“பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது’’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 23, 2023

“பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது’’

“மலையாளத்தாரை வெறி பிடித்தவர்கள் என்று கொள்ளாமல் வேறு எவ்வாறு அவர்களை மதிக்கக் கூடும்?’’ என்று துறவியான விவேகானந்தரையே பேச வைத்திருக்கிறது என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் எப்படிப்பட்ட அவல நிலை இருந்திருக்க வேண்டும்?

கேரள மாநிலம். கோட்டயத்திலிருந்து 32 கி.மீ. தூரத்தில் இருக்கிற வைக்கத்தில் வேம்பநாடு ஏரிக்கரையில் இருக்கிறது பழைமையான மகாதேவர் கோவில். 

உள்ளே இருப்பது சிவபெருமான் தான். மலையாளத்தில் ‘வைக்கத்தப்பன்’ என்று அழைக்கிறார்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இங்கு நடக்கும் திருவிழா விசேஷம்.

அப்போது திருவிதாங்கூர் ராஜாவின் சமஸ்தான ஆட்சி. மகா ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வைக்கம் கோவிலைச் சுற்றிலும் பந்தல் போட்டிருந்தார்கள். அதையொட்டி இருந்த நீதிமன்றத்திற்கு முன்னாலும் பந்தல் அலங்காரம்.

அந்த நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றிற்காக ஆஜராக வந்த மாதவனை அவருடைய சமூகத்தைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்குள் நுழையத் தடை விதிக்கிறார்கள் உயர்ஜாதிக்காரர்கள்.

அந்த இழிவு தான் பொறி. எதிர்த்துக் கலகக் குரல்கள் எழுந்தன.

அன்றைக்கிருந்த காங்கிரஸ் தலைவர்கள் உட்படப் பலர் கூடிப் பேசினார்கள். சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்தார்கள். நடத்தினார்கள். நடத்தியவர்கள் கைதானார்கள்.

இதெல்லாம் நடந்தது 1924 ஏப்ரல் மாதத் துவக்கத்தில். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈ.வெ.ராமசாமி பெரியாருக்குக் கைதானவர்கள் கடிதம் எழுதுகிறார்கள்.

சுற்றுப்பயணத்தில் இருந்த பெரியார் ஈரோட்டுக்குத் திரும்பிச் சிலரை அழைத்துக் கொண்டு நேரே வைக்கத்திற்குக் கிளம்பிவிட்டார்.

பெரியாருக்கு ஏற்கெனவே அறிமுகமானவராக திருவிதாங்கூர் ராஜா இருந்தாலும், அவர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட வரவேற்பை மறுத்தார் பெரியார்.

பொதுக்கூட்டங்களில் தெருவில் சில சமூகத்தினர் நடக்கக் கூடத் தடை விதித்திருப்பதை எதிர்த்துக் கடுமையாகப் பேசினார்.

போராட்டம் வலுவடைந்தது. போராடுவதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெரியார் உட்படப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டு அருவிகுத்தி என்கிற ஊரில் சிறை வைக்கப்பட்டார்கள்.

இருந்தாலும் வெளியே போராட்டம் தொடர்ந்தது. பெரியாரின் மனைவி நாகம்மாளும், தங்கை கண்ணம்மாளும் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். போராட்டம் தீவிரமானது.

ஒரு மாதத்தில் பெரியார் விடுதலை ஆகி வெளியே வந்ததும் போராட்டம் இன்னும் வலுக்கிறது. “பெரியார் அங்கே தலைமை தாங்கும்போது நான் கூட்டத்திலிருந்த சாதாரணத் தொண்டன்’’ என்று பின்னாளில் பதிவு செய்திருக்கிறார் காமராஜர்.

ஈழவ சமுதாயத்தின் பெரும்தலைவரான நாராயணகுரு, ’’ஒருவன் தீண்டுவதனால் இன்னொருத்தனின் பரிசுத்தம் கெடுமானால், அந்தப் பரிசுத்தம் அழியட்டும்’’ என்று சொல்லக்கூடிய அளவுக்குப் போனார்.

அதற்குள் மறுபடியும் பெரியாரைக் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைக்கிறார்கள். அவருடைய காலில் விலங்கு, தலையில் குல்லா, கழுத்தில் கைதி எண் எழுதப்பட்ட மரச்சட்டம்.

“இப்படி வைத்திருப்பது நியாய விரோதம். திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டுகிறது’’ என்றார் ராஜாஜி. (சுதேசமித்திரன்- 28.8.1924)

போராட்டம் வலுத்த நிலையில் ராஜாஜி கடிதம் எழுதியபிறகு காந்தியார் வைக்கத்திற்கு வந்தார்.

ராணியைச் சந்தித்தார். நாராயணகுருவைச் சந்தித்தார். தடை விதித்திருந்த உயர்ஜாதியினரை அழைத்துப் பேசினார்.

கடைசியில் ராணியின் உத்தரவுக்குப் பிறகு 1925ஆம் ஆண்டில் சில சமூகத்தினருக்குத் தெருவில் நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அதன் பிறகு கோவிலுக்குள் நுழைவதற்கான தடையும் நீக்கப்பட்டது.

சுதந்திர உணர்வுடன் அதுவரை உரிமை மறுக்கப்பட்ட தெருக்களில் ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்தோடு பேரணியாகச் சென்றபோது அதற்குத் தலைமை தாங்கியவர் பெரியார்.

இன்று வரை வைக்கம் பற்றிய சர்ச்சைகள் ஒருபுறம் நீடித்துக் கொண்டிருந்தாலும், கேரள அரசின் முயற்சியோடு வைக்கத்தில் 1994 ஜனவரியில் நினைவகம் எழுப்பி அவருடைய பங்களிப்பின் அடையாளமாக அவருடைய சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

அன்றைக்குச் சக மனிதனை படுகேவலமாகத் தாழ்த்திய அவலம் தொடர்ந்தபோது அதை எதிர்த்து “பொது வாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது’’ என்று கலகக் குரலை உயர்த்திப் போராடி, சிறைப்பட்டவரை காலத்தின் இன்னொரு கரையில் நின்று வசதியாக விமர்சிப்பது மிக எளிது.

இன்றைய இலக்கிய முலாம் பூசிய எந்தச் சொற்களை விடவும், அன்றைய செயல் தான் வலிமையானது.

அப்படிச் சமூகத்தின் தேவையை உணர்ந்து நின்றதால் தான் பெரியார் போராட்டம் நடத்திய அதே வைக்கம் மண்ணில் அவருக்கு நினைவகமும், சிலையும் எழுந்திருக்கிறது.

அவை எல்லாமே பிறர் வலியைத் தன்வலியாக உணர்ந்தவருக்கு அளிக்கப்பட்ட காலங்கடந்த அங்கீகாரத்திற்கான எளிய அடையாளங்கள்.

நன்றி: 'குமுதம்', 25.10.2017


No comments:

Post a Comment