடி நீளம் நிழல் தொடங்கி மாலை வரை சோறூட்டம் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது. 25 பறை அரிசி (பறை = சேரநாட்டு முகத்தல் + எடுத்தல் அளவு) தொம்பூர்கறி ஓணநாள் அன்று காலை இந்த 25 பறையில் இருந்து 200 நாழி அரிசி படையல் இட வேண்டும் என்றும், அத்துடன் இரண்டாம் தவணையாகவும் 200 நாழி அரிசி திருவல்ல வாள் அப்பனுக்கு படையல் இட வேண்டும் என்றும் கூறுகிறது.

மேலும் கிருட்டன் தேவன் - விளக்கிலி மங்கலம் - ஓண நாளில் திருவல்லவாளப்பனுக்கு 50 நாழி அரிசி கொடுக்க வேண்டும் என்றும், இந்த அரிசி காட்டூர் தோப்பிலிருந்து வர வேண்டும் என்றும், வந்த அரிசியை கோயில் மடப்பள்ளியில் இருக்கும் நாழியால் மட்டுமே அளக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

ஓணம் பற்றிய தமிழ்க்கல்வெட்டுகள் - சோழமன்னன் கோப்பரகேசரியின் 9 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு 

திருச்செங்கோடு திருஓணகணப்பெரு மக்கள் கையில் திங்கள் தோறும் 20 பிராமணர்களுக்கு சோறு ஊட்டுவதற்தாக ஈரோடு மணிகண்டி ஓடையமந்தாள் எனும் பெண்மணி 20 கழஞ்சு பொன் வைத்தாள் என்ற செய்தியை 11 வரிகளில் கூறுகிறது.

 அதே திருச்செங்கோடு மலைமேல் கொங்குச்சோழ மன்னனான கோபரகேசரியின் 28ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு  மலைமேல் திருவோண நாளில் திருவோணக் கணப் பெருமக்கள் வைத்த செம்பொன் கழஞ்சின் பலிசையால் (வட்டியால்) இரண்டு கலம் இரண்டு பேருக்குச் சோறூட்ட வேண்டும் என்று 7 வரிகளில் கூறுகிறது.  

உடையார் பாளையம் கீழப்பழுவூரில் உள்ள சோழமன்னன் கோப்பரகேசரியின் 16 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு திருவாலந் துறை கணபதிக்கு ஓணநாளில் அவல்அமுது ஒரு தூணியும் 10 தேங்காயும் சர்க்கரை 10 பலமும் அரசனின் சிறீகார்யம் (Secretary) மாறபிரான் நம்பி என்பவர் படையல் வைத்த செய்தியை 19 வரிகளில் கூறுகிறது.

திருவெள்ளரையில் சோழமன்னன் கோப்பரகேசரியின் 15 ஆம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திருவெள்ளரை பெரியகோயில் பெருமானடிகளுக்கு சித்திரை மாதம் திருவோண நாளில் திருவமுதுக்கு நெய் வைத்த செய்தியைப் பற்றி 11 வரிகளில் கூறுகிறது. 

இங்ஙனம் பழந்தமிழர் கொண்டாடிய ஓணம், சங்க நாட்களில் முல்லைத் திணை மக்களின் (மாயோன் மேய) திணை விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தது. பின்பு அது வைணவப் பெருமாளுக்கு உரியதாக மடை

மா(ற்)றி வாமன அவதாரக் கதை  புகுத்தப்பட்டது. அத்துடன் பொதுமக்களின் ஓண விழா சமயச் சடங்காக மாறி கோயில் களில் இறைவனுக்கு படையலும், பிராமணர் களுக்கு சோறூட்டும் விழாவாகவும் பரிணாம(!) வளர்ச்சி அடைந்தது. பிற்பாடு என்ன காரணத்தினாலோ இவ்விழா தமிழ் நாட்டு நிலப் பரப்பில் இருந்து திருவோணத் திருநாளில் கோயில் படையல், பிராமணர்களுக்குச் சோறூட்டும் சடங்கு என்பதிலிருந்து மறைந்து போனது.

எனினும் திருவோணத்திருநாள் எனும் சேரநாட்டு அறுவடைத்திருநாள் புன்னெல் (புதுநெல்) படையல் வைக்கும் சாதாரணப் பொதுமக்களின் விழாவிருந்து விஷ்ணுவின் 5ஆம் அவதாரமான வாமன அவதாரச் சமயச் சடங்காகவும் மாறியது. இந்தக் கதை கேரள மாநிலம் கொச்சி- எர்ணாகுளம் மாவட்டம் திருக்காக்கர (திருக்கால்கரை)யில் நடந்த தாகக் கூறப்படுகிறது. சேரநாட்டில் மக்களை உயிரினும் மேலாக நேசித்து நல்லாட்சி நடத்திய மாவலி (மகாபலி) எனும் ஒரு மாமன்னனை சனாதனம் எனும் பெயரால் வஞ்சகமாகத் திருவோண நாளில் தீர்த்துக் கட்டி பின் அம்மன்னனுக்கு ஆண்டு தோறும் தம் மக்களை பார்க்க வழங்கிய ஒருநாள் அனுமதி விழாவாக ஓணம் மாறிப் போனது. எனினும் சேரநாட்டு மக்கள் தமது அன்பிற் குரிய அரசனை வரவேற்க பத்து நாள்களுக்கு முன்பிருந்தே தினமும் வாசலில் பூக்கோலமிட்டு காத்திருக்கிறார்கள். அந்தக் காத்திருப்பில் நமக்கும் ஒரு பண்பாட்டுப் பங்கிருக்கிறது.

 நன்றி: 'தீக்கதிர்' - 3.9.2023 (பக்கம் -11


No comments:

Post a Comment