முதல்வர் காப்பீட்டு திட்டம் களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

முதல்வர் காப்பீட்டு திட்டம் களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு

சென்னை, செப்.8 -  'முதல்வர் காப்பீட்டுத் திட்ட' களப்பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப் படும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அனைத்து சுகாதார துணை இயக்குநர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் ஜன்ஆரோக்ய யோஜனா (பிஎம்ஜேஏஒய்) ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் அரசு காப்பீட்டுத் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை இணைய வழியே பதிவேற்றுவதிலும், அடையாள அட்டைகளை அச்சிட்டு, விநியோகிக்கும் பணிகளிலும் தனியார் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றன.

இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கிராம சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதார களப் பணியாளர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். 

சுகாதாரகளப் பணியாளர்கள் தன்னார்வமாக முன்வந்து இணையவழியில் தகவல்களைப் பதிவேற்றுவதிலும், அடையாள அட்டைகளை விநியோகிப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண் டால், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப் படும். 

அதன்படி, இணையப் பதிவுஒன்றுக்கு தலா ரூ.5-ஆம், அடையாள அட்டை விநியோகத்துக்கு தலா ரூ.3ஆம் ஊக்கத் தொகையாக நேரடியாக வழங்கப் படும். 

விருப்பமுள்ள களப் பணியாளர்கள் தங்களது விவரங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அனுப்பலாம்.

No comments:

Post a Comment