‘கலைஞர் தொலைக்காட்சி’க்கு அளித்த பேட்டியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெருமிதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

‘கலைஞர் தொலைக்காட்சி’க்கு அளித்த பேட்டியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெருமிதம்!


 
முதலமைச்சரின் உறுதியான நடவடிக்கையால் ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்தை எத்தனை தடைகள் வந்தாலும் நிறைவேற்றி வருகிறோம்!

சென்னை, செப். 27- தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று முன்தினம் (25.9.2023) கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் அவர்களின் உறுதியான நடவடிக் கையினால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தை எத்தனை தடைகள் வந்தாலும் அவைகளைத் தகர்த்தெறிந்து நிறைவேற்றி வருகிறோம் என பெருமையுடன் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் (25.09.2023) இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குஅளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-

கேள்வி: இன்றைக்கு (25.09.2023) காலையில் ஓதுவார் நியமனம் எல்லாம் இருந்தது. கிட்டத்தட்ட 15 பேரில் 5 பேர் பெண்கள் என்பதுதான். ஏற்கெனவே பெண்கள் ‘திராவிட மாடல்‘ அரசு வந்ததற்கு பிறகு நியமனம் செய்யப்பட்டு இருக் கிறார்கள். எவ்வாறு சாத்தியமாகியது?

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: எல்லோருக்கும் எல்லாம் என்பது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய - தளபதி அவர்களுடைய கொள்கை. அந்த வகையில் ஆணுக்கு பெண் சரிநகர் சமம் என்ற வார்த்தை இந்த ஆட்சியில்தான் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாடு உயர்ந்த நிலையை - உச்சநிலையை அடைய வேண்டும் என்றால், பெண்களுக்கு உண்டான அனைத்து பிரதிநிதித்துவமும் கிடைத்தால்தான் அந்த நாடு சிறந்தோங்கும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, பெண்ணினத்தின் பேரொளியாக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு அர்ச்சகர்கள் தொடங்கி, பெண் ஓதுவார்கள் நியமனம் வரை ஒரு அமைதிப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர், பண்ணாரி அம்மன் போன்ற 5 திருக்கோ வில்களில் ஏற்கெனவே பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு பயிற்சி முடித்த 15 ஓதுவார்களுக்கு முறையாக அவர்களை விண்ணப்பித்து, அவர்களுக்கு முறையாக தேர்வுகள் நடத்தி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் - தளபதி அவர்களுடைய நல்லாசியுடன் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதில் மகிழ்ச்சி என்ன வென்றால், 5 பேர் பெண்கள்.

இதுவரையில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 39 ஓதுவார்கள் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 11 பெண்கள் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பித்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து இருக்கிறார்கள். 33 சதவிகிதத்தையும் தாண்டி, இன்றைக்கு பெண்கள் நியமிக்கப்பட்டு இருப்பது, உண்மையிலேயே இந்த ஆட்சி பெண்களின் முன்னேற்றத்தி ற்காக ஆணுக்கு நிகர் பெண் சமம் என்ற நீதியை நிலைநாட்டுகின்ற ஒரு ஆட்சியாக, இன்றைக்கு பெண்கள் மகிழ்ச்சியோடு இதை வரவேற் கிறார்கள்.

ஓதுவார் பயிற்சி முடித்த பெண்களுக்கு பணி நியமனம்!

கேள்வி: நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒன்றுதான். இப்போது நீங்கள் சொன்னதுபோல, 33 சதவிகிதத்திற்கும் மேல் பெண்கள் இருக்கிறார்கள். ஆட்சி வருவதற்கு முன்பே அவர்கள் பயிற்சிபெற்றார்களா அல்லது ஆட்சி கொடுத்தநம்பிக்கையினால் அவர்கள் பயிற்சி நாம் பெறலாம், நமக்கான நியமனம் கிடைக்கும் என்று வருகிறார்களா?

அமைச்சர் பி.கே,.சேகர்பாபு :இந்த பயிற்சியை பொறுத்த அளவில் 4 ஆண்டுகள். இதற்கு முன்புகூட இவ்வாறு பயிற்சி முடித்த பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை இவ்வாறு திருக்கோயில்களுக்கு பணி நியமனம் எந்த ஆட்சியும் செய்வதற்கு முன் வரவில்லை. இந்த ஆட்சிதான் ‘திராவிட மாடல்‘ ஆட்சி என்பதன் ஒரு சான்றாக, ஓதுவார் பயிற்சி முடித்த பெண்களுக்கு முக்கியத்துவம் தந்து அவர்களுக்கு முறையாக விண்ணப்பம் பெறப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களை இன்றைக்கு ஓதுவார்களாக நியமித்து இருக்கிறார்கள். இந்த ஆட்சியில்தான் இந்த பெண் ஓதுவார்களை இவ்வளவு பெரிய அளவு - கணிசமான அளவு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கேள்வி: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றத்திற்குப் பிறகு, எவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருந்தது. இப்போது பால் பேதம் இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்று பெண்களும் உள்ளே வரு கிறார்கள். நிறைய சிக்கல்களை அரசு எதிர்கொள்ளவில்லையா?

அமைச்சர் பி.கே,.சேகர்பாபு: தொடர் சிக்கல்களை சட்டப் பூர்வமாக சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். தந்தை பெரியார் அவர்களுடைய கனவுகள், - கலைஞர் அவர்களு டைய எண்ணங்கள், - அவர்கள் நினைத்த தெல்லாம் இன் றைக்கு நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் என்றால் அது மிகையாகாது.

அன்னைத் தமிழில் வழிபாடு ஆரம்பித்து, போற்றிப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஆரம்பித்து, 108 நூல்களை மறுசீரமைப்பு செய்து புதுப்பொலி வுடன் வெளியிட்டதில் ஆரம்பித்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 29 அர்ச்சகர்களை நியமித்து, அவர்களை கரு வறைக்குச் செல்ல வைத்த பெருமையும், அதேபோல் பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று இந்த ஆட்சியில் அதற்கு உண்டான உந்துகோல் - தூண்டுகோல் இருந்ததால், இன்றைக்கு மூன்று பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டு அவர்கள் திருவாய் மலர தெய்வத்திற்கு அர்ச்சனை செய்வது, பெண்குலத்திற்கே ஒரு பெரிய மகிழ்ச்சியை ஏற்பட்டு இருக்கிறது.

திருக்கோயில் பணிகளை சிறப்பாக நிறைவேற்றும் அரசு!

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், 20 பயிற்சிப் பள்ளிகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. அதில் புதிதாக 2 பயிற்சிப் பள்ளிகளை ‘திராவிட மாடல்‘ ஆட்சி ஏற்பட்ட பிறகு துவக்கப்பட்டுள்ளது. 6 பயிற்சிப் பள்ளிகள் மூடியிருந்த நிலையில் மேம்படுத்தப்பட்டு அவையும் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இந்த ஆண்டு 117 பேர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது, பெண் ஓதுவார்களை நியமிப்பது, ஓதுவார்கள் பற்றாக்குறை இல்லாமல் திருக்கோயில்களில் பணி நியமனம் செய்வது, பெண் அர்ச்சகர்களை உருவாக்கு வது என்று ஒரு புறம் இந்த நடவடிக்கையை நாங்கள் தொடர்ந்து எடுத்து வந்தாலும், மறு புறம் இதை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு சென்று கொண்டிருக்கிற நிலையிலேயும், அதையும் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் இந்த ஆட்சி வழக்குகளை சந்தித்து, அதற்கு உண்டான சட்டத்தை நிலை நாட்டுகிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண் டிருக்கிறது. எவ்வளவு தடை கற்கள் உண்டு என்றாலும், அவைகளை தகர்த்து எறிகின்ற திடம் தோள்கள் இந்த ஆட்சிக்கும் - நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கும் உண்டு. நிச்சயம் இந்த பணி தொடரும். இந்த பணியை தொடர்ந்து இந்து சமய அறநிலைத் துறை மேற்கொள்ளும், வெற்றி பெறும்.

கேள்வி: இப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பாக நிறைய விஷயங்கள் செய்து வருகிறீர்கள். தி.மு.க. அரசாங்கம் ஆன்மிகத்திற்கு எதிர் என்று ஒரு கருத்து வைக்கப்படுவதாலேயே கங்கணம் கட்டிக் கொண்டு நிறைய விஷயங்கள் செய்கிறீர்களா? கோயில் நிலத்தை மீட்பது, 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு என்பதெல்லாம்?

அமைச்சர் பி.கே,.சேகர்பாபு: நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை பொறுத்த அளவில் இந்தியாவில் முதன்மை மாநிலம் ஆக்க வேண்டும் என்று துடிப்போடு ஒரு நாளைக்கு 19 மணி நேரம் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அனைத்து துறைகளும் தங்களை முன்னிறுத்திக் கொண்டு செயல்பட்டால்தான் முதலமைச்சர் அவர்களின் எண்ணம் இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வர் - இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் என்ற பெருமையை எய்த வேண்டும் என்றால், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து வளர்ச்சி கண்டால்தான் அந்த நிலை எட்டப்படும். அந்த வகையில் திருக்கோயிலை பொறுத்தவரையில் ஆகம விதிப் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய திருப்பணிகள், குடமுழுக்குகளை நடத்துவதற்கு முன் னெடுத்து இருக்கிறோம். அதேபோல் நீண்ட நாட்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நன்நீராட்டு விழா நடை பெறாமல் திருக்கோயில்க ளின் திருப்பணிகளை விரைவுப் படுத்தி நன்னீராட்டு விழா நடத்துவது, திருக்கோயில்கள் திருக்குளங்களை சீரமைப்பது, திருக்கோயில்களில் திருத் தேர்களை சீரமைப்பது, திருக்கோயி ல்களின் நந்தவனங்களை சீரமைப்பது, திருக்கோவில்களின் மடப் பள்ளிகளை சீரமைப் பது, திருக்கோயில்க ளின் வரும் பக்தர்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, பொதுக் கழிப்பிடங்கள் போன்றவற்றை உருவாக்குவது, திருக்கோயில்களின் சார்பில் இருக்கும் திருமண மண்டபங்களை மேம்படுத்துவது, புதிதாக திருமண மண்டபங்களை கட்டுவது, பக்தர்கள் தங்கும் விடுதியை மேம்படுத்துவது, புதிதாக பக்தர்கள் தங்கும் விடுதியை கட்டுவது, முடி காணிக்கை மண்டபங்களை ஏற்படுத்துவது, விருந்து மண்டபங்களை ஏற்படுத்துவது, அர்ச்சகர்கள் நலன் - பணியாளர்கள் நலன் - இவைகளில் அக்கறை கொள்வது - போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்வதால்தான் இந்த ஆட்சி ஒரு ஆன்மிக ஆட்சியாக பக்தர்களாலும், மக்களாலும் வரவேற்கப்படுகிறது.

இந்த பணிகளை மேலும் மேலும் சிறப்போடும், விரை வோடும் செய்வதற்கு நாங்கள் கேட்கின்ற நிதியை எல்லாம் முதலமைச்சர் அவர்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த 28 மாத கால ஆட்சியில் கிட்டத்தட்ட அரசு சார்பில் 600 கோடி ரூபாய் அளவிற்கு மானியமாக வழங்கி இருக்கிற, 1959-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலைத் துறையில் இதற்கு முந்தைய ஆட்சிகளில் வழங்கப்பட்ட நிதிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது அரசு மானியமாக வழங்கிய நிதி தமிழ்நாடு முதல்வர் - தளபதி அவர்களுடைய ஆட்சியில்தான் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அந்த வகையில் இந்த ஆட்சி ஒரு ஆன்மிகத்தில் குறிப்பாக இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமான ஆட்சி என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: முதலமைச்சர் அவர்கள் கூட அதை சொன்னார்கள், இறை நம்பிக்கையாளர்களும் போற்றுகிற ஆட்சியாக இருக்கிறது என்று. நீங்கள் நிறைய விஷயங்களை பட்டியல் போட்டீர்கள். ஆனால் ஒரு பக்கம் நீங்கள் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் செய்கிறார்களே?

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: பதவியை எங்களுக்கு அளிப்பதும், எங்களுக்கு பதவி வேண்டாம் என்று முடிவு செய்வதும் முதலமைச்சர் அவர்களின் முடிவு. இந்த ஆட்சி தளபதி அவர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. எனவே அவர்கள் எதிர்பார்த்தது ஆன்மிகத்தை கையிலே எடுத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தார்கள். முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளால் இந்த ஆட்சி ஆன் மிகத்திற்கும் ஆதரவளிக்கிற ஒரு ஆட்சி, ஆசிகர்கள் - நாத்திகர்கள் இருவருக்கும் உண்டான ஆட்சி என்பதை முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளால் நிரூபித்து விட்டபடியால், அவர்கள் எண்ணங்கள் நிறைவேறாத காரணத்தால் இவ்வாறு ஒரு பொய் பரப்புரையை இந்த ஆட்சியின் மீது பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

குறைந்த காலத்தில் 1,075 கோயில்களுக்கு குடமுழக்கு விழா!

எங்களைப் பொறுத்த அளவில் முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுகின்ற திசை நோக்கி, எங்களுடைய ஆன்மிகப் பயணம் மேலும் விரிவடையும். ‘திராவிட மாடல்‘ ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், இதுவரையில் இல்லாத அளவிற்கு இந்த 28 மாத காலத்தில் 1,075 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்று இருக்கிறது.

நில மீட்பை எடுத்துக் கொண்டால், ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் சுமார் 5,375 கோடி ரூபாய் அளவிற்கு மீட்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சிட்டா மாறுதல், பட்டா மாறுதல் என்று அரசை ஏமாற்றி வருவாய்த் துறையில் தவறாக மாறுதல் செய்யப்பட்ட அந்த நிலங்களை மீண்டும் திருக்கோயில் பெயருக்கு பட்டா மாறுதல்செய்யப்பட்ட வகையில் 9000 ஏக்கர் நிலம் இதுவரையில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

அதேபோல் நவீன உக்தியோடு ரேவர் கருவி வாயிலாக இதுவரையில் 1 லட்சத்து 51 ஆயிரம் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, நில அளவையாளர்கள் வாயிலாக பிஸி&சிணி என்று கல் பதிக்கப்பட்டு 1 லட்சத்து 51 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த 28 மாதங்களில் அடையாளம் காணப்பட்டு திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இறை சொத்து இறைவனுக்கு என்ற வார்த்தையை, இந்த ஆட்சியின் மூலமந்திரமாக எடுத்துக் கொண்டு இறை சொத்துக்கள் காப்பாற்றுகிற பணி தொடரும். இந்த தொடர் நடவடிக்கையில் இறை அன்பர்களும், பொதுமக்களும், பக்தர்களும் இந்த ஆட்சியை வெகுவாக பாராட்டி மகிழ்ச்சி அடைவது எங்களுக்கு மேலும் உத்வேகத்தை தருகிறது.

- இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment