ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1:  கனடா - அமெரிக்கா உடனான நெருடல் விவகாரத்தில் கட்டுப்பாடு மோடியின் கையில் இல்லையா?

- த.ஆறுமுகம், வேளச்சேரி

பதில் 1: சிக்கல் எங்கே இதில் இருக்கிறது என்று கண்டறிந்து விளக்குபவர் நிச்சயம் விருது பெற வேண்டியவர் ஆவார்! அப்படிப்பட்ட குழப்பம் இதில் - ஏன் எல்லா பக்கங்களிலுமே உள்ளது!

--

கேள்வி 2: ஒன்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தள்ளிவிட்டுள்ளதே மோடி - அமித்ஷா அண்ட் கோ?

- ம.வெற்றிவேலன், திருத்தணி

பதில் 2: அந்த இரண்டு பேர்தான் ஆட்சி - என்னதான் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாடுக் கயிறு இருந்தபோதிலும் - 2024 வரை இதுஓடும்! அதற்கப்புறம் பெரிய கேள்விக்குறியே!

---

கேள்வி 3: புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து புதுச்சேரி மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்களே?

- வே.காவியா, ஈரோடு 

பதில் 3: புத்திவரும்போது எவரும் போராடவே செய்வர். புதுச்சேரி மாணவிகளுக்குப் பாராட்டு.

---

கேள்வி 4: எங்கு செல்கிறோமோ அங்கு அந்த மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது குறித்து?

- க.தருமசீலன், மதுரை

பதில் 4: வந்தேறிகளின் இலக்கணம் அது. அதைத்தான் கூறியுள்ளார் அந்த அம்மையார். அதேபோல எங்கே வாழுகிறோமோ அங்கு அந்த உணவைச் சாப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டுமா? பதில் கூறுவாரா அம்மையார்?

---

கேள்வி 5: துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க குழு அமைக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்று ஆளுநர் கூறுகிறாரே?

- தி.முருகன், நாகர்கோவில்

பதில் 5: 'நானே இராஜா! நானே இராஜா' - பாடலை தினமும் பாடுவதுதான் அவரின் நாமாவளி!

---

கேள்வி 6: பணத்திற்காக தன்மானத்தை அடகு வைப்பவர் என்று பாஜக மாநிலத்தலைவர், நடிகர் கமலஹாசனைப் பார்த்து கேள்வி கேட்டுள்ளாரே?

- த.மருதமலை, புதுக்கோட்டை

பதில் 6: பதவிக்காக தன்மானத்தையே அடகு வைப்பவர்கள் இப்படிச் சொன்னால் எடுபடுமா?

---

கேள்வி 7:  பெண் ஓதுவார்கள் நியமனம் குறித்து அன்று மங்கையர்க்கரசி, காரைக்காலம்மையார், ஆண்டாள் போன்றவர்கள் தமிழ்நாட்டில் கடவுள் முன்பு பாடவில்லையா என்று ஹிந்துத்துவ வாதிகள் பேசிவருகின்றனரே?

- ப.முனுசாமி, சிதம்பரம்

பதில் 7: பாடினார்கள். ஆனால், கருவறைக்கு உள்ளே போக முடிந்ததா? எலும்பு தேய்ந்தும் போக முடியவில்லை. அதை திராவிட முதலமைச்சர் அல்லவா சாதித்துக் காட்டியுள்ளார்!

---

கேள்வி 8:  எனது அரசு கொண்டுவந்த தொழில்நுட்பத்தினால் ஊழல் குறைந்துவிட்டது என்கிறாரே மோடி?

- ச.காவேரி, கரூர்

பதில் 8: அப்படியானால் சி.ஏ.ஜி. என்ற மத்திய தணிக்கையாளர் அறிக்கையின்படி ஊழல் 7.5 லட்சம் கோடி ரூபாய் என்பதும் உயர்ந்த தொழில்நுட்பம் தானோ? புரியவில்லை நமக்கு!

---

கேள்வி 9:  பாஜகவின் வளர்ச்சிக்குப் பாதை அமைத்துக் கொடுத்தவர்களில் ஒருவரான உமா பாரதி, மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே?

- ந.கிருஷ்ணமூர்த்தி, காஞ்சி

பதில் 9: ரொம்ப  நாளாகவே அவர் பெயரே மக்களிடம் ஞாபகத்தில் இல்லை; மறந்து போய்விட்டதை மீண்டும் நினைவூட்ட இப்படி ஒரு புதிய உத்தியோ - அல்லது இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (ஓபிசி) இல்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடோ?

---

கேள்வி 10:   பங்காரு லட்சுமணன், பண்டாரு தத்தாரேயா, வெங்கையா நாயுடு, தற்போது ரமேஷ் பிதாரி என தொடர்ந்து அக்கட்சியின் ஒடுக்கப்பட்ட மக்களின் முகங்களாக தங்களைக் கருதிக்கொள்ளும் தலைவர்களை சூழ்ச்சியில் சிக்கவைத்து அவர்களின் அரசியல் எதிர்காலத்தை காவு வாங்குவதை பாஜக வழக்கமாக கொண்டுள்ளதே?

- அ.அலமேலு, தாம்பரம் 

பதில் 10: ஆங்கிலத்தில் 'Elimination Process'  என்ற சொற்றொடருக்கு அரசியல் விளக்கம் - வியாக்யானமோ தங்கள் கேள்வி? பலே, பலே!!


No comments:

Post a Comment